ராகு காலம் எமகண்டம் பார்த்து வளர்பிறை அமிர்த யோகத்தில் திமுக இளைஞரணி செயலாளராக பதவி ஏற்று இருக்கின்ற உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பினை பற்றி விடுதலையில் வரப்போகும் வாழ்த்துக் கட்டுரையையும்..

இதேபோல ஒரு நாள் திகவின் தலைவராக ஆக இருக்கிற அன்புராஜ் வீரமணியின் பதவியேற்பினை பற்றி முரசொலியில் வரப்போகும் வாழ்த்துக் கட்டுரையையும்..

இதேபோல திமுகவின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும்போது பதவியேற்பினைப் பற்றி விடுதலையில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும்..

அதேபோல திமுகவின் இளைஞரணி செயலாளராக இன்ப நிதி உதயா பதவி ஏற்கும்போது விடுதலையில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும் ‌…

அதேபோல அன்புராஜின் மகன் தி.கவின் தலைவராக பதவி ஏற்கும்போது முரசொலியில் வர இருக்கின்ற வாழ்த்து கட்டுரையையும்..

ஆவலோடு எதிர் பார்க்கின்றேன்.

இதைவிட இன்னும் ஆவலோடு..

இந்த காண சகிக்காத கண்றாவியை எல்லாம் .. ஒரு சாண் வயிற்றுக்காக…திராவிடத்தின் எதிர்காலம், திராவிடம் 2.0 என்றெல்லாம்
முட்டுக் கொடுத்து முக்காப்பக்கம் முகநூல் பதிவு எழுதும் முற்போக்காளர்களின் பதிவுகளையும்…

பெரியாரை காப்பாற்றிட வேண்டுமே, திராவிட கொள்கைகளை காத்திட வேண்டுமே என்றெல்லாம் பேசி எழுதி பேமென்ட் வாங்கும் அறிவுஜீவி பதிவுகளையும்..

இனி கோபாலபுரத்தில் சாய்பாபாவின் ஆசிப் பெற்ற மஞ்சள் துண்டு மகானின் வீட்டில் பிறக்கப்போகிற சின்னக் குஞ்சும் பெரியாரை காக்க போகிற திராவிடப்பிஞ்சு என்று எழுதப் போகிற எழுத்து வல்லாண்மை மிக்க 200 ரூபாய் உ.பிக்களின் பாசப் பதிவுகளையும்..

ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எனக்குள் ஒரு செத்துப் போன திமுக காரன் எப்போதும் உண்டு. அவ்வப்போது அவன் லேசாக முனகுவான்.அப்போதெல்லாம் என் தன்மான செருப்பை எடுத்து அவன் தலையிலேயே தட்டி அவனை மீண்டும் கொல்வேன்.

இந்தக் கண்றாவியை எல்லாம் பார்த்துவிட்டு எனக்கு ஒரு நிம்மதி. இனி அந்த செத்துப் போன திமுக காரன் மீண்டும் முனகப்போவதில்லை. அவன் தன்னைத் தானே காறி உமிழ்ந்து விட்டு காலமாகிவிட்டான்.

ஒரே ஒரு கேள்விதான்..
ஒரு செத்துப் போன திமுக காரன்
என்ற அளவில் என்னிடம் இருக்கிறது.

அயோக்கியர்களா…

உங்களைவிட பெரியாருக்கு எதிரி வேறு யார் இருக்க முடியும்..??
…..

மணி செந்தில்.