காலம் காலமாய் அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு தேசிய இனத்தின் தன்னெழுச்சி என்பது வரலாற்றின் போக்கில் நிகழ்கிற ஒரு சாதாரண நிகழ்வல்ல. தான் அடிமையாய் கிடக்கிறோம், நாம் வாழும் மண்ணைக் கூட ஆள முடியா அறியாமையில் அமிழ்ந்திருக்கிறோம் என்பது கூட தெரியாமல் வந்தவரை எல்லாம் வாழ வைத்து விட்டு தனக்குத் தானே வாய்க்கரிசி போட்டுக்கொண்ட வக்கற்ற  ஒரு இனத்தின் பிள்ளைகள் என்பதை விட தமிழர்களுக்கு வேறெந்த அடையாளமும் இல்லை. ஈழத்தில் நடந்த போரும்,துயரும், ஈந்த தியாகமும், படிப்பினைகளுமே  பன்னெடுங்காலமாய் கருத்தரங்குகளிலும், கதர்ச்சட்டை ஜிப்பாக்க்களிலும் தேங்கிக் கிடந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துரு தமிழர்த் தெருக்களில் மூண்டெழுந்த நெருப்பாக பரவத் துவங்கியதன் காரணமாக அமைந்தன எனலாம். அண்ணன் அப்துல் ரவூப், மாவீரன் முத்துக்குமார் தொடங்கி தங்கை செங்கொடி வரையிலான தியாக மரபு இனத்திற்கோர் இன்னல் விளைந்தால் இன்னுயிரும் இந்த மண்ணிற்கே என்ற இம்மண்ணின் மைந்தர்களின் ஆழ்ந்த உள் மன வேட்கையை உலகத்திற்கு அறிவித்தது.
ஈழம் தந்த வலிகளால் உந்தப்பட்ட தமிழ்நாட்டின் உணர்வு மிக்க இளைஞர்கள் எதனால் நாம் வீழ்ந்தோம் என எண்ணிப்பார்த்ததன் விளைவாக தோன்றியதுதான் நாம் தமிழர் என்கிற அரசியல் பேரியக்கம். அரசியல் அதிகாரம் எதுவுற்ற ,உதிரிச்சமூகமாய் மாறிபோன ஒரு தேசிய இன மக்களின் துயரங்களுக்கு ஒரே விடிவு சிறு சிறு குழுக்களாய் பிரிந்துக் கிடக்காமல் ஒரு மாபெரும் வெகுசன அரசியல் இயக்கமாய் முளைத்து கிளைத்து பரவி ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதுதான் என்பதை நன்கு உணர்ந்த பிறகே நாம் தமிழர் இயக்கம், நாம் தமிழர் கட்சியாக மாறியது. தேர்தலரசியலை புறக்கணிக்கும் அமைப்புகள் கூட தேர்தலரசியலால் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆட்சியாளர்களிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டியிருக்கிறது என்பதான உண்மை நிலையை உணர்ந்த பின்னர்தான் அண்ணல் அம்பேத்காரின் “ எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்கிற பொன்மொழிக்கான அர்த்தம் புரிந்தது.
இம்மண்ணில் பிறந்த, இம்மண்ணின் விழுமியங்களை பண்பாடாக ,வாழ்வியல் நெறியாக கொண்ட ,இம்மண்ணின் மொழியை பேசுகிற இம்மண்ணின் மக்கள் இம்மண்ணிற்கான ஆட்சி அதிகாரப்பாதையில் நகரத்துவங்குவது என்பது தமிழர் அரசியல் வரலாற்றில் மாபெரும் சரித்திர நிகழ்வு. இந்த நகர்வு இதுவரை இம்மண்ணை ஆட்சி செய்துக் கொண்டிருந்த, கொண்டிருக்கிற, எதிர்க்காலத்தில் ஆளத்துடிக்கிற பிற மொழியாளர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தினை கொடுக்கிறது  என்பதுதான்  பாய்ந்து வரும் எதிர்ப்புகளுக்கு பின்னால் பதுங்கி இருக்கிற மாபெரும் உண்மை. அதனால்தான் ஆயிரத்தெட்டு வசவுகளோடு இம்மண்ணின் மக்களின் தார்மீக உரிமையை இவர்களால் இவ்வளவு தரங்கெட்டு விமர்சிக்க முடிகிறது.
