????

ஒரு புத்தக முன்னுரையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை பிரதமர் மோடியுடன், ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா‌ முற்றிலும் தவறாக பொருத்தியது அவரது அரசியல் ரீதியான அறியாமையை காட்டுகிறது.பெரும் மேதைகளுக்கு அவரவர் சார்ந்த துறைகளில் ஒளிரும் மேதமையை தாண்டி மற்ற துறைகளில் பூஜ்ஜியமாகத்தான் இருப்பார்கள் என்பது வரலாறு நமக்கு காட்டும் பாடம். இசைஞானி இளையராஜாவும் அதில் விதிவிலக்கல்ல. சச்சின் டெண்டுல்கரிடம் போய் இசையமைக்க எப்படி சொல்லக்கூடாதோ அதேபோல இளையராஜாவிடம் அரசியல் பற்றிய தெளிவை எதிர்பார்க்க கூடாது என்பதுதான் எனது புரிதல்.

மேலும் இளையராஜா தன் இந்துத்துவ சிந்தனாபோக்கும் வாழ்வியல் முறையும் தான் தன் இசைத்திறன் ஆதாரமாக இருக்கிறது என நம்புகிறவர். ஆன்மீகம் / கடவுள் போன்றவைகளுக்கு பின்னாலுள்ள அரசியலை காண விரும்பாதவர். தனது மேதமை மொழி/சாதி/நிலம் என எல்லைகளை தாண்டி விரிந்தது என நினைப்பவர். எனவேதான் தமிழ் மொழியை விட இந்தி மொழி இசையமைக்க சிறந்தது எனவும், தன்னை ஒரு சாதி அடையாளத்துக்குள் பார்க்கக்கூடாது எனவும் தான் கூறியவர். அப்படிப்பட்ட பார்வைகளை எதிர்த்தவர்.அது தமிழ் மொழியின் மீதான ஒவ்வாமையோ, சாதி மீதான எதிர்ப்புணர்ச்சியோ அல்ல. எல்லைகளை கடந்த மேதமை நிலையாகவே புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறவர். ஒரு தீவிரமான அழுத்தப்பட்ட நிலையிலிருந்து பெரும் பாய்ச்சல் போல வெளிப்பட்ட அவரது ஒட்டுமொத்த வாழ்க்கை சனாதன கட்டுகளை அறுத்தெரிந்த ஒரு புரட்சியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என விரும்பாதவர். அதற்காகவே ஆன்மீகப் போர்வை ஒன்றை தன் மீது போர்த்திக் கொண்டவர்.

எப்போதுமே இளையராஜாவின் அரசியலற்ற அவரது சமூகப் பார்வை நமக்கு உவப்பானது அல்ல. அவரது வரலாற்றிவு இல்லாத சமூக அறியாமை என்பது உச்சத்தை தொட்ட அவரது இசை மேதமையால் அவர் இழந்திருக்கிற இழப்பு. கடந்த பல ஆண்டுகளாக தன் வாழ்வையே இசைக்காக அர்ப்பணித்த அவர், இசையை தாண்டிய சமூக அறிவிலும் சரியாக இருப்பார் என எதிர்பார்ப்பது பிழையானது.ஆனால் அது அவரது கருத்து என்கிற முறையில் அதை வெளியிடும் உரிமை அவருக்கும் , அவரது இசையை தாண்டிய இந்தக் கருத்தினை விமர்சிக்கும் உரிமை நமக்கு உண்டு.

இதில் முக்கியமான பிரச்சினை என்னவெனில்..கல்யாண வீடாக இருந்தால் தாங்கள் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், சாவு வீடாக இருந்தால் தாங்கள் தான் பிணமாக இருக்கவேண்டும், புகழப்பட வேண்டுமானால் கருணாநிதி ஸ்டாலினை தான் புகழவேண்டும் என செஞ்சோற்று விசுவாசம் பாராட்டும் அறிவாலயத் திண்ணைகள், முற்போக்கு வெங்காயங்கள் இளையராஜாவை தனிப்பட்ட முறையில், விமர்சிக்க எந்த தகுதியுமற்றவர்கள்.இஸ்லாமிய மக்களை மிகவும் இழிவு படுத்துகிற ‘பீஸ்ட்’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைப் பற்றி வாய் திறக்கக்கூட மறுக்கிற இவர்கள் இளையராஜாவின் “மோடி பற்று” பற்றி விவாதிக்க தகுதியற்றவர்கள்.

தங்கத் தலைவனுக்கு பாராட்டு விழா, காவியத் தலைவனுக்கு கவியரங்கம் என தங்களுக்குத் தாங்களே விழா எடுத்துக் கொள்ளும் “திராவிடத் திருவாளர்கள்” கருணாநிதியை புகழாமல் இளையராஜா ஏன் மோடியை புகழ்கிறார் எனப் பொருமுவது புரிகிறது.இதே இளையராஜா ஸ்டாலின் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுத நேர்ந்திருந்தால், இப்போது நிகழ்ந்திருக்கிற கொடும் விபத்தை விட இன்னும் கொடுமையாக நடந்திருக்கக் கூடிய ஆபத்தும் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.ஒருவேளை நடந்திருந்தால் ஸ்டாலினும் அம்பேத்கருக்கு நிகரானவராக மாறி இருப்பார்.நல்லவேளை அது நடக்கவில்லை. இது நடந்துவிட்டது. நம்மைப் பொறுத்தவரை இரண்டுமே தேவையில்லாத ஆணிகள் தான்.

