வைதீக இந்து மதம் அல்லது வர்ணாசிரம தர்மம் என்பது நான்கு வர்ணங்கள் ஏறக்குறைய நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகள் என கொடூர அடுக்குகளால் நுட்பமாக கட்டப்பட்ட ஒரு அசாதாரணமான கோபுரம்.

பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் அவருக்கு கீழாக அதி சூத்திரர் என்று அழைக்கக்கூடிய தொட்டால் பார்த்தால் தீட்டு , நிழலைத் தீண்டுவது கூட பாவம் என்ற வகையில் அடக்கி ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் என இந்த வரிசை உச்சி முதல் கீழ் வரையிலான கொடுங்கோன்மையின் விசித்திர அடுக்கு.தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்களுக்கு கீழாகவும் ஒரு அடுக்கு, அதற்கு கீழேயும் ஒரு அடுக்கு என்கின்ற அடுக்குமுறை தனக்குக் கீழாக ஒருவன் இருக்க வேண்டும் என்கின்ற மனித உளவியல் மேலாதிக்கத்தை சார்ந்து அல்லது பயன்படுத்தி வர்ணாசிரம தர்மம் உச்சபட்ச அறிவாற்றலோடு படைக்கப்பட்ட சுரண்டல் வாத மோசடி அமைப்பு.

இந்த அமைப்பை சிதைக்க பன்னெடுங்காலமாக பண்பாட்டுத் தளங்களில் பல புரட்சிகள் நடந்து வருகின்றன. பௌத்த சமண எழுச்சி முதல் வள்ளலார் வரையிலான எண்ணற்ற தாக்குதல்கள் வர்ணாசிரம தர்ம அநீதிக் கோட்டையின் மீது நிகழ்த்தப்பட்ட கொண்டே இருக்கின்றன. இன்றளவும் சாதாரண இயல்பு வாழ்க்கையில் சாதியின் இருப்பு வலிமையாக இருப்பதன் காரணம் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய சுரண்டல் வாத மேலாதிக்க குணாதிசயத்தை அது பெற்றிருப்பதே ஆகும்.

சாதியின் பெருமையை காப்பாற்ற நாமெல்லாம் ஒரே சாதி என்கின்ற நுட்பமான கூட்டுணர்வு மற்றும் அது தருகிற பாதுகாப்பு போன்றவை மிகப்பெரிய உதவியாக இருக்கின்றன. சாதியை பொறுத்தவரை நிலத்தை போல பெண்ணும் ஒரு பொருள்தான். பெண்ணை வைத்து தான் சாதி சார்ந்த உரையாடல்கள் நிகழ்த்தப்படுவதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.”எங்கே சார் சாதி இருக்கு.. இப்பல்லாம் யார் சாதி பார்க்கிறா..?” என்பதான கேள்விகளை வெகு சாதாரணமாக நம்மால் எதிர்கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு அரசு அலுவலகத்திலோ, ஒரு நீதிமன்றத்திலோ, பள்ளி கல்லூரி வளாகத்திலோ புதிதாக வருகின்ற அலுவலர் அல்லது மாணவர் என்ன சாதி என்பதை தெரிந்துகொள்ள இன்றளவும் கடுமையாக முயற்சிகள் நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.எந்த சாதி அந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ, அதற்கு எதிராக பிற சாதிகள் ஒன்றிணைவது இயல்பாக நடக்கிறது. எதுவாக இருந்தாலும் சாதி தன்னை தக்கவைத்து தகவமைத்துக் கொண்டே இருக்கிறது. அதுதான் சாதி கட்டமைப்பின் மிகப்பெரிய நுட்பம்.சாதி சார்ந்த மனநிலையிலிருந்து மீறுவது என்பது சாதாரண செயல் அல்ல. என் தம்பி ஒருவன் சாதிமறுப்பு மனநிலை கொண்டவன்.