கடந்த மே 18 அன்று கோவையில் நடந்த நாம் தமிழர்கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் ஆவணம் இம்மண்ணில் இதுவரை திராவிடம் என்ற பெயரில் பிற மொழியாளர்கள் இம்மண்ணை நயவஞ்சகமாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் போக்கினை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.  இது வரை தமிழன் தனக்கான அரசியல் என எவற்றை கொண்டு இறுமாந்து இருந்தானோ, அவற்றை எல்லாம் ஆய்வு செய்து மறுபரீசிலனை செய்கிறது. தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு வெகு சன அரசியல் அமைப்பின் கொள்கை ஆவணம் எதிர்த்தரப்பினரால் எடுத்த எடுப்பிலேயே பலமான தாக்குதலுக்கு உள்ளாவதை நாங்கள் மகிழ்வாய் கவனிக்கிறோம். மனுவியம் (ஆரியம்)  என்ற பெயரில் பார்ப்பனீயம் இந்த மண்ணில் விளைவித்த சாதி வேறுபாடுகளையும், அந்த ஆரியத்தின் சக ஆற்றலான திராவிடம் சாதிகளை பாதுகாத்து வரும் சாதூர்யத்தினையும் விரிவாக விவரிக்கும் இந்த ஆவணத்தின் மிக முக்கிய பகுதிகளை நாம் பார்க்கலாம்.
உள்ளடக்கமாய் 10 பொருள்களை தன்னகத்தே கொண்டு விரியும் ஆவணத்தின் முதற் பொருளாய் விரிகிறது தோற்றுவாய். தமிழ்-தமிழர்-தொன்மை,பழந்தமிழ்நாடே இந்தியா,தமிழர் ஆளுகை முடிந்த காலம்,மனுநெறியர் வருகையும்,திராவிடமும்,தமிழர் வீழ்ச்சி என்ற பல்வேறு தலைப்புகளில் தமிழர் வரலாற்றினை துல்லியமாக ஆயும் ஆவணம் ”கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கால்நடையாக வந்து குடியேறிய மனுவாளர்கள் (ஆரிய பார்ப்பனர்கள்)நாகரிகச் செழுமை கொழுவிய சிந்துவெளி தமிழகத்தில் கால்வைத்த பின்பு ,தமிழரின் மொழியும், பண்பாடும் திரிவும்-சிதைவும் உறு பல்வேறு மொழிகளும் ,மொழியினங்களும் ஆயின. அவ்வாறு வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத்தமிழர்கள் தம் மொழியை மனுவாளர்களின் சமஸ்கிருதக் கலப்பிற்கு இடம் தந்ததால் பிறந்தவையே திராவிட மொழிகள் (தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு,மராட்டியம் முதலியன) அதனால் உண்டானவர்கள் திராவிடர்கள்.திராவிடம் என்பது கலப்பு கூட்டு இனத்தினை அடையாளபடுத்துமேயன்றி ,தனிப்பட்ட இனத்தினை குறிக்காது” (ப.எண் 9) என்பதை உரத்தக் குரலில் அறிவிக்கிறது. மேலும் அதே பக்கத்தில் “மனுவியத்தின் (ஆரியத்தின்) அரசியல் வடிவமான இந்தியத் தேசியமும், அதன் சார்பு ஆற்றலான திராவிடமும் மூலத்தமிழுக்கும் அது சார்ந்த தமிழ்த்தேசியத்திற்கும் வரலாற்று பகை ஆகும் “ என தெளிவாக அறிவிக்கிறது.   மேலும் அதே பக்கத்தில் தமிழர் வீழ்ச்சி என்ற பத்தியில்  “பண்டைத் தமிழகத்தில் நிலவிய தன்முனைப்பும், தன் மேலாளுமையும், உட்பகையும்,காட்டிக் கொடுப்பும் கொண்ட பண்பு நிலை தமிழர் ஒற்றுமையை குலைத்து மனு நெறியர் (ஆரியப் பார்ப்பனர் ) வால் நுழைக்க இடந் தந்தது.அம் மனுநெறியர் மதத்தாலும்,சாதியத்தாலும் பிறப்பு நிலையின் வழியாக பிரிக்கவும் ,உயர்வு –தாழ்வு அடிப்படையில் நிலையாக முரண்படச்செய்யவும் முடிந்தது”  என்று  எடுத்தியம்புகிறது. தனித்த தேசிய இனமான தமிழர்கள் எவ்வாறு பிற மொழியினருக்கு அடிமையாக நேர்ந்தது என விரிவாக ஆயும் அப்பத்தியில் அவ்வாறு அடிமையானதன் விளைவுகளும் ஆராயப்பட்டுள்ளன.
