பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: அக்டோபர் 2010

என் அண்ணன் பாடல் – நெஞ்சுருக்கும் நல்லிசை.



.

காற்று குளிராய் வீசுகிறது. அனேகமாக மழை வரலாம். சன்னல் கதவுகள் வேகமாக படபடத்துக் கொண்டன. குளிர் காற்று அறைக்குள் வரட்டும் என கருதி சன்னல்களை திறந்து வைத்து கொக்கிகள் போட்டேன். அறையெங்கும் குளிர் பரவியது. கொஞ்சம் ஆழ்ந்து சுவாசித்துப் பார்த்தேன். மீண்டும் அந்த பாடலை கேட்கலாம் போலிருந்தது. நேற்று அமெரிக்காவில் இருந்து அருமை நண்பர் பாக்யராசன் அந்த பாடலுக்கான சுட்டியை அனுப்பி அவசியம் நான் கேட்டாக வேண்டும் என்று பணித்தது முதல் இந்த நொடி வரை அந்த பாடலை பல முறை கேட்டு விட்டேன். பாடலை கேட்ட முதல் முறையில் அந்த பாடல் கண்ணனுக்கானது இல்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறது. பாடலைக் கேட்கும் பலரும் இப்படித்தான் உணர்ந்துக் கொள்கிறார்கள்.

.

கண் கலங்கிக் கொண்டு இருக்கிறேன். ஆழமாக ஊடுருவி ஆறாத ரணமாய் சதா உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு வலிக்கு தன் தமிழால் மயிலிறகு மருந்து தடவி இருக்கிறார் என் அறிவுமதி அண்ணன். இருட்டின் ஆழத்தில் கிடக்கும் விழிக்கு வெளிச்ச தெளிப்பொன்றை பற்ற வைத்து ஆறுதல் சொல்லும் சொற்களோடு .. வரும் சுதா ரகுநாதனின் குரல் நம்மை அசத்திப் போடுகிறது.


.

ஒரு மனிதனை தொழுது வணங்குதல் என்பது அறிவு நிலைகளுக்கு எதிரானதாக இருக்கலாம். பிம்பங்களினால் எழுப்பப்படும் உருவம் நிலையற்றதாக போகலாம். ஆனால் அவரை சந்தித்தவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் அவரைப் பற்றி..அவரோடு இருந்த கணங்கள் பற்றி கேட்டு மீண்டும் மீண்டும் சிலிர்ப்படைகிறேன். அவரது தோற்றம் என் முன்னால் விரிந்துக் கிடக்கிறது. என் படுக்கை அறையில் துவங்கி…. என் அலுவலக அறை வரை அவரது படங்களை ஆசையுடன் மாட்டி வைத்திருந்து என் வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாய் அவரை எனக்குள் மாற்றி வைத்திருக்கிறேன். எதிரிகளால் கூட குறை கூற முடியாத அந்த மனிதனின் நேர்மையையும், ஒழுக்கத்தினையும் கண் கலங்க நினைவு கூர்கிறேன். நான் அந்த மனிதனை நினைக்காத நொடியில்லை. என் மகனை அவரின் படத்தினை காட்டி பெரியப்பா என அவனை அழைக்கச் சொல்லி பெருமைப் படுகிறேன். என் வீட்டின் சிறப்பு நிகழ்வுகளின் போது அவரது படத்திற்கு முன்னால் நிகழ்வுகளை நிகழ்த்திக்கொள்கிறேன். அண்ணனைப் பற்றி ஏதாவது தகவல் உண்டா என கண்கள் முழுக்க ஆர்வத்துடன் கேட்கும் தம்பிகளுக்கு அவர் இருக்கிறார். வருவார் என நம்பிக்கையாய் உண்மையை சொல்கிறேன். அவர் இல்லாத உலகத்தில் நான் வாழ முடியாது என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவரைப்பற்றிய காணொளிகளை பார்க்கும் போது அவரது கண்களில் மிதக்கும் நம்பிக்கை மிகுந்த கனவுகளை யாராலும் களவாட முடியாது எனக்குள் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். அவரைப் பற்றி அவதூறு பேசுபவர்களை..அவரை விமர்சிப்பவர்களை நான் வெறுப்பின் உச்சத்தில் தள்ளுகிறேன். உலகத்தின் அனைத்து தத்துவ சாரங்களிலும் அவரை நான் பொருத்திப் பார்க்கிறேன். இரவு நேரங்களில் தனியே போகப் பயப்படும் என் மகனிடம் பெரியப்பாவினை நினைத்துக் கொண்டே போடா என பெருமைப் பொங்க சொல்கிறேன். எம் இனத்திற்கான நாட்டை அழித்தவர்களையும், அழிக்க துணைப் போனவர்களையும் நான் ஆழ்ந்த வன்மத்துடன் பார்க்கிறேன். வீதிகளில் எப்போதாவது நெகிழி பதாகைகளில் நிற்கும் அவரது உருவத்தினை கண்கலங்க பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.என்னால் இப்படித்தான் வாழ முடியும் என தோன்றுகிறது. அண்ணன் வருவார் என்ற நம்பிக்கைதான் என்னை இயங்க வைக்கிறது. அவரின் சாகசங்களினை யாராவது பெருமைப் பொங்க பேசினாலோ, எழுதினாலோ நான் அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவனாகிறேன்.