தன்னை குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்தப் படுவதை மிகக் கேவலமாக உணர்பவன். என்னை சாதியாக அடையாளப் படுத்துவது‌ என் பிறப்பை இழிவுப்படுத்துவதற்கு சமம் என்று எப்போதும் கோபத்தோடு சொல்கிறான். தற்போது அவன் காதலிக்கிறான். சாதி மறுப்பு திருமணம் செய்ய ஒரு போதும் அவனது உறவினர்களிடத்தில் அனுமதி கிடைக்கப்போவதில்லை. ஆனாலும் மீறத் தயாராக இருக்கிறான்.அவன் தான் ஒருமுறை மிக அமைதியாக சொன்னான். “என் சாதியைப் பற்றி யாராவது பேசினால் எனக்கு அருவருப்பாக இருக்கிறது. நீ நம்மாள் தானே என்று எந்த உறவினனாவது கேட்கையில் அடித்து மண்டையை உடைக்க வேண்டும் என தோன்றுகிறது” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். சாதிய பெருமிதத்தின் மீது தீரா வெறுப்பு அவனுக்குள் ஏற்பட்டுவிட்டது. சொல்லப் போனால் சுய சாதிப் பெருமிதம் முற்றிலுமாக இழந்துவிட்ட மனநிலை அது. அந்த மனநிலை கொண்ட ஒரு கூட்டம் தான் இப்போது தேவைப்படுகிறது.

இன்றளவும் 85% துப்புரவு பணியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களாகவே ஏன் அமர்த்தப்படுகிறார்கள்‌ என்ற கேள்வியிலிருந்து நம் சிந்தனையை துவங்கலாம்.இந்திய ரயில்வே என்ற உலகிலேயே மாபெரும் அமைப்பில் இன்றளவும் தண்டவாளங்களில் சிதறிக்கிடக்கும் டன் கணக்கிலான மனித மலங்களை தூய்மைப்படுத்துபவர்கள் யாராக இருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். சமூகத்தின் நம்மைப் போன்ற சக மனிதர்களான ஒரு பிரிவினர் மீது மட்டும் சுமத்தப்படும் இந்த இழிநிலை எந்த தர்மத்தின் வாயிலாக கட்டப்பட்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.அது தர்மம் அல்ல சதி என்று உணர தொடங்கலாம்.

இந்த வர்ணாசிரம தர்மத்திற்கு எதிர் கலகமாக பௌத்த மரபை 18 ,19ஆம் நூற்றாண்டுகளிலேயே முன்னிறுத்திய நமது பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் இந்தியப் பெரு நிலத்திலேயே முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடு நடத்தியவர். நிலைநிறுத்தப்பட்ட கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக முன்வைத்தவர். மாபெரும் பௌத்தர். தன்னை தமிழனாகஉணர்ந்து “தமிழை அறிய முடியாமல் பௌத்தத்தை உணர முடியாது என்று அறிவித்தவர்”.1.12.1891 இல் நீலகிரியில் நடைபெற்ற மாநாட்டில் அயோத்திதாசர் இயற்றிய முதல் தீர்மானம் சொல்கிறது “பறையர் என்றழைத்து இழிவு செய்கிற இழிநிலையைப் போக்க சட்டம் வேண்டும்”. இன்னொரு தீர்மானம் “பொது இடங்களில் சாதாரணமாக சாதி வேறுபாடின்றி நுழைவதற்கான” தீர்மானம்.இந்தத் தீர்மானங்களை எல்லாம் இப்போது வாசித்துப் பார்க்கும்போது சாதி என்பது ஆழமான கொடும் நோயாக பல கோடி மக்களை வதைத்து வந்திருக்கிற துயரமாக வரலாற்றின் பாதையில் நீண்டு வந்திருக்கிற அநீதியாக உணர முடிகிறது.

சமீபத்தில் கூட கடலூரில் இருந்து ஒரு தம்பி எடுத்தார். உங்களை சௌராஷ்ட்ரா என்று சொல்கிறார்கள். நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும். உங்கள் பெரியப்பா எனது பக்கத்து வீட்டுக்காரர். நீங்கள் ஏன் உண்மையை சொல்ல மறுக்கிறீர்கள், உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதானே என்று உண்மையாகவே அவர் என் மீதான அன்பில் கேட்டார். ஏனென்றால் நான் என் சுய சாதியை வெறுக்கிறேன். அதை என் மீது படிந்திருக்கிற அழுக்காக உணர்கிறேன் என்பதை அவரிடம் சொல்லி புரிய வைக்க முயன்றேன். அந்த அழுக்கை எப்படி எனது அடையாளமாக நான் சொல்வது என்ற தயக்கம் எனக்கு இருக்கிறது என்று சொன்னேன்.