பக்கம் 11 –ல் தமிழர் வீழ்ச்சிக்குரிய துல்லியமான பின்புலம் ஆங்கிலேயர் வருகைக்கு முன் – பின் என இரு காலக்கட்டங்களை சார்ந்து பிரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் வருகைக்கு முன்  தமிழர்கள் அதாவது ”சென்னை மாநில மக்கள் மட்டுமே  தங்கள் சொந்த மொழி அல்லாத  தெலுங்கு மராட்டிய மன்னர்களாட்சியில் அடிமைப்பட்டனர். அம்மொழி போற்றும் மனு நெறிக்கும் அடிமைப்பட்டு உழன்றனர் “ என தெரிவிக்கும் ஆவணம் ஆங்கிலேயர் வருகைக்கு பின் இம்மண்ணில் வெகு காலம் அரசியல் ஆதிக்கம் செய்து வரும் தெலுங்கர்கள் இட ஒதுக்கீட்டு கொள்கையின் பயனாய் தமிழர்களை தாண்டி எவ்வாறு ஆதாயம் அடைந்தனர் என்பதை விரிவாக பேசுகிறது.
இது வரை வரலாற்றில் கருப்புத் திரை மூடி வைத்திருந்த பக்கங்களை பார்க்க நேரிடும் எவருக்கும் இது போன்ற தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கலாம். ஆனால் நிலவி வரும் பொய்யுரைகளை உடைத்து மேலெழும்பும் உண்மையின் ஒலி  எப்போதும் அதிர்ச்சிக் கரமானதுதான் நாம் உணரத்தான் வேண்டும்.
கடந்த வந்த பாதையை திரும்பிப் பார்க்காத யாரும் செல்லும் பாதையை துல்லியமாக கணிக்க இயலாது என்கிற வரலாற்று பேருண்மையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இவ் ஆவணத்தில்  தமிழர் கழகம் என்று தோன்ற இருந்த தமிழர்களுக்கான அரசியல் அமைப்பு எவ்வாறு திராவிடர் கழகம் என திரிந்து போனது  எவ்வாறு என விவரிக்கும் பத்திகள் இதுவரை நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை அசைத்து போடுகிறது. நம்பிக்கைகள்  எல்லாம் உண்மைகள் அல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல சொல்லி நீளும் அந்த ஆவணம்  தமிழ்த் தேசிய தலைவர்கள் மூன்று பேரை குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் ஆராய்கிறது. முதலாமவர் ம.பொ.சி. ” திராவிடத்தினை எதிர்த்து போராடிய ம.பொ.சி மனுவியத்தினை எதிர்த்து போராடும் தெளிவற்று போனார்” ( ப.எண்கள் 14-15) என்பதனை ஆவணம் சொல்லத் தயங்கவில்லை. மேலும் இரண்டாம் நபராக ஆவணம் ஆயும் சி.பா.ஆதித்தனார் திராவிட இயக்கம் மேடைகளில் முழங்கியதை நம்பி “திராவிடம் தமிழின நலனுக்கு உண்மையான தொண்டு செய்யும் என்றும், இந்தியத் தேசியத்தை விட்டுக் கொடுப்பிற்கு இடமின்றி தன்னலம் துறந்து போராடும் என தவறாக நம்பி”   (ப.எண் 16 ) நாம் தமிழர் இயக்கத்தை கலைத்து விட்டு திமுகவில் இணைந்தது   குறித்து எவ்வித தயக்கமுமின்றி எடுத்தியம்புகிறது.
நாம் தமிழர் கட்சி மூன்றாம் நபராக ஆயும் நபர்  தமிழர் தேசிய பெருந்தலைவர் .மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் .  பக்கம் எண் 17-ல் துவங்கும் அப்பத்தி தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய திராவிடம் “ நானே ஒரு அடிமை –இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி” என வினவி தந்தை செல்வாவிடம் தந்தை பெரியார் கை விரித்த கதையை வேதனையுடன் பகிர்ந்துள்ளது.  மேலும் அரசியல் திராவிடமான திமுக ,திக போன்ற  அரசியல் திராவிடக் கட்சிகள் நம்மினத்தினை அழித்த காங்கிரசுக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து சிங்களத்தோடு தமிழினத்தை அழித்து முடித்த சம்பவங்கள் வரலாற்று நிகழ்வுகள் . அதில்  திரிபோ,மழுப்பலோ இருந்தால் தான் தவறு. மாறாக உண்மையை ஊருக்கு சொல்வதில் தயக்கமில்லாமல் இருப்பதில்  தவறென்ன இருக்கிறது .?