.

கண்களை மூடுங்கள் . விளக்குகளை அணையுங்கள். அசையாமல் இந்த பாடலை மென்மையாக உள்வாங்குங்கள். ஒற்றை புல்லாங்குழலோடு இதழ் இதழாய் விரியும் பாடலில் உங்கள் மனதை இழப்பீர்கள். சுதாவின் குரலில் ஒழுகும் உயிர் அறிவுமதி தமிழை பற்றி அப்படியே தேசியத் தலைவரை ஸ்தூலமாக நம் கண் முன்னால் நிறுத்திப் போடுகிறது.

“அவன் வருவான்; கண்ணில் மழை துடைப்பான்”

என குரல் உயரும் போது நாம் உடைகிறோம்.

“ பனி மூட்டம் மலையை மூடலாம், வழி கேட்டு பறவை வாடலாம்.”

என குரல் குழையும் போது இதுவரை இறுகிக் கிடந்த இதயத்தின் முடிச்சிகள் ஒன்றொன்றாய் அவிழ்ந்து இறகாகிறது.

.

இந்த பாடலும்..வரிகளும்..இசையும் ஓர் அனுபவம். இசைக்கு உயிர் உண்டு என்பதை மிக நெருக்கமாக உணர வைக்கும் தன்மை இப்பாடலுக்கு இருக்கிறது. எளிய சொற்களில் விரியும் இசை நம்மை ஆட்கொள்கிறது.

பாடலின் ஊடே தொக்கி நிற்கும் நம் தொன்மம் தந்த தாய்மையின் விரல்கள் நம்மை சாந்தப்படுத்துகிறது. கரைகிறோம். உருகுகிறோம். கரைந்து மிஞ்சிய கரைசலில் கண்ணீரின் உப்புத் துகள்கள் மிதக்கின்றன.

.

இந்த பாடல் படத்தின் எந்த சூழலுக்காக எழுதப்பட்டது என்ற இயக்குனரின் நோக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ..நாம் இந்தப் பாடலை அண்ணன் பாடலாகத் தான் உள்வாங்குகிறோம். அப்படித்தான் அதுவும் உள்ளே போகிறது. உயிரிசை வழங்கிய வித்யாசாகருக்கும்.. குரல் கொடுத்து அனுபவமாய் நம்முள் இறக்கிய சுதா ரகுநாதனுக்கும்., படத்தின் இயக்குனர் கரு.பழனியப்பனுக்கு நன்றிகளும்..பாராட்டுகளும்.

.

அறிவுமதி அண்ணனுக்கு நன்றி எல்லாம் சொல்லப் போவதில்லை.

அவர் அப்படித்தான். நான் இப்படித்தான்.

நாங்கள் இவ்வாறாக.

.

என்ன குறையோ என்ன நிறையோ

திரைப்படம்: மந்திரப் புன்னகை

இசை : வித்யாசாகர்

என்ன குறையோ

என்ன நிறையோ

எதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

என்ன தவறோ

என்ன சரியோ

எதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

என்ன வினையோ

என்ன விடையோ

அதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

அதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

( என்ன குறையோ )

நன்றும் வரலாம்

தீதும் வரலாம்

நண்பன் போலே

கண்ணன் வருவான்

வலியும் வரலாம்

வாட்டம் வரலாம்

வருடும் விரலாய்

கண்ணன் வருவான்

நேர்க்கோடுவட்டம்

ஆகலாம்

நிழல் கூட

விட்டுப் போகலாம்

தாளாத துன்பம்

நேர்கையில்

தாயாக கண்ணன்

மாறுவான்

அவன் வருவான்

கண்ணில் மழைத் துடைப்பான்

இருள் வழிகளிலே

புது ஒளி விதைப்பான்

அந்தக் கண்ணனை

அழகு மன்னனை

தினம் பாடி வா

மனமே

( என்ன குறையோ )

