பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஆகஸ்ட் 2010

தீபச் செல்வன் – வலிச்சொற்களில் கனன்றுக் கொண்டிருக்கும் கனவு.


கனவு நிலத்தில் பேய்களின் நிழல் படர்ந்து ஆக்கிரமிக்க முயல்கிறது
குழந்தைகளின் நிலக்கனவு தகிக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருக்க
பூர்வீக நிலத்தை அள்ளிச் செல்லும் பொழுது
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொள்வதா? – தீபச் செல்வன்


துயர் மிகுந்த உண்மை படைப்பாய் மிளிரும் போது நன்றாக இருக்கிறது என்று கைக் குலுக்க முடியவில்லை. கண் கலங்கத்தான் முடிகிறது. என் சகோதரன் தீபச் செல்வன் சொற்களில் ஈழத்து துயரம் பெருக்கெடுக்கையில் மிகுந்த குற்ற உணர்வோடு என் வாசிப்பு அனுபவம் நிகழ்கிறது. ஒவ்வொரு வரியின் ஊடாக ஆழமாக நாம் ஊடுரும் போது ஈழத்து உறவின் சதை துணுக்கு ஒன்று நம் முகத்தில் அறைந்து நம்மை திடுக்கிட வைக்கிறது. எதனால் நடந்தது..எப்படி முடிந்தது என ஆய்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது நிகழ் காலத்தின் துயர். அந்த துயரின் சாட்சியாக தீபச்செல்வனும்..அவரது சொற்களும் எவ்வித ஒப்பனையும் இல்லாமல் நிற்கிறார்கள்.

உண்மை இவ்வாறாகத்தான் இருக்கிறது. ஒப்பனைகள் ஏதுமில்லாமல்..வார்த்தை மயக்கங்களை கடந்து ..தனியே நிற்கிறது அது. ஈழத்து துயரங்களின் ரத்த சாட்சியாய் தீபச் செல்வனின் எழுத்துக்கள் உறைந்திருக்கின்றன. எம்மைப் போன்ற தாயகத்து தமிழனுக்கு தன் வாழ்நாளில் அகற்றவே முடியாத கனத்த சங்கிலியாய் ஈழத்து அழிவினை வேடிக்கை பார்த்த குற்ற உணர்வு கனக்கும். எம்மால் எதுவும் இயலவில்லை என்பது போதுமான சமாதானமா என்ன..? அல்ல.

ஆனால் தீபனின் எழுத்துக்கள் வெறும் தகவல்களாக இல்லாமல் அழிந்த ஒரு பெரும் நிலத்தின் அழிவை நிர்வாணமாக்குகின்றன. யுத்தம் முடிந்த பின்னரும் இன்றளவும் நம் உறவுகள் மீது தொடுக்கப்படும் உளவியல் போர் நடந்து முடிந்த கோர அழிவை விட மிக மோசமானது. கந்தல் உடைகளோடு..முள்வேலிகளுக்கு நடுவில்..வெறித்த பார்வைகளுடன் மனிதன் உலவும் ஒரு நிலத்தினை அவர்களுக்கு மத்தியில் இருந்து தன் எழுத்துக்கள் ஊடாக காட்சிமயப் படுத்துவதன் வலி மிகக் கொடுமையானது. வலி சுமந்து வரும் தீபனின் எழுத்துக்கள் யாருக்கும் எப்போதும் ஆறுதலை தரப் போவதில்லை. மாறாக நீங்கவே இயலாத குற்ற உணர்வினை நம்முள் விதைத்து விட்டு போகின்றன அவை.

லும்பினி தளத்திற்காக சோபா சக்திக்கு தீபச் செல்வன் வழங்கிய பேட்டி துரோகத்தனங்களால் அப்பி கிடக்கிற இருட்டினை சுட்டெரிக்கும் நெருப்பாய் தகிக்கிறது. நம் சம காலத்தில் வாழ்ந்த நம் சகோதர, சகோதரரிகள் கற்பனைக்கும் எட்டாத தியாக உணர்வோடு தாய்நாட்டின் விடுதலைக்காக போரிட்டு வீர மரணம் அடைந்திருக்கிறார்கள் என்ற உணர்வு துயர் மிகுந்த இக் காலத்திலும் பெருமிதம் கொள்ள செய்கிறது. விடுதலைப் புலிகள் மக்களிடமிருந்துதான் தோன்றினார்கள்…மக்களிடையே வாழ்ந்தார்கள்..மக்களுக்காக போரிட்டார்கள் என்ற உண்மையை அழிக்க எதிரியை விட இன்று துரோகிகள் தான் வெகுவாக உழைக்கிறார்கள். இணையத் தளங்கள் ஊடாக விஷச் செடியாய் முளை விட்டு கிளைத்து பரவும் இவர்களின் அவதூறுகளின் சாரம் உண்மைக்கு எதிர்மாறானது . எந்த இனத்திற்கும் நேர்ந்து விடக் கூடாத பிழை என நான் கருதுவது இதுதான். எதிரிக்கு மிக எளிதாக நம்மினத்தில் கிடைத்த விஷயம் துரோகம். தமிழர்கள் எவ்வித துயரும், நிர்பந்தமும் இல்லாமல் தமக்கு எதிராகவே தாங்களே துரோகமிழைத்துக் கொண்டார்கள். கொள்கிறார்கள் என்பதனை நாம் தலைக் குனிந்து ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி யிருக்கிறது.