காமாலை கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்று சொன்னால் திராவிடப் பற்றாளர்களுக்கு அது தந்தை பெரியார் மீதான எதிர்ப்பாக மாறி விடுகிறது . இவர்களால் திராவிடக் கட்சிகள் என்ற பெயரில் திமுகவையும், அதிமுகவையும், ஏன்…தேமுதிக வையும் கூட சகித்துக் கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக ,எதிர்க்கட்சியாக, எதிர் வரும் காலத்தில் ஆளத் துடிக்கும் கட்சிகளாக தமிழர் அல்லாதோரின் அமைப்புகள் தான் இருக்கின்றன என்ற உண்மை நிலை குறித்து  இவர்கள் சிந்திக்கக் கூட விரும்புவதில்லை. ஆனால் தமிழ்நாட்டை தமிழர் ஆள்வோம் என்று சொன்னால் அது பெரியாருக்கு எதிர்ப்பாம். வெங்காயம்.
நாம் தமிழர் கட்சி ஆவணம்  பக்கம் எண் 23-ல்  தமிழர் குமுகம் (சமூகம்) பற்றிய மதிப்பீடு என்ற விரிவான பத்தியில் தமிழ்ச்சமூகம் குறித்து கட்சி எவ்வாறு வரையறை செய்கிறது என்பது குறித்தும் இந்திய அரசு குறித்தும், திராவிடம்  குறித்தும்  விரிவான மதிப்பீட்டு  ஆய்வுரைகள் இடம் பெற்று இருக்கிறது. அவற்றின் கருத்துக்களை நாம் சுருங்கிய வடிவத்தில் காண்போம்.
அதன்படி
1.    தமிழ்ச்சமூகம் ஏகாதிபத்தியம், தாராளமய பொருளியல், அரை நிலவுடைமை,அரை முதலாளியம், பன்னாட்டு பெரு வணிக அதிகாரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சமூகமாய் இருக்கிறது.
2.    இவற்றின் மூலமாக  இந்தி பேசும் மக்களின் பேரின ஒடுக்குமுறைக்கும், வந்தேறி இனங்களான ஆரியர்- திராவிடர் போன்றவற்றின் ஒடுக்கு முறைக்கும் தமிழ்ச் சமூகம் உள்ளாகி இருக்கிறது.
3.    ஆரியத்தால் சமூகம் ,மொழி,பண்பாடு சிதைக்கப்பட்டு , வழிபாட்டு மொழி,வழக்கு மொழி,கல்வி மொழி ,பாராளுமன்ற மொழி போன்ற மொழி உரிமைகள் அற்ற சமூகமாய் தமிழ்ச் சமூகம் விளங்குகிறது.
4.    திராவிடத்தால் தமிழகத்தின்  உள்ளும் ,புறமும் தமிழ்நிலங்களை பறிக் கொடுத்த சமூகம் தமிழ்ச்சமூகம் ஆகும். மேலும் திராவிடத்தால் ஆற்று நீர் உரிமைகள், தமிழ்நாட்டு ஆட்சி உரிமை, போன்றவற்றை இழந்த சமூகம் தமிழ்ச்சமூகம் ஆகும்.மேலும் திராவிடத்தால் தமிழ்ச்சமூகம் தாழ்வு மனப்பான்மை உள்ள சமூகமாக , ஒருமை பண்பு இல்லாத சமூகமாக , அடிமைக் குணம் உடைய சமூகமாக மாறியுள்ளது.
