
தாரணா..
உனக்கு கடிதம் எழுத
நான் யாரோ.
அந்த யாரோ
எழுதிக் கொள்வது
என்னவென்றால்.
கண்ணீரால்
அந்தக் கடலை
மேலும் உப்பேற்றாதே!
நிலமிழந்தவர்களின்
விழியோரங்களால்
அந்தக் கடல்
ஏற்கனவே உப்பேறிதான்
கிடக்கிறது.
கடலிலிருந்து
ஒரு சொட்டு நீலத்தை
துளி நீரிலிருந்து
பிரித்தெடுத்து
கலங்கும் விழிகளுக்குள்
விட்டுக் கொள்.
கடலைப் போலவே
எல்லையற்ற
உன் துயரத்தின்
ஒரு பாகம்
கடலில் கரையக்கூடும்.
மீண்டும் மீண்டும்
கடல் நீரை கைகளால்
துளாவு.
ஏதாவது உலவிக்
கொண்டிருக்கின்ற
சிறு மீன்கள்
உன் விரல்களை
முத்தமிடக்கூடும்.
அந்த
முத்தத்தின் ஈரம்
வெறிச்சோடிய
உன் தனிமைப்
பாலையை
கடக்கும் போது
உதடு நனைத்து
உயிர் காக்க கூடும்.
கணநேரம்
கண் சிமிட்டாமல்
எங்கோ தூரத்தில்
உன்னை கடக்கிற
அந்த ஒற்றை
வெள்ளைப் பறவையை
பார்த்து விடு.
அந்தப் பறவையின்
இறகில் தான்
மீள் எழுவதற்கான
நம்பிக்கையின்
செய்தி
எழுதப்பட்டிருக்கிறது

உன் தாய்நிலம்
பிரிந்து
கடலேறி வரும்
அந்தக் கண்ணீர்
நாளில்..
நீலம் பூரித்த
கடலுக்கு மேலே
ஒளிந்து கொண்டிருக்கும்
நட்சத்திரங்களை
நீ பார்த்திருப்பாய்.
திசையற்றவர்களுக்கு
அந்த நட்சத்திரங்கள் தான் உறவினர்கள்.
உயிர்நிலம் வலிந்து
பிடுங்கப்பட்ட அந்த இருட்டில்
அந்த நட்சத்திரங்கள் தான்
பூமியில்தான் நீ
இன்னும் இருக்கிறாய்
என உனக்கு அறிவிக்கும்
நம்பிக்கையின் சிமிட்டல்கள் !

தாரணா !
இப்போது நீ
புரிந்துக் கொள்வாய்.
நீ
தனிமையில் இல்லை.
நீ இல்லை என்றால்
இந்த கடல்தான்
தனிமையில்
தகித்திருக்கும்.
இழந்த
நம் நிலமும்
தனிமையில் இல்லை.
அங்கே விழுந்த
உதிரச் சொட்டுக்கள்
அசாத்திய தருணம்
ஒன்றுக்காக
காத்திருக்கின்றன.
இதுவரை
பூமி காணாத
ஒரு பெருமழை
பெய்யும்
நள்ளிரவு முடிந்த
விடியலில்..
தாய் நிலத்தில்
உறைந்திருக்கும்
உதிரச் சொட்டுக்கள்
உயிர்ப்பிக்கும்.
அந்த நொடியில்
சில்லிட்ட
புல்வெளியில்
உன் மென் பாதம்
நம் தாய் நிலத்தில்
படும் நொடியில்..
உதிர நிறத்தோடு
ஆயிரமாயிரம்
காந்தள் பூத்து
மலரும்.
பொழுது புலரும்.

இப்படிக்கு
யாரோ.

மணி செந்தில்.
தாரணா- 18 Miles கதைப்பாடலின் நாயகி.
18 Miles:
மறுமொழி இடவும்