மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

பெரியார்- என் புரிதலில்..

அரசியல்

 

 

தமிழ்ச் சமூகம் தனது நீண்ட நெடிய பாதையில் எத்தனையோ தலைவர்களை கண்டிருக்கிறது. ஆனால் பெரியார் போன்ற ஆளுமையை இந்த நிலம் அதுவரை பார்த்ததில்லை. பெரியார் எழுதியிருக்கிற /பேசியிருக்கிற அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நம் நிலத்தில் வேறு எந்த தலைவருக்கும் இப்படிப்பட்ட முறை வகை ஒழுங்கு நிகழ்ந்ததில்லை.

பெரியார் இருந்த காலகட்டத்தில் அவர் உரைத்த கருத்துக்களில் பலவற்றில் குறிப்பாக அவரது மொழிக் கொள்கையில் ,மொழி பற்றிய அவரது நிலைப்பாட்டில் எனக்கு கடுமையான முரண்கள் உண்டு. எல்லை மீட்பு போராட்டம், கீழ்வெண்மணி படுகொலை , 60 களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல அரசியல் நடவடிக்கைகளில் அவரது செயல்பாடுகளில் எனக்கு தீவிரமான எதிர்ப்பு நிலை உண்டு.

பெரியாரால் தான் படித்தோம் பெரியாரால் தான் வளர்ந்தோம் பெரியாரால் தான் இங்கு அனைத்தும் நிகழ்ந்தது என்றெல்லாம் ஒரு காலக்கட்டத்தில் நானே பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் ஒரு காலகட்டம் வந்தது. பெரியாரின் கருத்துக்களை பெரியார் வழி வந்தவர்களாக சொன்னவர்களே மதிக்காமல் கடந்தபோது ..
பெரியார் என்னைப் போன்ற பலரால் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டார். வரலாறு முழுக்க பல்வேறு முரண்கள், ஏற்றத்தாழ்வுகள் என அவர் கருத்துக்களில் ஏராளமான குழப்பமும், முன்னுக்குப் பின்னான மாறிய காட்சிகளும் புலப்பட்டன. இன அழிவிற்குப் பிறகு பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் மீதான கடும் எதிர்ப்பு நிலை, விமர்சனங்கள் எழும்போதெல்லாம் பெரியாரை கேடயமாகப் பயன்படுத்தும் தந்திரம் போன்றவை பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன.

என்னைப் பொறுத்தவரையில் பெரியார் கடவுள்- மதம்- சாதி போன்ற நிலைகளுக்கு எவ்வாறு எதிராக நின்றாரோ அதே அளவு நிலம் – இனம் -மொழி ஆகியவைகளுக்கும் எதிராக நின்றார். தேசிய இன பெருமிதங்களை கற்பிதம் என அவர் தவறாக புரிந்து கொண்டார் ‌. வரலாறு பல்வேறு தேசிய இனங்களின் பயணங்களால் நிகழ்ந்தது என்பதை அவர் மறுத்தார். எல்லாவித பிற பெருமிதங்களுக்கு அப்பால் மனிதனே மேலானவன் என அவர் நம்பினார். ஆனால் அந்த மனிதனே ஒரு தேசிய இனத்தின் அடிப்படை அலகு என்பதை அவர் மறுத்தார்.

இது போன்ற பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் நான் பெரியாரை தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். அவர் பற்றி நான் முழுவதுமாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். முரண்களும் கருத்துக்களில் முன்னும் பின்னான குழப்பங்களும் உடைய அம்மனிதரை பெரியாரை கடவுளாக்கியவர்கள் மத்தியில் ஒரு கால கட்டத்தில் தோன்றிய சிந்தனையாளராக , சமூகத்தில் நிலவிய பல்வேறு மூடத்தனங்களுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாக உரைத்த ஒரு துணிச்சல்காரராக உணர்ந்து அவரை வாசித்து வருகிறேன்.

பெரியாரை படிக்காமல் அவர்தான் சர்வரோக நிவாரணி என்று பேசுவதும் அவர்தான் அனைத்திற்கும் காரணம் என இகழ்வதும் ஏறக்குறைய சரி சமமானதுதான். பெரியாரைப் பற்றி இருதரப்பினருமே அவரவர் பங்குக்கு பெருமிதங்களை, கற்பிதங்களை , விமர்சனங்களை கட்டி வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அப்பால் பெரியார் என்ற சிந்தனையாளரின் கருத்துக்கள் தமிழ் நிலத்தில் நிகழ்த்திய மாற்றங்கள் செலுத்திய ஆதிக்கங்கள் ஆகியவை மிக நுட்பமானவை. ஆனால் இவற்றையெல்லாம் தர்க்கரீதியில் உரையாடாமல் பெரியாரை கடவுள் ஆக்குவதிலும் , பெரியார் பெயரைச் சொல்லி வசூல் செய்வதிலும் அவரது வாரிசுகள் மும்முரமாக இருப்பதால் அவர் பற்றிய தீவிர அறிவுப்பூர்வமான உரையாடல்கள் தமிழ் மண்ணில் ஆரோக்கியமாக நிகழாமல் போனது தமிழ் அறிவுலகில் ஏற்பட்டிருக்கிற மாபெரும் குறையாகவே நான் கருதுகிறேன். அளவுக்கு மிஞ்சிய போற்றலும் இகழ்தலும் நிகழ்ந்த மனிதனாக பெரியார் திகழ்கிறார்.

இன்று தமிழ் தேசிய சிந்தனைகள் பரவலாக பரவிக்கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் பெரியார் பற்றிய பெருமித கதையாடல்களை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு அவரை மறு வாசிப்புக்கு உட்படுத்துவதே தற்கால இளையோருக்கு சரியான ஒன்றாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன். பெரியாரை வாசிக்காமல் இகழ்வது எப்படி அபாயமோ பெரியாரை வாசிக்காமல் புகழ்வதும் அவ்வாறு அபாயகரமானது. இந்த இரு நிலைகளுக்கும் அப்பால் பெரியாரை ஒரு காலகட்டத்தின் மனிதர் என்ற வகையில் கருதி மெளனமாக கடந்து செல்பவர்கள் எத்தனையோ மடங்கு மேலானவர்கள்.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் நிலத்தில் தீவிரமான தாக்கத்தை செலுத்திய/ பல முற்போக்கு ,பெண்ணீய, மூடத்தன எதிர்ப்பு, சாதி மத எதிர்ப்பு என்கிற பல்வேறு சிந்தனை முறைமைகளுக்கு வலு சேர்த்த ஐயா பெரியார் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.

 1,341 total views,  1 views today