உண்டு எனலாம்

இல்லை எனலாம்

இரண்டும் கேட்டு

கண்ணன் சிரிப்பான்

இணைந்தும் வரலாம்

பிரிந்தும் தரலாம்

உறவைப் போலே

கண்ணன் இருப்பான்

பனி மூட்டம் மலையை

மூடலாம்

வழி கேட்டு பறவை

வாடலாம்

புதிரான கேள்வி

யாவிலும்

விடையாக

கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்

எங்கும் நிறைந்திருப்பான்

அவன் இசை மழையாய்

உலகினை அணைப்பான்

அந்தக் கண்ணனை

கனிவு மன்னனை

தினம் பாடி வா

மனமே

( என்ன குறையோ )

பாடலை பருக: http://www.raaga.com/a/?T0002515

பேரறிவாளன் – துயரக் காற்றில் அலையும் தீபம்.



பேரறிவாளன் – துயரக் காற்றில் அலையும் தீபம்.

( ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் எழுதிய

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – என்று நூலை முன் வைத்து)

மனித நாகரிக சமூகம் மேம்பட தனக்குள் வரைந்து கொண்ட அறக்கோடுகள் விழைந்த ஓவியமாய் திகழும் பேரறிவாளன் தூக்குக் கொட்டடியில்.. மரணக் கயிற்றின் நிழலில் நிற்பது நாம் வாழ்க்கையின் மீது அமைத்துக் கொண்டுள்ள அனைத்து சமன்பாடுகளையும் கலைத்துப் போடுகிறது . மனித மாண்புகளின் மீது கட்டப்பட்டுள்ள எளிய மனித வாழ்வின் இருப்பினை பேரறிவாளன் தலைக்கு மேல் ஊசலாடும் தூக்குக் கயிறு சிதைத்துப் போடுகிறது .

மரணத்தின் நிழல் தரும் மன வலி மிக கொடுமையானது. வாழ்வதற்கான பற்றை வைத்துதான் மனித சமூகமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஒரு மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியதை ‘குற்றமும் தண்டனையும்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். நாஸி வதை முகாமில் இருந்து தப்பி வந்த யூத இளைஞன் ஒருவரான எலீ வீஸல் என்பவர் தனது அனுபவங்களை எழுதியுள்ள இரவு என்ற சுயசரிதை நாவலும் (தமிழில் வெளிவந்துள்ளது. யூனிடெட் ரைட்டர்ஸ் வெளியீடு ) வாழ்வின் மீது மனிதன் கொண்டுள்ள மாறாப் பற்றை விளக்குகிறது. சிறை வாழ்க்கை குறித்து தோழர் .தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்களும் இத்தகையதுதான்.

உயிர் வாழும் வேட்கை தரும் உணர்வில் தான் மனித சமூகத்தின் இயக்கமே நடைபெறுகிறது. ஒரு மனிதனின் உயிரை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் ,எதற்கும் இல்லை என உலகச் சட்டங்கள் அனைத்தும் உரத்த குரலில் கூறுகின்றன. ஆனால் சட்டங்களை அமல் படுத்தும் நீதிமன்றங்களுக்கு மட்டும் தண்டனை என்ற பெயரில் ஒரு உயிரைக் கொல்வதற்கு உரிமை இருக்கிறதென்றால் எத்தகைய முரண்பாடு ?

இறுக்கி கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் அமர்ந்து கொண்டு ..சட்டப் புத்தகங்களின் காற்புள்ளி, அரைப்புள்ளிக்கெல்லாம் அர்த்தம் தேடுவதுதான் நீதிமன்றத்தின் பணியா என்றால் இல்லை. மாறாக தனி மனித விழுமியங்கள் மேல் கவிழும் இருட்டினை துடைக்கும் வெளிச்ச தெறிப்பாக சட்டங்களும், நீதிமன்றங்களும் மாறி இருந்திருக்க வேண்டும். இன்றளவும் சர்ச்சைகள் நீங்காத வழக்கொன்றின் முடிவு தவறொன்றும் செய்யாத ஒரு எளிய மனிதனின் மரணத்தில் தான் விளையும் என்பது வெட்கக்கேடானது. துயரமானது. பேரறிவாளன் தனது முறையீட்டு மடல்களில் முன் வைத்திருக்கும் எந்த கேள்விக்கும் எந்த அமைப்பிடமிருந்து பதிலில்லை. மூர்க்கமும் , அவசரமும் நிரம்பிய நம் நாட்டு அதிகார கட்டமைப்புகளின் துயரமான விளைவாக மாறி நிற்கிறது பேரறிவாளனின் உயிர்.