அந்த உடன்பிறந்தான் புரிந்து கொண்டார் என்றே நினைக்கிறேன்.உண்மையில் தூயத் தமிழனான என்னை இன்னொரு இனத்தானாக காட்டுவது இழிவானது என்றாலும் , அதைவிட இழிவானது ஒரு சாதிக்காரனாக நான் அடையாளப்படுத்தப்படுவது.அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் பலநூறு பக்கங்களை படித்துப் பார்க்கும்போது சாதி என்ற அநீதி இந்த சமூகத்தை பிளந்து போட்டிருக்கிற கொடுங்கோன்மை புரிகிறது.இந்த நுட்பத்தை தான் திராவிட இயக்கங்கள் மிகச்சரியாக புரிந்துகொண்டு தன்னை தமிழனாக முன்னிலைப்படுத்தி, சாதிமறுப்பு பேசி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்த நம் தாத்தா அயோத்திதாச பண்டிதரை முற்றிலுமாக வரலாற்றில் புறக்கணித்து இருந்தன.ஆனால் சமீப காலமாக பேரன்கள் நாம் நமது முன்னோர்களான அயோத்திதாசர் பண்டிதர் , இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்களை பற்றி அறிய தொடங்கியிருக்கிறோம்.

நிறைய தமிழ்த் தேசிய இளைஞர்கள் அயோத்திதாசர் பற்றி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை இணைந்து ட்விட்டர் ஸ்பெசில் நடத்திய நேற்றைய முன்தின கலந்துரையாடலில் கலந்துகொண்டார்கள்.

அயோத்திதாசரை பற்றி ஒரு எளிய அறிமுக உரையை 45 நிமிடங்கள் பேச எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. நமது தாத்தா அயோத்திதாசரின் மொழி உணர்வு மிக்க தமிழ் மைய வாதம் இன்றளவும் திராவிட அறிஞர்களுக்கு ஒவ்வாமையாகவும், தமிழ்த்தேசியர்களுக்கு ஊக்கமாகவும் இருக்கிறது. அவர் திராவிடர் என்ற சொல்லை கூட தமிழர் என்ற பதத்தில் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்.

அதையும் இறுதிக்காலத்தில் விட்டுவிட்டு 1907ல் “ஒரு பைசாத் தமிழன்” என்று தொடங்கி அந்த இதழை 1908ல் அதாவது மறு ஆண்டே “தமிழன்” என்று பெயர் மாற்றுகிறார். 1935 வரை அந்த இதழ் அவரது மறைவிற்கு பிறகும் வெளிவந்திருக்கிறது. அவரது படைப்புகள் தமிழ்த் தேசிய இனத்தின் அறிவுச்சேகரங்கள்.எனக்குத்தெரிந்து “தமிழன்” என்ற சொல்லை முதன்முதலாக அரசியல் சொல்லாக (political term) பயன்படுத்தியது நம் தாத்தா அயோத்திதாச பண்டிதர் தான்.ஒருபக்கம் டுவிட்டரில் “திராவிடத் தந்தை அயோத்திதாச பண்டிதர்” என சிலர் வலிந்து நம் தாத்தாவை திராவிடக் கூட்டத்திடம் அவர்கள் விரும்பாமலேயே திணித்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் தமிழ்- தமிழன் என்ற பரப்பில் தீவிரமாக இயங்கிய நம் தாத்தா அயோத்திதாசரை எந்த திராவிடத் தலைவரும் நினைவு கூரக் கூட விரும்புவதில்லை.

ஆனால்‌ மறுபுறமோ அயோத்திதாசரது பேரன்கள் “தமிழ்த் தேசியத்தின் முன்னோடி” என அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.சாதி மறுப்பும், தமிழ்த் தேசிய உணர்வும் ஒருங்கே மலர்வதற்கான காலம் உருவாகிவிட்டது என்ற நம்பிக்கையை புதிய தமிழ்த் தேசியர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.சாதி மறுப்போம். தமிழர்களாய் தலை நிமிர்வோம்.