5.    ஆங்கிலேயர் காலம் துவங்கி இன்று வரை ஏற்பட்டிருக்கிற கல்விப் பரவல், அரசியல் சமூக விழிப்புணர்ச்சி, அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன்,வைகுண்டர் முதலிய தலைவர்களின் போராட்டங்களினாலும்  , ஆரியத்தினை எதிர்த்து போராடிய அம்பேத்கார்,பெரியார் ஆகிய தலைவர்களின் போராட்டங்களினாலும் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான சாதீயக் கொடுமைகள் குறைந்துள்ளன. ஆனால் மாநில மக்களின் உரிமை, மகளீர் உரிமை போன்றவற்றை பற்றி கவலைப்படாத, முழுமையற்றதாக இருக்கும், பல வித பற்றாக்குறைகளுக்கு நடுவே அமல்படுத்தப்படும் சாதி வாரி இட ஒதுக்கீடு காரணமாக தமிழ்நாட்டில் நிலவும் சாதிகளுக்கு இடையே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முரண்கள் தோன்றுகின்றன. ஆளும் சாதியான மேல் சாதி பறித்த நிலங்களை மீட்கும் பணிகளையும், தமிழர் இனத்தினை ஒன்றிணைத்து சேர்த்து செய்யும் கட்டுமானப்பணிகளையும் இணைத்துக் கொள்ளாத வெறும் சாதி ஒழிப்புக் குரல்கள் பயனற்றவை. 
6.    தமிழ்நாட்டில் தமிழர் மீது ஆதிக்கம் செய்வதில் இம்மண்ணில் வந்து குடியேறிய ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் போட்டி நிலவுகிறது. ஆரிய மொழியான சமஸ்கிருதமும், அதன் பண்பாடுமே இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையானவை என ஆரியம் முன் மொழிகிறது. தமிழனுக்கென தனி பண்பாடுமில்லை,வரலாறுமில்லை –இருப்பதெல்லாம் ஆரியம் சார்ந்தவையே என அதை திராவிடம் வழி மொழிகிறது.
7.    ஆரியத்திற்கும்,திராவிடத்திற்கும் தமிழனை ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டு அடிப்படையில் முரணில்லை . ஆரியத்திலிருந்து திராவிடம் காக்கும் எனவும்,திராவிடத்திலிருந்து ஆரியம் காக்கும் எனவும் பலர் நினைக்கின்றனர். இந்திய சூழல்,தமிழகச் சூழலில் இருக்கும் மிகப்பெரிய கோட்பாட்டு முரண் தமிழியத்திற்கும், தமிழியம் அல்லாதவைகளுமானது ஆகும்.
8.    நடப்புக்க்கால திராவிடம் தனது தலைமையை தக்கவைப்பதற்காக  தமிழர்களுக்கு மது ஊட்டி அவர்களுடைய அறிவையும்,விழிப்புணர்வையும் அழிக்கிறது. இலவசங்களை அளித்து தமிழர்களிடையே உழைக்க விரும்பா பண்பையும்,பிறரை சார்ந்திருக்கும் மனநோயையும் உண்டாக்கி வருகிறது .
இந்திய அரசு குறித்து மதிப்பீடு ( ஆவண பக்க எண் 27 )
1.     மாநில அதிகாரங்களை பறிக்கிறது . தாராளமயமான பொருளியல், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆட்பட்ட தரகு முதலாளித்துவம், ஆரிய பார்ப்பனத் தன்மை சார்ந்த இந்தி பேரின ஆதிக்கம் நிலவுகிறது.
2.    இந்தி தேசிய இனம் ஆளும் தேசிய இனமாக,மற்ற தேசிய இனங்கள் அடிமை தேசிய இனங்களாகவும் இருக்கிறது.குறிப்பாக தமிழ்த்தேசிய இனத்தினை அழிக்கும் வேலையை இந்தி ஆரிய பார்ப்பனீய அரசு செய்கிறது.
3.    தமிழீழ சிக்கலில் தமிழர்களின் போராட்டத்தையோ,தமிழக அரசின் முயற்சிகளையும் இந்திய அரசு மதிக்காமல் இருக்கிறது. தமிழக மீனவர்களை படிப்படியாக அழித்து வருகிறது.தமிழக நீராதாரங்களை பிற மாநிலங்களுக்கு பறித்துக் கொடுத்து தமிழக விவசாயிகளை அழிக்கிறது. அணுமின்நிலையங்களை திறந்து தமிழர்களை அழிக்கத் திட்டமிடுகிறது.