அமெரிக்க விடுதலைப் போராட்டக் காலத்தில் அங்கு குடியேறிவர்களுக்காக ஆதரவு குரல் கொடுத்து விடுதலையை ஆதரித்த குற்றத்திற்காக பிரிட்டிஷ் கவிஞர் தெல்வால் (THELWALL) சிறையிலடைக்கப்பட்டார். அப்போது அவர் தன் வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில் “ என் வழக்கினை நானே உரைக்காவிடில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும்” என எழுதி இருந்தார். அதற்கு அவரது வழக்கறிஞர் எழுதிய பதிலில் “ உங்களின் வழக்கினை நீங்களே உரைத்தாலும் தூக்குத் தண்டனை கிடைக்கும்” என கூறியிருந்தார் – இந்த உரையாடல்களில் இருந்து உருவான சொற்றொடர்தான் “ நான் செய்தால் தூக்கிலிடப்படுவேன், செய்யாவிடில் தூக்கிலிடப்படுவேன் “(I’ll be hanged if I do and hanged if I don’t ). அதிகார வல்லாதிக்கத்தின் உச்சக் கட்ட அவல காட்சியின் வடிவம் இந்த சொற்றொடர்தான் அமெரிக்க பெரு நிலத்தின் வல்லாதிக்க அரசாட்சியை வீழ்த்துவதற்கான ஆயுதமாக ,ஆவேசம் மிகுந்த முழக்கமாக அமெரிக்க வீதிகளில் எழுந்தது.

உயர்ந்த மதிற்சுவர்களுக்கு மத்தியில் நாள், கிழமை, மாத வருடம் பேதம் அறியாமல் சிறை அறைகளில் எப்போதும் தேங்கி இருக்கும் வற்றா இருட்டில் ..துளித்துளியாய் கசிகிற வெளிச்சத் துளிகளை கண்களுக்குள் உள்வாங்கி ..வாழ்வின் ஏதோ ஒரு முனையில் திரும்பி விட மாட்டோமா…அதிசயம் நிகழ்ந்து விடாதா என்றெல்லாம் நினைத்துக் கொண்டு கண்கள் பனிக்க காத்திருப்பதன் வலியை பேரறிவாளன் எத்தனை நாள் சுமப்பார்?.. ஒரு ஆயுள் தண்டனைக்கும் அதிகமான நாட்களும் கடந்து..இயல்பான வாழ்க்கையின் எவ்வித சுகங்களையும் அறியாமல் ..அடைப்பட்டு கிடக்கும் பேரறிவாளன் மீதுள்ள குற்றச்சாட்டு – ஒரு கொலைக் குற்றத்திற்கு உதவி செய்ததாக . ராஜீவ் காந்தியின் படுகொலையை ஒரு தனி நபர் படுகொலையாகத்தான் கருதப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமே முடிவு செய்து விட்ட நிலையில்.. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் சூழ்ந்துக் கிடக்கிற மரணத்தின் இருட்டில் தான் கழிக்க வேண்டும் என்ற தண்டனை ஒரு நொடியில் தொண்டையை இறுக்கி..கண்களை பிதுக்கி உயிரை கக்குகிற மரண தண்டனையைக் காட்டிலும்…கொடுமையானது.

தனது 19 ஆவது வயதில் சிறை புகுந்த பேரறிவாளனுக்கு இன்று 35 வயது ஆகிறது. தனிமைச் சிறையும், மரண வாசலின் முன்னே ஊசலாடும் தன்மையும் தந்த பரிசினால் கடுமையான உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற அவரது நூலின் தலைப்பில் உள்ள மடலில் பேரறிவாளன் நெஞ்சுருக்கும் சொற்களோடு தன் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல எடுத்து முன் வைக்கிறார். பக்கங்கள் புரள புரள உண்மைகளும், உண்மைகளை புறந்தள்ளி ஒரு குற்றமற்றவனை பலியிடும் தன்மைகளும் வெளிவந்து நம்மை கண்கலங்க செய்கின்றன. ஒரு எளிய மனிதன் வெகு சுலபமாக கொல்லப்படும் அவலம் நிறைந்த சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வு நம்மை மிகுந்த அச்சத்தில் கிடத்துகிறது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புலனாய்வுத் துறையினரும், ஆளும் வர்க்கத்தினரும், உளவுத்துறையினரும், ஊடக தாக்குதல்களும் சூறையாடிய ஒரு அப்பாவி இளைஞனின் ரத்தக்கறை படிந்திருக்கிறது.

