மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

பாடு நிலாவே… தேன் கவிதை..

கட்டுரைகள்..

❤️

எனக்கு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. என் எதிரே அமர்ந்திருந்த சாந்தினி தன் அழுகையை கட்டுப்படுத்தவே முடியாமல் அழுதுகொண்டே இருந்தாள். உண்மையில் மானுட இனத்தின் அழுகை தனித்துவமானது. யார் அழுதாலும் அழுகை அவர்களை வயது குறைவானவர்களாக காட்டிவிடுகிறது. அழுகை என்பது சிறுவர்களுக்கான செய்கை என்பது போல ஒரு மனத்தடம் நம் மனதில் ஆழ பதிந்திருக்கிறது.துயர் மிகுந்து ஒருவர் அழும் விழிகளில் அவரின் பால்யத்தின் நிழல் படிந்து கொண்டே இருப்பதுதான் வாழ்வின் விசித்திரம்.சாந்தினியும் ஒரு சிறுமியைப் போல மாறி விட்டிருந்தாள்.அழுது அழுது அவளது கண்கள் வீங்கி இருந்தன. என்னோடு அமர்ந்திருந்த குமார் அவளது அழுகையை பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருப்பது போல வலிந்து காட்டிக்கொண்டது எனக்கு என்னவோ போல் இருந்தது. “நான் வேண்டுமானால் வெளியே இருக்கட்டுமா.. ? “என்ற எனது தயங்கிய கேள்விக்கு “சும்மா அனத்தாம உட்காருடா..” என உறுதியான குரலில் பதிலளித்தான் குமார்.

குமார் என்னோடு பள்ளியில் படித்தவன். பெங்களூரில் பணிபுரியும் போது மும்பையைச் சேர்ந்த சாந்தினியை காதலித்து திருமணம் செய்து கொண்டான். ஓரிரு வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த அவர்கள் என்னவோ காரணத்தினால் பிரிய முடிவு செய்துவிட்டார்கள். குமார் பல காரணங்களை சொன்னான். சாந்தினியிடம் இருந்தது ஒரே ஒரு காரணம் தான். “குமாருக்கு என்னை பிடிக்கவில்லை.”அப்போது ஒரு இளம் வழக்கறிஞராக இருந்த எனது சட்ட ஆலோசனை கேட்கத்தான் இருவரும் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். குமாருடன் அவனது பெரியப்பா வந்திருந்தார். நடிகர் வினு சக்கரவர்த்தி போல காட்சி அளித்த அவர் கடுகடுத்த குரலில் “சீக்கிரமாக செல்ல வேண்டும்..” என அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார்.சில வருடங்கள் காதலித்து இருந்திருக்கிறார்கள். ஓரிரு வருடம் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் பிரிவினை மட்டும் சில நிமிடங்களில் எடுக்கச் சொல்லும் குமாரின் பெரியப்பா எனக்கு மூர்க்கமான மனிதராக தெரிந்தார்.குமார் கிளம்ப தயாரானான். “சரி மாப்பிள்ளை.. நீ மீயூசுவல் டைவர்ஸ் பெட்டிஷன் தயார் செய். நாங்கள் திங்கட்கிழமை வந்து கையெழுத்து போடுகிறோம்..” என்றான். சாந்தினி “சார்.. உங்கள் போன் நம்பர் வேண்டும்.” என கேட்டாள். “அதுதான் எல்லாமே முடிந்துவிட்டதே.. எதற்கு அவனுடைய போன் நம்பர் ‌…” என குமார் அதிர்ந்து பேச.. நான் அமைதியாக எனது விசிட்டிங் கார்டை அவளிடம் கொடுத்தேன்.