இவ்வாறாக திராவிடத்தின் மீதும் ஒரு விரிவான ஆய்வினையும் ஆவணம் மேற்கொள்கிறது. தமிழ்ச்சமூகத்தினை அரசியல் பொருளாதார ஆய்வு செய்யும் ஆவணம் ஆரியத்திற்கும்,திராவிடத்திற்கும் உள்ள ஓர்மை பண்பு நலன்களை ஆய்வு செய்கிறது. தமிழ்த் தேசிய இன உருவாக்கம் ஏற்பட விடாமல் பாதுகாக்கும் திராவிடத்தின் கவனம் குறித்தும் ஆவணம் ஆய்வு செய்கிறது. “. தமிழ்நாட்டில் உள்ள திராவிடம்  தமிழர்களை தொடர்ந்து தனது ஆளுகையின் கீழ் ,கடந்த 500 ஆண்டு காலமாக வைத்திருக்கிறது.கொஞ்சமும் வெட்கமின்றி ,இந்த மக்களாட்சிக் காலத்திலும் தொடர்ந்து அடிமையாக வைத்திருக்க விரும்புகிறது. அதனால் தமிழ்நாட்டை திராவிட நாடாகவே நடைமுறைப்படுத்தி வருகிறது  .தமிழர்களுக்கு இன்னொரு எதிரியும்,மூல எதிரியுமான மனு நெறியர்கள் பற்றி தொடர்ந்து திராவிடம் பூச்சாண்டி காட்டி வருகிறது .அதே வேளை தமிழ்த் தேசிய கருத்தியலை மனதார ஏற்காததோடு ,தமிழ்த்தேசிய இன உருவாக்கம் உருவாகாமல் கவனமாக பார்த்து வருகிறது ”  (ப.எண் 29 ) என ஆவணம் விவரிக்கிறது.
ஈழத்தில் நமது உறவுகள் தாயக விடுதலைக்காக களத்திலே நின்ற போது, அதற்கான ஆதரவை நம்மால் வழங்க முடியாமல் போனதற்கு முழு முதற் காரணம் ஆட்சி அதிகாரம் தமிழர் கரங்களில் இல்லாதது தான் ஆகும். தமிழர் அல்லாத பிற மொழியாளர்கள் நம்மை ஆண்டுக் கொண்டிருக்கும் வேளையில் நமது குரல்கள் நம் தொண்டையிலேயே நசுக்கப்பட்ட அவலத்தினை தான் நாம் சந்திக்க நேர்ந்தது.  எந்த ஆட்சி அதிகாரம் இல்லாமல் நாம் வீழ்ந்து போனோமோ, அந்த ஆட்சி அதிகாரத்தினை நோக்கி தமிழ்த் தேசிய இனம் இன்று நகரத்துவங்கி உள்ளது. எம் மண்ணில் யார் வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் எம்மினம் சார்ந்த ஒருவர்தான் ஆளலாம் என்கிற ஒரு தேசிய இனத்தின் ஆன்ம விருப்பத்தினை ஆவணம் வெளிக்காட்டுகிறது.
கட்சியின் உடனடி இலக்காக  ஆவணம் “இந்தியாவில் அந்தந்த மாநிலத்தவரே அந்தந்த மாநிலங்களை ஆளும் நிலையில் ,தமிழ்நாட்டை தமிழர் ஆள முடியாத நிலை தொடர்ந்து நிலவுவதை மாற்றி, தமிழரை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவது “ என வரையறுத்து அறிவிக்கிறது ( ப.எண் 30 ).
அமைப்பின் வழி காட்டி மெய்ம்மம்  என்ற தலைப்பில் தனது வேரினை பார்த்து விரிவு செய்யும் பண்பாய் நாம் தமிழர் கட்சி தனது முன்னோடிகளை தனது ஆவணத்தில் நினைவுக்கூர்ந்து போற்றியுள்ளது.
தமிழர் தம் வாழ்வியல் விழுமியங்களை –தொல்காப்பியர்,வள்ளுவர்,பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தும் ,கட்சி தனது  மொழி மீட்சி கருத்தியலை மறைமலையடிகளார் ,பாவாணர்,பாவேந்தர் ஆகியோரிடமிருந்தும், விடுதலை கண்ணோட்டத்தினை  நாவலர் சோமசுந்தர பாரதியார்,அண்ணல் தங்கோ,சாலை இளந்திரையனார்,பெருஞ்சித்திரனார்,புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன்,தேசியத்தலைவர்.மேதகு.வே.பிரபாகரன் ஆகியோரிடமிருந்தும்,  வர்க்க பேதமற்ற கண்ணோட்டத்தினை  வள்ளுவம்,மார்க்சியம்,லெனினியம் ஆகியவற்றிலிருந்தும் ,பகுத்தறிவு கொள்கைகளையும் சாதி ஒழிப்பினையும்  வள்ளுவர்,தமிழ்ச்சித்தர்கள்,வள்ளலார்,அத்திவாக்கம் வெங்கடாச்சலம்,தந்தை பெரியார், குத்தூசி குருசாமி, வைகுண்டர்,அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன், சிவகங்கை இராமச்சந்திரன் ,அண்ணல் அம்பேத்கார் ஆகியோரிடமிருந்தும் கட்சி பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. (ப.எண் 31 )  .