இன்றளவும் எதிரி கரங்களில் சிக்கிக் கொண்டு..எதிரியின் குரலாய் ஒலிக்கிற குரல்கள் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தினைப் பற்றியும் , அதன் மாபெரும் தலைமைப் பற்றியும் சுட்டு விரல் கூட நீட்ட முடியவில்லை என்பதில் தான் அடங்கி இருக்கிறது ஒரு இனத்தின் தியாக வரலாறு. மற்றபடி இணையத்தளங்களின் ஊடாக பழி சொல்பவர்களின் வினாக்களுக்கு விடையாக இருக்கிறது போராளிகளின் வாழ்வும் கனவும். தீபச் செல்வன் அந்த வாழ்வினை தன் கண்ணெதிரே கண்டிருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கம் வெற்று தீவிரவாதத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு சாகச மயக்கங்களின் ஊடாக வளர்ந்த இயக்கமல்ல . மாறாக தியாக உணர்வின் அடித்தளத்தில் தாயக விடுதலைக்காக..இனி இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அடைவதற்கு ஒர் கனவு இருக்கிறது. அது எம் மக்களின் சுதந்திரம் என்ற முழக்கத்தோடு மக்களிடையே கனவாய் துளிர்த்து ..நினைவாய் நிறைவேறி ..நாடாய் நகர்ந்த இயக்கம். அதைத்தான் தீபச்செல்வன் பதிவு செய்கிறார். புலிகளின் இருப்பற்ற ஒரு சூழலில் இன்றும் சாதீய நுண் அரசியல் பேசும் மாமேதை மார்க்ஸ் உள்ளீட்ட மாமனிதர்கள் மக்களின் துயரங்களைப் பற்றியோ..போரைப் பற்றியோ பேசுவதில்லை. புலிகளின் இருப்பற்ற சூழலிலும் …தாயக விடுதலைக்காக களமாடி ..கனவோடு புதைந்த மாவீரர்களின் பெரு மூச்சுக் காற்று கூட இவர்களுக்கு அச்சமூட்டுகிறது. அதனால்தான் இல்லாத..மெளனித்த போராளிகள் மீது களங்கம் கற்பிக்க ஓடி வருகிறார்கள் இவர்கள்.

தீபச்செல்வனின் லும்பினி செவ்வி இது வரை விவரிக்காத ஒரு உலகினை நமக்கு காட்டுகிறது. அறிவுலகின் அனைத்து ஆடம்பரங்களையும் தகர்த்து எறிந்து விட்டு ..மென்மையாக சோபாசக்தியின் கேள்விகளை எதிர் கொண்டிருக்கிறார் தீபன். போரினால் நேரடி அலைகழிப்பிற்கும்..அவலத்திற்கு உள்ளான ஒரு மனம்.. இத்தனைக்கு பிறகும் கூட.. இன்றளவும் தன்னுடைய தன்னுரிமை தாகத்தினை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ள போராடும் போராட்டத்தினைத்தான் தீபச் செல்வனின் வார்த்தைகளில் தெரிந்தது. விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் நிரம்ப இருந்தார்கள் என்ற உண்மையை சாதீயம் பேசி ..சிங்களவனுக்காக சாதிக்க துடிக்கும் துரோகிகளால் ஏற்க முடியாதுதான். அதனால் தான் தீபச் செல்வன் இவர்களுக்கு ஆபத்தானவராக தெரிகிறார். ஏனெனில் உண்மை இலட்சியமாக துலங்குகிறது. அது கோபமாக..போராக மலர்கிறது. உண்மை இவர்களைப் பொறுத்தவரை பிழைப்பிற்கான உத்திரவாதங்களை தருவதில்லை. அதனால் தான் சிங்களன் சிந்தும் சில்லறைகளுக்கு..(சில்லறைகள் எந்த வடிவத்திலும் இருக்கலாம்) விலை போய்.. பொய் பேசி பொல்லாங்கு வளர்க்கிறார்கள். ஆனால் தீபச் செல்வன் கனத்த இதயத்தோடு சொற்களை இறைக்கிறார். ஒவ்வொரு பதிவும் காலத்தினை..களத்தினை..காயத்தினை விவரித்தவாறே நகர்கிறது.

