பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: திரைப்பட விமர்சனம் Page 1 of 2

மாமன்னன்- கட்டமைக்க முயலும் போலி பிம்பங்களும், சில அற்புத தருணங்களும்…

????

என்னை சக மனிதனாக பார்க்கும் விழிகளைக் காணும் போது தான் நான் நிம்மதி அடைகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். சாதி என்கின்ற கொடும் பேய் சாத்தான் போல அவரை துரத்தி துரத்தி வேட்டையாடிய ரத்தப்பக்கங்களை அவரது சுயசரிதையில் படிக்கும் போது எவராலும் கண்ணீர் சிந்தாமல் கடக்க முடியாது.

ஏனெனில் சாதி பன்னெடுங்காலமாக இந்த நிலத்தில் உணர்வாக/பண்பாடாக/செயலாக /வழிபாடாக/ உணவாக/ உடையாக .. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவி உள்ள அநீதியாகும்.

அதைத்தான் தனது தீவிர திரை மொழி மூலம் மாமன்னன் ஆக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

மிக மிக சாதாரண “மண்”ணாக இருந்தவர் எப்படி மாமன்னனாக மாறினார் என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒரு வரி சுருக்கம்.

தனது முந்தைய திரைப்படங்களைப் போல சாதியை மறைமுகப் பொருளாக வைத்து உரையாடல்களை நிகழ்த்தாமல் நேரடியாக சாதியின் நுட்பமான உணர்ச்சி படிமங்களை காட்சி மொழியாக்கி இருக்கின்ற இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணனில் தனக்கு சாத்தியப்பட்ட தனக்கே உரிய திரை மொழி வசீகரத்தை மாமன்னன் திரைப்படத்தில் இழந்துவிட்டது போல ஒரு உணர்ச்சி.

சாதி முரண்பாடுகளைப் பற்றிய ஒரு உரையாடலை இரண்டு தேனீர் கோப்பைகள் ஊடாக தொடங்குவோம் என்றது பரியேறும் பெருமாள். சாதியை பற்றி மிக நுட்பமாக பேசும் அந்தத் திரைப்படத்தில் அதி உச்ச அழகியல் எது என்றால் சாதி என்ற சொல் அந்த திரைப்படத்தில் எங்கும் பயன்படுத்தப்படாமல் இருந்தது தான்.

கர்ணனும் அப்படித்தான். அடுக்கடுக்கான படிமங்களால் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்கள் சிந்திக்க நிறைய ஊடு பொருள்களை புதைத்து வைத்து சாதி உணர்ச்சியின் கோரத்தை ரத்தமும் சதையுமாக நம்மை அனுபவிக்க வைத்திருப்பார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அதே வித்தை மாமன்னனிலும் சாத்தியமாகி இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது. அதில் என்ன வருத்தம் என்றால் மாமன்னன் போன்ற சாதி மறுப்பு உளவியலை திரை மொழியாக கொண்ட திரைப்படங்கள் கலை நேர்த்தியில் மிளிர வேண்டும் என்கின்ற விருப்பம் தானே ஒழிய வேறொன்றுமில்லை.

ஆனாலும் வடிவேல் என்கின்ற ஒரு உச்ச கலைஞன் தன் கலை வாழ்வின் சிகரத்தை தொட்டு நம்மை நோக்கி திரும்பிப் பார்த்த அனுபவத்தை மாமன்னன் நமக்கு ஏற்படுத்துகிறான்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இதுதான் கடைசி படம் என்றார்கள். ஆனால் இதுதான் அவருக்கு முதல் படம். உணர்வுகளை முகத்தில் உறைய வைப்பதற்கான வாய்ப்புகளை இந்த திரைப்படம் தான் அவருக்கு வழங்கியிருக்கிறது.

படத்தை இந்த இருவருக்கும் இணையாக தாங்குவது பகத் பாசில் என்கின்ற நடிப்பு அரக்கன் தான். மூவரும் இருக்கும் காட்சியில் பகத் பாசில் மிக எளிதாக வடிவேலு மற்றும் உதயநிதியை ஓவர் டேக் செய்து திரையை ஆதிக்கம் செய்வது என்பது அவரது கலை மேதமை.

மற்றபடி இந்தத் திரைப்படம் பேசியிருக்கும் அரசியல் வழக்கமான மாரி செல்வராஜ் திரைப்படங்களில் தென்படாத பிரச்சார நெடி சொல்ல வருகிற மிக முக்கியமான கருத்தினை பலவீனப்படுத்துகிறது.

காட்சி அமைப்புகளில் வலிந்து திணிக்கப்பட்டுள்ள திமுக சார்பு நிலை ,புத்தர் சிலைகள் ,அம்பேத்கர் ஓவியம் ,பன்றி குட்டி டாட்டூ இவை எல்லாம் மாமன்னனுக்கு எந்த வலிமையும் சேர்க்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதி சற்றே நீண்டு ஏதாவது நடத்தி திரைப்படத்தை முடியுங்கள் என பார்வையாளர்கள் நினைக்கும் அளவிற்கு திரை மொழி சீரமைப்பு இல்லை.

திமுகவின் கருப்பு சிவப்பு சாயலில் வடிவமைக்கப்பட்ட கொடியை கொண்ட அரசியல் கட்சி கட்சியின் தலைவராக வருகின்ற மலையாள நடிகர் லால் பேசுகிற சமூக நீதி வசனங்கள் ஒருபோதும் திமுகவிற்கு பொருந்தாது என்பதுதான் கடந்த கால வரலாறு.

திராவிட இயக்கங்கள் சமூக நீதி அரசியலில் வெற்றி பெற்றிருந்தால் இன்று வரை ஒரு மாமன்னன் திரைப்படம் எடுப்பதற்கான தேவை இந்த மண்ணில் எழுந்திருக்காது. திராவிட இயக்கங்கள் தனது வரலாற்று வழிப் பாதையில் செய்து கொண்ட அப்பட்டமான சமரசங்கள், பிழைப்புவாதங்கள் போன்றவைகளால் தான் இன்னும் இங்கே சாதிய இருப்பு வலிமையாக கட்டமைக்கப்பட்டு எழுந்து நிற்கிறது.

எனவே சமூக நீதி அரசியல் என்றால் அது திமுக தான் என மாமன்னன் திரைப்படம் கட்டமைக்கின்ற போலிபிம்பம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதிக்காக மிகச் செயற்கையாக கட்டமைக்கப்பட்டது என்பதை எவ்வித உணர்ச்சியும் கடத்தாத அரசியல் பேசும் காட்சிகள் காட்டி விடுகின்றன.

வேட்பாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் ,ஒன்றியச்செயலாளர்,வட்டச் செயலாளர் வரை சாதி பார்த்து மிகச்சரியாக ஆதிக்க சாதிக்கு பொறுப்பளிக்கின்ற திராவிட இயக்க அரசியல்தான் மாமன்னன் மற்றும் அதிவீரன் போன்றவர்கள் அனுபவிக்கின்ற அத்தனை கொடுமைகளுக்கும் மூல காரணம் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜின் கலை ஆன்மா உணர்ந்திருக்கும் தான். ஆனாலும் அதை அவரால் ‘செஞ்சோற்றுக் கடனுக்காக’ வெளிப்படையாக பேச முடியவில்லை.

இதையெல்லாம் தாண்டி மாமன்னனில் சில அற்புத தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த மலைமுகட்டில் வடிவேலு தனது இயலாமையை எண்ணி கைப் பிசைந்து கண்கலங்கி நிற்கின்ற அந்தக் காட்சி இதுவரை தமிழ் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் அதி உச்சமானது. அதேபோல் ஒவ்வொரு முறையும் ஆபத்துகளை உள்ளுணர்வால் உதயநிதி உணர்கிற தருணங்கள். தந்தை மகனுக்கு இடையே இருக்கின்ற நேசமிக்க கணங்கள் போன்ற காட்சிகளில் இயக்குனர் மாரி செல்வராஜின் திறமை பளிச்சிடுகிறது.

சாதியின் நுட்பமான புள்ளிகளை வலிமையாக பேச வந்த திரைப்படம் இடைவேளைக்குப் பிறகு அரசியல் அதிகாரப் போட்டி தேர்தல் என்றெல்லாம் திசை மாறி அலைகழிவது இயக்குனர் மாரி செல்வராஜ் கதை அமைப்பில் கொண்டிருந்த தடுமாற்றங்களை அப்பட்டமாக காட்டுகிறது.

மிக மிக முக்கியமான ஒரு திரைப்படமாக மாமன்னன் இருக்கும் என எதிர்பார்த்து செல்பவர்களை தவிர மற்றவர்களுக்கு மாமன்னன் ஒரு புதுவிதமான திரைப்பட அனுபவத்தை தரும் தான். ஆனால் ஒரு இயக்குனராக தன் படைப்பாக்க உச்சத்தின் அனுபவத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் அனுபவித்தாரா என்பது சந்தேகமே.

மாமன்னன் இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம்.

????

“விடுதலை”நிகழ்த்தும் அரசியல் உரையாடல்களும் அதன் ஊடாக இருக்கின்ற அரசியலும்..

????

சமீபத்தில் வெளியாகி இருக்கின்ற விடுதலை திரைப்படத்தைப் பற்றி பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடப்பதை சமூக வலைதளங்கள் மூலமாக அறிகிறோம். குறிப்பாக இது தமிழ்த்தேசிய அரசியலை பேசுகிறது என்று ஒரு கருத்தை தமிழ் தேசியர்கள் முன் வைக்கும் போது திராவிடக்கூடாரத்தில் இருந்தும் ,முற்போக்கு வகையறாவிடம் இருந்தும் கடுமையான வசவுகளும், பதட்டம் நிறைந்த சொல்லாடல்களும் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

விடுதலை திரைப்படம் அந்த வகையில் மாபெரும் வெற்றி அடைந்து விட்டது என்பதை அது அடைகிற எதிர்வினைகள் மூலம் தெளிவாக புரிகிறது.

…..

திரைப்படக்கலை பற்றி அறிந்தோர், பல் மொழி பேசுகிற திரைப்படங்களை தொடர்ச்சியாக கவனித்து பார்த்து ரசித்து வருவோர் என பலரும் அறிந்த விஷயம் யாதெனில் ,
திரைப்படங்கள் கற்பனையாக கதை ஒன்றை உருவாக்கி அதை திரை மொழியாக உருவாக்கி திரைப்படமாக மாற்றுவது இது ஒரு வகை. அசலான மனிதர்களைப் பற்றி அப்படியே நகலெடுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சமும் மாற்றாமல் திரை மொழியாக்கி திரைப்படமாக மாற்றுவது. தான் நாம் ஆவண படங்களாக பார்த்து வருகிறோம் .

இந்த இரண்டு வகைகளையும் தாண்டி மூன்றாவது வகையாக அசலான வரலாற்று நிகழ்வுகளில் இருந்து தாக்கம் பெற்று அதன் மூலமாக புனைவு வெளி ஒன்றை உருவாக்கி வரலாற்றையும் /கற்பனையும் கலந்த கதைகளை திரை மொழியாக்கி திரைப்படங்களாக மாற்றுவது.

எடுத்துக்காட்டாக கீழ்வெண்மணி பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய “ராமையாவின் குடிசை”. இது அச்சு அசலான ஆவணப்படம்.

இந்த கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கம் பெற்று பல திரைப்படங்களின் காட்சிகள் உருவாகி இருக்கின்றன. 90களில் வெளியான சரத்குமார் பார்த்திபன் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமான “அரவிந்தன்”திரைப்படம், இதே வெற்றிமாறன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்”திரைப்படம் போன்றவை கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கத்தினால் உருவான காட்சி அமைப்புகளை கொண்டவை .இது போன்ற பல நிகழ்வுகளை அந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் உருவான திரைப்படங்களை படங்களை நாம் உதாரணமாக காட்டிக் கொண்டே போகலாம்.

அதுபோன்ற அசலான வரலாற்று மாந்தர்களையும் கற்பனைக்கே உரிய சுதந்திரத்துடன் தாண்டி மறக்கப்பட்ட புரட்சியாளர்களைப் பற்றி இத்தலைமுறையினர் தேடி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கின்ற ஆழமான சமூக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் “விடுதலை”.

வரலாற்றில் நடந்த எந்த நிகழ்வின் ஊடாக எவரும் தாக்கம் அடைந்து விடக்கூடாது என சொல்வதற்கு இங்கே யாருக்கும் உரிமை இல்லை. தாக்கம் அடைந்தவர் தனது புனைவு மற்றும் கற்பனை மூலமாக ஒரு திரை மொழி அமைக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதை இங்கே யாரும் கேள்வி கேட்க முடியாது.

