மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

இனியாவது பேசுங்கள்.

அரசியல்

மீண்டும் ஒரு நிம்மதியற்ற இரவாக இந்த இரவு கழிந்து கொண்டிருக்கிறது. சாத்தான்குளம் தந்தை- மகன் படுகொலை செய்திகளை பார்க்கும்போது சத்தியமாக மனநிம்மதி கொள்ள முடியவில்லை. நானும் என் கவனத்தை திசை திருப்பிக் கொள்ள என்னென்னவோ செய்து பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் அதே காட்சிகள் நினைவுக்கு வந்து மனதை அலைக்கழிக்க செய்கின்றன.இதுபோன்ற கொடுமைகள் ஈழ நிலத்தில் நடந்ததாக சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தந்தைக்கு முன்பாக மகனையும், தாய்க்கு முன்பாக மகள் மகனையும், பெற்ற பிள்ளைகளுக்கு முன்பாக பெற்றோர்களையும் கொடுமைப்படுத்தும் காட்சிகளை சிங்களப் பேரினவாத அரசு செய்வதாக நான் செவி வழி செய்திகளாக படித்திருக்கிறேன். அறிந்திருக்கிறேன். அதேபோன்ற நிகழ்வுகள் தமிழகத்திலும் நடைபெறாது என நம்பியிருந்தேன். இது ஜனநாயக நாடு. சட்ட மாண்புகளின் அடிப்படையில் அரசுகள் நடைபெறுவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமை, எழுத்துரிமை ,கருத்துக்களை பகிரும் உரிமை என பல்வேறு உரிமைகளின் வாயிலாக நமது சுதந்திர வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கின்ற உண்மையை இப்போது நாம் மெல்ல மெல்ல உணரத் தொடங்கி இருக்கிறோம். எந்த நேரத்திலும் உங்கள் குதத்தில் லத்திகள் திணிக்கப்படும் ஒரு நிலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை சாத்தான் குலத்தைச் சேர்ந்த தந்தை- மகன் ஆகிய 2 பேர் தங்களது உயிரை இழந்து உலகத்திற்கு அறிவித்திருக்கிறார்கள்.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எத்தனையோ மாறுதல்கள் இந்த நாடு சந்தித்து இருக்கிறது. ஆனால் காவல்துறை கட்டமைப்பில் மட்டும் இந்த நாடு இன்னும் ஆங்கிலேயர் காலத்திலேயே இருந்து வருவது என்பது சத்தியமான உண்மை. எத்தனையோ மனித உரிமை விழிப்புணர்வு ஏற்பட்ட இக்காலத்திலும் கூட ஒரு காவல் அதிகாரி நட்டநடு வீதியில் ஒரு பெண்ணை அறைந்ததில் அந்தப் பெண்ணின் காது சவ்வு கிழிந்து செவிடாகி போனதை நாம் ஒரு செய்தியாக கண்டு கடந்து போனோம்.. அணு உலைக்கு எதிராக அமைதியாக போராடிக்கொண்டிருந்த கூடங்குளம் மக்களை கடற்கரையில் வைத்து அடித்து, இழுத்து போனபோது.. சில அனுதாப முணுமுணுப்புகளும், அரசியல் சார்ந்து உப்புச்சப்பற்ற கருத்துக்களையும் தவிர நம்மிடத்தில் இருந்து எதுவும் வரவில்லை. பல வருடங்களுக்கு முன்பாக சிதம்பரத்தில் பத்மினி என்ற பெண் காவல் நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது ஏற்பட்ட அதிர்வலைகள் சில வாரங்களில் அடங்கி அது ஒரு காலத்து செய்தி என்பதைத்தவிர வேறு எதுவும் நிகழாமல் அடங்கியது.எல்லா அநீதிகளும் ஒரு செய்தி என்கிற அளவிற்கு நவீன உலகத்தின் சமூக வாழ்க்கை நமது மனநிலையை மாற்றி வைத்திருக்கிறது. ஊடகங்களும் அடுத்தடுத்து வருகிற முக்கிய செய்திகளிலும், தற்போதைய செய்திகளிலும் கவனத்தை வைத்துக்கொண்டு ..அடுத்து ஏதாவது ஒரு செய்தி வருகிறதா என காத்துக்கொண்டிருக்கிற, வக்கிரம் மிகுந்த வணிக எதிர்பார்ப்பிற்கு மாறிவிட்டன. அவர்களுக்கு யார் முதலில் செய்தி தருவது என்பது மட்டுமே முக்கியமானது. டிஆர்பிக்காக போட்டி போட்டுக் கொள்ளும் போட்டியில் ஒருவர் செத்தாலும் அது செய்திதான். ஒரு கோடிப் பேர் செத்தாலும் அது ஒரு செய்தி தான். அதைத் தாண்டி இங்கு எதுவும் இல்லை.