அன்று இரவே சாந்தினி என்னை அழைத்தாள். போனில் ஒரே அழுகை.யாரோ சொந்தக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் குமார் இப்படி நடிக்கிறான் என சொல்லி அழுதாள். எனக்கு என்ன சொல்லி தேற்றுவது என்றே புரியவில்லை. எப்போதும் நேசிப்பதற்கு ஓராயிரம் காரணங்கள் தேவையாக இருக்கின்றன. ஆனால் வெறுப்பதற்கு எந்த காரணமும் தேவையில்லை. நோக்கம் மட்டும் இருந்தால் போதுமானது.”நீங்க சொல்லுங்க சார்..நான் அவசியம் டைவர்ஸ் பெட்டிஷனில் கையெழுத்து போடணுமா..?” என சாந்தினி கேட்டதற்கு என்னிடத்தில் பதில் இல்லை. “அது.. உங்க விருப்பங்க. ஆனால் இப்படி வெறுப்பவனோடு இனி எப்படி வாழ்வீர்கள்..?” எனக் கேட்டேன்.சாந்தினி அமைதியாக இருந்தாள். அதன் பிறகு நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட வருகையில் சாந்தினியை பார்த்தேன். தெளிவாகவும் ஏதோ ஒரு சிந்தனையோடும் அவள் இருப்பதாக தோன்றியது. அமைதியாக கையெழுத்து போட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.இதுபோன்ற விவாகரத்து வழக்குகளில் நீதிமன்றத்திலேயே கதறியழும் பல பெண்களையும், சில ஆண்களையும் நான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை என்பது இத்தனை கடினமானதா.. ஒரு நேசிப்பின் முறிவு என்பது ஏறக்குறைய மறுபிறப்பு போல அமைந்துவிடுகிறதே.. என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இந்த அனுபவங்களால் எனக்குள் திரும்பத் திரும்ப நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் ‌…”எது அதிக இன்பம் தருகிறதோ.. அதுவே அதிகத் துன்பம் தரும்.”

❤️

சில மாதங்களுக்குப் பிறகு சாந்தினி அலைபேசியில் வந்தாள்.நீதிமன்ற வாய்தா தேதி உறுதிப்படுத்திக் கொள்ளவும், ஆர்டர் காப்பி எப்போது வாங்கிக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளவும் என்னோடு பேசுவதாக கூறினாள்.தற்போது தான் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், விடுதியில் தங்கி இருப்பதாகவும் கூறினாள்.நான் விவரங்கள் சொன்னதும் சரியாக அதே நாளில் வந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விவாகரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு சாந்தினியும், குமாரும் பிரிந்து போனார்கள்.நீதிமன்றத்தில் காத்திருந்தபோது சாந்தினி வாக்மேனில் ஏதோ பாடல்களை கேட்டவாறு சற்று துணிவாக அமர்ந்திருந்தது வழக்கமான அந்த நீதிமன்ற சூழலுக்கு பொருந்தாது போல எனக்குத் தோன்றியது.அன்று இரவு மீண்டும் சாந்தினி அழைத்தாள்.

இந்த முறை சற்று தெளிவாக பேசினாள்.”நீங்க சொன்ன பிறகு தான் சார் புரிஞ்சிச்சு. ஏன் பிடிக்காதவங்களோடு வாழணும்.. ? நம்பிக்கையும் அன்பும் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை சார்..?”என்றெல்லாம் அவள் பேசிக்கொண்டே போனாள்.”எப்படி குறுகிய காலத்தில் எவ்வாறு மீண்டு வந்து இருக்கிறீர்கள்..?” என கேட்டேன்.”நிறைய ஊர் சுத்தினேன் சார். நிறைய பாட்டு கேட்டேன். குறிப்பா உங்க ஊர் எஸ்பிபி சாங்ஸ். அந்தக் குரல் எப்போதுமே லைட்டா இருக்கும் சார். அதே சமயத்தில் கம்பீரமாகவும் இருக்கும். எவ்வளவு கடினமான பாட்டா இருந்தாலும், எஸ்பிபி அதை அலட்டிக்காம லைட்டா பாடுவார் சார்.அந்தக் குரலே ஒரு மெசேஜ் சார்.எதையும் லைட்டா எடுத்துக்கணும் எனச் சொல்வது போல இருக்கும்.”எனக்கு ஒரே ஆச்சரியம். எஸ்பிபி தமிழ் திரைப்பட பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார் என தெரியும். ஒரு சில ஹிந்தி பாடல்கள் பாடியிருக்கிறார் என அப்போதுகேள்விப்பட்டும் இருந்தேன். ஆனால் ஒரு தீவிரமான எஸ்பிபி ரசிகை தமிழகத்தில் இல்லாமல் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் என என்னால் நினைத்துக்கூட பார்க்கவில்லை.ஆனால் சாந்தினி பேசிக்கொண்டே போனாள். “ஹம் ஆப் கே ஹைன் கோன்..படத்தில் எல்லா பாட்டும் எஸ்பிபி தான் பாடி இருப்பார். அதேபோல “ஏக் துஜே கேலியே” படத்தில் எல்லா பாட்டும் எஸ்பிபி தான் பாடியிருப்பார்.