தீபச் செல்வன் மிகத் தெளிவாக கூறுகிறார்.” சாதியம் குறித்து விடுதலைப் புலிகளுக்கு நல்ல புரிதல் இருந்தது. அமைப்பில் தலைமை வகித்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள். இந்த உண்மை புலிகள் மீது அவதூறாய் பேசிய நாக்குகளில் திராவகம் பூசுகின்றது. சாதீ உணர்வினை மையமாக வைத்து சாதி நுண் அரசியல் பேசும் சகலமானவர்களுக்கும் இச் சொற்கள் சங்கடத்தினை அளிக்கின்றன. அவர்களின் அறிவுஜீவி முகமுடியில் அப்பட்டமாய் உண்மை கோடு கிழிக்கிறது. இன்றளவும் இங்கே தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்க டீக் கடைகள் தோறும் போய் ஆய்வு நடத்த வேண்டியிருக்கிறது. ஆனால் ஈழத்தில் நம் சகோதரர்கள் அதை சாதித்தே விட்டிருந்தார்கள். அதை தீபச் செல்வன் மிக நேர்மையாக பதிவு செய்துள்ளார்.(“ஈழப்போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முக்கிய நடவடிக்கையாயிருந்தது. விடுதலைப் புலிகள் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை குறைந்திருந்தது. வன்னியில் தீண்டாமை முற்றாக ஒழிந்துவிட்டதைப் பார்த்திருக்கிறேன். “)

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசினால் புலத்திலிருந்து பணம் வருகிறது என்று பேசுபவர்களால்..விடுதலைப்புலிகளை எதிர்த்து பேசி அவதூறு பரப்பினால் சிங்களம் பணம் தருகிறது என்று நாங்கள் சொன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்றளவும் மக்களால் புலிகளின் தியாகத்தினை நினைக்காமல் இருக்க முடியாததை தீபச்செல்வன் தன் செவ்வியில் பதிகிறார். முள்வேலிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு மரணம் கூட ஆறுதலாக போய் விட்ட நிலையிலும்… பதிவுகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார் தீபன்.

தீபச்செல்வனின் சொற்கள் ஒரு ஓவியமாய் மக்களின் அலைகழிப்பினை பதிவு செய்கின்றன. மிக எளிதாக கடந்து விட முடியாத அளவிற்கு தீபனின் சொற்களில் உண்மை உருவேறி கிடக்கிறது. வலியோடிய வாழ்க்கையில் தப்பித்தவறி குழந்தைகள் முகத்தில் துளிர்க்கிற சிறு புன்னகை கூட தீபச்செல்வனின் வார்த்தைகளில் நமக்கு வலியைத்தான் தருகின்றது. ஒரு காலத்தின் பதிவாய் என்றென்றும் தீபச் செல்வனின் எழுத்துக்கள் அழியாத சாட்சியமாய் இருக்கும். அவை என்றென்றும் உண்மையை உரத்துப் பேசி …வீரம் செறிந்த இளைஞர்கள் மீதான பெருமித இருப்பினை தக்க வைக்கும்.

தீபச் செல்வன் வாழும் வாழ்க்கையும்..உதிர்க்கும் சொற்களும், கடுமையான மிரட்டல்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் மத்தியில் எழுபவை என்பதை நாம் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடுமையான அச்சுறுத்தல்களுக்கு நடுவிலும்..ஒரு படைப்பாளியாக தான் வாழும் காலத்து வாழ்க்கையை…மக்களை..வலிகளை பதிவு செய்வது தன்னுடைய கடமையாக கருதுவது தீபச்செல்வன் மேல் நமக்கிருக்கும் மதிப்பு மேலும் அதிகரிக்கிறது. படைப்பாளி என்ற உடன் இசங்கள் பேசி கசங்களாக திரியும் நம்மூர் ஜிப்பாக்களை பற்றி யாரும் நினைத்து விட வேண்டாம்.

தீபச் செல்வனின் கவிதைகள் அசாதாரணமானவைதான். படைப்புகளின் இலக்கணமாக கொண்டாடப்படவேண்டியவைதான். ஆனால் இப்படி அசாதாரணமானவை உருவாவுவதற்கு ஒரு இனம் அழிய வேண்டியிருக்கிறது என்ற நினைவினையும் தீபச் செல்வன் ஏற்படுத்துவதுதான் நம்மை நிம்மதியிழக்க செய்கிறது. தீபச்செல்வன் துயரோடிய சொற்களோடு உண்மையின் தூதுவனாக வருகிறார். அவரது சொற்கள் நம் கனவுகளிலும் வலி விதைக்கும் துயராய் இருக்கின்றன. இந்த துயரும் ,வலியும் தான் எம் இனத்தின் வரும் காலத்திற்கான மூலதனமாய் இருக்கின்றன. தீபச்செல்வனின் வலிச் சொற்களில் தாயக விடுதலைக்கான கனவு கனன்றுக் கொண்டே இருக்கின்றது . கனன்று கொண்டிருக்கும் தீபனின் சொற்கள் உதிர்க்கும் வெப்பம் விடுதலை உணர்வினை துரோக தூறல்களால் ஈரமடைய செய்யாமல் உலர்வாக வைத்திருக்கின்றன.

தீபச்செல்வன் மீது யாரும் அவதூறுகளை அள்ளி வீச எம்மால் பார்த்திருக்க இயலாது. ஏனெனின் தீபன் ஒற்றை மனிதனல்ல. அவன் சுமக்கும் வார்த்தைகளும்..வலிகளும் தான் நாங்கள் மீள் எழ நினைப்பதற்கான துவக்கப் புள்ளி. அந்த வகையில் அவன் தான் நாங்கள். நாங்கள் தான் அவன்.


மணி.செந்தில்

http://lumpini.in/sevvi_003.html

தமிழ்த் தேசியமும் முஸ்லிம்களும் – விஷமிகள் விவரிக்கும் கற்பித முரண்“சிங்களவன் போட்டக் குண்டில்

50 பேர் பலியானார்கள்.