மனித உயிருக்கு இங்கே மதிப்பில்லை. அப்படி ஒரு மனநிலையை திட்டமிட்டு அதிகாரம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மனித உயிருக்கு மதிப்பு ஏற்பட்டால் சகமனிதன் கேள்விகேட்க தொடங்குவான். கேள்வி கேட்டால் பிரச்சனைகள் வரும். பிரச்சனைகளால் போராட்டங்கள் வெடிக்கும். போராட்டங்களால் அதிகாரத்திற்கு அழுத்தங்கள் மிகும். எனவேதான் மனித உயிருக்கு மதிப்பற்ற நிலையை அதிகார நிறுவனங்கள் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கின்றன.குறிப்பாக காவல்துறை எப்போதும் அதிகாரத்தின் அடியாளாக இருந்து வருவதென்பது ஆங்கிலேயர் காலத்து தொடர்ச்சி. எனவே அரசு /அரசாங்கங்கள் உள்ளிட்ட அதிகார நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்பிற்காக காவல்துறைக்கு உள்ளீடாக கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்கி இருக்கின்றன. அந்த கட்டற்ற சுதந்திரம் தான் சர்வாதிகாரமாக, மனித உயிர்களை பலி கொள்ளும் ஏதோச்சதிகாரமாக மாறி இருக்கின்றது. நேர்மையாக இருக்கின்ற சில காவல் துறையை சேர்ந்த நண்பர்கள் கூட என்னிடம் எத்தனையோ முறை கனிவாக அறிவுறுத்தி இருக்கிறார்கள். “ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை..” என்று கேட்பதில் ஒரு பக்கம் அன்பு இருந்தாலும்.. இன்னொரு பக்கம் நம்மை தடுக்கவேண்டும், கொஞ்சம் அச்சுறுத்தி வைக்க வேண்டும் என்கின்ற அவர்களது உள்ளார்ந்த விருப்பத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அப்படியானால் காவல்துறையில் நல்லவர்களே இல்லையா என்று சொன்னால்.. அது மிகச் சொற்பமான எண்ணிக்கையில் என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கின்ற மாபெரும் ஆபத்து. அந்த சொற்பமான எண்ணிக்கை பெரும்பான்மையான எண்ணிக்கையாக மாறவேண்டும் என்பதுதான் இரண்டு உயிர்களை பறிகொடுத்து நிற்கின்ற ஒட்டுமொத்த சமூகமும் காவல்துறையிடம் எதிர்பார்க்கின்ற மாற்றம். அதேபோல நமது மனநிலையும் மாற வேண்டியது அவசியம். ஏதோ ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்படும் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்படும்போது திருப்தி அடைகிற “கூட்டு மனசாட்சி”என்கின்ற பொது உளவியலை நமக்குள் நாம் அழித்தொழிக்க வேண்டும். எந்த குற்றத்தையும் நீதிமன்றம் மூலம் தண்டிக்க வேண்டும் என்கின்ற ஜனநாயக வழி குணாதிசயம் நமக்கு ஏற்பட வேண்டும். இல்லையேல் காவல்துறையின் துப்பாக்கி முனையிலும், குதங்களில் நுழையும் லத்தி முனையிலும் தான் நாட்டின் நீதி பரிபாலனம் நடைபெறும்.காவல்துறையின் அடக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. சற்று நுட்பமான, அதே சமயத்தில் கனிவும், மதிப்பும் இல்லாத, உயர்ந்த குரலோடு கூடிய அவர்களது அதிகார ஆணவ நடவடிக்கைகள் ஒருபோதும் சட்டத்தின் வாயிலாக, நீதியின் வடிவத்தோடு நடைபெற்றதில்லை. வரம்பு மீறல் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் எழுதப்படாத சட்டம்.