பேரறிவாளன் மீது அரசுத் தரப்பில் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் முக்கிய மாபெரும் குற்றச்சாட்டு என்னவெனில் ராஜீவ் காந்தி கொலையாளி தனுவிற்கு பெல்ட் பாம் செய்ய மின்கலம்(பேட்டரி) அதாவது சாதாரண பெட்டிக் கடைகளில் கிடைக்கும் 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்து குண்டு தயாரிக்க உதவியது.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரியாக இருந்து ஒய்வுப்பெற்ற ரகோத்தமன் 10-08-2005 தேதியிட்ட குமுதம் வார இதழிலும்., 31-07-2005 தேதியிட்ட ஜீனியர் விகடன் இதழிலும் “தனு தன் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டை செய்து கொடுத்தவர் யார் என்று இது நாள் வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை “ என மிக மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இது நாள் வரை கண்டுபிடிக்கப்படாத ஒரு காரணிக்காக பேரறிவாளன் தலையின் மேல் தூக்குக் கயிறு தொங்குகிறது என்பது எவ்வளவு மோசமான சமூகத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நாம் வாழ்கிறோம் என்பதற்கு உதாரணம். ஆள்பவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் நினைத்தால் அப்பாவியான ஒரு எளிய மனிதனை தன் அதிகார கரங்கள் கொண்டு கொன்று விட முடியும் என்கிற நிலையில் தான் நாமெல்லாம் வாழ்கிறோம்.

ராஜீவ்காந்தி கொலைக்கு பிறகு 20-06-1991 ஆம் தேதியில் வெளிவந்த இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்ட “ராஜீவ் படுகொலை – சதி திட்டம்” தீட்டப்பட்டது எப்படி என்ற கட்டுரையில் பேரறிவாளன் வெடிகுண்டு நிபுணர் எனவும், ராஜீவை கொன்ற தனு கட்டியிருந்த வெடிகுண்டை செய்தவர் என்றும் சித்தரித்து எழுதப்பட்டிருந்தது. புலனாய்வு குழுவினரும், உளவுத் துறையினரும் திட்டம் போட்டு ஊடகங்களில் பரப்பி விட்ட பொய்யான கதைகளால் பேரறிவாளன் குற்றவாளியாக்கப்பட்டு தூக்குத் தண்டனை கைதியாக இன்று மரணக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கிறார். பிறகு இதே இந்தியா டுடே இதழ் 1996 ஆண்டு “துப்பில் துவாரங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் இது நாள் வரை வெடிகுண்டு குறித்து எந்த புலனாய்வும் செய்யவில்லை என கட்டுரை வெளியிட, அதை எதிர்த்து புலனாய்வு துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வேறு கதை.

அரசு தரப்பு சாட்சிய ஆவணம். 392 என்ற 07-05-1991 ல் பெறப்பட்டதாக கம்பியில்லா தந்தியில்

( சிவராசன் சென்னையிலிருந்து இலங்கையிலிருக்கும் பொட்டுஅம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பியதாக சொல்லப்படும் சங்கேதச் செய்தியை இடைமறித்து ஆராய்ந்து பார்த்து உருவாக்கிய ஆவணம்) கொலைச்சதி சிவராசன், தனு,சுபா ஆகிய மூவருக்கு மட்டும்தான் தெரியும் என பதிவாகி உள்ளது. இந்த கூற்றை வழக்கினை விசாரித்த நீதிபதிகளும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். எனவே கொலைச்சதி பற்றி பேரறிவாளனுக்கு எதுவும் தெரியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. “குற்றமனமில்லா செயல் குற்றமென ஆவதில்லை “(actus non facit reum nisi mens sit rea- The intent and the act must both concur to constitute the crime –The act itself does not make a man guilty unless his intention were so –An act does not make one guilty unlees the mind is also guilty) என்ற சட்ட முதுமொழிகேற்ப பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டகோட்பாடுகளின் மீதும், இயற்கை நீதியின் மீதும் அரசியலும், அதிகாரமும் நிகழ்த்திய வன்முறையாக பேரறிவாளனின் வாதங்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புரை (Pachan singh vs State of Punjab) பேரறிவாளன் வழக்கில் பின்னுக்கு தள்ளப்பட்டதில் இருந்து நியாயமும், நீதியும் மட்டுமே தண்டனையையும், விடுதலையையும் முடிவு செய்வன அல்ல என்பது முடிவாகி இருக்கிறது.