இன்னைக்கு கோர்ட்ல கூட நான் இருந்தபோ “ஹம் ஆப் கே ஹைன் கோன்..” பாட்டை தான் சார் கேட்டுக்கொண்டிருந்தேன் என்றாள் அவள். விவாகரத்து வாங்க வந்திருந்த அவள் கேட்டுக்கொண்டிருந்தது திருமணக் கொண்டாட்டத்தை பற்றிய படமான “ஹம் ஆப் கே ஹைன் கோன்” படத்தின் பாடலை என்பதுதான்‌ சற்று வினோதமாக இருந்தது.

❤️

“எஸ்பிபி” என நம் அனைவராலும் அழைக்கப்பட்ட திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் சுமார் 42 ஆயிரம் திரை இசைப் பாடல்களைப் பாடி இருப்பவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட எஸ்பிபி 1946 ஆம் வருடம் ஜூன் 4 இல் ஆந்திர மாநிலம் கொகேணாட்டம் பேட்டையில் பிறந்தார். இயற்பெயர் ‌ சீறீபதி பண்டிதரதயுல பாலசுப்பிரமணியம். பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த சாந்தி நிலையம்(1969) படத்தில் “இயற்கை என்னும் இளைய கன்னி..”என்று எஸ்பிபி பாடிய பாடல் தான் அவர் பாடிய முதல் பாடல். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை வென்றிருக்கும் அவர் 60 படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.எஸ்பிபி பாடகரான புதிதில் தமிழ்த் திரை உலகில் டி.எம் சௌந்தரராஜனின் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது. அழுத்தம் திருத்தமான தெளிவான உச்சரிப்பிற்கு பேர்போன டிஎம்எஸ் குரலில் இருந்து எஸ்பிபி முற்றிலுமாக வேறுபட்டவர்.மொழி அழகின் வளைவு நெளிவுகளோடு தன் குரலை இழைய விட்டு தன் பாடும் திரையிசைப் பாடலை வேறு வடிவத்திற்கு கடத்தி சென்று எல்லையில்லா பேரின்பத்தை கேட்போருக்கு அளித்தவர் எஸ்பிபி.இவரின் சக பாடகராக திகழ்ந்த ஜேசுதாஸ் கொஞ்சம் கடினத்தன்மை வாய்ந்த குரல் கொண்டவர். ஆனால் எஸ்பிபி ஒரு மெல்லிய கோடு போல எத்தனை கடினமான இசைக் கோர்வை களாக இருந்தாலும் ‌ அதனோடு ஒட்டி இணைந்து பாடுவதில் தேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, மராத்தி என பல இந்திய மொழிகளில் பாடியவர்.எஸ்பிபி தன் வாழும் காலத்தில் இசையமைப்பாளர்களின் பாடகராக திகழ்ந்தார்.தன் குரலால் ஒரு பாடலை எவ்வளவு மேம்படுத்தி தர முடியும் என்கின்ற மேதமை அவரிடம் இயல்பிலேயே இருந்தது.கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் “லட்சுமண்-ஸ்ருதி” சார்பில் கும்பகோணத்தில் நடந்த கச்சேரி ஒன்றினில் எஸ்பிபி அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சிக்கு நான் தான் சட்ட ஆலோசகராக இருந்தேன். அதனால் நிகழ்ச்சி முடிந்து இரவு உணவு அவரோடு சாப்பிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஐஸ்கிரீம் உள்ளிட்ட எதையும் மீதம் வைக்காமல் அவர் ‌ சாப்பிட்டு மகிழ்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் குளிர்ச்சியாக சாப்பிடுகிறீர்களே.. உங்கள் குரலுக்கு எதுவும் ஆகாதா..?” எனக் கேட்டேன். “இதுவரை அப்படி ஆனதில்லை. ஏன் அப்படி ஆகவில்லை என நானும் ஆராய்ந்ததில்லை…” என சொல்லிவிட்டு சிரித்தார்.