கடந்த 2019 மாவீரர் தின குருதிக்கொடை அளிக்கும் நிகழ்வின்போது நாங்கள் இதை அனுபவித்தோம். குருதிக் கொடை என்பது மனித உயிர் காக்கும் முக்கிய சேவை. ஒரு திருமண மண்டபத்தில் உள்ளரங்கு நிகழ்ச்சியாக குருதிக்கொடை நிகழ்வினை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும்போது காவல் அதிகாரிகள் வந்து எங்கள் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்கள். கேட்டால் அனுமதி பெறவில்லை என்றார்கள். அதிலும் அங்கு வந்த ஒரு காவல் அதிகாரி ஒருவர் அங்கே இருந்த மருத்துவப் பணியாளர்களை தடித்த வார்த்தையால் ஏசத் தொடங்கினார். நிகழ்வு நடத்த மண்டபம் தந்த மண்டப மேலாளர் ஒருமை வார்த்தைகளால் ஏசப்பட்டார். உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்கு யாரும் அனுமதி பெறுவதில்லை. மேலும் குருதிக்கொடை நிகழ்ச்சி குடந்தை அரசு தலைமை மருத்துவமனை அனுமதி பெற்று அதன் ஊழியர்களால் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு. அரசு மருத்துவமனைக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தன்னிச்சையாக முன்வந்து குருதி வழங்குவது என்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒரு செயல். ஆனால் நாங்கள் தேசியத் தலைவர் படம் பயன்படுத்துகிறோம் என்றும், மண்ணிற்காக போராடிய மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம் என்றும் அதனால் நாங்கள் குருதி கொடுக்கக்கூடாது என்றும், காவல்துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்திய காவல் அதிகாரி “இதை எவ்வாறு உங்களால் தடுத்து நிறுத்த முடியும்..” என கேட்ட என் முகத்தை பார்க்கவே இல்லை.என் அருகில் நின்று கொண்டிருந்த தம்பிகளை விரட்டுவதிலேயே அவர் குறியாக இருந்தார். சத்தமாகப் பேசி அங்கே இருந்த பெண்களை, புதிதாக வந்து இருப்பவர்களை அச்சுறுத்த வேண்டும் என்கின்ற அவரது நோக்கம் எனக்கு புரிந்தது.நாட்டில் எவ்வளவோ தவறுகள் நடக்கின்றன அதைத் தடுக்காமல் குருதி கொடுப்பதைப் போய் தடுக்கிறீர்களே என கேட்ட நாம் தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் தொகுதி இணைச்செயலாளர் தம்பி பிரகாஷ் யை ஒரு உதவி ஆய்வாளர் அடிக்க பாய… எந்த நொடியும் பெரும் தகராறு வெடித்து இரு தரப்பிற்கும் கைகலப்பு உண்டாக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சற்று சுதாரிக்காமல் இருந்திருந்தால் காவல்துறையின் லத்திகள் மக்கள் உயிர் காக்க, குருதி கொடுக்க வந்த, இந்த மண்ணை நேசிக்கின்ற இளைஞர்களின் புட்டத்தை பதம் பார்த்து முடித்திருக்கும். அந்த நேரத்தில் இதை புரிந்துகொண்ட நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் திட்டமிட்டு தம்பிகளை அப்படியே அமைதிப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குருதிக்கொடை நிகழ்வினை தொடர்ந்து நடத்தினோம். இந்த நிகழ்வு குறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் அன்று மாலையே சென்று புகார் அளித்தோம். ஆனாலும் ஒரே துறை அல்லவா.. ஏதேதோ சமாதானம் பேசி இனி இவ்வாறு நடக்காது என்றெல்லாம் கூறி அந்த மேலதிகாரி எங்களை அனுப்பி விட்டார்.நவம்பர் மாதம் வந்தாலே காவல்துறை எங்கள் மீது பாய தொடங்கிவிடும். எளிய பிள்ளைகள் காசு வசூலித்து தலைவர் பிரபாகரன் படம் அச்சிட்டு சுவரொட்டி ஒட்டுவார்கள். அதை காவல்துறை விடியவிடிய கிழித்துக் கொண்டிருக்கும். சென்ற வருடம் கூட எனது சின்னத்தம்பி ஒருவன் கேட்டான். இந்த நாட்டை கொள்ளை அடித்து சுரண்டிக் கொழுத்த எத்தனையோ அரசியல்வாதிகளின் படங்கள் சுவரொட்டிகளாய் இங்கே இருக்கலாம். ஆனால் இனத்திற்காக மொழிக்காக தன்னையே அர்ப்பணித்து போராடிய எங்கள் உயிர் தலைவன் படத்தை அவர் பிறந்தநாளில் கூட நாங்கள் ஒட்டக்கூடாதா என்று..