பேரறிவாளனுக்கு கிடைத்திருக்கும் தூக்குத் தண்டனை என்பது தடா சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டது ஆகும். தடா சட்டம் மிகக் கொடுமையான ஒன்று என்பதிலும், அது அரசியலைப்பு சட்டத்திற்கே முரணானது என்பதிலும் யாருக்கும் இருவேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. இக்கருத்தினை அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி சவாண் தடாச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என பாரளுமன்றத்திலேயே ஒத்துக் கொண்டார். (19-08-1994 மாநிலங்களவையில்). போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் வாக்குமூலம் சாதாரண சட்டங்களின் படி நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது. (A confession made to a police officer is irrelevant-sec 25 Indian Evidence Act 1872 ) ஆனால் தடா என்ற ஆட்தூக்கி சட்டத்தின் வாயிலாக( பிரிவு 15 தடா சட்டம்) போலீஸ் அதிகாரிகளிடம் பேரறிவாளன் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு எதிராக நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தான் நிரபாரதி என்பதற்கு அனைத்து விதமான காரணங்களையும் தன் முறையீட்டு மடல்களில் பட்டியலிடுகிறார் பேரறிவாளன். ஆனால் ஒரு எளிய மனிதனின் நியாயங்களை கேட்பதற்கும், அவரது துன்பச் சூழல்களையும் போக்குவதற்கும், நெடிய சிறை தந்த காயங்களை ஆற்றுவதற்கும் ஆள்வோருக்கு விருப்பமில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவினை ஒட்டி தன்னை விடுவிக்க கோரி தமிழக முதல்வருக்கு எழுதியிருக்கின்ற முறையீட்டு மடலில் பேரறிவாளனின் ஆழமான புரையோடிப் போன காயத்தின் வலி தெரிகிறது. தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் தானும் தன் குடும்பமும் அனுபவித்து வரும் சொல்லவியலா துன்பத்தினை வடித்து இருக்கிறார் அறிவு. அந்த மடலில் தனக்கென கொள்கை பின்னணி இருந்ததே ஒழிய அரசியல் பின்னணி- செல்வாக்கு ஏதுமில்லை என குறிப்பிடுகிறார். உண்மைதான். பட்டப்பகலில் பத்திரிக்கை அலுவலகத்தினை தாக்கி 3 பேரை கொன்று விட்டு வரும் நபர்களுக்கு கூட மிக எளிதாக விடுதலை கிடைத்து விடும் இந்த நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் 15 வருடமாய் சிறையில் வாடும் எளிய நிரபாரதிக்கு நியாயம் கிடைத்து விடுமா ..என்ன.?

பேரறிவாளன் தனது முறையீட்டு மடலில் தன்னை மொழி, இனப் பற்றாளன் என்றும், தொப்புள் கொடி உறவான தமிழீழ மக்கள் படும் இன்னல்களை போக்க உலகத் தமிழர்கள் போல தன்னால் இயன்றதை செய்பவன் எனவும் அடையாளம் காட்டியுள்ளார். இவ்வாறு பிறந்து வாழ்ந்ததுதான் பேரறிவாளன் செய்த ஒற்றை குற்றம். உண்மையான மொழி, இனப்பற்றாளர்கள் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் கொலைகாரன் ,கொள்ளைக்காரன் என பட்டங்கள் சூட்டி கொல்லப்படுவார்கள். இல்லையெனில் தீவிரவாதி என சிறைப்படுத்தப்படுவார்கள். அதுவும் இல்லையென்றால் அண்ட சராசரங்களையும் ஆட்டிப்படைக்கிற வல்லாதிக்க நாடாக வளர்ந்து வருகிற இந்திய திரு நாட்டின் இறையாண்மை ஒரு எளிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்து போராடி ஒரு இயக்குனராக உயர்ந்து ..காலத்தின் கோலமாய் இனம் அழிந்த சோகத்தில் இனி அழியாமல் இருக்க ஒரு அமைப்பினை கட்டி.. இளைஞர்களை சேகரித்து ..களமாடி வருகிற செந்தமிழன் சீமானின் தன் சகோதரன் கொல்லப்படுகிறானே என்ற வேதனையில் உதிர்த்த சொற்களில் இருக்கிறது என கூறி சிறையில் போடுவார்கள். வேதனை.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அவர்களை நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளிலும், உணர்வாளர்களின் திருமணங்களிலும் நான் சந்தித்திருக்கிறேன். கண்களில் நிரந்தரமாக தங்கிவிட்ட சோக நிழலினை காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்புடன் பழகும் அற்புத தாய் அவர்கள். வயதான அந்த தாய் தன்னுடைய நிரபாரதியான மகனுக்காக இன்றளவும் ஒரு நெடிய போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய மகன் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றின் நிழலினை அகற்றிட ஒய்வு எடுக்க வேண்டிய வயதில் போராடிக் கொண்டிருக்கிறார் .ஒரு நாள் அவர் என்னிடம் சொன்ன “ ரொம்ப அலைஞ்ச்சிட்டேன்பா” என்ற சொற்கள் என்னை இன்றளவும் தூங்க விடாமல் அலைகழிக்கின்றன. கடுமையான மன உளைச்சலும், நெடிய சிறைவாசம் தந்த சோர்விலும் இருந்தாலும் பேரறிவாளன் சிறையில் ஒரு நன்னடத்தை உடைய மனிதனாக வாழ்ந்து இளநிலை கணி செயல்முறையியல் (B.C.A) படிப்பினை இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் 3 ஆண்டுகள் படித்து முடித்து பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு 5 க்கும் மேற்பட்ட சான்றிதழ் கல்வியையும் இந்த துயர் மிகுந்த இடைப்பட்ட காலத்தில் முடித்துள்ளார். பேரறிவாளன் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அரசு இறுதித் தேர்வில் பள்ளியின் இரண்டாவது மாணவனாக வந்திருந்து ஜேசிஸ் சங்க விருது பெற்றிருக்கிறார். N.C.C என்ற தேசிய மாணவர் படையில் இணைந்திருந்து உயர்நற்சான்றிதழ்களை பெற்றிருக்கிறார். இன்றளவும் சிறை வாழ்க்கையில் சிறையில் உள்ள நூலகத்தினை பராமரித்து வருகிறார். அங்கு வந்திருக்கும் அனைத்து புத்தகங்களையும் வாசித்து விட்டு குறிப்பு எடுத்து வைத்திருக்கிறார். சிறை வாழ்க்கையில் சக கைதிகளுக்கு சான்றான நபராக இருப்பதோடு..சக மனிதர்களின் மீட்சிக்காகவும் உழைத்து வருகிறார். அப்பழுக்கில்லாத அந்த மாமனிதனின் விடுதலையை கோர வேண்டியது மனசாட்சி உள்ள மானுட கடமையாக இருக்கின்றது.

