ஒவ்வொரு மனிதரும் ஏதோ வகையில் சிறப்பானவராக இருக்கிறார். எனக்கு தெரிந்து ஒரு தோசை மாஸ்டர் இருக்கிறார். கும்பகோணத்தின் மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றில் அவர் தோசை மாஸ்டராக பணிபுரிகிறார். அவரின் கைப்பக்குவத்திற்கென்றே ஒரு கூட்டம் கூடும். தோசை சுடுவதில் வல்லவரான அவருக்கு கொஞ்சம் சித்தர் பாடல்களிலும் அறிமுகம் உண்டு. இரவு நேரத்தில் வேலை முடித்த பின்னர்..2 ரவுண்டு உள்ளே போனவுடன் அவருக்குள் மறைந்துக் கிடக்கும் சித்தர் வெளியே டபக்கென்று குதித்து விடுவார். பிறகென்ன…அந்த ஹோட்டலே சித்தர் மடமாகி விடும். அப்போது தன் எதிரே வருபவரை உற்று பார்ப்பார்.( அப்படியாக அவர் நினைத்துக் கொள்வார்..இருக்குற போதையில எங்கிட்டு உத்து பாக்கிறது..? ) .கண்களை விரித்துக் கொண்டு பெரிய சித்தர் போல எலும்பும், சதையுமாவது ஏதடா..இலக்கமிட்டு இருக்குதோ..என்றெல்லாம் வாய்க்கு வந்ததை எல்லாம் அவிழ்த்து விடுவார். போதை உச்சத்தில் வேட்டி அவிழ்ந்தவுடன் பார்ட்டி கவிழ்ந்துவிடுவார்.காலையில் வழக்கம் போல் தோசை மாஸ்டர். இப்படிப்பட்ட நபரிடம் சித்தர் பாடல்கள் குறித்து விளக்கம் கேட்டால் எப்படி இருக்குமோ…அப்படி இருக்கிறது 4-11-2013 தேதிய தி ஹிந்து தமிழ் நாளிதழில் ஜெயமோகன் எழுதிய ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன ..? என்கிற உலக மகா ஆராய்ச்சிக்கட்டுரை.
சென்னையில் ஒரு புத்தககடையில் ஆங்கில புத்தகம் 2000 விற்றதாக இவர் பார்த்ததிலிருந்து தொடங்குகிறது அக்கட்டுரை. நூலகம் போக தமிழ்நூல்கள் எல்லாம் 500 படிகள் மட்டுமே விற்பதாக இவர் வருந்தி பாரம் சுமக்கிறார் . இவற்றில் எல்லாம் நாம் தலையிட வேண்டாம் .ஏனெனில் அது வியாபாரக் கணக்கு. தமிழ் மொழியில் புத்தகம் விற்கவில்லை என்றால் ஏங்க நீங்க இன்னும் தமிழிலேயே எழுதுறீங்க என்றோ நீங்கள் கட்டுரை எழுதும் ஆங்கில நாளிதழாக இருந்த தி ஹிந்து நாளிதழே தமிழ்ப் பதிப்பு கொண்டு வந்து விட்டதே என்றெல்லாம் கேட்க வேண்டியதில்லை. ஏனெனில் அவையெல்லாம் வடிவேல் கொண்டை போல வெளிப்படை. அடுத்தடுத்த வரிகளில் தான் சிங்கம் தனியே நின்று பெளலிங் போடாமலேயே சிக்ஸர் அடிக்க துவங்கிறது. உலக மயச்சூழலில் ஆங்கிலம் மட்டும் தான் வேலைவாய்ப்பு மொழியாம். இளையத்தலைமுறை எல்லாம் ஆங்கிலத்தில் தான் படிக்கிறார்களாம் என்பது போல உருளுதாம்..சாயுதாம் வகை கருத்துக்கள். எதை இவர் உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என தெரியவில்லை. தாய்மொழிவழிக் கல்வியின் அவசியத்தை பற்றி மிகப்பெரிய அறிஞர்கள் எல்லாம் கத்திக் கதறிக் கொண்டிருக்க ,ஜெயமோகன் மட்டும் தமிழ் மொழி மட்டுமே சொந்தமாக, அடையாளமாக இருக்கிற தமிழினம் ஆங்கிலம் படிக்க ரெகமண்ட் பண்ணுகிறார். ஆங்கில கல்வி படிக்க எதிர்ப்பு தெரிவிப்பது அடிப்படை வாதமாம். மரபணு அறிவியல் மூலமாக தாய்மொழிக் கல்வி பயலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி மாற்று மொழி பயிலும் குழந்தையை விட அதிகமாக உள்ளது என்பதை மயில்சாமி அண்ணாதுரை முதல் அப்துல் கலாம் வரை நிருபித்து விட்ட பிறகும் கூட ஜெயமோகனுக்கு ஆங்கில மோகம்.
தாய்மொழியை இரண்டாவது மொழியாக கொள்வதினால்..தாய்மொழி கல்விக்கான மொழியாக இல்லாததினால் .. தாய்மொழி மீது குழந்தைகளுக்கு கவனம் இல்லையாம். அதனால் தாய்மொழியை தகர டின்னுக்குள் அடைத்து தாய்லாந்திற்கு கடத்திடலாம் என்ற அளவிற்கு பிதற்றிக் கொண்டே போய் இறுதியில் ஒன்றை சொன்னது தான் சூப்பர் டூப்பர் ஹிட் .