விடுதலை திரைப்படத்தின் தொடக்கத்திலேயே இக்கதை மூலம் காலம் /கதை /மாந்தர் அனைத்தும் கற்பனையானது என அறிவிப்பு வெளியிட்டு விட்டே மிக கவனத்துடன் விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஊடாக வரும் செய்திகளை தனக்கு சார்ந்ததாக காட்டிக் கொள்ளும் எவரும் இந்த அறிவிப்பினை கண்டும் காணாதது போல் நடித்து எந்த நபரும் சுயமாக சிந்திக்கவே கூடாது என மூர்க்கத்துடன் இந்த திரைப்படத்தின் மீதாக எதிர்வினை ஆற்றி வரும் சில உரையாடல்கள் உண்மையிலேயே அலுப்பு ஊட்டுகின்றன.

குறிப்பாக திராவிடம் சார்ந்து கொந்தளிப்போர் திடீரென இடதுசாரி பக்கம் எகிறி குதித்து அவர்கள் சார்பாக இவர்கள் பேசுவது போல பாவனை செய்து திரைப்படம் தகவல் பிழை/கருத்துப் பிழை கொண்டது என செய்திகள் பரப்பி வருவதை தமிழ்த்தேசியம் சார்ந்து எவ்வித உரையாடலும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதான அவர்களது நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

இதே போல இடதுசாரிகள் பக்கத்தில் இருந்தும் சோளகர் தொட்டி எழுதிய வழக்கறிஞர் பாலமுருகன் தரப்பிலிருந்தும் வருகின்ற விமர்சனப் பார்வைகளை திராவிடத் தரப்பு கூச்சல்கள் போல அணுக கூடாது என்றாலும் படைப்பாளியின் நியாயப் பாடுகளை எடுத்து வைப்பது நமது கடமை.

விடுதலை திரைப்படம் இரண்டு கூர்மையான கருத்தாக்கங்களை முன்வைக்கிறது. ஒன்று காவல்துறை அடக்குமுறைகள் மீதான காத்திரமான காட்சி மொழியாக்கம், மற்றொன்று தமிழ் தேசிய பார்வையுடன் கூடிய மனிதநேய புரட்சியாளர்கள் பற்றிய பிம்ப உருவாக்கம். இந்த இரண்டிலும் விடுதலை திரைப்படம் முழு வெற்றி அடைந்திருக்கிறது.

குறிப்பாக தமிழ் தேசிய புரட்சிக் களத்தில் ஆயுதம் தாங்கி தமிழர் நிலத்தில் தாக்கம் செலுத்திய புரட்சியாளர்களான மாமனிதர் புலவர் கலியபெருமாள் மற்றும் மாபெரும் தமிழ்த் தேசிய புரட்சியாளர் தமிழரசன் ஆகியோர் பற்றிய உரையாடல்களை தமிழ் தேசிய கருத்தாக்கம் கூர்மை அடைந்திருக்கிற இந்த காலகட்டத்தில் மீண்டும் இந்த திரைப்படம் உருவாக்கி இருக்கிறது. எளிய திரைப்பட பார்வையாளன் கூட யார் கலியபெருமாள் , யார் தமிழரசன் என வாசிக்க புத்தகங்கள் தேடுவதும் பார்க்க காணொளிகள் தேடுவதும் இத்திரைப்படத்தின் மூலமாக கைகூடி இருக்கிறது. திரைப்படம் என்கிற வலிமையான சாதனத்தின் வெற்றி அதுதான்.

இதைத்தான் இயக்குனர் வெற்றிமாறன் தனது நோக்கமாக கொண்டிருக்கக் கூடும் என்பதை அவர் முன்வைத்த திரைமொழியே நமக்கு தெரிவிக்கிறது. எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு அவர் நடிகர்களை தேர்ந்தெடுத்தது முதல், உரையாடல்களில் காட்சிகளில் ஆங்காங்கே தென்படும் குறியீடுகள் மூலமாக இந்த திரைப்படத்தை தமிழ்த் தேசியம் சார்ந்த உரையாடல்களை எழுப்புகிற ஒரு கருவியாக வெற்றிமாறன் மாற்றி இருக்கிறார்.
வள்ளலாரை வணங்குகிற கதையின் நாயகன் திரையில் இதுதான் முதன் முதல் என நான் கருதுகிறேன்.

திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமாக வருகின்ற பெருமாள் வாத்தியார் தனது இரண்டாம் பாகத்தில் மொழிக்கும் மரபிற்கும் கொடுக்கின்ற முக்கியத்துவம் சார்ந்த வசனங்கள் இந்தத் திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் என்பது புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக இருவர் திரைப்படத்தில் அண்ணா மற்றும் பெரியார் ஆகிய இருவரையும் ஒருவராக காட்டிய நாசர் கதாபாத்திரம் போல விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

புலவர் கலியபெருமாள் வாழ்க்கை வரலாற்றை பற்றி நாம் அறிந்து கொள்ள இன்று நமக்கு கையில் இருக்கின்ற ஒரே ஒரு மகத்தான ஆதாரம் அவரது சுய வரலாற்று நூலான “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்கின்ற நூல் மட்டுமே. அந்த நூல் பற்றி திராவிட தரப்பிலிருந்து யாருமே எந்தக் கருத்தையும் குறிப்பிடாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நூல் திராவிட ஆட்சியாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி ஆட்சிமுறை குறித்தான கடுமையான விமர்சனங்களை, அந்தக்கால திமுக ஆட்சியின் ஒடுக்கு முறைகளை அந்த நூல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. பல பக்கங்களில் அதற்கான செய்திகள் அந்த நூலில் இருக்கின்றன அது பற்றி நாம் தனியே ஒரு கட்டுரையில் காண்போம்.

60களின் இறுதியில் எழுந்த வசந்தத்தின் இடி முழக்கம் என வழங்கப்பட்ட நக்சல் பாரி இயக்கத்தின் தலைவர் சாரு மஜும்தார் அவர்களின் அழைப்பின் பேரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளை விட்டு புரட்சி செய்ய கிராமங்களை நோக்கி விரைந்த போது தான் கோவை பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த துடிப்பான கல்லூரி மாணவரான தமிழரசனும் அழித்தொழிப்பு வேலைகளுக்காக கிராமங்களை நோக்கி நகர்கிறார். இவரோடு புலவர் கலியபெருமாள் சேர்ந்தது தமிழ்இன வரலாற்றில் முக்கியமான ஒரு இணைவு ஆகும். மேற்கண்ட இருவரும் மக்கள் யுத்த குழுவோடு முரண்பட்டு தேசிய இன விடுதலை சார்ந்து இயங்கிய போது தான் தமிழ்நாடு விடுதலைப் படை உருவானது.

எனவே தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மை குறித்தும் சுய நிர்ணய உரிமை குறித்தும் மேடைகளை தாண்டி களத்தில் செயல்பட முனைந்தவர்கள் புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் போன்றோர். இவர்களை எந்த வகையில் திராவிட ஆட்சியாளர்களான கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஒடுக்கினார்கள் என்பது தான் திராவிடத்தரப்பிலிருந்து மறைக்க முயல்கிற வரலாறு.

புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகியோர் தமிழ் தேசிய உணர்வின் மூலங்கள் என்பதை இத்தனை ஆண்டு காலம் திராவிடத்தரப்பு வரலாற்று திரிபுகளை வைத்துக்கொண்டு மண்மூடி மறைத்து வைத்திருந்ததைத்தான் விடுதலை திரைப்படம் மீண்டும் நினைவூட்டி இளைஞர்களை சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் திராவிடத்தரப்பிலிருந்து கடுமையான பதட்டக் கருத்துக்களை விடுதலை திரைப்படம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

மற்றொன்று வீரப்பன் தேடுதலின் போது மலைவாழ் ஆதிகுடிகளை காவல்துறை எவ்வாறு கொடுமைப்படுத்தியது என்பதையும் இந்த திரைப்படம் பயன்படுத்தி இருக்கிறது என பலரும் உரிமை கொண்டாடுவது உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. நடந்தவை அனைத்தும் வரலாறாய் உறைந்து கிடக்கின்றன. இயக்குனர் வெற்றிமாறன் உறைந்துப் போன காலத்தின் நெருப்பு பொறியில் இருந்து தனக்கான கங்கை பற்ற வைத்துக் கொண்டு விட்டார். அது அவரது படைப்பாக்க சுதந்திரம்தான். வரலாறும், பதிக்கப்பட வேண்டிய அடக்குமுறைகளும் யாருக்கும் சொந்தமானது இல்லை. இன்னும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவது என்பது படைப்பாளியின் படைப்பாக்க வரம்பினை நாம் நிர்ணயிக்கிற ஆபத்தை உண்டாக்கிவிடும்.

இவையெல்லாம் தாண்டி இந்த விடுதலை திரைப்படம் ஒரு மகத்தான உரையாடல் வெளியை தோற்றுவித்திருக்கிறது
என்பதுதான் நடந்திருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் நடவடிக்கை. இந்தத் திரைப்படம் இரண்டாவது பாகம் வெளிவரும்போது வேறு வடிவம் கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது சற்று ஏறக்குறைய சில காட்சிகள் மூலமாகவே இந்த படம் பேசுகிற அரசியல் குறித்து யார் யார் பதட்டம் அடைகிறார்கள் என்பதை அவர்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கவனத்தையும் இந்த படத்தின் திரை மொழி நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.

இது போன்ற உரையாடல்களை ஏற்படுத்துகிற திரைப்படத்தை படைக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒரு படைப்பாளனின் கடமை. அந்த கடமையை வெற்றிமாறன் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார்.

“ஒரு படைப்பிற்குப் பிறகு அந்த படைப்பாளன் இறந்து விடுகிறான் ” என்கின்ற புகழ்பெற்ற மேற்கோளுக்கு விடுதலை திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் விதிவிலக்கு அல்ல. இனி வெளிச்சம் படவேண்டியது வெற்றிமாறன் மீது அல்ல விடுதலை திரைப்படத்தின் மீது

அதன்படி நமக்கு முன்னால் விடுதலை திரைப்படம் இருக்கிறது .

அது செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

வெற்றிமாறன் மட்டுமல்ல தமிழ் தேசியர்களான நாமும் மகிழ்ச்சியோடு அதை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் .

அவ்வளவுதான்.

????

மாநாடு-திரைக்கதை கலையின் விசித்திரம்.


திரை உலகை கனவுத் தொழிற்சாலை என வரையறுத்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா . நம் கண்முன்னால் விரிகிற திரை நமக்கும் , நம் கனவிற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியை அழிக்க முயன்று கொண்டே இருக்கிறது. இந்த முயற்சியை தான் நாம் திரைப்படம் என்கிறோம். ஒரு நல்ல திரைக்கதை “ஹைக்கூ” வடிவம் போன்றது என்கிறார் காட்பாதர் , அபாகலிஸ் நெள போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ. அவரே சொல்கிறார் , “ஒரு கலை வடிவத்தின் உச்சத்தை அடைவதற்காக துணிச்சலான முடிவுகளை எடுங்கள். அது வெல்லலாம், தோற்கலாம்.. ஆனால் துணிச்சலான முடிவுகள் தான் எப்போதும் கலை வடிவத்தின் உச்சங்களை வெளிப்படுத்துகின்றன”.


ஒரு திரைப்படத்தின் ஆன்மாவாக அதன் திரைக்கதை விளங்குகிறது. சிறந்த கதையாக அறியப்பட்டவைகள் திரைக்கதையாக வேதியியல் மாற்றம் அடையும்போது பல சூழ்நிலைகளில் தோல்வி அடைந்திருக்கின்றன. நல்ல கதைகளுக்கு எப்போதுமே நல்ல திரைக்கதைகள் தேவைப்படுகின்றன. ஆனால் நல்ல திரைக்கதைகளுக்கு ஓரளவு போதுமான வழக்கமான கதை இருந்தால் வென்று விடலாம். அவ்வாறாகத்தான் மாநாடு வென்றிருக்கிறது.


ஒரு திரைப்படத்தை அறிவியலாக புரிந்து கொள்வதும், கலை மொழியில் அறிந்து கொள்வதும் வெவ்வேறானது. திரையரங்கில் அமர்ந்திருக்கும் ஒரு எளிய பார்வையாளன் திரையில் விரிகிற காட்சியோடு ஒன்றுபட்டு தானும் அதில் ஒரு பகுதியாக உணர தலைப்படும் போது தான் கலையின் அழகியல் வெளிப்படுகிறது. ஒரு திரைப்படம் தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பார்வையாளனின் சகலவிதமான நினைவுகளிலிருந்து அவனை திசை திருப்பி , தான் விவரிக்கும் கதையில் அவனை ஒன்ற வைத்து , அவனது கால ஓட்டத்தை மெலிதாக அவன் மறக்க வைக்கிற அந்த உணர்வுப் புள்ளியை தான் தனது வெற்றியாக கருதுகிறது. 


