
———————————————————————
தமிழில் தனிப்பாடல் தொகுப்பிற்கான வரவேற்பு மிகக் குறைவு. அதற்கான முயற்சிகள் எப்போதாவது குறிஞ்சி மலர் போல தமிழில் நடக்கின்றன. எங்களது காலத்தில் சுரேஷ் பீட்டர்ஸ் -ன் ( சிக்கு புக்கு ரயிலே, டேக் இட் ஈசி ஊர்வசி பாடல்களை பாடியவர்) “மின்னலே” என்ற ஒரு ஆல்பம் வந்தது. அதில் “முகிலென மழையென” என்ற பாடல் உண்டு. அந்தத் தனிப்பாடல் மனதை மிகவும் கவர்ந்த பாடல்.
இளையராஜா இந்த வகைமையை பக்தி பாடல்களுக்கான ஒரு வழியாக பெருமளவு பயன்படுத்திக் கொண்டார். ரமண மாலை மூகாம்பிகை பாடல்கள் போன்றவை இந்த வரிசையில் வரும். மற்றபடி அவரது நத்திங் பட் விண்ட், ஹவ் டு நேம் இட் போன்றவை அவரது உச்சபட்ச கலாமேதமையை பறைசாற்றக் கூடியவை. திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவை திரைப்பாடல்கள் சாராத அவரது தனிப்பாடல்களாக கேட்க முடிகிறது. ஏ ஆர் ரகுமான் அவர்களும் வந்தே மாதரம் போன்ற சில முயற்சிகள் செய்தார். தமிழில் தனிப்பாடல் அல்லது கதைப்பாடல் வகைமைக்கான முயற்சிகள் குறைவு என்பதுதான் பொதுவான கருத்து.
ஆனால் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இது போன்ற ஆல்பங்களுக்கான வரவேற்பு தனி. இந்தி கசல் தனி பாடல்களை நள்ளிரவுகளில் கேட்டு மகிழ்பவர்கள் கடவுளுக்கு அருகில் வசிப்பவர்கள்.
மேற்கத்திய நாடுகளில் மைக்கேல் ஜாக்சன் போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் சுயாதீன பாடல்கள் ( independent songs) மூலமாகத்தான் உலகத்திற்கு தெரிய வந்தார்கள். அப்படி தமிழிலும் அவ்வப்போது முயற்சிகள் நடந்தாலும் மனதில் பதியக்கூடிய ஒரு மாபெரும் பணியை 18 Miles குழுவினர் செய்திருக்கிறார்கள். இந்த முயற்சியை தமிழில் நாம் “கதைப்பாடல்” என வகைமைப்படுத்தலாம். ஆங்கிலத்தில் இதை Visual ballad என்றும் சொல்கிறார்கள்.

“நிலம் விழுங்கிய உன் கண்களின் முன்னே நிறுத்தப்பட்ட யுத்த ஊனம் நானென்று நீ அறிவாய்.
உன்னை யாரிடமும் நான் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.
ஆகவே நான் சொல்லத் தொடங்கினேன். “
என்ற அகரமுதல்வனின் வரிகளோடு தொடங்கும் போதே நாம் கனக்கத் தொடங்குகிறோம்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு முழுக்க நீர். பொங்கி பரவும் அலைகளின் ஊடே நிராதரவாய் கண்கள் முழுக்க கண்ணீரோடு ஒரு பெண். அவளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற ஒரு ஆண்.. இப்படி தொடங்குகிறது 18 Miles.
தனுஷ்கோடிக்கும் ஈழத்திற்கும் இடையிலான அந்த 18 மைல்கள் தான் இந்தப் பாடலின் மையப் பொருள். ஒரு இன அழிவு எப்படி தனி மனிதர்களின் சுயத்தின் உள்ளே ஊடுருவி வலி மிக்க அனுபவமாய் வெளி வருகிறது என்பதை மிக ஆழத்தோடு இயக்குனர் சதீஷ் வெளிப்படுத்தி இருக்கிறார்.
காட்சியியல் அழகில் நுட்பமான பல உணர்ச்சிகளை வெளிக் கொணர தெரிந்த இயக்குனராக சதீஷ் விளங்குவது இந்தப் பாடலின் மூலமாக உறுதிப்படுகிறது. தாய் நிலத்தை இழந்து ஏதிலிகளாக தென்படும் ஏதோ ஒரு கரையில் ஒதுங்கி விட வேண்டும் என்ற வேட்கையில் மிதந்து வரும் உறவுகள் எப்படி எல்லாம் எதிர்கொள்ளப்படுகிறார்கள் என்பதை காட்சியில் பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றன. தாய் நிலத்தை விட்டு வெளியேறும் துயரம் தான் கடலளவு பெரிது. அதன் நீட்சி முடிவிலி என்பதை சொற்கள் மூலமாகவும் காட்சிகள் மூலமாகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கின்ற இயக்குனர் சதீஷ் ஏற்கனவே பேச்சுலர் என்கின்ற திரைப்படத்தை இயக்கியவர் என்கிறார்கள். அவருக்காக அந்தப் படத்தை பார்க்க வேண்டும்.
