
நேற்றிலிருந்து மனம் ஏனோ மிகுந்த அழுத்தமாக இருந்தது. யாரிடமும் சரியாக பேசக்கூட முடியவில்லை. இனம் புரியாத கவலை ஒன்று சூழ்ந்து இதயத்தை உடைத்துக் கொண்டே இருந்தது. ஏதேதோ நினைவுகள் உள்ளுக்குள் சுரந்து கண்கள் கலங்கிக் கொண்டே இருந்தன. சரி தூங்கி விடலாம் என, மாத்திரைகள் எடுத்துக் கொண்ட போதும் நேற்று இரவு முழுமையாக தூக்கமே இல்லை. விடியற்காலையில் விழிப்பு வந்து தவிப்புடன் படுத்திருந்தேன். ஏதோ இன்று தான் எனக்கு உலகின் கடைசி நாள் என்பது போல.. தூங்காத முதல் நாள் இரவு , விழிகளின் மேலே வலியாய் ஏறி அமர்ந்திருந்தது. சாப்பிட்டவை எல்லாம் கசப்பாய் உணர்த்த, பசியும் செத்துப்போனது.
அம்மா பக்கத்திலேயே இருக்க வேண்டும் போல இருந்தது. எந்த வேலையும் சரியாக செய்ய முடியாத நிலை. இது போன்ற தருணங்களில் தான் புத்தகங்களில் முழ்கிப் போவேன். அதுவும் இந்த முறை பலன் அளிக்கவில்லை. பேசாமல் யாராவது மன நோய் மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாமா என்று நினைத்தபோது, ஞாயிற்றுக்கிழமை வேறு. ஞாயிற்றுக்கிழமை கும்பகோணத்தில் எதுவுமே கிடைக்காது. ஊரே அந்த ஒரு நாளில் மாயமாக மறைந்து விடும். செத்துப்போன ஊர் திங்கட்கிழமை காலைதான் விழிக்கும்.
இதன் நடுவே இழந்து போனவை எல்லாம் நினைவுக்கு வந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வாழ்வில் செய்த தவறுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நினைவுக்கு வந்து அழுத்தும் போது என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போதுதான் காரணமே தெரியாமல் இன்று மதியம் என் கணினியின் பழைய கோப்புகளை அலசிக்கொண்டிருந்தேன். அதில் எனக்குப் பிடித்த சில அபூர்வமான இளையராஜா பாடல்களை எப்போதும் சேகரித்து வைத்திருந்தேன். சரி கேட்போம் என, கேட்கத் தொடங்கினேன்.
“புத்தம் புது காலை”.. யில் தொடங்கியது என் பயணம். “ஆயிரம் மலர்களே” என மலர்ந்த போது உள்ளுக்குள் கட்டியிருந்த கயிறுகள் ஒவ்வொன்றாய் அறுபடத் தொடங்கின. ” கொடியிலே மல்லிகைப்பூ” படரும்போது வியர்த்துக் கொண்டிருந்த காதோரத்தில் யாரோ குளிர்க்காற்றாய் ஊதிக் கொண்டிருந்தார்கள். “மாலையில் யாரோ மனதோடு” பேசியபோது என் அழுத்தங்கள் ஒவ்வொன்றும் மெலிதாய் ஆவியாகிக் கொண்டிருந்தது. “தாலாட்டும் பூங்காற்று” வீசியபோது அடைபட்ட எல்லா அணைகளும் உடைந்து கண்கள் கண்ணீர் கொட்டித் தீர்த்தன. “காத்திருந்து காத்திருந்து” என உடைந்து அழுதேன்.
அது நள்ளிரவின் மழை போல, சோகத்தின் ” மேகம் கொட்டட்டும் ” எனக் கொட்டித் தீர்த்தது. ” ஏதோ மோகம்.. ஏதோ தாகம்” என்பது போல ஏதோ ஒரு வலி. “விழியிலே மணி விழியிலே” கொஞ்சம் கொஞ்சமாக குளிர் பரவத் தொடங்கியது. “கீரவாணி… இரவிலே.. கனவிலே..” இசைக்கத் தொடங்கியது.
அடுத்தடுத்த பாடல்களில் நான் பரவசமாகி “ஏதேதோ எண்ணம்” நினைத்து மெளனமாகி ” இது மெளன நேரம்” என எனக்குள் நீந்தி “நீலக் குயிலே..சோலைக் குயிலே..” என மலர்ந்துக் கொண்டிருந்த அந்த வேளையில்தான் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இசை தெய்வம் இளையராஜாவை பற்றி இயக்குனர் மிஷ்கின் பேசிய சிறியத் துண்டினை பார்த்தேன்.
“தினந்தோறும் சாமியை பார்த்தால் கூட நமக்கு அலுப்புத் தட்டிவிடும். ஆனால் உலகத்தில் அலுப்புத்தட்டாத ஒரே ஒரு விஷயம் எதுவெனில்.. அது இளையராஜா தான்..” என்று அவர் தழுதழுத்த குரலில் சொன்னபோது …
நான் கண்கலங்கியவாறு என் கணினி திரைக்கு முன்னால் தலையை அசைத்துக் கொண்டேன்.
அந்த மனிதன் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. நரகமான உலகை அந்தத் தனி மனிதன் தான் இறைவனாக காத்து நின்று வாழ முடிகிற அளவுக்கு ..மாற்றி இருக்கிறான். மூச்சடைத்த இருள்வெளியில் கிடைத்த ஆக்சிஜன் பலூன் போல.
மதியத்தில் இருந்து நள்ளிரவு வரை அந்த கடலில் நீந்தி கொண்டே இருக்கிறேன்.
இப்போது “தாலாட்டுதே வானம்.”

மறுமொழி இடவும்