500 பேர் புலியானார்கள்” ‍- பேரா.ஹாஜா கனி

ஒவ்வொரு தேசிய இனமும் தன் அடையாளங்களையும், தன் பண்பாட்டு விழுமியங்களையும் காப்பாற்ற போராடத் துணிந்திருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசிய சிந்தனை மென்மேலும் தன்னகத்தே செழுமை அடைந்து விரிவடைவதை நாம் காண்கிறோம். நடந்து முடிந்திருக்கும் ஈழப்போரும், அதில் தமிழர்கள் அடைந்த பின்னடைவும் தமிழ்த் தேசிய சிந்தனையினை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறது. ஒரு தேசிய இனம் தனக்கான அடையாளங்களை பாதுகாக்க முனைவதும், தன் மொழியின் அடிப்படை சாரத்தினை அறிவியல் உச்சங்களில் ஏற்றி வாழ வைப்பதற்கான தகவமைப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதும் இயல்பானதே. இந்நிலையில் இனம் குறித்த வரையறைவியலில் தவறான பிரச்சாரங்களைப் போதிப்பதன் மூலம் பெருகி வரும் தமிழ்த் தேசிய ஓர்மையினை மதம், சாதி போன்ற சமூக உள்ளடுக்கு முரண்களை முன்னிறுத்தி முறியடிக்க முயன்றிருக்கும் ஆபத்தானவர்கள் கருத்து நிலையின் துவக்கத்திலேயே வீழ்த்தப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள்.

பூர்வக் குடி மக்களிடையே அயலார் ஊடுருவல் வழியாய் உருவாகும் சாதி, மதம் போன்ற சமூக குழுக்கள் நாளடையில் அந்த மக்களிடையே உருவாகி இருக்கவேண்டிய உரிமை சார்ந்த ஓர்மை உணர்விற்கு மிகப்பெரிய சவாலாய் மாறுகின்றன. இந்த மண்ணில் பூர்வக் குடிமக்களாகிய தமிழர்கள் மீது ஆரியர் உள்ளிட்ட அயலார் படையெடுப்புகள் மூலமாகவே சாதிக்குழுக்கள், மதப்பிரிவுகள் தோன்றின என்பதற்கான அனைத்து சாட்சியங்களும் ஏற்கனவே பல ஆராய்ச்சியாளர்களால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர் மெய்யியல் வரலாற்றில் சாதிக்கு இடமில்லை என்பதும், இந்த பரந்துபட்ட நிலப்பரப்பில் காலத்தால் பழைமை உடையதாகக் கருதப்படும் சமண, பெளத்த மரபுகளுக்கு மூத்தது தமிழர் மெய்யியல் என்பதும் ஆசீவகம் என்றும், தமிழர் அணுவியம் என்றும் அழைக்கப்படும் இந்த சிந்தனை தமிழர்களுக்கான மெய்யியல் அடையாளமாய் இருந்திருக்கிறது என்பதும் புத்துலக சிந்தனையாய், ஆய்வாய் உருவாகி வருகிறது. (ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம் –பேரா.க.நெடுஞ்செழியன், மனிதம் வெளியீடு).

இச்சூழலில் இந்த மண்ணின் பூர்வகுடி தமிழர்களான முஸ்லிம்களை தமிழ்ச் சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் நாசகார வேலையை அ.மார்க்ஸ் போன்ற மூன்றாம் தர பிழைப்பு ஆய்வாளர்கள் செய்யத் துவங்கி உள்ளார்கள். மொழி, இனம், குடும்பம் போன்ற அனைத்துமே கற்பிதம் என உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டு உரத்துப் பேசும் அ.மார்க்ஸ்க்கு மதம் மட்டும் சமீப காலமாக இனிக்கும் காரணியாக மாறிப் போனதன் உண்மை அனைவரும் அறிந்ததே. அ.மார்க்ஸ் போன்றவர்கள் மதத்தினை முன் வைத்து இயங்கி இனத்தினைப் பிரிக்கும் விஷமிகள், மத அடிப்படைவாதிகளை விட அபாயமானவர்கள்.

முஸ்லிம்கள் இந்த மண்ணின் பூர்வீகத் தமிழர்கள் என்பதும் அவர்கள் தமிழ்த் தேசிய தன்னுரிமைப் போராட்டத்தில் தங்களுக்குரிய பங்கினை நிறைவாகவே செய்து வருகின்றனர் என்பதனையும் யாராலும் மறுக்க இயலாது. மதம், சாதி போன்றவை தமிழ் இன வரலாற்றில் இடையில் தோன்றிய முரண்கள் ஆகும். மேலும் இந்து மதம் கடைப்பிடிக்கும் வர்ணாசிரமக் கோட்பாடுகளுக்கு எதிராகவே தமிழர்களின் பூர்வீக மெய்யியல் வரலாறு இருந்திருக்கிறது. எனவே இந்து மதத்தில் நிலவும் சாதீய ஏற்றத்தாழ்வும், இதர சமூகக் காரணிகளுமே தமிழர் முஸ்லிம்களாக‌, கிருத்துவராக மதம் ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதும் உண்மை. எனவே பூர்வீகத் தமிழர்களான முஸ்லிம்களை தமிழ்த் தேசிய ஓர்மைச் சிந்தனைக்கு எதிராக முன்னிறுத்துவதன் அரசியல் இன எதிரிகளிடம் எவ்விதக் கூச்சமுமில்லாமல் நக்கிப் பிழைக்கும் பிழைப்புவாதிகளைச் சார்ந்தது.