கட்சி தனது தமிழ்த்தேசிய வழிகாட்டிகளாக நிலந்தருதிருவிற் பாண்டியன் துவங்கி தேசியத்தலைவர் பிரபாகரன் வரையிலான நீண்ட மரபினை போற்றும். சமுதாய வழிகாட்டிகளாக  வள்ளலார் ,தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கார் ,அயோத்திதாசர்,இரட்டைமலை சீனிவாசன்,  ஒண்டிவீரன்,அய்யன் காளி,இமானுவேல் சேகரன்,சி.பா ஆதித்தனார் ,காயிதே மில்லத், என நெடிய மரபினை கட்சி கருதும்  என விவரிக்கும் ஆவணம் தமிழறிஞர்கள்,போற்றுதலுக்குரிய பெருமக்கள் ஆகியோரையும் பட்டியலிடுகிறது
தமிழர் இன வரலாற்றில் நாம் தமிழரின் பணி காலத்தின் விளை பொருளாய் உருவாகி இருக்கிறது.தனித்த தேசிய இனமொன்றின் உரிமைக் குரலை சிதைக்கும் ,மாற்றும்,வலிமையை குறைக்கும் எதுவும் அந்த தேசிய இனத்திற்கு எதிரானதே என்ற புரிதலில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இம்மண்ணில் திராவிடர்களாக இருக்கும் பிறமொழியாளர்களையும் கட்சி “ உங்களை பிறமொழியாளர்கள் என்று சொல்லி உங்களை பிறராக பார்க்க நாங்கள் விரும்பவில்லை. உங்களின் மூலத் தாய்மொழியாம் தமிழுக்கு திரும்பிட, உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம். நீங்கள்,நாங்களென ஏன் இனி இருக்க வேண்டும் ? வாருங்கள் நாம் தமிழராய் ஒன்றாவோம்!உயர்வோம் ! “ (ப.எண் 50) என அழைக்கிறது.
தன்னை தமிழர் என அறிவித்துக் கொள்ள திராவிடர்களுக்கு என்ன தயக்கம் இருக்கிறதோ அதே தயக்கமும்,முரணும் தமிழர்களும் தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொள்வதில் இருக்கிறது. தமிழர்களை இழிவுப்படுத்திய முதன்மை சக்திகளாக ஆரியம் எனப்படும் பார்ப்பனீயத்தையும், அதனை சார்ந்த திராவிடத்தினையும் ஆவணம் அடையாளம் காட்டுகிறது. திராவிடத்தினை பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழியத்தினை  எக்காலத்திலும் ஆரியம் ஏற்றதில்லை.மாறாக நேர்க்கொண்டு எதிர்த்திருக்கிறது. ஆவணம் முழுக்க மனுவியல் என்கிற தூயத் தமிழ் சொற்றொடர் ஆரியம்,பார்ப்பனீயம் சொல்லாடல்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டிருகிறது. உடனே காமாலை கண்களுக்கு வந்து விட்டது காய்ச்சல். பார்ப்பான் என சொல்ல வில்லையாம். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஆரியத்தினை திட்டினால் கூட இவர்களுக்கு கோபம் வருகிறது.  பல இடங்களில் அடைப்புக் குறிகளுக்குள் ஆரிய பார்ப்பனர் என்பதை  அச்சிட்டும் கூட திராவிடர்களுக்கு ஓயாத புகைச்சல். ஆரியத்தின் சார்பு ஆற்றல் திராவிடம் என்ற உண்மையை உரத்து கூறி விட்ட பிறகு புகையாமல் என்ன செய்யும்? எதையோ நினைத்து உரலை குத்தியது போன்ற இக்கட்டு நிலை திராவிடர்களுக்கு.