அந்த கால ஓட்டத்தை தான் ஒரு கதைக் கருவாகக் கொண்டு மாநாடு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவருடைய முந்தைய திரைப்படங்கள் வணிக ரீதியிலான அனைத்து சமரசங்களுக்கும் உட்பட்டு , வெகு மக்களுக்கான தமிழ்சினிமாவின் சகலவிதமான இலக்கணங்களுக்கு உட்பட்டவை தான். அவர் இயக்கிய முதல் படமான சென்னை 28 (2007) தெருவில் நடக்கும் கிரிக்கெட் பந்தயத்தை அடிப்படையாக கொண்டது. மாபெரும் திறமை உள்ள விளையாட்டு வீரர்களை விதந்தோதும் படங்களுக்கு மாற்றாக தெருவோரம் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை பற்றிய அத்திரைப்படத்தின் எளிய வகையிலான திரைக்கதை அனைவரையும் கவர்ந்தது. தெரிந்தோ தெரியாமலோ வெங்கட்பிரபு தான் கட்டமைத்த நண்பர்கள், கேளிக்கைகள், விளையாட்டுகள், காதல், கடத்தல் இவற்றில் எழுகின்ற துரோகங்கள், வழக்கமான கதாநாயகத்தனம் போன்ற குறிப்பிட்ட வகையிலான சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் சில ரசனை மிகுந்த தந்திரங்களை அவரால் செய்ய முடிந்தது. அவரது உச்சபட்ச வணிக வெற்றியை கொடுத்த மங்காத்தா திரைப்படம் கூட இவ்வாறானதே. வழக்கமான நன்மை/தீமை இடையிலான யுத்தமாக ஒரு திரைப்படத்தை வடிவமைக்காமல், ஒரு திரைப்படத்தில் அனைவரும் கெட்டவர்களாக இருந்து, யார் இதில் அதிகம் கெட்டவர் என்கின்ற போட்டி நடத்தி,  அந்தப் போட்டியையும் மக்களை ரசிக்க செய்து அதிகம் தீயவர் எவரோ, எவர் அதிகம் வில்லத்தனம் செய்கிறாரோ அவர்தான் கதாநாயகன் என வழமையான கோடுகளில் இருந்து மாற்றி வரைந்தது மங்காத்தாவின் திரைக்கதை அமைப்பு.
முதல் முறையாக “வெங்கட்பிரபு அரசியல்”(  A Venkat Prabu Politics) என தலைப்பிடப்பட்டு மாநாடு என்கின்ற திரைப்படத்தை அவர் அறிவித்தபோது நிச்சயமாக இது தீவிரமான அரசியல் திரைப்படமாக இருக்காது என அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தவர்கள் கண்டிப்பாக கணித்து இருப்பார்கள். அந்தக் கணிப்பு சரியானது தான். மாநாடு அரசியல் படமல்ல. அரசியலைப் பற்றிய படமும் அல்ல.


நழுவி ஓடும் கால ஓட்டத்தின் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் சிம்பு மற்றும் வில்லன் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவர் விளையாடும் பரமபத கதையே மாநாடு.  எல்லோரையும் விட இந்த திரைப்படம் நடிகர் சிலம்பரசனுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் சமீப காலத்தில் தன் மீது எழுந்திருந்த எல்லா விமர்சனங்களுக்கும் அவர் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தார். அவருக்கு ஒரு வெற்றி தேவையாக இருந்தது. இந்த இரண்டில் அவர் மீது எழுந்து இருந்த எல்லா விமர்சனங்களுக்கும் இத்திரைப்படத்தின் மூலம்  அவர் பதில் சொல்லிவிட்டாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரது இரண்டாம் தேவையான படத்தின் வெற்றி அவருக்கு கிடைத்துவிட்டது.


அரசியல் என்ற சொல்லை பயன் படுத்தி விட்டதால் கதாநாயகன் ஒரு இஸ்லாமியனாக உருவாக்க பட்டிருப்பதை தாண்டி , இஸ்லாமியர்கள் என்பதாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்கின்ற செய்தி இந்த திரைப்படத்தின் மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிற ஆறுதல் நமக்கு இருந்தாலும் அது வலிமையாக சொல்லப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு மத பெரும்பான்மையினர் வசிக்கும்  நாட்டில் மதச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை பற்றி இத்திரைப்படம் இன்னும் விரிவாகப் பேசி இருக்கலாம் என்பது ஒரு குறையே.
“Time Loop” பற்றி ஏற்கனவே பல ஆங்கிலத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் என்னவென்று சிந்தித்தால்”காலச்சுழி” என்பது சரியாக இருக்கும் என்றே கருதுகிறேன். இந்தக் கருத்தோடு காலத்தின் முன்னாலும் பின்னாலும் பயணிக்கிற ‘டைம் மிஷின்’ விவாகரங்களை பொருத்திப் பார்த்துக் கொண்டால் இன்னும் இந்த விஷயம் புரியும்.


புத்திசாலித்தனமாக மாநாடு திரைப்படத்திலேயே” Time loop”  திரைப்படங்கள் குறித்த அறிமுகங்களை கதாநாயகனே கொடுத்து விடுவதால் அந்த திரைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று என பார்வையாளர்களை இயக்குனர் நம்ப வைத்து விடுகிறார்.
தமிழிலும் ஏற்கனவே இதுபோன்ற முயற்சிகள் நடந்துள்ளன. மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவா இயக்கிய 12 B( 2001) இதுபோன்ற திரைப்பட வகைமைகளுக்கு தமிழில் நமக்கு கிடைக்கின்ற ஒரு முன்னோடி திரைப்படம். அதேபோல் சூர்யா நடித்து விக்ரம் கே குமார் இயக்கிய 24 (2016), அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளிவந்த கேம் ஓவர் (2019) சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கன்னியும் 3 களவாணிகளும் (2014)  போன்ற சில படங்களும் இதே போன்று கால நழுவலின் கண்ணியில் சிக்கிக்கொண்ட நிகழ் மனிதர்களின் கதைகள் தான். டைம் மெஷின் பற்றிய திரைப்படங்களை தனி பட்டியலாக வே கூறலாம்.


படத்தில் எதிர்மறை கதாபாத்திரமாக வருகிற ஒய் ஜி மகேந்திரன் தனது வசனத்தில் போகிற போக்கில் கிறிஸ்டோபர் நோலனின் “டெனட்” ( Tenet) திரைப்படத்தை குறிப்பிடுவதும் படம் குறித்த புரிதலை பார்வையாளருக்கு ஏற்படுத்தும் முயற்சி தான். 


இவ்வளவு முன் தயாரிப்புகளை சொல்லியும் பார்வையாளர்களுக்கு ‌ “Time Loop”  பற்றி புரிகிறதோ புரியவில்லையோ, ஆனால் திரைக்கதை வடிவமைப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு செய்திருக்கிற திறமையான “எளிமை” இந்தத் திரைப்படத்தின் மூல கருத்தினை புரிந்துகொள்ளாத எளிய பார்வையாளர்களுக்கு கூட , திரைக்கதையின் சுவாரஸ்யத்தை சென்று சேர்த்துவிடுகிறது. 
அதற்காகவே வழக்கமான தமிழ் திரைப்படங்களுக்கு உரிய கதாநாயகன் -வில்லன் மோதலாக இந்த திரைப்படத்தை வடிவமைத்துக் கொண்டது இயக்குனரின் புத்திசாலித்தனம். இந்த வழமையான சட்டகத்திற்குள் Time Loop சற்றே குழப்பமான வடிவத்தை பொருத்தி , அதற்கு இந்திய திரைப்பட பார்வையாளனுக்கு தேவைப்படும் புராணீக நியாயம் சேர்ப்பதற்காக காலபைரவர் கதையையும் இணைத்து இயக்குனர் வெங்கட்பிரபு விவரிக்க முயன்றிருக்கிறார்.


இந்த முயற்சிகள் படம் பார்ப்பவர்களை சிந்திக்க வைப்பதற்கு முன் ,எஸ் ஜே சூர்யா வின் அசாத்திய உடல்மொழியோடு கூடிய தவிப்பிலும்,” தலைவரே தலைவரே..” என அவர் புலம்பும் புலம்பலிலும், இத்திரைப்படம் பார்வையாளனுக்கு வெகு சுவாரசியமாக மாறிவிடுகிறது. அந்த வகையில் எஸ் ஜே சூர்யா தான் இந்தப் படத்தின் மாபெரும் வலிமை.


படத்தின் இன்னொரு மிகப்பெரிய பலம் படத்தின் படத்தொகுப்பு. படத்தொகுப்பாளர் பிரவீனுக்கு இது நூறாவது படம் என்பதனால் தன்னுடைய பங்களிப்பு தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக உழைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். காட்பாதர் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் என அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருது வாங்கிய “வால்டர் முர்ச்”  சிறந்த படத்தொகுப்பிற்கு 1. உணர்ச்சி 2.கதை 3. ரிதம் 4. கண் பார்வையை தொடர்தல் 5. திரையின் இருபரிமாண இடம் 6. முப்பரிமாண வெளி என ஆறு விதிகளை வகுக்கிறார் ( மாண்டேஜ் -தமிழில் தீஷா, பேசாமொழி பதிப்பகம் வெளியிடு). இந்த விதிகளில் ஒன்று பிசகினாலும் திரைப்படம் தான் தெரிவிக்க வந்த மூல கருத்திற்கு அப்பால் விலகிச் சென்றுவிடும் எனவும் அவர் எச்சரிக்கிறார். இந்த விதிகளை மாநாடு திரைப்படத்தின் படத்தொகுப்பில் பொருத்திப் பார்த்தால் ஏறக்குறைய பொருந்திப் போவது ஆச்சரியம்தான்.


மாநாடு திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரவீன் தனது கடந்த 99 திரைப்படங்கள்  வழங்கிய அனுபவத்தினை வைத்து எது பார்வையாளர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதில் வெற்றி கண்டுள்ளார்.  படத்தின் இன்னொரு பலம் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை.
மற்றபடி காட்சிக்கு காட்சி வேறுபடும் கதாநாயகன் சிம்புவின் உடல்வாகு படத்தின் போக்கினை பாதிக்கிறது. வேக வேகமாக நகரும் திரைக்கதையில் குறிப்பிட்ட சில காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவதால் பார்வையாளர்கள் களைப்படைந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு முறையும் சில புதிய விஷயங்களை சேர்த்து இணைத்து வழங்கி இருப்பது படத்திற்கு பலம் என்றாலும், அது ஒவ்வொரு முறையும் நடக்கும் போது கொஞ்சம் அயர்ச்சியாக இருக்கிறது. 
ஒரு திரைக்கதையாக இந்தப் படத்தை இயக்குனர் விவரிக்கும்போது அதை புரிந்து கொண்டு தயாரிக்கும் திரை அறிவு கண்டிப்பாக திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு அவசியம் தேவை. “மிக மிக அவசரம்”(2019) என்கின்ற மிக முக்கியமான ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கிய சுரேஷ் காமாட்சி இந்தத் திரைக்கதையின் அடிப்படையை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு தயாரித்திருக்கிறார். நீண்ட காலமாக படம் தயாரிப்பு நிலையிலேயே இருந்தது பல காட்சிகளில் தெரிந்தாலும், படத்தின் திரைக்கதையின் போக்கு அதை முறியடிக்கிறது.


படம் வெளிவருவதற்கு முன்பாக வழக்கம்போல் தடைகள் ஏற்பட்டன. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்கின்ற முறையில் பணம் போட்டு ஒரு படைப்பை உருவாக்கி வைத்துக்கொண்டு அதை சரியாக மக்களின் பார்வைக்கு கொண்டு போய் சேர்ப்பது என்பது மிக மிக சவாலான ஒரு விஷயம். அந்த சவாலில் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெற்றி பெற்றிருக்கிறார். 
வழமையான கதையில் புதுமையான திருப்பங்களோடு கூடிய, விறுவிறுப்பான திரைக்கதையால் மாநாட்டிற்கு கூட்டம் கூடுகிறது.


அந்தவகையில் மாநாடு தன் வழக்கமான திரைக்கதையின் போக்கில் வலிந்து பொருத்திக்கொண்ட “கால விசித்திரத்தால்” தமிழில் கவனிக்கத்தக்க திரைப்படமாக மாறியிருப்பது ஒரு வெற்றிக்காக காத்து நின்ற இயக்குனர் வெங்கட்பிரபுவிற்கும், நடிகர் சிலம்பரசனுக்கும் மகிழ்ச்சியை அளித்து இருக்கக்கூடும்.


-மணி செந்தில்.

அசுரன் -கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்

.