அந்த இசை இரவில் அவர் பாடும் நிலாவே பாடிய போது.. எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வயதான அம்மா கண்கலங்கி நெகிழ்ந்து கூறியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.”இவன் பாடும் போதெல்லாம் அந்த நிலாவே வானத்திலிருந்து இறங்கி வந்து கேட்கும் போல..”உண்மைதான். எஸ்பிபி தன் பாடும் பாடலுக்கு அவ்வளவு நேர்மை செய்யக்கூடிய மனிதராக திகழ்ந்தார். “மலையோரம் வீசும் காற்று..” என அவர் பாடும் போதெல்லாம்‌ நம் காதோரத்தில் மலையோரம் வீசுகிற காற்று தொட்டுத் தீண்டியது. தொலை தூரப் பயணங்களில் காரில் செல்லும் போது மௌன ராகம் படத்தில் வருகிற “மன்றம் வந்த தென்றலுக்கு..”பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாம் பயணம் செய்யும் கார் ஏதோ மிதப்பது போல உணர்வை நாம் அடைந்திருக்கிறோம். அவர் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிப்பிக்குள் முத்து படத்தில் “துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா..” என்ற பாடல். இதன் தெலுங்கு வடிவம் மொழி புரியாவிட்டாலும் நமக்கு அது இன்னும் நெருக்கமாக இருக்கும். அதுதான் மூல வடிவம். வெறும் பாடலாக மட்டும் கேட்பு வாய்ப்பாக மட்டும் இல்லாமல் அதை பேரின்ப அனுபவமாக அரை நூற்றாண்டுகாலம் மாற்றியவர் எஸ்பிபி அவர்கள். அமேசானின் “அலெக்ஸ் இன் வொண்டர்லாண்ட்” நிகழ்வில் கூட நிகழ்கலை கலைஞர் அலெக்ஸ் சொன்னது போல தமிழில் புகழ்பெற்ற “மாசி மாசம் ஆளான பொண்ணு..” என்ற பாடலை தெலுங்கில் எஸ்பிபி குரலில் கேட்டவர்கள் புண்ணியவான்கள்.எங்களது எத்தனையோ இரவுகள் அவரால் தான் முழுமை அடைந்தன‌. எங்களது துயரங்கள், இழப்புகள், பிரிவுகள் என மனித வாழ்வின் இயல்பான வலிகளில் இருந்து மிக்கவராக அவரது குரல் விளங்கியது.உண்மையிலேயே சொல்கிறேன்.எங்கள் தலைமுறையின் ஈடு இணையற்ற பாடகர் அவர்தான்.

❤️

இன்று தொலைக்காட்சித் திரைகளில் எஸ்பிபி மரணமுற்ற செய்தி கேட்ட கேட்டபோது எனக்கு ஏனோ சாந்தினியின் நினைவு வந்தது. அவளது அலைபேசி எண்ணிற்கு முயற்சி செய்தபோது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.விவாகரத்து நாளின் போது கூட அழாமல் அவளை காப்பாற்றிய எஸ்பிபி இன்று அவளை கலங்கி அழ வைத்திருப்பார் என நான் யோசித்த போது…எஸ்பிபி எதிரே இருந்த தொலைக்காட்சி திரையில் பாடத் தொடங்கினார்.

“போகும் பாதை தூரமே..வாழும் காலம் கொஞ்சமே..ஜீவ சுகம் பெற ராக நதியினில்நீ நீந்தி வா..இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேனே..கேளாய் பூ மனமே..”

❤️

 1,012 total views,  1 views today