மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

கங்காரு -தீவிர அன்புணர்வின் எளிய மொழியியல்…

கட்டுரைகள்..

Kangaroo

 

மிருகம்,உயிர்,சிந்து சமவெளி போன்ற சர்ச்சை திரைப்படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ள கங்காரு வேறு தளத்தில் பயணிக்கிறது. எப்போதும் உணர்வு சார்ந்த திரைக்கருவில் மிகை நடிப்பிற்கான சாத்தியங்கள் அதிகம். அதே போன்ற அண்ணன் -தங்கை அன்புணர்வினை தீவிரமாக பேசுகிறது கங்காரு..

எப்போதும் வாழ்க்கை நினைத்தது போல அமைந்துவிடுவதில்லை.நினைப்பது போல நடக்காததன் அவஸ்தைகளை,வலிகளை,வேதனைகளை, ஏமாற்றங்களை,சவால்களை பேசுவதுதான் திரைப்படங்களும், இலக்கியங்களும்… மனித மனம் விசித்திரமானது. அந்த விசித்திரங்களின் தொகுப்பில் மகத்தானது அன்பு என்கிற மகத்தான உணர்வு.ஒரு வகை பதிலீட்டை,எதிர்பார்ப்பை,கைமாற்றை கோரி நிற்கிற மாபெரும் துயராக அன்புணர்வு பேருருவம் அடையும் போது மனித மனம் பிறழ்வு அடைகிறது. அப்படிப்பட்ட அன்பினை யாசகமாக கோரி நின்ற சகோதர உணர்ச்ச்சியின் பிறழ்வு அவஸ்தைகளை தான் கங்காரு பேசுகிறது.

எங்கிருந்தோ வந்த ஒரு சிறுவனின் கரங்களில் ஒரு கைக்குழந்தை. டீக்கடை வைத்திருக்கும் தம்பி இராமைய்யா அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களை வளர்க்கிறார். தனது தங்கையே உலகமென வாழும் அந்த சிறுவனும்,கைக்குழந்தையும் வளர்கிறார்கள். உரிய வயது வந்தவுடன் தங்கைக்கு காதல் பிறக்கிறது. அது கனிந்து அண்ணனின் ஆசியோடு திருமணமாக மலர இருக்கையில் காதலன் கொல்லப்படுகிறான். அதன்பின் பார்த்த மாப்பிள்ளையும் கொல்லப்படுகிறார். பின் திருமணம் செய்து கொள்கிற இளைஞன் நோக்கியும் கொலை முயற்சி. இதற்கு பின்னால் இருப்பது யார் என்ற மர்ம முடிச்சுகளுடன் திரை மொழி அமைத்திருக்கிறார் இயக்குனர் சாமி.

தன் முந்தையப்படங்களின் பாலியல் உறவுகள் சார்ந்த சாயல் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டிருக்கிறார் இயக்குனர். மின்னும் உயர் நட்சத்திரங்கள், மாபெரும் அரங்கங்கள், பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள் ஆகிய எதுவுமின்றி,புதிய நட்சத்திரங்களைக் கொண்டு தான் கொண்டிருக்கிற கதைக்கருவினை மிகச்சரியாக திரைமொழிக்கு நகர்த்தி விட வேண்டும் என்கிற இயக்குனரின் உழைப்பு திரைப்படத்தில் தெரிகிறது.

தனது குட்டியை தானே சுமந்து திரியும் விலங்கினங்களில் சற்றே வித்தியாசமானது கங்காரு . தனது வயிற்றோடு இருக்கிற பையில் தனது குட்டியினை வைத்துக் கொண்டு திரிகிற கங்காருவினை முன் மாதிரியாக வைத்து கதையினை அமைத்திருக்கிறார்கள். மனித மனதிற்குள் பூட்டி கிடக்கிற விலங்கு விழித்தால் அடைகிற அவலங்களும், அன்பின் மிகுதியில் மனிதமனம் அடைகிற பிறழ்வுகளுமாக உளவியல் சார்ந்த திரைக்கதையாக கங்காரு உருவாகியுள்ளது.

மனப்பிறழ்வு கொண்ட கதாநாயகனாக நடித்திருப்பவர் இன்னும் உடல் மொழியில் மெனக்கிட்டு இருக்கலாம். கதாநாயகியாக பிரியங்கா. அமைதிப்படை 2 –ல் நடித்தவர். தன்னை தவறாக வழிநடத்த முயல்கிற தனது அக்காவினையும், அவரது ஆட்களையும் செருப்பால் அடித்து வெளுக்கிற காட்சியில் மின்னுகிறார். தங்கையாக நடித்திருக்கும் புது முகம் தனது அண்ணனுக்காக அவசர அவசரமாக கஞ்சியினை விழுங்கும் காட்சியில் நன்கு நடித்திருக்கிறார். தம்பி இராமையா, கலாபவன் மணி,சுந்தர்ராஜன் போன்றவர்கள் எப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களின் சுடர் விடுபவர்களே.இப்படமும் அவர்களுக்கு விதிவிலக்கல்ல.

மருத்துவராக நடித்திருக்கிற வெற்றிக்குமரன், தயாரிப்பாளராகவும் இருந்து, தங்கையின் கணவனாகவும் நடித்து இருக்கிற சுரேஷ் காமாட்சி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தங்களால் முடிந்த நேர்மையை செய்திருக்கிறார்கள்.

படத்தில் குறைகளே இல்லையா.. என்ற கேள்வி எழுப்பிகிறவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது தெலுங்கன் கரங்களிலும், மார்வாடி கரங்களிலும்,கன்னடத்தான் கரங்களிலும் சிக்கி வதைபடுகிற திரை உலகினை மீட்க எம் நண்பர் சுரேஷ் காமாட்சி போன்றோர் போராடத் தொடங்கியுள்ளார்கள். அப்போராட்டத்தின் முதற்படி தான் கங்காரு போன்ற திரைப்படங்கள். அடுத்தடுத்து வரும் திரைப்படங்களில் இப்படத்திற்கான தவறுகளை திருத்திக்கொள்வார்கள என்கிற எனது நம்பிக்கைதான் இப்படத்தினை தவறுகள் கடந்து நேசிக்கச்சொல்கிறது. எளிய பொருட்செலவில் உண்மையான பாச உணர்வின் தீவிரத்தை பேசுகிற கங்காரு..நான்கு பாட்டு,இரண்டு குத்து, நான்கு காமெடி என்கிற பெயரில் கடிகள் என்கிற வகையில் வெளிவருகிற எத்தனையோ திரைப்பட குப்பைகளுக்கு மத்தியில் மதிப்புறு படமே..

கங்காரு – தமிழன் தயாரித்த தமிழர்களுக்கான திரைப்படம்.

அவசியம் அனைவரும் காண்போம்.

 983 total views,  1 views today