வரலாற்றின் பக்கங்கள் பெரும்பாலும் பேரரசர்களின் பெருமித கதைகளால் நிரம்பி வழிகின்றன. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், ராஜ பேரிகைகளும், அந்தப்புர அழகிகளும், புகழ்ச்சி வர்ணனைகளும் நிரம்பி இருக்கிற வரலாற்றின் ஏடுகளில் எளிய மனிதர்களுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. இந்திய நிலத்தில் மக்களின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

ஆனாலும் தலைமுறை தலைமுறைகளாக மக்களிடையே பிறந்து அவர்களுக்காக போராடி, மாமனிதனாக திகழ்ந்து, பெருமைமிக்க திரு உருவாக மாறி இருக்கின்ற பழைய எளிய மனிதர்களின் கதை.. வாய்மொழிப் பாடல்களாக,தெருக் கூத்து நாடகங்களாக, கதை சொல்லிகளின் கதைகளாக காலந்தோறும் கடத்தப்படுவதை நாம் அறிந்திருக்கிறோம். இதுபோன்ற கதைகளும், கால நதியின் பயணத்தில் எதிர்ப்படும் அனுபவங்களுமே புனைவிலக்கியதிற்கான கதவுகளாக திகழ்கின்றன.

இலக்கியம் என்பது என்ன.. அது மனிதர்கள் அடைந்த வாதைகளின் வசீகர விவரிப்பு தானே.. என்கிறார் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் தாஸ்தாவெஸ்கி. மனித வாழ்வில் இழப்புகளைப் பற்றி பேசுவதற்கும், வரிகளைப் பற்றி பேசுவதற்கும் இலக்கியத்தை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன.. இலக்கியம் ஒரு கண்ணாடியாக மனிதவாழ்வின் பாடுகளை பிரதிபலிக்கிறது. கலையின் நோக்கமும் அதுதான். தெருக்கூத்து விலிருந்து தொடங்கி திரைக்கலை வரைக்குமான பல்வேறு நிகழ் கலைகள் சகலவிதமான உணர்ச்சிகளுக்கும் ஆட் படுகின்ற மனிதவாழ்வின் சாரத்தை தான் மூலமாகக் கொண்டிருக்கின்றன.
எனவேதான் திரைப்படத்திற்கும் இலக்கியத்திற்கும் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. பல இலக்கிய வடிவங்கள் உலக திரைப்படங்களாக எடுக்கப்பட்டு புகழ் அடைந்திருக்கின்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் பல மொழிகளில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு இருக்கின்றன. உலகளாவிய அளவில் ஏதேனும் ஒரு இலக்கியப் பிரதியை அல்லது ஏதேனும் நாவலை அல்லது யாரேனும் எழுத்தாளர் எழுதிய கதையை மூலமாக வைத்து திரைப்படம் எடுப்பதென்பது மிக மிக இயல்பான ஒன்று.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படம் ஆவது தமிழ் திரை உலகிற்கும் கூட புதிதல்ல. புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற குறுநாவலை இயக்குனர் மகேந்திரன் உதிரிப்பூக்கள் என்ற புகழ்பெற்ற திரைப்படமாக உருவாக்கினார். ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978), , சில நேரங்களில் சில மனிதர்கள்(1977), உன்னைப்போல் ஒருவன்(1965), யாருக்காக அழுதான்(1966) போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. நீல பத்மநாபனின் தலைமுறைகள் மகிழ்ச்சி என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய விக்ரம்,ஒரே ரத்தம் (நாடோடித்தென்றல்), போன்ற கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

அண்மைக்காலங்களில் மிகச்சிறந்த தமிழின் நவீன இலக்கிய உலகின் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளையும் வசனங்களையும் மூலமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் எழுத்தாளர்களுக்கும் திரை உலகிற்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது.

எளிய மனிதர்களின் வாதைகளை, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் அபூர்வ தருணங்களை தன் எழுத்து மூலமாக 50 வருட காலமாக தமிழ் இலக்கிய உலகில் பதிவு செய்து வருகிற மிக முக்கியமான எழுத்தாளர் பூமணி அவர்கள்.

அவர் எழுதிய வெக்கை என்ற நாவல் தான் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக வெளிவந்திருக்கிறது.

நாற்பதாண்டுகளுக்கு முன் வந்த சுமார் 160 பக்கங்களுக்கு மிகாத ஒரு குறுநாவலை திரைப்படமாக உருவாக்க முனைந்த இயக்குனர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கு உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து தான் ஆகவேண்டும்.

நூல்வடிவில் வெளிவந்த வெக்கை என்கின்ற குறு நாவலின் கதை மிக எளிமையானது. தனது அண்ணனை பகையின் காரணமாக கொலை செய்த உள்ளூர் பெரிய மனிதரை பதின்ம வயது கொண்ட சிறு இளைஞன் கொலைசெய்து பழித்தீர்க்கிறான். அந்தக் கொலையை அந்த இளைஞனின் தந்தையும் அவனது குடும்பமும் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதுதான் கதை. அந்த ஊர்ப் பெரிய மனிதனின் வயலுக்கு மிக அருகே இருக்கிற சிறு துண்டு நிலத்தை கொடுக்க மறுக்கிற அந்த எளிய குடும்பத்தின் மூத்த வாரிசை கொடூரமாக கொலைசெய்து அந்த சிறு குடும்பத்தின் எளிய வாழ்வை அழித்து முடிக்கிறது பண்ணையார்த் தனத்தின் பேராசை. குடும்பத்தின் மையப்புள்ளியாக இருந்த வனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த குடும்பம் தவிக்கிறது. நிம்மதியற்ற இரவுகள். உறக்கமற்ற பொழுதுகள். இரவு பகலாக பகைமை ஒரு ஆழ்ந்த பசியாக அந்த குடும்பத்தை வருத்துகிறது. பகை முடித்து பழி தீர்க்க அனைவரும் ஒரு தருணத்திற்காக காத்திருக்க.. அந்த சிறிய இளைஞன் முந்திக்கொண்டு தன் அண்ணனின் உயிர் பறித்தவனை கொலைசெய்து பழி தீர்க்கிறான். இதைத்தான் அப்படியே வைக்காமல் திரைமொழியில் சமூக சீர்திருத்த காட்சிகளோடு கூடிய பதிவுகளை வைத்து கூடுதலான கதை சேர்க்கை அம்சத்துடன் இத்திரைப்படத்தை வெற்றிமாறன் உருவாக்கியிருக்கிறார்.

வழக்கமாக பூமணி நாவல்களில் காணப்படும் அதே உணர்ச்சிப் படிமங்கள் இந்த நாவலிலும் நாம் காணலாம். நெல்லை வட்டார வழக்குகள் மிகுந்திருந்தாலும் பூமணியின் எழுத்துக்கள் சமூக உணர்ச்சி கொண்டவை.

வெக்கை நாவலை பொறுத்தவரையில் ஆழ் நெஞ்சுக்குள் அறுக்கும் பகைமை எப்படி பழித் தீர்த்து பசியாற்றி கொள்கிறது என்பதைதான் பூமணி மிக நுட்பமாக எழுதி இருப்பார்.

எழுத்து வடிவில் வாசிப்பு அனுபவத்தில் நாம் கண்டடைந்து வியந்த பூமணியின் நுட்பத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக திரையில் பார்த்த போதும் கண்டடைந்தது தான் இப்படத்திற்கான வெற்றி.

நாவலை அப்படியே கதையாக்காமல் தந்தை கதாபாத்திரத்திற்கு கீழ் வெண்மணி மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டங்கள் ஆகிய சம்பவங்களை முன்வைத்து ஒரு பிளாஷ்பேக் வைத்திருப்பதும், எண்பதுகளில் நடைபெறுகிற கதையில் தென்படுகிற சாதிப் படிநிலையின் நுண்ணரசியல் காட்சிகள் அசுரன் திரைப்படத்தை அரசியல் அசுரனாக காட்டுகிறது.

இத் திரைப்படத்தின் முத்தாய்ப்பு அதன் இறுதி காட்சி. பகைமை. அதைத்தொடர்ந்த இருபக்கமும் நிகழ்ந்த கொலைகள் என தொடர்கின்ற போது.. ஒரே மொழி பேசுறோம்.. ஒரே நிலத்தில் வாழ்கிறோம்.. இனியும் இது தொடரக்கூடாது என இன ஓர்மை பேசுகிற அந்த இறுதிக் காட்சி தான் வெற்றிமாறன் அசுரன் திரைப்படம் மூலம் நிகழ்த்த விரும்பும் அரசியல்.

ஒரு எளிய குடும்பத்தை தாங்குகின்ற தந்தை எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பான் என்பதை நுட்பமாக அசுரன் விவரிக்கிறது. தனது இளைய மகன் அடிபட்டு விழும் போதெல்லாம் தாக்கவரும் கழுகுவிடமிருந்து தனது குஞ்சினை காப்பாற்ற போர்க்குணம் கொண்டு போராடும் தாய்க்கோழி போல உக்கிர பார்வையோடு தனுஷ் தோன்றும் போதெல்லாம்.. திரையரங்கம் அதிர்கிறது ‌.

வரலாற்றுத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியலை தாழ்த்தப்பட்டவர்களே தான் முன்னெடுக்க வேண்டும் எனவும்.. அவர்களின் கலையை, இலக்கியத்தை, திரைப்படத்தை அவர்கள்தான் சரியாக, நேர்மையாக இருக்க முடியும் எனவும் இருந்த அனைத்து சமன்பாடுகளையும் வெற்றிமாறன் தனது உச்சபட்ச கலை வெளிபாட்டால் கலைத்துப் போட்டு இருக்கிறார்.‌ சாதி ஏற்றத்தாழ்வு பார்த்து செருப்பு போடக்கூடாது என்றவனை செருப்பாலயே அடித்து கட்டிப் போடுகிற அந்த கம்பீரக் காட்சி சாதிக்கு எதிராக வெற்றிமாறன் உபயோகப்படுத்தி இருக்கிற மாபெரும் ஆயுதம். ஒரு தந்தையின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படமொன்றில் சாதி உணர்வுக்கான சாட்டையடி காட்சிகளை வெறும் பிரச்சாரமாக துருத்தாமல் பொருத்தமாக பொறுத்தி இருப்பதுதான் வெற்றிமாறனின் சாதனை.

தனுஷ் மஞ்சு வாரியர் பசுபதி பிரகாஷ் ராஜ் , சிவசாமியின் மகனாக நடித்து இருக்கிற அந்த இரண்டு இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு வாழ்நாள் சாதனையாக அமைய எடுக்கிற ஒரு திரைப்படத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கின்ற உள்ளார்ந்த வேட்கையில் அவர்கள் நடித்திருப்பது நமக்குப் புரிகிறது.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக எடுக்கப்படும்போது பிழைகள் நேருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதற்கு மிகச்சரியான உதாரணம் தி ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல். வாசிக்கும்போது மாபெரும் வாசிப்பனுபவத்தை தருகிற அந்த நாவல் ஞானராஜசேகரன் இயக்கி திரைப்படமாக காணும்போது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இத்தனைக்கும் இளையராஜா அந்த திரைப்படத்தில் மிக அற்புதமான இசையை வழங்கியிருந்தார்.

அதுபோன்ற பிழைகள், விடுதல்கள் எதுவும் அசுரனுக்கு நேரவில்லை. கதை நடக்கும் களத்தையும், காலகட்டத்தையும் மிக கவனமாக சித்தரித்த விதம் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கதாநாயனாக சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற தனுஷ் சிறுசிறு முகபாவங்களில் கூட கவனம் செலுத்தி திரைப்படத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். இசை ஜீ.வி பிரகாஷ். இதுபோன்ற ஒரு காலகட்டத்தை விவரிக்கின்ற திரைப்படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிக சவாலான ஒன்று. அந்த சவாலை மிக அற்புதமாக கையாண்டிருக்கிற ஜீ.வி பிரகாஷுக்கு இத்திரைப்படம் அவர் திரை வாழ்க்கையில் ஒரு பூச்செண்டு.

இயக்குனர் வெற்றிமாறனின் நிரந்தர ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் என்று வலுவான அணியினர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி மாபெரும் அசுரத்தனம் காட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை தயாரிக்கவே ஒரு துணிச்சல் தேவையாக இருக்கிறது‌. அதை மிகச்சரியாக கலைப்புலி தாணுு சாத்திய ப்படுத்திருக்கிறார்.இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் அண்ணன் ஜெகதீச பாண்டியன் பணியாற்றி இருப்பது நமக்கெல்லாம் கூடுதல் மகிழ்ச்சி.

ஊருக்குள் ஆயிரத்தெட்டு சாதிகள்.. தலைமுழுக ஒரே ஆறு.. என்பதான அண்ணன் அறிவுமதியின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
அதைத்தான் தனது அசுரன் திரைப்படம் மூலமாக மிக அழுத்தமாக வெற்றிமாறன் வெற்றிகரமாக கூறியுள்ளார்.

அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்த்து கொண்டாட வேண்டிய சமூக செய்திகளை உள்ளடக்கிய சிறந்த திரைப்படமாக அசுரனை இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட அவரது குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்களது கடும் உழைப்பிற்கு காட்சிக்கு காட்சி திரையரங்குகளில் கைதட்டல்களே சாட்சி.

அசுரன் தவறவே விடக்கூடாத மாபெரும் அனுபவம்.

 

இமைக்கா நொடிகள்- ஒரு பார்வை.

ஆல்பர்ட் ஹிட்சாக் திரைப்படங்களைப் பார்த்திருப்பவர்கள் ஒரு சம்பவத்தை ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி திரைப்படம் முடியும் போது அதை தொடங்கிய புள்ளியிலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி வேறொரு புள்ளியில் முடிக்கின்ற யுக்தி குறித்து அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும். மனித உளவியலுக்கேயுரிய இயல்பாக இருக்கின்ற இந்த முரணை மூலதனமாகக் கொண்டுதான் சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழில் இதுபோன்ற பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்து தமிழில் வெளிவந்த சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் அதே கண்கள் (1967).

ஆனால் நவீனகால சினிமா அறிவியலுடன் நேரடியாக தொடர்புடைய காரணியாக மாறி இருப்பதால் திரைக்கதைகள் கடுமையான உழைப்பை கோரி வருகின்றன.

செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பது, ஹேக் செய்வது, மனிதனை கட்டுப்படுத்தும் அறிவியலை மனிதன் தன் அறிவால் கட்டுப்படுத்துவது ..போன்ற பல யுத்திகளை தனது திரைக்கதையில் பயன்படுத்தி பார்வையாளர்களை கவர இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

அப்படி ஒரு முயற்சிதான் இமைக்கா நொடிகள். உண்மையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இம் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகின்ற திரைப்படம். திரைக்கதையின் சுவாரசியத்தால் அந்த மூன்று மணி நேரத்தை மிக எளிதாக இயக்குனர் கடக்க வைத்திருக்கிறார். இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். வெகு நாட்களுக்குப் பிறகு திரை அரங்கம் நிரம்பி வழிகிற காட்சி இமைக்கா நொடிகளில் தான் நான் காண நேர்ந்தது.

சமூகத்தில் உயர்வான பொருளாதார வசதியோடு இருக்கின்ற ஹை க்ளாஸ் குடும்பத்தின் வாரிசுகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் எல்லா பெற்றோர்களிடமும் 2 கோடி கேட்டு மிரட்டி வாங்கிக்கொண்டு கொலையும் செய்து விடுகிறான். அடுக்கடுக்காக நிகழும் இந்த கொலையை விசாரிக்கும் சிபிஐ அதிகாரியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் உச்சநட்சத்திரம் நயன்தாரா. இந்தப் படம் அவருக்கானது. ஏறக்குறைய அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் அவரது தம்பியான அதர்வா. இந்த இருவரையும் தாண்டி படம் முழுக்க ஆக்கிரமிப்பது வில்லனாக வருகின்ற புகழ்பெற்ற இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப். படத்தில் இருக்கின்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. புகழ்பெற்ற நடிகர் முரளியின் மகன் அதர்வா இப்படத்தில் தன்னை மிகவும் மெருகேற்றி இருப்பது ஆச்சரியமான ஒன்று. வில்லன் விடுக்கிற சவால்களை கதையின் நாயகி எதிர்கொண்டு சமாளிக்க முயல்கிறார். பலமுறை அதில் தோற்கிறார். வில்லனுக்கும் நயன்தாராவுக்கும் நடக்கிற அந்த கழுதைப்புலி -சிங்கம் உரையாடல் மிக சுவாரசியமாக இருந்தது. சின்ன சின்ன அசைவுகளிலும் வில்லன் அனுராக் காஷ்யப் மிரட்டியிருக்கிறார் ‌. நயன்தாரா தமிழ்நாட்டின் ஏஞ்சலினா ஜூலி. அதை நிரூபித்தும் இருக்கிறார். குறிப்பாக அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான உறவில் நெகிழ்ந்து உருகுவது அழகாக இருக்கிறது. ஏறக்குறைய அனைவருமே சரிசமமான பங்கு இருப்பது போன்ற திரைக்கதை வடிவமைப்பு இயக்குனரின் திறமை.

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள். ஆனாலும் அனுராக் காஷ்யப், நயன்தாரா ,அதர்வா ஆகியோர் தங்களது மேம்பட்ட திறமையால் இமைக்கா நொடிகளை இமைக்காமல் பார்க்க வைக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் இரவு நேர காட்சிகளில் தான் யார் என காட்டியிருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இரண்டு பாடல்களில் தெரிகிறார். வேகமெடுத்து ஓடும் திரைக்கதையால் படத்தின் குறைகள் எதுவும் அதிகம் உறுத்தாமல் கவனித்துக் கொண்டது இயக்குனரின் திறமையே.. பாராட்டுக்கள் அஜய்.

இப்படத்தின் தயாரிப்பில் என் தம்பிகள் அருண்குமாரும் அரவிந்தும் பங்கு பெற்றிருக்கிறார்கள். அருமைக்குரிய சகோதரர் விஜய் சார் இப்படத்தினை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். படம் வெற்றியடைந்து விட்டது. புன்னகை தவழ இருக்கிற அந்த முகங்களை காண விரைவில் சென்னைக்கு செல்ல வேண்டும்.

இமைக்கா நொடிகள் குடும்பத்துடன் ஒரு மாலையை பொழுதுபோக்காக , விறுவிறுப்பாக கழிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கின்ற திரைப்படம் .

அவசியம் காணுங்கள்.

வாசுவும் சரவணனும் ஒண்ணா பசரடிச்சவங்க- மதுக்குடி பிதற்றும் திரைமொழி அபத்தம்.

Vasuvum-Saravananum-Onna-Padichavanga-–-VSOP-2015-Tamil-Mp3-Songs-Download

 

 

கடந்த சில வருடங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி தயாரித்து   “வ-குவார்ட்டர்,கட்டிங்” என்ற திரைப்படம் வந்த போது அதன் தலைப்பு சார்ந்து, உள்ளடக்கம் சார்ந்து கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டன. மதுக்குடி ஒரு பொழுதுப் போக்கு என்கிற நிலை மாறி, மதுக்குடி ஒரு தீவிர நோயாக உருமாறிக் கொண்டிருக்கிற இச்சமூகத்தில் தான் மதுக்குடியை கொண்டாட்டத்தின் வடிவமாக, உணர்ச்சியின் வடிகாலாக , காட்டி நியாயப்படுத்தும் திரைப்படங்கள் வெளியாகின்றன. அத்திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப ( ஆங்கிலத்தில் வி.எஸ்.ஓ.பியாம்- மதுபான வகையொன்றின் பெயர். )

காதலிப்பது,குடிப்பது மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்யும் கதாநாயகன், அவன் வெறுப்பேற்ற, அவன் காதலுக்கு உதவ அவனைப் போன்ற ஒரு நண்பன், இவர்களை நேசிக்க எந்த தார்மீக காரணமும் இல்லை என்பது புரிந்தும் காதலிக்கும் இவர்களை போன்ற பொறுப்பற்ற கதாநாயகிகள் , இவர்களை சார்ந்த உப கதாபாத்திரங்கள் என வைத்துக்கொண்டு, கதை என்கிற முக்கிய கருப்பொருள் இல்லாமல், எவ்வித உண்மைத்தன்மை இல்லாமல்  திரையில் எது சொன்னாலும், எது காட்டினாலும் மக்கள் சிரித்து விடுவார்கள் என்கிற மகத்தான (?) நம்பிக்கைகளோடு தயாரிக்கப்படும் பல நூறு திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த வா.ச.ஒ.ப. வழக்கமான இயக்குனர் ராஜேஷின் அதே கதை. அதே குடி.

 இது நடிகர் ஆர்யாவின் 25 வது திரைப்படம் என்ற அறிவிப்போடு படம் தொடங்குகிறது. தனது திரைவாழ்வின் முக்கியமான படமொன்றுக்கு ஆர்யா இது போன்ற கதையை தேர்வு செய்தது ஆச்சர்யமே. படம் முழுக்க பரவிக்கிடக்கும் மதுபானம் அருந்துகிற காட்சிகள் பார்வையாளர்களை முகம்சுளிக்க வைக்கிறது. மதுவிலக்கிற்கு ஆதரவான போராட்டக்குரல்கள் எழுந்திருக்கிற இக்காலக்கட்டத்தில் இத்திரைப்படம் வெளிவந்திருப்பது ஒரு நகைமுரண். தமிழகத்து இளைஞர்கள் என்றாலே எப்போதும் மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு ஏதோ ஒரு பொண்ணை காதலிப்பதற்காக வீதிவீதியாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கின்ற கருத்தை வலியுறுத்துகிற பல படங்கள் வரிசையில் இத்திரைப்படமும் இடம்பெறுகிறது. படத்தில் பெரிதாக கதை ஒன்றுமில்லை. சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்த வாசு என்கிற சந்தானமும், சரவணன் என்கிற ஆர்யாவும் மிகநெருங்கிய நண்பர்கள். சந்தானத்திற்கு திருமணம் ஏற்பாடாகிறது. அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான பானுவிடம் தன் நண்பன் மீது கொண்ட அதீத அன்பாலும், அக்கறையாலும் ஒரு நேர்முகத்தேர்வு(?) நடத்துகிறார். ஆர்யாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மனம் வெறுத்துப்போன பானு தன் கணவன் சந்தானத்திடம், ‘உன் நண்பன் ஆர்யாவை கைவிட்டு வந்தால்தான் நமக்கு முதலிரவு’ என்று நிபந்தனை(?) வைக்கிறார். சந்தானமும் தனது நண்பன் ஆர்யாவும் தன்னைப்போலவே காதல் திருமணம் செய்துகொண்டால் நட்பு இயல்பாகவே ஒருகட்டத்தில் அறுந்து விடும் என்று கருதி, நண்பன் காதலிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறார். ஆர்யா, தமன்னாவை காதலிக்க அதுவும் பல்வேறு குழப்பங்களில் தடைபட்டுப்போக இறுதியில் வாசுவும், சரவணனும் ஒன்றாகவே இணைந்தார்களா? வாசுவுக்கு தனது மனைவியோடு முதலிரவு நடந்ததா? சரவணன் தனது காதலியோடு சேர்ந்தாரா? என்கின்ற கேள்விகளுக்கான விடைகளோடு திரைமொழி (?) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க பல நட்சத்திரங்கள் தோன்றி பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள்.  கவுரவ வேடத்தில்,படத்தின் இறுதிக்காட்சியில் காவல்துறை அதிகாரியாக வரும் விசாலும் இதைத்தான் செய்கிறார். இப்படத்திற்கென பெரிதான இசையோ,ஒளிப்பதிவு மேதமையை காட்டும் காட்சிகளோ தேவை இல்லை என்பதை இயக்குனர் முடிவு செய்து விட்ட பிறகு ..இடையில் நாம் யார்..? படத்திற்கு கதையே வேண்டாமென முடிவு எடுத்தவராயிற்றே அவர்…