கேட்டால் காவல்துறையிடம் தயாராக ஒரு பதில் இருக்கிறது. “மேலிட உத்தரவு.” அந்த மேலிடத்தைத்தான் பலரும் பல காலமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த சட்டத்தின் வாயிலாக இதுபோன்ற அடாவடிகளை காவல்துறை செய்து வருகிறது என்பது யாருக்குமே தெரியாது. தெருவோர வியாபாரிகளிடம் அத்துமீறுவது, மாதக்கடைசியில் எங்கேயோ நின்று கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சாவியை பிடுங்கிக்கொண்டு லைசென்ஸை எடு.. ஹெல்மெட் போடல.. ஹெட்லைட் சரியா எரியல ..என்ற கேள்விகள் எல்லாம் கேட்டு, கடைசியில்” எதற்கு கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டும்.. ஏதாவது கொடுத்து விட்டு போங்கள்” என வசூலை போடுவது, காவல் நிலையத்தில் அமர்ந்துகொண்டு நீதி அரசர் போல வாத பிரதிவாதங்களை கேட்டு நீதிமன்றத்தையே நடத்துவது, என நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் அமைதியாக கடந்து போகிறோம். எதிர்பாராத விதமாக ஒரு நாள் சாலையில் அவசர வேலை காரணமாக வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு ஒதுங்கி நிற்கின்ற நிலை நமக்கு வரும் போதுதான் அது பற்றியே நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம். அப்போது கூட கையில் இருப்பதை கொடுத்து விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்து செல்வதை தான் நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அப்படி ஓடி ஓடி த்தான் அநியாயமாக இரண்டு உயிர் கொலை செய்யப்படுவதற்கு நாமும் மறைமுக காரணமாக அமைந்திருக்கிறோம். உண்மைதான்.. நடந்து முடிந்திருக்கிற 2 கொலைகளுக்கும் நாமும் ஒரு காரணம்.அநீதியை எதிர்ப்பது என்பது பிரச்சனையில் சிக்கிக் கொள்வதல்ல. அது சாதாரண வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிற இயல்பு என்பதனை எப்போது குணாதிசியமாக கொள்கிறோமோ அப்போதுதான் “சாத்தான்குளங்கள்” இல்லாது ஒழியும்.சாலையில் என்று யாராவது போராடிக்கொண்டு இருந்தால்.. நமக்கென்ன என வேடிக்கை பார்த்துவிட்டு கடக்கும் ஒவ்வொருவரின் புட்டத்திலும் நுழைய ஒரு அதிகாரத்தின் லத்தி காத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணரும் தருவாயில் தான்.. அதிகாரங்களை எதிர்த்து நிற்பதற்கான வலிமை ஏற்படும். இல்லையேல் “சாத்தான்குளங்கள்” சரித்திரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டே செல்லும்.வாழ்வதற்கான போராட்டம் என்கிற நிலை மாறிவிட்டது.இனி போராட்டமே வாழ்க்கை என்கிற நிலை தொடங்கியிருக்கிறது.எப்போதுமே அமைதியாக இருப்பதைப் போன்ற அநீதி எதுவும் இல்லை.எல்லா நேரத்திலும் அமைதியாக இருக்கின்ற அனைத்து குரல்களும் நடக்கின்ற அனைத்து தவறுகளுக்கும், கொலைகளுக்கும் ஆதரவானதே..அநீதியை எதிர்த்து எங்கிருந்தோ எதிர்த்து எழும்பும் ஒவ்வொரு குரலும் இனி இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் இருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வெளிச்சத் துளிகள்.

 437 total views,  1 views today