தமிழ்த் தேசிய சிந்தனை மரபின் அளவுகோல் முழுக்க முழுக்க சமூக அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. ஆனால் மதங்களின் அளவுகோல் அவ்வாறல்ல. குறிப்பாக இந்து மதத்தின் அளவுகோல் சாதீய ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிய வர்ணாசிரமக் கோட்பாடுகளின்படி அமைந்தது. இந்து மத மேலாண்மையை போதிக்கும், பெரும்பான்மை மதவாத சின்னமான ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை எதிர்த்துத்தான் தமிழ் தேசிய அமைப்புகளின் அரசியல் இருந்து வருகிறது. 1992 டிசம்பர் 6 –ல் பாபர் மசூதித் தகர்ப்பில் ஈடுபட்ட இந்து மத மேலாதிக்கத்தினை ஒற்றைக்குரலாய் எதிர்த்த தமிழர்களின் குரலே இன்றளவும் தமிழ்நாட்டினை மதவாதம் பெருகாத பூமியாய் நிறுத்தி வைத்திருக்கிறது. எனவே தமிழ்த் தேசிய சிந்தனை என்பது மதங்கள் வழி சார்ந்தது அல்ல என்பதும் மதங்களின் மேலாதிக்கத்தினை எதிர்த்து மிகவும் உக்கிரமாக போர் தொடுக்கும் சக்தி என்பதும் இந்த மண்ணில் மதச் சிறுபான்மையான இஸ்லாமியர்களுக்குத் தோழமையான குரல் என்பதனையும் உணர்வு மிக்க தமிழர்களாகிய இஸ்லாமிய உறவுகள் புரிந்தே வைத்துள்ளனர். தமிழர்கள் மதத்தில் இந்துவாக, முஸ்லிம்களாக, கிருத்துவர்களாக இருக்கலாம். ஆனால் இனத்தில் தமிழர்களாக இருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களில் தமிழ் தேசிய சிந்தனையை உள் வாங்கி தன் இனம் உணர்ந்து இனம் காக்கப் போராடும் வீரர்கள் ஏராளம். ஈழப் போரின் கடைசி கட்ட காலத்தின் தமிழினத்தின் அறம் சார்ந்த உணர்வின் உச்சமாய் நின்ற முத்துக்குமாரின் ஈகைக்கு முன்பாகவே, 1995 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தின் மீது போர் தொடுத்தபோது சுரணையற்ற தமிழனை சூடேற்ற அன்றும் ஒரு முத்துக்குமார் இருந்தான். அவன் தான் அருமை தமிழின வீரன் அப்துல் ரவூப். அன்றைய காலக் கட்டத்தில் தமிழினத்தினை அழித்தொழிக்கும் சிங்களர்களின் பிள்ளைகள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அரசால் அழைக்கப்பட்டிருந்தனர். இந்திய அரசின் இந்த இரண்டக துரோகம் தாங்காமல், இனம் காக்க, தன் சொந்த சகோதர சகோதரிகளின் துயரம் பொறுக்காமல்.., தமிழினத்தினை உசுப்ப தன்னைத் தானே எரித்துக் கொண்டு இந்த மண்ணில் விதையாய் விழுந்த தமிழன் அப்துல் ரவூப்பினை அ.மார்க்ஸ் போன்ற ‘சிறுபான்மை உரிமைகளுக்காக எழுதுகிறேன்’ என்ற போலி முகமூடியில் திடீரென்று வானில் இருந்து குதித்து, இனத்தினைப் பிரிக்கும் பிழைப்புவாதிகளுக்குத் தெரியாது.

மாவீரன் அப்துல் ரவூப்பின் தந்தை, அருமை அப்பா அசேன் முகமது இன்றளவும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர். அது மட்டுமல்ல தமிழினத்தின் போராளியாக இருந்து கடும் பொடாச் சட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் சிறைப்பட்ட தமிழ் முழக்கம் சாகுல் அமீது நாம் தமிழர் அமைப்பின் நிர்வாகிகளுள் ஒருவர். நாம் தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூத்தன் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்.

தமிழர்களுக்கு என தரணியில் ஒரு நாடு கட்டி ஆண்ட எம் இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனை சந்திக்கச் சென்ற கவிதை உலகின் போர்க்குரல் இன்குலாப் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழக முதல்வர் கருணாநிதி அளித்த விருதை திருப்பி அனுப்பிய பெரும் தமிழர் இன்குலாப்பினை இவர்களால் சீரணிக்க முடியாது. இன்னும் ஏராளமான, லட்சணக்கணக்கான இஸ்லாமிய தமிழின வீரர்களை எம்மால் அடையாளம் காட்ட இயலும்.