இன்றைய தமிழ் திரைப்படங்களின் திரைமொழி விவரிப்பு என்பது வெகுவாக மாறியிருக்கிறது. இளம் இயக்குனர்கள் பலர் முன் வந்து நம்பிக்கை அளிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் ஜிகர்தண்டா,காக்கா முட்டை, சூதுகவ்வும்  போன்ற பல்வேறு சோதனை முயற்சிகள் தமிழ்த்திரைப்படத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  சமகாலத்தில் தமிழ்த்திரைப்பட உலகம் போலவே மலையாளத் திரைப்பட உலகமும், இந்தி திரைப்பட உலகமும் பல்வேறு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை வெளியிட்டு வருகின்றன. பொதுவாக வெகுசன திரைப்பட ரசிகனின் ரசனை என்பது சமீபகாலத்தில்  பெரும் மாற்றமடைந்திருக்கிறது. சமூகம் சார்ந்த, ரசனை சார்ந்த திரைப்படங்கள் கவனிக்கப்படும் இச்சூழலில் ‘வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ போன்ற திரைப்படங்கள் உண்மையாகவே திரைப்பட ரசனைக்கும், திரைக்கலைக்கும் ஏதாவது முன்னேற்றத்தை அளிக்கின்றனவா? என்பது குறித்து நாம் திவிரமாக சிந்தித்துதான் ஆக வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் பார்க்கின்ற, ரசிக்கின்ற ஊடகமாக திரைப்படம் இருக்கின்றது. திரையில் தோன்றும் கதாநாயகனை தனக்கு முன்மாதிரியாக கொண்டு வாழும் பல கோடி இளைஞர்களைக் கொண்ட சமூகமாக தமிழ்ச்சமூகம் விளங்குகிறது. எனவே, இயல்பாகவே தமிழ்த்திரையில் தோன்றுகின்ற கதாநாயகர்களுக்கு ஒரு சமூக பொறுப்புணர்ச்சி தேவையாக இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஏதோ குடித்துவிட்டு பெண்கள் பின் சுற்றுவதையே தமிழ் இளைஞர்கள் வேலையாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொதுக்கருத்தை இத்திரைப்படம் நிறுவ முயற்சித்திருப்பது உண்மையாகவே வருத்தமளிக்கிறது. குடிப்பது ஒரு குற்றமல்ல, அது சமூக இயல்பு என தனது திரைமொழியின் மூலம் இயக்குனர் நிறுவ விரும்புவது கண்டிப்பாக ஆபத்தானதே.  மேலும் பெண்கள் ஆண்களை காதலிக்கதான் படைக்கப்பட்டவர்கள் என்பது போல இன்றளவும் நினைத்துக்கொண்டும், அதை திரைப்படமாக தயாரித்துக்கொண்டும் இருப்பது பிற்போக்குத்தனமானவை. திரைப்படங்கள் மூலம் பல்வேறு சமூகக்கருத்துகளைப் பரப்பிய நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற புரட்சியாளர்கள் இருந்த திரைப்படத்துறையில் நாமும் இருக்கிறோம் என்ற உணர்வு ஆர்யாவுக்கும், இயக்குனர் ராஜேசுக்கும் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். ஆனால், இதனையெல்லாம் கவலைகொள்ளாமல் சந்தானத்தின் இடைவிடாத நகைச்சுவைகளை முக்கியக் காரணியாகக் கொண்டு எந்த அடிப்படையும், வலுவும் இல்லாத கதையை வைத்துக்கொண்டு படம் முழுக்க மதுபானம் அருந்துகிற காட்சிகளை, அதுசார்ந்த உரையாடல்களைப் பொருத்திக்கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பது உண்மையாகவே தமிழ்த்திரைப்பட ரசிகனின் மனோபாவத்தை பெரிதும் பாதிக்கிற நடவடிக்கையாக நாம் கருதலாம். திரைப்படம் என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஊடகம்தானே? இதில் எதற்கு கருத்துக்கள்? என்று கேட்போர்க்கு, எது மகிழ்ச்சி…என்கிற சிந்தனை வயப்படுத்தும் வினாவை எழுப்ப கடமைப்பட்டவர்கள் நாம் என்பதை மறக்கக்கூடாது.

எனவே, திரைப்படம், எழுத்து, இலக்கியம், நுண்கலைகள் என கலைவடிங்களில் பங்குபெற்று உழைப்போர்க்கு கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்ச்சி தேவை என்பதைத்தான் ‘வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. திரையரங்க வாசலில் ஒரு சாதாரண பார்வையாளன் உதிர்த்த கருத்தொன்று எனக்கு இந்நேரம் நினைவுக்கு வருகிறது.’ வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்பதற்கு பதிலாக வாசுவும் சரவணனும், ஒண்ணா குடிச்சவங்க என்றே பெயர் வைத்திருக்கலாம்.

உண்மைதான்…

-மணி செந்தில்

இசை – உளவியல் முரண்களால் எழுகிற புதிய திசை

getimageசம கால திரைப்படங்களில் வணிகப் படங்கள்-கலையம்சம் பொருந்திய படங்கள் என்ற இடைவெளியை தேடும் யாரும் மிகப் பெரிய ஆச்சர்யங்களுக்கு உள்ளாகாமல் இருக்க இயலாது. ஏனெனில் அந்த இடைவெளி மிக நுட்பமானவைகளாக சம கால திரைப்படங்கள் மாற்றி இருக்கின்றன. திரைப்படத்திற்கு கதை எழுதுவதே ஒரு திரைப்படமாக மாறி விட்ட சூழலில் பார்வையாளனின் ரசனைகளும் சட்டகங்களுக்குள் பொருத்த இயலா கணக்குகளோடு மாறி வருகின்றன.  இந்த படம் ஓடும்-ஓடாது என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாத சூழலில்  அச்சறுத்தும் பேயும்,பிசாசும் நகைச்சுவை கதா பாத்திரங்களாக, கதாநாயகியாக மாறி விட்ட ஒரு காலக் கட்டத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் இசை வெளிவந்துள்ளது.

கதாபாத்திரங்களுக்கிடையிலான உளவியல் சிக்கல்களை திரைமொழியாக வடிப்பதில் எஸ்.ஜே.சூர்யா திறமையானவர். அவரது முந்தைய படங்களான வாலி,குஷி,நியூ,அ..ஆ என அனைத்துப்படங்களும் கதாபாத்திரங்கள் எதிர்க்கொள்ளும் உளவியல் முரண்களைப் பற்றிதான் பேசுகின்றன. அவ்வகையில் இசையும்  ஒரே துறையில் திறமைப் படைத்த இரு பெரும் தனி மனிதர்களுக்கு இடையிலான போட்டி,பொறாமை,வஞ்சகம், சூழ்ச்சி போன்ற  உளவியல் முரண்களைப் பற்றி பேசுகின்றன.

எஸ்.ஜே.சூர்யாவின் திரைமொழி சற்றே வித்தியாசமானவை. அதிகமான Close-up காட்சிகள், நீண்ட நேர உரையாடல்கள், கவர்ச்சி ததும்பும் காட்சியமைப்புகள் என தனித்தே தெரியும் அவரது திரைமொழி வடிவத்திற்கு இசை திரைப்படமும் விதிவிலக்கானதுஅல்ல. இரு பெரும் இசையமைப்பாளர்களுக்கு இடையிலான முரண்களை பேசும் திரைப்படம் ஆதலால் சமகாலத்தில் இருக்கும் இசையமைப்பாளர்கள் பார்வையாளருக்கு நினைவிற்கு வந்துதான் ஆகிறார்கள்.\

30 ஆண்டுகளாக அசைக்கவே முடியாத இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த வெற்றிச்செல்வன் தனது செருக்கால் ஒரு இயக்குனரை அவமானப்படுத்த , அந்த இயக்குனர் வெற்றிச்செல்வனின் உதவியாளராக இருக்கிற ஏ.கே.சூர்யாவை அறிமுகப்படுத்தி மாபெரும் வெற்றியை அடைகிறார். சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிகளால்  வெற்றிச்செல்வன் தனது பிழைப்பு,வருமானம்,பேர்,புகழ் என அனைத்தையும் இழக்கிறார். மீண்டும் வெற்றியை அடையத்துடிக்கும் வெற்றிச்செல்வன் பல வித சூழ்ச்சிகளால் சூர்யாவை வெல்ல முயல்கிறார். தன்னைச்சுற்றி  பின்னப்படுகிற சூழ்ச்சி வலைகளில் இருந்து அந்த இளம் இசையமைப்பாளர் மீண்டாரா ,இல்லையா என்பதுதான் கதை.

இத்திரைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா முதன் முதலாக இசையமைத்துள்ளார். முதல் திரைப்படம் என்பதால் பூங்கொத்து மட்டுமே. அடுத்தடுத்த முயற்சிகளில் சூர்யா தன்னை மேம்படுத்திக் கொள்வார் என நாம் வாழ்த்துவோம். இளம் இசையமைப்பாளர் ஏ.கே.சூர்யாவாக எஸ்.ஜே.சூர்யா கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரிசையாக வருகிற சிக்கல்களால் உளவியல் முரண்களுக்கு உள்ளாகி தடுமாறுவதை நன்றாகவே செய்திருக்கிறார். அதிலும் கழிவறைக்குள் உட்கார்ந்து வாய் பொத்தி அழும் காட்சியில் …எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் முன்னேறி இருக்கிறார் என்பதை உணர்த்துகிறார் .  களைப்படைந்த கண்களோடு தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள முடியாத குழப்பமான சூழலில்…சோர்வான மனிதனாக உலா வரும் சூர்யாவிற்கு அக்கதாபாத்திரம் சரியாக பொருந்துகிறது.

இக்கதையினை தனது பண்பட்ட நடிப்பால் தூக்கி நிறுத்தி இருப்பவர்  மூத்த இசையமைப்பாளர்,இசைவேந்தன் வெற்றிச்செல்வனாக  நடித்துள்ள  உங்கள்-எங்கள்-நமது சத்யராஜ். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல்கள் திரையரங்குகளை நிறைக்கின்றன.  அதுவும் தோற்றுப் போன மனிதனாக, வேலையற்று ..தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் மனிதனாக சத்யராஜ் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். தனது பணியாளராக வரும் கஞ்சா கருப்புவினை அவர் கையாளும் காட்சிகள் …சத்யராஜ் என்கிற மாபெரும் கலைஞனை அடையாளம் காட்டுகின்றன. ஓரக்கண்ணால் பார்ப்பது,குத்தலும், நையாண்டியாக பேசுவது, தனது வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வது என தோன்றும் காட்சிகளில் எல்லாம் தன்னை மாபெரும் கலைஞனாக நிருபித்துக் கொண்டே இருக்கிறார் சத்யராஜ். அவர்தான் கதையின் முதுகெலும்பாக இருந்து…ஒட்டுமொத்த திரைப்படத்தையுமே சுமக்கிறார் .

கதாநாயகியாக நடித்திருக்கும் சாவித்திரி(அறிமுகம் ) கவர்ச்சி காட்சிகளில் அதிகம் தென்படுகிறார். செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு காடுகளில் மின்னுகிறது. அந்த அருவியோர அமைப்பு மிலன் கலை ஆக்கத்தில்..அற்புதமாக படமாக்கி உள்ளார்கள்.

சாதாரணமாக வனத்தில் திரியும் ஒரு வண்டின் இசை அறிவுக்கு முன்னால் நாமெல்லாம் ஒண்ணுமே இல்ல சார் என்று சத்யராஜிடம் எஸ்.ஜே.சூர்யா பேசும் காட்சிகளில் வசனகர்த்தா  எஸ்.சூர்யா கைத்தட்டல் பெறுகிறார் .

படத்தின் முடிவாக எஸ்.ஜே சூர்யா ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொள்வது அவரது துணிச்சலை காட்டுகிறது. ஒட்டு மொத்த படத்தையுமே ஒரு கனவாக நிலைநிறுத்த சூர்யா முயலுவது பார்வையாளர்களை அசதிக்குள்ளாக்குகிறது.

படத்தில் பல குறைகள். இருந்தாலும் ..நீண்ட காலத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவின் மறு வருகையும், சத்யராஜ் என்கிற மாபெரும் கலைஞனின் நடிப்புத்திறமையும் இசையை ஒரு தவிர்க்க இயலா திரைப்படமாக மாற்றுகின்றன.

இசை – உளவியல் முரண்களால் எழுகிற புதிய திசை.

மதுபானக்கடை –இதுதான் நம் சமூகம்

யாரும் அடிமையற்ற சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். இது கூட சாத்தியமாகி விடும் போலிருக்கிறது. ஆனால் யாரும் குடிக்காத சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்று யாராவது இன்று நினைத்தால் அவர்களை நினைத்து சிரிப்பதையோ, அழவதையோ  விட பேசாமல் அவர்களை இந்த மதுபானக்கடைக்குள் அனுப்பலாம்.

முதலில் இந்த படத்தை பாராட்டுவதா அல்லது ஏசுவதா என்ற நிலைக்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த படத்தினை ஏற்றுதான் தீர வேண்டியிருக்கிறது என்கிற இச்சமூகத்தின் அவலம் இப்படத்தின் இயக்குனருக்கு சாதகமாக அமைந்திருக்கிறது .வழக்கமான சினிமாத்தனங்களில் இருந்து அப்பாற்பட்டு சிந்திப்பது பாராட்டத்தக்கது என்றாலும்  இப்படியுள்ள சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற நினைப்பு நம்மை உறுத்தாமல் இல்லை.  ஒரு திரைப்படத்திற்கு அடிப்படை தேவைகளான ஒரு கதை, அதற்கான திரைக்கதை, கதாநாயகன்,கதாநாயகி ,நகைச்சுவை பகுதி, சண்டைக்காட்சிகள் , என எல்லாவித காரணிகளையும் அடித்து நொறுக்கி விட்டு தனிப்பட்ட திரைமொழியை உருவாக்கி இருப்பது வழமையான திரைப்படக் கலையின் சமன்பாடுகளை  கலைத்துப் போடுகிறது.