குற்றம் செய்யாத ஒரு எளிய மனிதனை, அவரது வயதான தாயை அலைகழிப்பதும், மரணத்தின் பெயரைச் சொல்லி மிரட்டுவதும்தான் உயர்ந்த மாண்புகள் பெற்றிருக்கும் ஒரு ஜனநாயக நாட்டின் நீதி என்றால் நாம் வாழும் நாடு நாடல்ல என்பதனை நாம் உணர வேண்டும் . தூக்குத் தண்டனையை உலகத்தில் பெரும்பாலான நாடுகள் அகற்றி மனித உரிமைகள் மீதான தங்களது அக்கறையை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்றளவும் தூக்குத் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் மூர்க்கத்தனமான ,பிற்போக்கு அம்சங்கள் உடைய நீதி பரிபாலன கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம் என்பது மிகவும் சிந்திக்க வேண்டியது. மரண தண்டனையை ஒழிக்கும் போராட்டத்தின் மிக முக்கியப் புள்ளியாக பேரறிவாளனின் இந்த நூலை கொள்ளலாம்.

தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற நூலில் மனித உரிமைகள் மீது மிகுந்த அக்கறை காட்டும் நீதியரசர் டி. ஆர்.கிருஷ்ணய்யர் , நீதியரசர் எச்.சுரேஷ் உள்ளீட்ட பல அறிஞர் பெருமக்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அணிந்துரைகளின் வாயிலாக வலியுறுத்தப்படும் கருத்துக்கள் மனித உரிமைகள் மீதும், அதன் விழுமியங்கள் மீது ஆர்வம் உள்ளோர் மிகவும் ஆழமாக கற்க வேண்டியவை ஆகும். பல்வேறு சமயங்களில் பேரறிவாளன் எழுதியுள்ள முறையீட்டு மடல்கள், விண்ணப்பங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் தான் சிக்குண்ட விதம் குறித்தும், எவ்வாறெல்லாம் விசாரணை என்ற பெயரில் தான் கொடுமைப்படுத்தப்பட்ட விபரங்களையும் இந்த மடல்களில் அறிவு மிக விளக்கமாக எடுத்தியம்பி உள்ளார். அவரது முறையீட்டு மடல்களும், விண்ணப்பங்களும் கெஞ்சல்களும், புலம்பல்களும் நிறைந்த இரங்கத் தக்க மனுக்களாக இல்லை. மாறாக இந்த உலகத்தில் தான் வாழ்வதற்கான உரிமை கோரும் ஒரு மனிதனின் நேர்மையான கோரலாக இருக்கிறது. இந்த நூல் தனிப்பட்ட ஒருவர் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பி செல்வதற்கான வழியாக விரியவில்லை. மாறாக ஒழிக்கப்பட வேண்டிய மரணதண்டனையை எதிர்க்கவல்ல இயக்கமாகவும் இந்த நூல் விளங்குவது சிறப்பு. இந்த நூல் ஆகாயம் வரை உயர்திருந்து பளபளக்கும் இந்தியாவின் நீதிமன்றங்கள் போற்றும் மாட்சிமை நிறைந்த நீதி பரிபாலனத்தின் மனசாட்சியில் வடுவாக நிலைத்திருக்கிறது.

