பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கவிதைகள்

துயரக்காற்றில் அலையும் மலர்…

1264180814thamarai-news
உணர முடியா

தருணமொன்றில்
மெளனமாய் சொட்டிக்
கொண்டே இருக்கின்றன
கருகிப் போன நம்பிக்கைகள்..

சின்னஞ்சிறு கரத்தோடு
பின்னி பிணைந்த
விரல்களின் நெருக்கமும்…
நிலாக்கால இரவுகளில்..
கதைகள் கேட்ட கதகதப்பும்..
கனவாய் தொலைந்த வலியில்
வார்த்தைகளற்று வெறித்தப்படியே…

துயரக்காற்றில்
அலைந்திருக்கும்
ஒரு மலர் உதிரவும்
முடியாமலும்..
உறங்கவும்
முடியாமலும்…..

(யார் பக்கம் தவறு இருந்தாலும்…
தண்டனையை மட்டும் அடைந்திருக்கும்
தியாகு-தாமரை மகன் சமரனிற்காக.. )

நவனும்..அவனும்..

Modern art wallpaper 05 1280x720
கோப்பைகளில்
குடியேறிய
இரவொன்றில்
வெறியின் முனை
கொண்டு மானுட
சாசனமொன்றை
எழுதவதாக அறிவித்தான்
நவன்..
விடிவதற்குள் தன்
பக்கங்களில் சூரியனை
இழுத்து வந்து புகுத்தி
விட கனவுகளின்
வெப்பத்தை கடத்தி
வந்திருக்கிறான்..
மிதக்கும் ஏடுகளில்
அடுக்கடுக்காய்
வார்த்தைகளை
நவன் வசப்படுத்தி
வரைந்திருந்த
பொழுதில்…
முறிந்த குழலில்
சொட்டிய இசையாய்
புனைவின் 68 ஆம்
பக்கத்திற்கு அருகே
அழுதுக் கொண்டிருந்த
அவனை சந்தித்து
விட்டான்…
என்னை கொன்று விடு
துயர் மிகு வரிகளால்..
என்று இறைஞ்சியவனின்
மூடிய இமைகளில்
சிறகுகள் வரையப்பட்டிருந்தன…
எழுதாப் பக்கங்களில்
தளும்பிக் கொண்டிருந்த
வேட்கை மேகமொன்றில்
அழுத அவனின்
விழி துடைத்து
இலட்சிய சமூகத்தின்
கனவு மனிதனாய் அமர
வைத்தான் நவன்..
புன்னகை கோலோட்சி
மானுட பிரகடனத்தை
முழக்க குரலால் அவன்
இசைக்க தொடங்கும்
போதுதான் அது நடந்தது..
காற்றின் நுனி கிழித்து
ஆழ் கனவின்
பள்ளத்தாக்கு ஒன்றில்..
நாக்கு தள்ளி
செத்துப் போனான்
இறுதிச் சமூகத்து
இலட்சிய மனிதன்…
உதிரம் உறைந்திருந்த
வெள்ளைப் பக்கத்தில்
தனது கண்ணீரால்
நவன் இவ்வாறு
எழுதினான்..
அவன் மரணத்திற்கு
நான் காரணமல்ல..
காற்று வீசி
கண்ணீர் வரிகளை
உலர்த்தி போனதோடு..,
மானுட வரலாற்றின்
கடைசி வரி முடிவிலியாய்
அந்தரத்தில் அலைகிறது..
-மணி செந்தில்

தேநீர் வாழ்க்கை

tea-in-the-rain

மிச்சம் வைக்காமல்

ஒரே மடக்கில்

உறிஞ்சி விட

தோணுகிறது..

வாழ்க்கை எனும்

இந்த மழைக்கால தேநீரை.

கதை வீடு

1358672
நீல நதிக் கரையோரம்
இடறிய சொற்களை
சேகரித்து
ஒரு கதை வீடு
கட்டினேன்..
நாயகனும், நாயகியும்
கொஞ்சி குலாவிய
கதை வீட்டிற்கு
வெறுமை நிரம்பி
கோப்பை தளும்பிய
தருணத்தில் வில்லன்
ஒருவன் வந்தமர்ந்தான்..
பின்னரவின் கனவொன்றில்
உதிர்ந்த புன்னகை
வாசத்தோடு விதூசகன்
ஒருவனும் வந்து சேர்ந்தான்.
அலை கடல் ஓரமாய்
ஒதுங்கிய ஒற்றை
செருப்பு,
நதியில் மிதந்த
பெளர்ணமி நிலவின்
நிழல்
குப்பைத் தொட்டியில்
கிடந்த  ஒஷோவின்
கிழிந்த பக்கம்
என அடுக்கடுக்காய்
துணை நடிகர்கள் வந்து
சேர்ந்தனர்
அங்கே நவரசம் நிரம்பிய
கதைப் பின்னல்
தன்னைத்தானே பின்னிக்
கொண்டது..
எழிலார்ந்த உரு கொண்டு
மின்னலின் நுனி விழியாய்
விளைந்த பெண்ணொருத்தி
வில்லனின் துணையாய்
குடியேற
கதைப் பின்னலில்
 துருத்திய
சுரமாய்..சுயமாய்
 துடித்தது
யாரோ ஒருவனின்
இடது விழி ஒன்று..
சட்டென்று வீசப் பட்ட
கல் வீசலில்
கலைந்து போன
நதி நிலா பிம்பமாய்
கதை வீடு சரடு
பிரிந்து கலைந்தது
கலைந்த கதை வீட்டின்
அருகே  நிராசையாய்
போன கனவுகள் சில
சிதறிக் கிடப்பதாய்
மனநிலை கலைந்த
ஒருவன் உளறி விட்டு
போனான்….

 

Page 8 of 8

Powered by WordPress & Theme by Anders Norén