உலகம் முழுக்க திரைக்கலை நினைத்துப் பார்க்க முடியாத உச்சங்களை தொட்டு வரும் இந்த நவீனயுகத்தில் மதுபானக்கடை நம் திரைமொழி வரலாற்றில் ஒரு மைல் கல்லா என சிந்திக்கும் போது ஆம் என தயக்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் கொள்கிற இத்தயக்கம் தான் இயக்குனரின் வெற்றி. ஒரு கதை, ஒரு நாயகன்,ஒரு நாயகி என பெரும்பாலும் நேர்க்கோட்டில் பயணிக்கும் தமிழ்த் திரைக்கலைக்கு கண்டிப்பாக மதுபானக்கடை அதிர்ச்சி வைத்தியம் தான். தனக்கென பண்பாடுகளை இறுக்கமாக கட்டமைத்துக் கொண்டிருக்கிற தமிழ்த் திரைப்படமொழிக்கு வில்லன் போன்ற கெட்டவன் தான் குடிக்க வேண்டும் .கதாநாயகன் மது அருந்துவதாக காட்சிகள் அமைத்தால் கூட அது ஒரு காதல் தோல்வியாகவோ,விரக்தி மனநிலையானதாகவோ காட்டப்பட்டு அது நியாய வகைகளில் சேர்க்கப்படும்.

ஏனெனில் மது குடிப்பு என்பது ஒழுங்கீனத்தின் வடிவமாக ,கட்டறு நிலையின் தோற்றமாக இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள்  தங்கள் படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெறுவது  தாங்கள் புனைய விரும்பும் தோற்றத்திற்கு அது இழுக்கானது என நினைத்தார்கள். தமிழ்ச் சமூகத்தில் மது அருந்தும்  இருந்திருக்கிறதா என்றால்   கள் அருந்தும் முறை இருந்து வந்திருக்கிறது .கள் குடிப்பதும்,மது அருந்துவதும் வெவ்வேறான தன்மை உடையவை. உலக பெருநிறுவனங்களின் ஊடுருவல் உள்ளூர் டாஸ்மார்க் கடை வரை ஊடுருவி விட்ட இந்நாளில்  உள்ளூர் பனையிலிருந்து தயாரிக்கப்படும் கள் என்பது தேசிய பானம். பொருளாதார நலன்கள் மிளிரும் மது சார்ந்த அரசியலில் தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும், அதன் எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணி என்றால் அது உண்மையானதே.  சாராய நிறுவனமான மிடாஸ் –ல் முதல்வர்  ஜெயலலிதாவின் தோழி திருமதி சசிகலாவின் பங்கு பற்றி திமுக மேடைகளில்  உரத்து பேசப்பட்டது தற்போது மெளனமாகிப் போனதும் இவ்வாறே. திமுக ஆட்சிக்காலத்திலும் மிடாஸ் –ல் இருந்து அதிக சரக்கு கொள்முதல் செய்யப்பட்டது  இதன்படியே. சாதாரண திமுக, அதிமுக தொண்டர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அது தலைவர்களின் தனி அரசியல்.
  உடல் நலனுக்கு பெரும் தீங்குகள் விளைவிக்கதாக கள் அருந்தும்  முறை தமிழ்ச்சமூகத்தில் ஒரு கொண்டாட்டத்தின் வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் கள் கலயங்கள் சுமந்து திரிவோர் பற்றி ஏராளம் குறிப்புகள் காணப்படுகின்றன. (  சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே,பெரியகட் பெறினே ,யாம்பாடத் தான்  மகிழ்ந்துண்ணு மன்னே –புறநானூறு ).ஒளவையும் அதியமானும் கள் குடித்து மகிழ்ந்ததாக இன்குலாப்பின் ஒளவை நாடகம் பேசியது .கள்ளுண்ணாமை என்ற திருக்குறள் அதிகாரமும் தமிழர்ச் சமூகத்தில் கள்ளுக்கு இருந்த அதிகாரத்தை உரத்துப் பேசும் மிக முக்கிய ஆவணமாகும்.

மது,கள் ஆகியவற்றிக்கு முக்கிய வேறுபாடுகள் உண்டு. தயாரிப்பு நிலையிலிருந்து சந்தைப்படுத்துதல் வரையிலான பயணத்தில் மதுதான் உற்பத்தியாளர்களின் விருப்பமாக இருக்கிறது . மது வணிகப் பொருள். கள் தமிழர்களது உணவுப் பொருள். உடல் நலனிற்கு பெரிதும் தீங்கினை விளைவிக்க கூடிய மதுவினை அரசு தெருவிற்கு தெரு கடையாக திறந்து விற்பதும், உடல் நலனிற்கு பெரிதும் கேடுகள் விளைவிக்காத, அதிகம் செலவுகள் ஆகாத கள்ளை அரசு தடை செய்து வைத்திருப்பதும் முற்றிலும் முரணான ஒன்று.

மதுவிலக்கு என்பது அரசின் நிறைவேறாத  பல இலட்சியங்களில் ஒன்று.அரசிற்கு பெரிதாக வருமானம் தரக்கூடிய மதுவை மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு மது விலக்கினை அமல் செய்யக் கூடிய அவ்வளவு நாகரீகமான உலகில் நாம் வாழவில்லை என உறுதியாக நம்புவோம்.தந்தை பெரியார் மதுவிலக்கினை மிகக் கடுமையாக எதிர்த்து இருக்கிறார் என்பது ஆச்சர்யகரமான தகவல். கடும் உழைப்பு  தரும் அசதியை போக்க மனிதன் மது அருந்துகிறான். கடும் உழைப்பினை மட்டும் மனிதன் மேல் திணித்து மதுவினை விலக்க நினைப்பது என்ன நியாயம் என தந்தை பெரியார் கேட்கிறார். இது குறித்து லும்பினி இணையத்தளத்தில் சுகுணா திவாகர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

சரி நாமும் மதுபானக் கடைக்கு திரும்புவோம். பெட்டிசன் மணியாக அசத்தியிருக்கும் கவிஞர் என்.டி.ராஜ்குமார் நடிப்பிற்கும்-இயல்பிற்கும் உள்ள மெல்லியக் கோட்டை அழிக்க முயல்கிறார். பாருக்குள் வரும் இராமன் –அனுமார் பெட்டிசன் மணியை பார்த்து பயப்படுவது கலகலப்பு ஊட்டுகிறது. இந்துத்துவாவின் புனித பிம்பங்களை சாதாரண மனித நிலையில் நிறுத்தி குலைத்துயிருப்பது ,சாதிப் பெருமை பேசுபவருக்கு எதிராக புயலென எழும் நகர சுத்தி தொழிலாளர்களின் கோபம் என காட்சிக்கு காட்சி பிம்பங்களை சிதைத்துப் போடுவதில் இயக்குனருக்கு வெற்றியே.இப்படத்தின் இயக்குனர் உலக சினிமா விரும்பியாம்.அரசாங்கத்தினையே கேள்வி கேட்கும் சாதாரண ’குடி’மகன்கள்.சிரிக்கிறோம்.பிறகு ஏண்டா சிரித்தோம் என நினைக்கிறோம்.
பல பாத்திரங்கள் மூலம் மதுபானக் கடையொன்றின் குணாதிசயத்தை  நிறுவி இருக்கிறார்  இயக்குனர் கமலக்கண்ணன். இதனால் சொல்ல வருவதென்ன என்று யோசித்தால் மதுபான கடை திரண்டிருக்கும் இச்சமூகத்தில் தான் நாமும் வாழ்கிறோம் நம்மை சிந்தனை வயப்படுத்துவது என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு சினிமா என்றால் ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன என இயக்குனர் சிந்தித்திருப்பார் என எண்ண வேண்டியிருக்கிறது. இயக்குனர் தனது விகடன் பேட்டியில் சொல்கிறார் . இது ‘அண்டர்ஸ்டூட்’ படம் என்று.

சரிதான்.

பழக்கம் இருக்கிறதோ..இல்லையோ..
ஒரு முறை போய் வாருங்கள்.

மதுபானக்கடைக்கு..

-மணி செந்தில்

மகிழ்ச்சி திரைப்படம் – எளிமையின் அழகியல்.

கோடானுகோடிகளில் தயாரித்து..ஊரில் உள்ள அத்தனை திரையரங்குகளையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து..சொந்த தொலைக்காட்சிகளில் நொடிக்கொடி விளம்பரம் செய்து….ஊரை கொள்ளையடிக்கும் சுரண்டலின் மற்றொரு வடிவமாக திரைக்கலையை மாற்ற முயற்சிகள் நடக்கும் இவ்வேளையில் மிக எளிமையாக …எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் மகிழ்ச்சி திரைப்படம் வெளிவந்திருப்பதே மகிழ்ச்சிதான்.

.

எழுத்தாளர் நீல.பத்மாபனின் தலைமுறைகள் நாவல்தான் மகிழ்ச்சியாக மலர்ந்திருக்கிறது. ஒரு புதினத்தை திரைமொழியின் சட்டகங்களுக்குள் அடக்குவது என்பது மிக எளிதான விஷயமல்ல. படிக்கும் போது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நாவல்கள் திரைமொழியாக விரியும் போது மிகப் பெரிய ஏமாற்றத்தினை அளிப்பதாக இருந்திருக்கின்றன. வாசகன் மனநிலையை தக்க வைத்து நகர்த்திச் செல்லும் புதினப் படைப்பாளியின் உத்திகள் அப்படியே திரைக்கதை ஆசிரியருக்கும் பொருந்தவன அல்ல. புதினத்தினை திரைமொழியாக்கும் போது ஏற்படும் சிக்கல்களை வெற்றிக் கொள்வது என்பது சவாலான காரியம் . சவாலினை எதிர்க்கொண்டு துணிந்து களம் இறங்கியுள்ள வ.கெளதமனை நாம் மனதார பாராட்டலாம்.

.

தொன்ம கதையொன்றின் நம்பிக்கையிலிருந்து கதை புறப்படுகிறது . தொன்ம கதை விவரிப்பிற்கு பயன்படுத்தப் பட்ட ஒவியங்களின் நேர்த்தியில் இருந்தே படம் நம்மை ஆக்கிரமிக்க துவங்குகிறது. சகோதர –சகோதரி பாசத்தினை காலங்காலமாக நாம் திரைப்படங்களில் சந்தித்து வருகிறோம். எத்தனை முறை நம் முகத்தினை கண்ணாடியில் நாம் பார்த்தாலும் அலுக்காதததை போல…நம் வாழ்க்கையை நாம் மீண்டும் ..மீண்டும் பல்வேறு கோணங்களில் இருந்து தரிசிக்கும் போது ஆர்வமடைகிறோம். இன்றளவும் பாசமலர் நம்மை கண் கலங்கத்தான் வைக்கிறது. அதே போலத்தான் மகிழ்ச்சியும். கொண்டாடி வளர்த்த பெண் புகுந்த வீட்டில் கொடுமைக்கு உள்ளாகி திண்டாடிப் போகையில் அவளது உயிருக்குயிரான சகோதரன் என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் திரைக்கதையின் ஒரு வரி .

.

விழிகளை குளிர வைக்கும் பசுமை நிறைந்த நாகர்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் திரைப்படம் படமாக்கப்பட்டிருப்பது திரையை அழகாக்குகிறது . பசுமையாய் விரிந்து கிடக்கும் இயற்கையை ஒளிப்பதிவாளர் அப்படியே அள்ளி வாரி வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் படிமமும் இயற்கையின் அழகோடு படமாக்கப் பட்டிருப்பது அழகு. சகோதரியின் மீது அளவற்ற அன்பினை கொண்டிருக்கும் கதையின் நாயகனாக இயக்குனர் கெளதமன். முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கும் போது ஏற்படும் படபடப்பு அதிசயமாக கெளதமனிடம் காணமுடியவில்லை. அதீதமாக உணரப்பட்டு விடக் கூடிய சோகக் காட்சிகளில் கூட அளவாகவே உணர வைத்திருக்கும் கெளதமனின் சாமர்த்தியம் நமக்குப் புரிகிறது. தன் உயரத்தினை புரிந்துக் கொண்டு நேர்த்தியாக கெளதமன் செயல்பட்டிருப்பது நம்மை கவருகிறது. சாதீய இறுக்கங்களினால் காயப்படுத்தப்படும் பாத்திரமாக செந்தமிழன் சீமான் வருகிறார். சீமானின் பெருங்கோபமும் ,பேரன்பும் வெளிபடும் வகையில் அவரது கதாபாத்திரம் மிளிர்கிறது . கோபம் மிகுந்த காட்சிகளில் சீமானின் ஆவேசம் அடங்க மறுக்காமல் பிறீடுவதை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்கள். சமூக இழிவுகளை துடைத்தெறிய துடிக்கும் சீமான் தன் நண்பனிடம் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாய்..மிக தெளிவாய் துணிவுடன் ஒரு நொடியில் முன் வைக்கும் கோரிக்கை நம்மை கைத்தட்ட வைக்கிறது . மற்ற படங்களில் ஒப்பிடுகையில் அஞ்சலியின் கவர்ச்சி சற்றே அதிகம் என்றாலும் அவரின் விதவிதமான முக பாவனைகள் அழகு.

.