அதாவது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழ் எழுத்துருவில் எழுதுவதை விட…நேரடியாக ஆங்கிலத்திலேயே தமிழை எழுதினால் என்ன என்று கேட்கிறார் ஜெயமோகன். என்ன புரியலீயா.. அதாவது தமிழ் எழுத்துருவை ஆங்கிலத்தில் தானே தட்டச்சு செய்கிறீர்கள் ( amma inke vaa vaa.. என்று தட்டும் போது அம்மா இங்கே வா ..வா.. என்று வரும் இல்லீயா அதைத்தான் அண்ணாத்தே சொல்றார். ) அதற்கு பதில் இனி தமிழ் எழுத்துருவே தேவையில்லாமல், நேரடியாக amma inke vaa vaa என்று படித்து புரிந்துக்கொள்ள வேண்டுமாம். இதுதான் அய்யாவின் பயங்கரமான பரிந்துரை..
ஏங்க அப்படி ஆங்கிலத்தில் அடித்து தமிழாய் எழுத்துரு வருவதில் உங்களுக்கென்ன தகராறு என்று எளிமையாய் கேட்டால்..இரு மொழி பயில்வதில் குழந்தைகளுக்கு குழப்பமாம் .அதனால் தாய்மொழியை ஆற்றோடு விட்டு விடலாம் என்கிறார். எங்கள் கும்பகோணத்தில் செளராஷ்டிரா என்கிற இன மக்கள் வாழ்கிறார்கள். பட்டு நெசவுதான் அவர்களின் தொழில். இன்னும் ஜெயமோகனுக்கு நெருக்கமாக சொல்வதென்றால் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் கூட அவ்வினம் தான். அவர்களின் தாய்மொழியான செளராஷ்டிரத்திற்கு பேச்சு வழக்கு உண்டு. ஆனால் எழுத்து வழக்கு வரலாற்றின் போக்கில் இல்லாமல் போய் விட்டது. எனவே எழுத்து வழக்கில்லாத அவர்கள் தமிழில் தான் எழுதி, செளராஷ்டிரத்தில் பேசி வருகிறார்கள். சமீப காலத்தில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். தங்கள் தாய்மொழியான செளராஷ்டிரத்திற்கு என எழுத்து வகையை கண்டறிவது என. அதெற்கென ஒரு குழு அமைத்து செயல்பட துவங்கி உள்ளார்கள். இப்படி எழுத்து வகையே அழிந்த ஒரு மொழிக்கு எழுத்தை தேடி கண்டடைய முயல்கிறது செளராஷ்டிரா இனம். ஆனால் சங்கப்பாடல்களும், இலக்கியங்களும் செறிந்த செம்மொழியின் எழுத்துத்தன்மையை கணிணியில் அழிக்கும் ஆலோசனையைத்தான் ஜெயமோகன் தந்திருக்கிறார்.
கணிணியில் தமிழ் எழுத்துரு உண்டாக்க எத்தனையோ முயற்சிகள் வரலாற்றில் நடந்திருக்கின்றன. டாஸ் (DOS ) ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்கிற இயக்க முறைமையில் ஆரம்பகால கணிணிகள் இயங்கின என்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட டாஸ் இயக்க முறைகளிலேயே 1980 களில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. படிப்படியாக டாஸ்,லினக்ஸ்,மேக் போன்ற இயக்க முறைமைகளில் தமிழ்மொழி மென்பொருட்கள் மூலமாக பயன்படுத்தப்பட்டு இறுதியாக விண்டோஸ் என்று அழைக்கப்படும் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மைக்ரோ சாட்டின் இயக்கமுறையில் தமிழ் எழுத்துரு பயன்படுத்தும் முறை ஏற்பட்டு இருக்கிறது. (இன்னும் விரிவான வரலாற்றிக்கு கணித்தமிழின் காலடித்தடங்கள் –மு.சிவலிங்கம் காலச்சுவடு http://www.kalachuvadu.com/issue-76/kanithamizh02.htm)
எனவே இருக்கும் எழுத்துருவினை மேம்படுத்த எண்ணாமல் , அழித்து விட்டு ஆங்கிலத்திலேயே தமிழை தட்டச்சு செய்து..ஆங்கிலத்திலேயே படிக்க பரிந்துரைக்கும் ஜெயமோகனின் பிதற்றல் எடுத்த எடுப்பிலே விவாதிக்கும் தகுதியை இழக்கிறது.. ஆங்கில புத்தகங்கள் தான் விற்கிறது என்றால்…தாராளமாக ஜெயமோகன் ஆங்கிலத்தில் எழுதப் போகலாம். அவர் சொன்னது போல இங்கிலி தமிழில் ( தங்கிலீஷ் போல..) எழுதலாம். யாரும் தடுக்கவில்லை. தமிழாவது பிழைக்கும்.
இலக்கிய தகுதி இருப்பதாலேயே அனைத்திற்கும் ராஜகுருவாக கிரீடம் சூட்டிக் கொள்ள முயல்வது பேதைமை. இந்த பேதைமை பல முறைகளில் ஜெயமோகனிடம் எக்குத்தப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. இம்முறை கொஞ்சம் அதிகம்.
இந்த கட்டுரையின் முதற்பகுதியில் நிறைய ஆங்கிலச்சொற்கள், கலவைச்சொற்களை பயன்படுத்தியுள்ளேன். எதையும் சீரணிக்க..முழுங்க..ஆட்பட..ஆக்கிரமிக்க..இறுதியில் வெல்ல.. எம் தாய்மொழிக்கு தகுதி. உண்டென காட்டத்தான் அவை.
-மணி செந்தில்
www.manisenthil.com.