திருத்துறைப்பூண்டி கலை இலக்கிய இரவில் இந்து மதத்தின் போலித் தன்மைகளை எடுத்துக் காட்டி பேசிய செந்தமிழன் சீமான் மீது இந்துத்துவா வெறியர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதும், அந்தக் கலவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஒருவர் கொல்லப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. கோவையில் நடந்த தோழர் மதிமாறனின் புத்தக வெளியீட்டு விழாவில் சீமான், இந்து மத போலித்தன்மைகளை தன் பேச்சால் அடித்து நொறுக்கியபோது பொறுத்துக் கொள்ள முடியாத இந்து மத ஆதரவாளர்கள் மிகப்பெரிய கலவரத்தில் ஈடுபட்டதும், பெரியார் திக தோழர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்து மத வெறியர்களை ஓட ஓட விரட்டியதும் அனைவருக்கும் தெரியும். பெரியாரின் பேரன்களாக தமிழ்த் தேசிய பரப்பில் செயல்பட்டு வரும் லட்சக்கணக்கான தமிழின இளைஞர்கள் சாதி, மத மறுப்பாளர்களாய் களம் கண்டு வருகிறார்கள் என்பதும்… இவர்கள் தான் மதம் கடந்து, சாதி வென்று இனம் காக்க தமிழ்த் தேசியம் வென்றெடுக்கும் நம்பிக்கையாய்த் திகழ்கிறார்கள் என்பதும் அ.மார்க்ஸ் போன்ற நேர்மையற்றவர்களால் பொறுக்க முடியவில்லை. பால் தாக்கரேவினை செந்தமிழன் சீமான் சபை நாகரீகத்திற்காக பெருமகன் என விளித்ததை வைத்து சொல் அரசியல் பேசும் இவர்கள் ராசபக்சேவினை இலங்கையில் எப்படி விளித்தார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு வேளை அ.மார்க்ஸ் உள் மனச்சான்றோடு ராசபக்சேவினை விமர்சித்து பேசி இருந்தால் அவரது இலங்கைப் பயணம் இவ்வளவு இலகுவானதாக இருந்திருக்காது. அங்கு வாய்மூடி மெளனம் சம்மதம் என்று வந்து விட்டு இங்கு பம்மாத்து வேடங்களை காட்டுவது அ.மார்க்ஸின் தற்போதைய பணி. இவரைப்போன்றவர்கள் போராளிகளை அழித்த பிறகான சிங்கள அரசின் தலைவர் ராசபக்சேவின் நடவடிக்கைகள் இன்றளவும் முஸ்லீம் களுக்கு எதிராக இருப்பது குறித்து வாய்மூடி கள்ள மெளனம் காக்கிறார்கள். தமிழனின் அறிவு சார் பெருஞ்சொத்தான யாழ்ப்பாண நூலகம் அழிவிற்கும், எண்ணற்ற இளைஞர்களும், இளம் பெண்களும் விடுதலைப்புலிகளாக கருதப்பட்டு முள்வேலி வதை முகாம்களில் அடைக்கப்படிருப்பதற்கும் , உலக மகா போர்குற்றங்களுக்கும் காரணமான ராசபக்சே பற்றி இவர்கள் பேசுவதில்லை. காஷ்மீருக்கு சென்று மனித உரிமை ஆய்வு செய்யும் இவர்கள் இலங்கைக்கு சென்று விட்டு வந்து சிங்கள பேரினவாதத்தினைப் பற்றி பேசாமல் தன்னின விடுதலைக்காக போரிட்டு வீழ்த்தப்பட்ட விடுதலைப்புலிகளை இன்றளவும் வன்மத்துடன் திட்டி தீர்க்கிறார்கள். காரணம் என்ன வென்றால் விடுதலைப் புலிகள் ஒரு சமூகத்திற்கான, ஒரு இனத்திற்கான விடுதலை வீரர்கள். ஆனால் இவர்களோ… அறிவுஜீவி போர்வையில் புத்தகம் போடவும், கூட்டம் நடத்தவும் தன்னையே விற்று, வார்த்தை அரசியல் பேசும் பிழைப்புவாதிகள்.