நம் வாழ்க்கையில் நாம் பெண்களுக்கென அளித்துள்ள இடத்தினை எதனாலும் அளவிட முடியாது. பெண்களை சார்ந்தே சமூகம் இயங்கிறது. ஆணாதிக்க சமூகம் வரையறுத்து வைத்துள்ள சங்கிலி பிடியில் இருந்து பெண் விடுதலைப் பெற எத்தனை விதமான போராட்டங்களை …அவதூறுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது..? .. கதாநாயகனின் சகோதரி மேல் அவரது கணவன் நிகழ்த்தும் மூர்க்கமான வன்முறையில் இருந்து விடுதலைப் பெற சாவினையும் தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் தற்கொலை முயற்சியினை காரணங்காட்டி நிரந்தரமாக அவளது பெற்றோர் வீட்டிற்கே துரத்தி விடுகின்றான் கணவன் . எதனால் தான் தண்டிக்கப்படுகிறோம் என தெரியாத நம் வீட்டின் பெண்கள் போலவே அவளும் இருக்கிறாள். தன் சகோதரிக்காக காதலையும் இழந்து நிற்கும் கதாநாயகனிடம் அவனது புரட்சிகரமான தீர்வினை அறியும் அவனது முன்னாள் காதலி தற்போது வேறு ஒருவரின் மனைவியாக வரும் அஞ்சலி “ எல்லாம் முன்னரே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் “ என வலியோடு சொல்லும் போது நம் சொந்த வாழ்க்கையை அப்படியே ஒரு நொடிக்குள் மீள் பார்வை பார்த்து விடுகிறோம்.குறிப்பாக கதாநாயகனின் தந்தை தன் மகளின் திருமணத்திற்காக விற்று விடப்போகும் நிலத்தில் ..காற்றிலாடும் பசும் நெற்கதிர்களை கட்டி அணைத்தவாறே கண்கலங்கும் காட்சி கவிதை . கண்கலங்கி விட்டேன்.

.

வித்யாசாகரின் இசையில் அறிவுமதி அண்ணன் எழுதிய ‘உச்சுக் கொட்ட’ என்ற பாடலும் வைரமுத்து எழுதிய ‘ ஊத்துத் தண்ணி ஆத்தோட ‘ என்ற பாடலும் சிறப்பாக இருக்கின்றன. படத்தொகுப்பும் , ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கின்றன.

.

படத்தில் குறைகளே இல்லையா என்றால்…நுட்பமான குறைகள் இருக்கின்றன. பிரகாஷ்ராஜினை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கதாநாயகனின் தங்கை திருமணம் ஒரு போட்டோ மூலமாகவும், சட்டென வந்துப் போகும் ஒரு வசனம் மூலம் வந்துப் போவது சற்று குழப்பத்தினை ஏற்படுத்துகிறது. கால மாற்றங்களை காட்சிமயப்படுத்துதலில் சற்று குழப்பங்கள். விடுங்கள். இப் படத்தின் திரைமொழி முன் வைக்கும் அரசியல் இக் குறைகளை காணாமல் அடித்து விடுகிறது . இறுதி காட்சியில் சீமானின் மகனாக வரும் ‘ பிரபாகரன்’ இயக்குனரின் மாறா இனப் பற்றை காட்டுகிறது. சாதிக்காக துடிக்காமல் …சாதிக்க துடியுங்கள் என்றும்..ஓடாத மானும்..போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றும் மிதமான குரலில் அழுத்தமாக உரைத்து படத்தினை முடித்து வைக்கிறார் சீமான்.

.

வ.கெளதமன் என்ற இளம் படைப்பாளி ஒரு வாழ்க்கையை திரைப்படமாக நுட்பமான காட்சிகளால் உருவாக்கி நம் முன்னால் வைத்திருக்கிறார். சாதீயத்தினை உடைக்க துணியும் புரட்சிக்கரமான கதை இது. ஆடம்பரங்கள் இல்லாமல் ..ஒரு எளிய திரைமொழி மூலம் ஒரு வலிமையான கருத்தினை முன் வைக்கிறார் கெளதமன். நம் வாழ்வியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத கேடு கெட்ட குப்பைகளை திரைப்படங்களாக்கி திரையரங்குகளை குப்பை தொட்டிகளாக பயன்படுத்தும் ‘தந்திரன்ங்களுக்கு’ மத்தியில் ‘மகிழ்ச்சி’ நம்மை ஆறுதல் படுத்துகிறது.

.

மகிழ்ச்சி போன்ற படங்கள் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் திரை உலகம் புதிய வெளிச்சங்களை தன் மீது பாய்ச்சிக் கொள்ள வழிப்பிறக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை. உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி போன்ற தமிழர் வாழ்வியலை முன் வைக்கும் தமிழுணர்வு மிக்க படைப்பாளர்களின் திரைப்படங்களை கொண்டாட வேண்டும் . கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி பண்பாட்டு சிதைவிற்குள்ளாகி இருக்கும் நம் தமிழினம் மரபு சார்ந்த வாழ்க்கையை முன் வைக்கும் இது போன்ற படைப்புகளை அங்கீகரிப்பதன் மூலமாக தன்னைத் தானெ மீட்டுருவாக்கம் செய்து கொள்ளும் முயற்சிகளை துவங்கும் என நம்பலாம். இன்றைய உலகமயமாக்கலின் விளைவாக எண்ணற்ற குடும்பங்கள் சிதைவுறும் இக் காலக்கட்டத்தில் மகிழ்ச்சி திரைப்படம் நம் முன்னால் நிறுவ முயலும் பாசமும் … அது எழுப்பும் உணர்வும் மிக முக்கியமானவை.நெகிழச் செய்பவை.

தலைமுறைகளை தாண்டியும் பசுமையும் ,பாசமும் நிறைந்த வாழ்க்கை ஈரத்தோடு இன்னும் சாரம் குறையாமல் இருக்கின்றது என்பதை கணிணித் திரைகளில் உலகினை ஆண்டுக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் வாழ்வியல் பாடமாக மகிழ்ச்சி திரைப்படம் இருக்கிறது. இனப்பற்று மிக்க படைப்பாளியான கெளதமனும்..படத்தினை தயாரித்த அதிர்வு திரைப்பட்டறை மணிவண்ணனும் வரவேற்கப் பட வேண்டியவர்கள். வரவேற்கிறோம்.

.

மகிழ்ச்சி .வெல்லும்

வென்றாக வேண்டும்.

மகிழ்ச்சி.

.பழசி ராஜா – வீழ்ந்த ஒரு இனத்தின் விசாலப் பார்வையில் .

பழசிராஜா திரைப்படம் சுதந்திரப் போராட்டத்தில் வீழ்ந்த ஒரு இனத்தின் வீர வரலாற்றினை சொல்கிறது. பழசிராஜாவின் நிலக் களன் நமக்கு புதிது. பசுமை சொட்டும் கேரளா காடுகள், மழையும் ஈரமும் ஆக நகரும் ஒளிப்பதிவின் அழகியல் நம்மை கவரக் கூடியது. பழசி ராஜாவாக தேர்ந்த நடிகர் மம்முட்டி. முகத்தில் உணர்வுகளின் வித்தியாசங்களை மிதக்க விடுவதில் வல்லவர் அவர். அதை இத்திரைப்படத்திலும் அதைத்தான் செய்துள்ளார். தளபதியாக சரத்குமார். வழக்கம் போல இறுக்கமான முகத்தில் அவருக்கு எந்த உணர்வும் வர மறுக்கிறது. மற்றபடி மனோஜ், பத்மபிரியா, கனிகா ,சுமன் என விரிவான நட்சத்திர கூட்டம் மலையாள மண்ணிற்கே உரிய மிகை இல்லாத நடிப்பில் மிளிர்கிறார்கள். இசை நம் இளையராஜா. குன்றத்து எனத் தொடங்கும் அந்த பாடலின் இசை மெய்க்குள் புகுந்து மனதை மயக்கச் செய்கிறது.பின்னணி இசையிலும் இளையராஜா தான் மேதை என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். மலையாள பண்பாட்டினை ஒவ்வொரு காட்சியிலும் புகுத்தி இருப்பது திரைமொழியின் இயல்பான நகர்விற்கு உதவுகிறது. எளிய ஆங்கில வசனங்கள் பல வருகின்றன. ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவியாக அக்காட்சிகளில் மட்டும் தமிழில் உதவி தலைப்பு (sub-title) பதித்து இருக்கலாம்.

பழசிராஜா கதை மிக எளிமையான ,நமக்கு ஏற்கனவே பழக்கமான கட்டபொம்மன் கதைதான். வரி கொடுக்க மறுக்கும் கேரள வர்ம பழசிராஜாவினை தனது சர்வாதிகார பலத்தினால் அடக்க துடிக்கிறது ஆங்கில ஏகாதிபத்தியம். அதை எதிர்த்து பழசிராஜாவும், அவரது ஈடு இணையற்ற படையினரும் போராடி வீரமரணம் எய்கின்றனர். காட்டிக் கொடுக்க இன துரோகியாக சுமன் கதாபாத்திரம்.
விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நிகழ்வுகளை கொண்டிருப்பது ஆச்சர்யம் தான். மக்களை நினைக்கும் தலைவன். அவரின் விசுவாசமான தளபதிகள். காட்டிக் கொடுக்க துரோகி. மண்டியிடாத வீரம் உடைய தலைவன் மக்களை தன்னை விட்டு போக சொல்லி வலியுறுத்தும் போதும் , அந்த அடர்ந்த காட்டின் நடுவே உணர்வின் ஊற்றாய் தலைவன் திகழ்வதை காணும் போதும் நமக்கு ஈழம் நினைவிற்கு வராமல் இருக்கமுடியாது.
உலகம் முழுக்க ஏதோ பகுதியில் சிந்தி சிதறிக் கிடக்கிற நம் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஈழம் என்ற வலியையும் , நம் தலைவர் பிரபாகரன் குறித்த பெருமிதத்தினையும் சுமந்தே வாழ்கிறோம். எதிரியாக வரும் ஆங்கில அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு விருந்து உபசரித்து அனுப்பும் காட்சியில், பிடிபட்ட சிங்கள வீரர்களை கண்ணியமாக நடத்திய நம் தலைவரின் கண்ணியம் தெரிகிறது. இப்படித்தான் என் மனநிலை இருக்கிறது. எந்த விஷயமும் எனக்கு நம் தேசிய தலைவர் குறித்த பெருமிதத்துடன் தான் நகர்கிறது. அச்சமயங்களில் நான் கண் கலங்கி விடுகிறேன். பழசிராஜா திரைப்படத்தில் அழகியலுக்காகவும், கதாபாத்திர வலுவிற்காகவும் புனைவு இருக்கலாம். ஆனால் சமகாலத்தில் நம் தேசிய தலைவர் எவ்விதமான மிகைப் படுத்தலும் இல்லாமல் இயல்பாகவே அறம் காக்கும் சான்றோனாய் வாழ்வது உண்மையில் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமைதான். பழசிராஜா திரைப்படத்தில் பெண்கள் போரிடுகிறார்கள். கடைசி நொடி வரை நம்பிக்கை இழக்காமல் தியாகம் செய்ய தயங்காமல் தளபதிகள் போர் புரிகின்றார்கள் .இவை அத்தனைக்கும் நம்மிடத்தில் மாவீரர்களாய், கரும்புலிகளாய், பெண் புலிகளாய் வாழ்ந்த நம் ரத்த உறவுகள் உதாரணமாக இருக்கிறார்கள். மலையாள மண்ணிற்காக இரண்டு நூற்றாண்டு முன்னால் இருந்த ஒரு வீர வரலாற்றை திரைப்படமாக எடுத்த்திருக்கிறார்கள். எங்களின் போராளிகளோ சம காலத்து சாட்சிகளாக ,எங்களின் பெருமைமிகு அடையாளங்களாக , எங்கள் ஆன்மாவின் உள்ளார்ந்த வேட்கையாக உறைந்து இருக்கிறார்கள். தமிழர்களுக்கான தேசம் தமிழீழ தேசம். அதை நாங்கள் எந்த விலைக் கொடுத்தாவது , எங்கள் மாவீரர்களின் நினைவுகளோடு அடைந்தே தீருவோம்.
மற்ற படி பழசிராஜா – ஒரு தமிழனுக்கு ஈழம் குறித்த உணர்வினையும், வலியினையும், தலைவர் குறித்த பெருமிதத்தினையும் அளிக்கும் திரைப்பட அனுபவமாக கண் முன்னால் விரிகிறது.
கடைசியாக ஒன்று: முதல்வர் கருணாநிதி இத்திரைப்படத்தினை பார்த்து விட்டு மம்முட்டியை பாராட்டினாராம். இது தான் எனக்கு ஆச்சர்யம். குற்ற உணர்ச்சி அல்லவா வந்திருக்க வேண்டும்?

Page 1 of 2

Powered by WordPress & Theme by Anders Norén