மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

.**** சுயபுராணம்

கவிதைகள்


overcome-yourself-fyodor-dostoyevsky-daily-quotes-sayings-pictures

மீண்டும் மீண்டும்
என்னை பிரசவிக்கும்
எனது மொழி..

வற்றா வளத்தோடு
குன்றாப் பெருமை
மணக்கும் எனது
சொல்..

எப்போதும் காண்பவர்
முகத்தில் கண்ணீரையும்,
புன்னகையையும்
ஒரே நேரத்தில்
சிந்த வைக்கும் எனது
எழுத்து..

இத்தனை வருடங்களில்
இரவு பகலாக
விழித்து..
வாசித்து..
ரசித்து..
உழைத்து..
எனக்கு நானே
கனவுகளை உளியாக்கி
செதுக்கிக் கொண்ட
தன்னம்பிக்கை
சுடர் விடும்
ஒரு வாழ்க்கை..

என்றெல்லாம்
பேசிட என்னிடம்
ஏதேனும்
இருந்தாலும்…

துளித்துளியாய்
சேமித்து பெருமழையென
பொழிய எனக்குள்
ஒரு மழை இருக்கிறது..

விழி நீர் கசிய
உயிர் உருகி ஓடிட
கதைகள் சொல்ல
எனக்குள்
நிலவொளியில்
சேமித்த ஒரு
இரவு இருக்கிறது.

பரவசப்படுத்தும்
கவிதைகளோடு
காலார நடந்திட
எனக்குள் பனிப்பூக்கள்
நிரம்பிய பூங்காவோடு
ஒரு பொன் மாலைப்
பொழுது இருக்கிறது..

ரகசிய கனவுகள்
மினுக்கும்
நீல விழி தேவதை
மிதக்கும்
தங்க மீன்கள்
உலவுகிற
பாசி படர்ந்த
பெருங்குளமும்
எனக்குள் உண்டு.

தேவ கரங்கள் தொட்டுத்
துடைக்க உதிரமாய்
பெருகுகிற
தீராத்துயரமும்..

சாத்தானின் முற்றத்தில்
முடிவிலியாய்
கொண்டாடி மகிழ
வற்றா புன்னகைகளும்..

என்னிடம் இருப்பதாக
மதுப் போதையில்
உளறிய
கனவுலகவாசி
ஒருவன் கைக்குலுக்கிப்
போனான்.

அவனிடம் மறுமொழி
கூற என்னிடம்
சொற்கள் ஏதுமில்லை
அப்போது..

பக்கத்தில் தேநீர்
அருந்திய வண்ணம்
சிரித்துக் கொண்டே
கடவுள் சொன்னார்

அது தான் நீ இருக்கிறாயே..

 1,117 total views,  1 views today