நூல் முழுக்க அரசு தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஆதாரப்பூர்வமாக பதில் அளித்து, சட்டத்தின் முன்பாகவும், இந்த சமூகத்தின் முன்பாகவும் வினாக்களை வைத்து காத்திருக்கிறார் பேரறிவாளன். அவரது விளக்கங்களைப் படித்து இந்திய நீதிமன்றங்களின் இரண்டு புகழ்ப் பெற்ற நீதியரசர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்கள். இந்த ஒற்றை நூலை படித்தால் போதுமானது. பேரறிவாளனின் விடுதலை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறியலாம். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் படித்து.. உணர வேண்டிய உணர்ச்சியாக.. அவரவர் உள் மனச் சான்றினை உலுக்கி எடுக்கும் வினாவாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

இனத்தின் மேலும், இந்த மொழியின் மீதும் பற்று வைத்து ஒரு முற்போக்கு குடும்பத்தின் மகனாய் பிறந்து தான் எந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டோம் என்று இன்றளவும் யோசித்துக் கொண்டிருக்கிற துயரோடு வாழும் பேரறிவாளனின் ஆன்மா நீதிபதி கிருஷ்ணய்யர் சொன்னது போல உயர்வானது. பேரறிவாளனின் துயர் மிகுந்த இருட்டில் உலக வெளிச்சம் பட வேண்டும் . உலகமெங்கும் இயங்கும் மனித உரிமை அமைப்புகளுக்கு பேரறிவாளனின் துயர் சேர வேண்டும். இந்த புனிதக் கடமையை உலகத் தமிழர்கள் தாங்களாக முன் வந்து செய்ய வேண்டும். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.

ஒரு மனித உயிரை பறிக்க நம் நாட்டு சட்டங்களும், நீதிமன்றங்களும் வைத்திருக்கும் அளவு கோல்கள் மிகவும் அபாயகரமானவை. பெரும்பாலான சமயங்களில் குற்றமற்றவர்களே சிக்கிக் கொள்ளும் வகையில் தூக்குமேடையின் உயரம் மிக அருகில் இருக்கிறது. இதனால் தான் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மரணவாசல் அருகே வரை சென்று விட்டு இன்று தமிழ்த் தேசிய அறிவுலகின் ஆளுமையாக திகழ்ந்து வரும் தோழர். தியாகு இதற்கு மிகச் சரியான உதாரணம். கண்டிப்பாக பேரறிவாளனுக்கு சீர்க்கெட்டு கிடக்கும் தமிழ் உலக சூழலில் தேவை இருக்கிறது. நிச்சயமாக பேரறிவாளன் எங்களுக்கும் , எம் தமிழ்ச் சமூகத்திற்கும் அவசியத்தேவையாக இருக்கிறார். அனைத்திற்கும் மேலாக நீதியின் மேலும் ,இந்த தமிழ்ச் சமூகத்தின் மேலும் நம்பிக்கை வைத்து வயது முதிர்ந்த நிலையி்லும் எப்படியாவது குற்றம் செய்யாத தன் மகன் விடுதலை ஆகி விடுவான் என்ற எண்ணத்தின் உச்சியில் கனவை சுமந்து நிற்கும் எங்கள் தாய் அற்புதம் அவர்களுக்காகவது…

சிதிலமடைந்த உச்சியில்

சுழற்றி அடிக்கும் சூறைக்காற்றில்

அலைந்தெரியும் தீபம்.

பேரறிவாளன் திரு.

(தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – அ.ஞா.பேரறிவாளன். வெளியீடு: திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம். விலை.ரூ.60. மேலதிக தகவல்களுக்கு : அற்புதம் குயில் தாசன் 11,கே.கே.தங்கவேல் தெரு,பெரியார் நகர், சோலையார் பேட்டை-635851 .www.hang-hanging.com,perarivalan.blogspot.com)

Powered by WordPress & Theme by Anders Norén