IMG_4949

என் அம்மாவிற்கு..

யாரிடமும் விளக்க முடியா..விவரிக்க முடியா அளவிற்கு உன் மீதான என் ஞாபகங்கள் விரிந்துக் கொண்டே செல்கின்றன..சொல்லப்போனால் நான் உன் பேச்சை அப்படியே கேட்கிறவன் இல்லை. உன் கனவுகளில் நீ என்னை பற்றி வரைந்திருந்த சித்திரங்களுக்கு நேர்மை செய்தவன் இல்லை. உறவுக்காரர்கள் மத்தியில் என் மகனும் அமெரிக்காவில் இருக்கிறான், ஆஸ்திரேலியாவில் படிக்கிறான் என்றெல்லாம் பெருமைப் பொங்க விவரிக்க உனக்கு வாய்ப்பே தந்ததில்லை. என்னைப் போன்ற உடல் நலம் குன்றிய மகனால் ஒரு தாய்க்கு மருத்துவமனையின் மங்கிய வண்ணம் பூசிய சுவர்களை நிலைக்குத்திய பார்வைகளோடு பார்த்துக் கொண்டிருக்கிற கலங்கிய கண்களை தவிர வேறு என்ன தர இயலும்…? சுமை நீக்க இயலா சுமை சுமக்கும் தொழிலாளியாய் உன்னை மாற்றி வைத்ததில் எனக்கு பெரும் பங்கு உண்டு அம்மா… இன்னமும் சுமக்கிறாய்..

நான் 10 மாத குழந்தையாய் இருந்த போது போலியோவால் பாதிக்கப்பட்டேன். 10 ஆவது படிக்கும் வரை நான் மருத்துவமனையை தவிர வேறு எங்கும் சென்றதில்லை. என் முன்னால் உறைந்திருக்கும் என் வீட்டு சுவற்றினை தவிர எனக்கு வேறு நண்பனில்லை. எனது ஒரே தோழி நீதான். காலில் கட்டுப் போட்டு அசையாமல் அமர்ந்திருக்கும் என்னோடு விளையாட, கொண்டாட யார் தான் வருவார்.. உன் மாயக்குதிரை கதையும்,பரம பதம் விளையாட்டும் தான் என்னை சூழ்ந்திருந்த இருட்டில் தெரிந்த மினுக்குகள்…

பதின் வயதுகளில், சற்றே தடுமாறி நடக்க முடிந்தவுடன் வாலிப வேகத்தில் வானத்தை வசப்படுத்தும் அர்த்தமற்ற இலக்குகளோடு தாறுமாறாக நான் அலைந்து திரிந்தப் போது நீதான் ஆற்றுப்படுத்தினாய்..

எப்போதும் எழுந்திரு என்கிற வார்த்தையை தவிர எந்த பெரிய அறிவுரையையும் நீ வழங்கியதில்லை. காலமும், நம்பி நின்றவர்களும் என்னைச்சுற்றி நின்று வேட்டையாட துடித்தப் போது குட்டியை காத்திட சிறகடித்து.. பாய்ந்து துடித்த கோழியாய்… எனை துயர இருட்டினில் இருந்து மீட்டெடுத்து, என்னை உருவாக்கி, கலங்கிய கண்களை துடைத்து, கலைந்த தலையை சீராக்கி, என்னை திசை திருப்பி,திருமணம்செய்து வைத்து ,என்னை இயல்பானவனாக வீதிக்கு அனுப்பி வைத்தவள் நீ..

ஒவ்வொரு முறையும் உன் விழிகளின் வெளிச்சத்தை நான் தான் தீர்மானிக்கிறேன் அம்மா. நான் ஒவ்வொரு முறை கீழே விழும் போதும் நீதான் உடைந்து விடுகிறாய். உன் விழிகள் இருள்கின்றன. ஆனாலும் அதை என்னிடம் காட்டாமல்…எழுந்திரு என்று சொல்லி விட்டு நகருகிறாய்..மின்னொளி படரும் மேடைகளில் நான் சிரமப்பட்டு ஏறி நிற்கையில் இயல்பாய் உன் கண்கள் கலங்குகின்றன…அதே சமயத்தில் நான் பேசுகையில்,எழுதுகையில், இயல்பாய் உன் கண்கள் ஒளிர்கின்றன..

இப்போது கூட தவறி விழுந்து காலில் கட்டோடுதான் நான் அமர்ந்திருக்கிறேன்..இப்படியே இருக்காதே…மாநாட்டு வேலைகளுக்கு கிளம்பு என்கிறாய்..உனக்கு தெரியும் புலிக்கொடியும், சீமானின் சொற்களும் தான் எனது ஆகப்பெரும் மருந்து என…

என் உடல் நலனுக்கு பொருந்தாத..என் பொருளாதார வலுவிற்கு எதிரான ஒரு போராட்டப் பாதையை வலிந்து என் வாழ்க்கையாய் நான் தீர்மானித்தப் போது நீ அமைதியாய் இருந்தாய். பிழைப்பை விட்டு விட்டு, பொன்னான நேரத்தை கொலை செய்து விட்டு, வியர்வை வடியும் முகத்தோடு,கருஞ்சட்டை அணிந்து முச்சந்தியில் முழங்கி விட்டு அசதியோடும், வெறும் கையோடும், சொல்லப்போனால் சற்றே கடனோடும்…வீட்டிற்கு திரும்பும் நான் யாருக்கும் உவப்பானவன் இல்லைதான். ஆனாலும் எனக்கான நியாயங்களை தனக்கான சமாதானமாக ஆக்கிக் கொண்டு என்னை அன்புடன் வருடிச்செல்லும் உன் சொற்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்..

கைமாறு செய்தல் தான் தாய்மைக்கான போற்றுதலா என்பதில் எனக்கு குழப்பங்கள் உண்டு.ஆனால் என்னோடு நீ நிற்பதில் உனக்கு எவ்வித குழப்பங்களும் இல்லை அம்மா… ஏனென்றால்
நீ என்னை உன்னிடத்தில் இருந்து பிரித்தே பார்ப்பதில்லை..

இந்த பதிவைப்படித்து பார்த்து விட்டு..இது மட்டும் தானா என்று நீ பார்க்கிற பார்வைக்கு என்னிடத்தில் பதில் ஏதும் இல்லை.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.