ஏற்கனவே தோழர் கார்க்கி அவர்கள் அ.மார்க்ஸ்க்கு எழுப்பிய வினாக்களுக்கு இது வரை பதிலளிக்காமல் கள்ள மெளனம் காத்து… கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் வாந்தி எடுக்கும் அ.மார்க்ஸின் போலி முகமூடி மேன்மேலும் கிழித்தெறியப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சென்னை லயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள AICUF அரங்கில் ஈழத்தினைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசிய அ.மார்க்ஸினை நோக்கி அந்த அரங்கில் இருந்த உணர்வுமிக்க தோழர்கள் சிலர் ஜனநாயக முறையில் வினாக்களை முன் வைத்தனர். வளர்மதி என்ற தோழர் மேடைக்குச் சென்று அ.மார்க்ஸின் பேச்சுக்கெதிரான தனது வினாவினை முன்வைத்தபோது , எவ்வித பதிலும் தெரிவிக்காத அ.மார்க்சும் , அந்த கூட்டத்தினை நடத்தியவர்களும் வளர்மதியை தடுத்து சட்டையைப் பிடித்து இழுத்து மேடையை விட்டு வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளனர். இது தான் அ.மார்க்ஸ் பேணி வரும் கருத்துச் சுதந்திர லட்சணம். சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இழைத்து வரும் கொடுமைகளை முஸ்தீன் என்பவர் கீற்று இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது இச்சமயத்தில் கவனிக்கத்தக்கது. ஈழத் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கெதிரான அவதூறுகளை பரப்பும் அ.மார்க்ஸுற்கு எதிராக அவர் கலந்துக் கொள்ளும் கூட்டங்களில் தமிழின உணர்வாளர்கள் மற்றும் முற்போக்காளர்கள் ஆற்றும் எதிர்வினைகளை முஸ்லீம்களுக்கு எதிரான ஒன்றாக அ.மா மிகவும் விஷமத்தனமாய் கற்பிதம் செய்கிறார். அ.மாவிற்கு எதிராக நிகழும் எதிர்வினைகள் அவரின் சிறுபான்மையின உரிமைகள் சார்ந்த நடவடிக்கைகளுக்கானதில்லை. மாறாக அவர் சிங்கள பேரினவாதத்தின் மறைமுக ஆதரவாளராய் , ஊது குழலாய் மாறி செய்யும் ,பரப்பும் செயல்களுக்கானது.இது போன்ற நடவடிக்கைகள் தான் சென்னை AICUF அரங்கில் நடைப்பெற்றது. ஆனால் அ.மார்க்ஸ் தன்னையும், சிங்கள பேரினவாதத்தினையும் எதிர்த்தால் உடனே அதனை முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளாக மாற்றி மோசடித்தனம் செய்கிறார்.

தமிழர்கள் மீது நிகழ்ந்த பெருங்குற்றங்களைக் கேட்காத அ.மார்க்ஸ் தான் தோழனாக காட்டிக் கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எதிர்த்து கூட ராஜபக்சேவினைத் தாக்கிப் பேசவில்லையே.. ஏன்..? இலங்கையில் முஸ்லிம்களை வாழ்விடங்களை விட்டு அகற்ற முக்கியக் காரணமாக இருந்த கருணா, பிள்ளையான் போன்றவர்களைப் பற்றி வாய் திறக்க மறுக்கும் இந்த அ.மார்க்ஸ், இனப்படுகொலை நடந்த ஒரு நாட்டில்… இதுவரை பத்திரிக்கையாளர்கள் கூட அனுமதிக்கப்படாத ஒரு பூமியில்.. எல்லாவித சுதந்திரத்தோடு வலம் வருகிறார் என்றால்.. யாருடன் கூட்டு… எந்த குரலுக்காக இந்த ஒத்து ஊதும் பாட்டு என்று தெரியாமலா இருக்கிறது..?

நாம் தமிழர் போன்ற தமிழ்த் தேசிய அமைப்புகள் அ.மார்க்ஸினை மிரட்டுவதாக அவரே கதை கட்டிக் கொண்டு .. இனம் சார்ந்த பிரச்சனையை மதம் சார்ந்ததாக ஆக்கும் அ.மார்க்ஸின் அரசியல் அருவருப்பானது. சிங்களப் பேரினவாதத்தினை தமிழ்த் தேசிய அமைப்புகள் எதிர்த்துப் பேசினால் அ.மார்க்சுக்குப் பொறுக்காது. உடனே தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக முஸ்லிம்களைத் திருப்பி விடும் விஷமத்தினை அவர் செய்யத் துவங்குவார். தமிழர்கள் எதன் பொருட்டும் ஒன்றாகக் கூடாது.. மதம், சாதி என அவர்கள் வேறுபட்டு நிற்கவேண்டும் என்ற சிங்களப் பேரினவாதத்தின் ஆசையின் வடிவமாய் அ.மார்க்ஸ் காட்சியளிக்கிறார். எனவே தமிழ்த் தேசிய சிந்தனை மரபிற்கு முரணான சமூகமாய் இஸ்லாமியர்களை முன் நிறுத்தும் அ.மார்க்ஸ் போன்றவர்களின் போக்கு கற்பிதமாகப் புனையப்பட்டவை ஆகும். இயல்பான தமிழ்த் தேசிய தன்னுரிமைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத சக்திகளாய் தமிழ் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.

நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்புக்கள் இந்த மண்ணின் பூர்வக்குடித் தமிழர்களான முஸ்லிம்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து இந்து மத மேலாதிக்கத்தினை விரட்டும் படையாக செயல்படும். இந்த மண்ணின் பூர்வ குடித் தமிழர்களான முஸ்லிம் பெருமக்கள் இது போன்ற சதிகளை முறியடித்து மத மேலாதிக்கத்தினைத் தகர்க்கும் பணியினை இனத் தன்னுரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்து வரும் தமிழ்த் தேசிய சிந்தனை மரபினை வலிமைப்படுத்த வேண்டும் என்பதில்தான் எதிர்கால தமிழ் இனத்தின் மேன்மையும், பெருமையும் அடங்கியிருக்கிறது.