எப்போதும் திரைப்படக் கலைஞர்கள் அதிகாரத்திற்கு அச்சப்பட்டு கொண்டே தங்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் சிந்திப்பார்கள். அதிகாரத்தின் நெருக்கம் அவர்களுக்கு , அவர்களது தொழிலுக்கு , புகழ்/ விருது/ உயர்வுகளுக்கு அவசியமானது. எனவே யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களை புத்தன் இயேசு காந்தி என புகழ்வது அவர்களது வாடிக்கை. கருணாநிதி ஆளும்போது பக்கத்து இருக்கையில் ரஜினிகாந்த் உட்கார்ந்திருப்பார். கமலஹாசன் அமர்ந்திருப்பார். ஜெயலலிதா ஆளும் போதும் அதே காட்சிதான். அவர்களைப் பொறுத்தவரையில் கருணாநிதி மேடையில் அவர் அரசியல் ஞானி. ஜெயலலிதா மேடையில் அவர் தைரியலெட்சுமி.

எனக்கு மிகவும் பரிச்சயமான புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ஒருவர் இருக்கிறார். எல்லோருக்கும் நல்லவர் (?) அவர். ஈழத்தமிழர் போராட்டங்களிலும் அவர் இருப்பார். அறிவாலயக் கூட்டங்களிலும் அவர் இருப்பார்.ஜெயலலிதாவை புகழ்வார். கருணாநிதியை கொண்டாடுவார். அந்தப் பொழுதில் அவர் ஏறுகிற அந்த மேடைக்கு அவர் நேர்மை(?) செய்யாமல் அன்றையப் பொழுது அவரால் உறங்க முடியாது.அவர் சமீபத்தில் அறிவாலய கூட்டமொன்றில் பேசிய பேச்சைக் கேட்ட எனக்கு, ஈகி முத்துக்குமார் ஆவணப்படம் வெளியிட்டபோது அவர் பேசிய பேச்சு எனக்கு நினைவுக்கு வந்து தொலைந்தது. தன் வாழ்வில் ஒரே சமயத்தில் ஈகி முத்துக்குமாரோடும் , திமுக தலைவர் கருணாநிதியுடனும் இணைய முடிக்கிற ‘சர்க்கஸ் மனிதர்கள்’ அவர்கள்.

அதே போல் தான் தரமான திரைப்படங்களை இயக்கிய அறிவார்ந்த இரண்டு இயக்குனர்கள் சட்டென ஒரு மேடையில் நடிகர் ரஜினிகாந்தை “தமிழ்நாட்டை காப்பாற்ற” அரசியலுக்கு வாருங்கள் என அழைத்த போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இத்தனைக்கும் அதில் ஒருவர் சிறை எல்லாம் சென்று வந்தவர்.அதே வரிசையில் இன்னொருவர் சமீபத்தில் ஸ்டாலின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப் போகிறேன் என்று அதிரவைத்தார். அதில் திரைப்படத்திற்கான சுவாரசியம் இருக்கிறதாம். இதே மனிதர் எடப்பாடி ஆட்சி காலத்தில் என்ன சொல்லியிருப்பார் என யோசித்துப் பார்த்தபோது பெரும் அச்சமாக இருந்தது.

இப்படித்தான் இவர்கள் இருக்கிறார்கள். யார் ஆள்கிறார்களோ அவர்களின் அரசவையில் பொற்காசு பிச்சைக்கு வரிசைக் கட்டுகிறார்கள்.அவ்வளவுதான் அவர்களது அறிவு. அதுதான் அவர்களது பிழைப்பு.கலை என்ற அம்சத்தை நீக்கினால் அனைத்துமே பேதமைதான். இதில் நடிகவேள் எம் ஆர் ராதா போன்ற விதிவிலக்குகள் மிக மிகக் குறைவு.கலை அறிவைத் தாண்டி திரைப்படக் கலைஞர்களிடம் அனைத்தையும் எதிர்பார்ப்பது தான் காலம் காலமாக தமிழர்கள் செய்துவருகிற பிழை.

தங்கள் வாழ்விற்கான அனைத்து தீர்வுகளையும் திரைப்படக் கலைஞர்கள் வழங்கிவிட வேண்டும் என்பதில் தமிழர்கள் காட்டுகிற தீவிரம் தான் இன்று இளையராஜா மீது வெறுப்பாக மாறுகிறது.

அவர் கருத்து அனைத்தையும் நாம் ஏற்க வேண்டிய தேவை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இளையராஜா இசையை ரசிப்போம். என்றும் கொண்டாடுவோம்.

அதைத் தாண்டி அனைத்திலும் அவரை ஏற்க வேண்டிய தேவை நமக்கும் இல்லை. அவருக்கும் இல்லை.