எல்லாவற்றையும் இழந்து துவளுகிற கரங்களுக்கு பற்றிக்கொள்ள ஏதேனும் கிடைத்து விடாதா என கைவிடப்பட்டவர்களின் ஆன்ம வேட்கையை அந்தப் பாடலில் வரும் கதாநாயகி அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி உள்ளார். பாலு மகேந்திரா படங்களுக்குப் பிறகு கதாநாயகிகள் அழகாக காட்டப்படும் சில அபூர்வமான தருணங்களை இந்தப் பாடல் காட்சிகளிலும் காணும் போது பிரமிப்பாக இருந்தது.
குறிப்பாக இந்தப் பாடலின் கதை நாயகி. மென் சோகமும், தீராவலியும், காதலின் ஏக்கமும் பூத்து பூத்து தவழ்கிற கண்கள். எண்பதுகளின் கதாநாயகி மாதவிக்கு பிறகாக பேசும் விழிகள் .
கதையின் நாயகனாக அசோக் செல்வன். அவரது இறுகிய முகம் , நெகிழும் கண்கள் கதையின் போக்கிற்கு பாடலின் வரிகளுக்கு மிகவும் உதவி இருக்கின்றன. பாராட்டுக்கள். உண்மையில் வளர்ந்து வரும் போது நடிகர் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பினை தேர்வு செய்ததற்கு கொஞ்சம் துணிச்சல் வேண்டும் தான். காதலிக்காக தண்டனையை ஏற்கும்
” punishment sir” என அவர் கூறும் போது சலனமற்ற அவரது விழிகள் Awesome.
ஒரு பதினாறு நிமிட பாடலில் ஒரு மாபெரும் இன அழிவை, தாய் நிலம் பிரியும் துயரை, காதலின் பூத்தலை, அது கோரும் வலியை, காவிய காதலுக்கே உரிய முடிவை என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சீரற்ற முறையில் அடுக்கி, அந்த சீரற்றத் தன்மையையே பேரழகாக சித்தரிக்கின்ற கலைத்தன்மை இயக்குனர் , படத் தொகுப்பாளர், மற்றும் இசையமைப்பாளர் ஆகியோரிடம் இருந்தது.
இதையெல்லாம் தாண்டி கதைப்பாடல் பேசுகிற பேசுபொருள். தாய் நிலம் இழந்தவர்களின் தவிப்பு. தன் முன்னே தன் இனம் அழியக் கொடுத்தவர்களின் விழியோரங்கள். இவை எதுவுமே நம்மை நிம்மதியாக இருக்க விடாது. பார்வையாளனுக்குள் இனம் புரியாமல் சுரந்துக் கொண்டிருக்கும் பரிதவிப்பிற்கு துணையாக திட்டமிட்டு வார்த்தெடுக்கப்பட்ட அந்தக்
கருப்பு/ வெள்ளை வண்ணம். உரையாடல்களை சாத்தியப்படுத்துகிற அந்த தொலைபேசிக் கூண்டு மட்டும் நினைவுகளின் செந்நிற வண்ணத்தில்.
இறுதியாக “போ..உன் கதைகளை உலகத்திற்கு சொல்!” என பிரிவை சுமந்து வலியோடு நாயகியை அனுப்பி வைக்கும் நாயகனின் வார்த்தைகள் தான் அவனது காதல் உணர்ச்சியின் உச்சம்.
ஒவ்வொன்றிலும் ஆழமான அழகுணர்ச்சியோடு, கவித்துவ உரையாடல்களோடு, கலைச்செழுமையாய் கட்டப்பட்ட இந்த கதைப்பாடல் நாடிழந்த தமிழர்களுக்கானது மட்டுமல்ல. தன் தலைமுறையில் தனது இயலாமையால் சொந்த இனத்தை பறிகொடுத்து குற்ற உணர்வில் குமைகிற தாயகத் தமிழர்களுக்கானதும் தான்.
இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்கிற Think Music நிறுவனத்தாருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
மிகு வசீகரம் மிகுந்த படைப்பை நம் விழிகள் முழுக்க நிரப்பி, இன அழிவின் வலியாலும், கசிந்துருகும் காதலின் துயராலும் நம்மை உறைய வைத்திருக்கிற இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு
நெஞ்சிற்கினிய பேரன்பு. நன்றி. பாராட்டுக்கள்.
தவறவே விடக்கூடாத அந்த வசீகர அனுபவத்திற்கு .. நீங்களும் உங்களை ஆடப்படுத்திக் கொள்ள..
இதோ அந்தக் கதைப்பாடலின் தொடர்புச்சுட்டி.

மறுமொழி இடவும்