கலைச்சொற்கள் விளக்கத்தில் அந்தணன்,பார்ப்பான்,ஆரியன் போன்ற சொற்களில் பார்ப்பானை புகழ்ந்து இருக்கிறது ஆவணம் என்ற கூப்பாடு வேறு. ஐயா..பொருள் என்பது வேறு. பொருள் விளைவிக்கும் செயல் என்பது வேறு. ஒரு சொல்லின் பொருள் அகராதிகளில்,இலக்கியங்களில் என்ன இருக்கிறதோ அதைத்தான் கலைச்சொற்கள் விளக்கத்தில் பயன்படுத்த முடியும்.
அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான் (குறள் –நீத்தார் பெருமை)
பொருள் :அற நெறியில் ஆழ்ந்து நன்றொழுகி ,உயிர்களிடத்தில் செம்மையான அன்பும்,ஈரமும் கொண்டவர்களே அந்தணர்கள் என போற்றத்தக்கவர்கள் .
இதனைக் கண்ட திராவிடப் பற்றாளர்கள் உடனே திருவள்ளுவருக்கு பெரியார் எதிரி பட்டம் சூட்டிவிடப் போகிறார்கள். வள்ளுவர் ஜாக்கிரதை.
சமண மதத்தினை சாராதவர்களை அமணர்கள் என அழைப்பது வழக்கம். பிராமணன் என்பதற்கு பெரிய அமணன் என்று பொருள்பட பேரமணன் என அழைப்பது பொருள். உடனே பிராமணர்களை புகழ்கிறார்கள் என்ற கச்சேரி; ஐயா..,திராவிடர்களே! ,உங்கள் இயக்கத்திற்கு தான் ஆரிய தலைமை வாய்த்திருக்கிறது. எங்களுக்கு அல்லவே. அதே கலைச்சொல் பகுதியில் உள்ள மனுவியம் என்பதற்கான பொருளையும் வெளியிட்டு இருந்தால் நேர்மையாக இருந்திருக்கும் .
கட்சியின் உறுதிமொழிகளில் இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன் ,நாட்டின் இறையாண்மை ஒற்றுமை,ஒருமைப்பாடு  ஆகியவற்றை நிலைநிறுத்தி வலிமைப்படுத்த கட்சி உறுதியளிக்கிறது என்ற வரிகள்  திராவிடப் பற்றாளர்கள் ஆவணத்தின் மீது நிகழ்த்தும் விமர்சனமாக இருக்கிறது. இந்த நாட்டில்  பதியப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆவணங்களில்  பெரியார் திக உள்ளீட்ட எந்த கட்சியின் ஆவணம் நாங்கள் இந்திய இறைமையாண்மைக்கு எதிராக இருக்கிறோம் என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது.? துணிவிருந்தால் சொல்லுங்கள் .பிறகு எதிரே நில்லுங்கள். ஆனால் இந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார்  என 5 முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் நினைவிற் கொள்க . இந்திய தேசியத்திற்கு சீமான் பகை சக்தியா,நட்பு சக்தியா என்பதற்கு அவர் பேசும் ஒவ்வொரு கூட்டமும் சாட்சி. மற்றதெல்லாம் உங்கள் மனசாட்சி.
திராவிடத்தின் பெயரினால்  இத்தனை ஆண்டுகள் இந்த மண்ணை ஆண்ட,ஆளும் ஆளத்துடிக்கும் பிறமொழியாளர்களுக்கு எம் மீது கோபம் வருவது இயற்கை . அதே போல வாழ்வதற்கான போராட்ட அம்சமாக எம்மை நாங்கள் தகுதிப்படுத்தி கொள்ளலாக இந்த ஆவணம் வெளிப்படுகிறது. காலத்தின் குரலாய் ஒலிக்கும் இந்த ஆவணத்தினை நீர்த்து போன அலறல்களால் வீழ்த்த முடியாது.  ஒரு தேசிய இனத்தின் விடியலுக்கு கிழக்கு வீதிகளில் எழுதப்பட்ட சிவப்புப்புள்ளியாக நாம் தமிழர் கட்சியின் ஆவணம் மிளிர்கிறது. முதன் முதலாக எம் தேசிய இனத்தின் எழுதலுக்கான எத்தனிப்பு இது.  
”இருட்டின் வீதிகளில்
மின்னிட்டு விழும் முதல் தெறிப்பு
கண்களை கூசத்தான் செய்யும்…
 தொடர்ந்து எழும் எம் கதிர்களின் ஒளியில்
 சாத்தியமாகும் எம் தேசிய இனத்தின் விடுதலை…”
-மணி.செந்தில்