நன்றி : www.keetru.com

பாக்யராசன் என்ற இனத்தின் நம்பிக்கை…

குடி செய்வல் என்னும் ஒருவருக்கு தெய்வம்

மடிதற்று தான் முந்துறும் -குறள்

என் உயிர் நண்பரும் உலக தமிழர் பேரமைப்பின் இணைச் செயலாளருமான பாக்யராசன் சேதுராமலிங்கம் அவர்களை முதன்முதலில் நான் ஆர்குட் உலகில் ஒரு தமிழுணர்வாளராக அடையாளம் கண்டேன். அன்று முதல் அவர் அப்படியே இருக்கிறார். தன் சொந்த இனம் தன் கண்முன்னால் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்ட போது துயருற்ற விழிகளை துடைத்துக் கொண்டு இனி என்ன செய்யலாம் ..எப்படி மீள் எழலாம் என உளமார யோசித்த சிலரில் இவர் மிக முக்கியமானவர். கணினி திரைக்கு முன்னால் அமர்ந்து கொள்கை ,கோட்பாடுகளை முழங்கி விட்டு தனிப்பட்ட தன் வாழ்வில் தடுக்கி விழுந்து கிடப்போர்தான் இந்த இணைய உலகில் அதிகம். ஆனால் பாக்யராசன் கணினி திரையில் தன் எழுத்தாக பதிப்பதை தன் வாழ்க்கையாக களம் அமைத்து போராடி வருபவர். தன் இனத்தின் மேன்மைக்காக சமரசம் இல்லாமல் களமாடும் போராளியாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார் பாக்யா. அமெரிக்காவில் கணினி பணி, கை நிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என கனவு கண்டு விமானம் ஏறி பறக்கும் இவ்வுலகில் இனம் வீழ்ந்த துயரம் பொறுக்காமல் வீறு கொண்டெழுந்து அல்லும் பகலும் தன் இன எழுச்சிக்காக களமாடி வருகிறார் பாக்யா.கடல் கடந்து வாழ்ந்தாலும் இனம் நினைந்து துடிக்கும் கணினித் தமிழர்களில் பாக்யராசன் ஒரு ஆளுமை. இணைய உலகில் எங்கெல்லாம் தமிழினம் கருத்தால் தாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நாம் பாக்யாவினை வீறு கொண்ட ஒரு வீரனாய் நாம் சந்திக்கலாம். துயருற்ற இந்த இனத்தினை எவ்வாறு இடறலாம் என குறுக்குப்புத்தி கொண்டு குதர்க்கம் பேசுவோரை கண்டு வெகுண்டெழுந்து பாய்ந்து வரும் தன் கருத்தால் கதற அடிக்கும் பாக்யராசனின் நண்பனாக, ரசிகனாக , பின்பற்றும் உறவாக வாழ்வதில் உண்மையில் நான் பெருமைப் படுகிறேன். இன்னும் பாக்யாவினைப் பற்றி விரிவாக எழுதலாம். ஆனால் அவருடைய பணி என் எழுத்துக்களை தாண்டிய பரப்பினை உடையது. விவரிக்க இயலா பரப்பினை உடைய பாக்யராசன் தொடர்ந்த தன் பணிகளால் துவண்டு கிடக்கும் தமிழினத்தினை தோள் கொடுத்து நிமிர்ந்த முயன்று வருகிறார். பாக்யராசனின் குடும்பமே இன நலம் காக்க, தன் நலம் மறந்து போராடி வருகிறது. இன்னும் இந்த இனம் இத்துப் போகவில்லை என பசுமையாய் அடையாளம் காட்ட பாக்யராசன் விரீய விருட்சமாய் விரிந்து வருகிறார். என்னைப் பொறுத்தவரை பாக்யா போன்றோர்தான் இந்த இனத்தின் நசுங்காத நம்பிக்கை. சுயநலம் மிகுந்த இந்த வாழ்வில் இனநலம் காக்க வெள்ளை உள்ளத்தோடு களம் காணும் பாக்யராசன் தமிழ் திரை உலகின் தற்போதைய இன துரோக பாதையை தடுத்து நிறுத்த முயன்று வருகிறார். குமுதம் ரிப்போட்டரின் பதிவு இதோ…. ப்.எம்.எஸ். என்கிற வெளிநாட்டு விநியோக உரிமையில் கிடைக்கும் வியாபாரத்தைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் இலங்கை செல்வதால் எழுந்துள்ள பிரச்னையால் உலகத் தமிழ் அமைப்புகளின் தடை,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் (IIFA) விழாவுக்கு தமிழ் அமைப்புகளுக்கும்,தமிழ்த் திரைப்படத்துறையினரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், நடிகைகள் நமீதா,ஜெனிலியா உள்ளிட்டோர் அந்த விழாவைப் புறக்கணித்தனர். இந்நிலையில், நடிகை அசின் சல்மான் கானுடன் ‘ரெடி’ இந்திப் படத்திற்காக கொழும்பு சென்றார். இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகளை யாரும் தடுக்கக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது.நடிகர் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இலங்கை சென்ற அசின் மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு எதிரான நட வடிக்கையில் இறங்கியுள்ளன.

நார்வே ஈழத்தமிழர் அவையின் ஊடகத்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் பேசினோம்.

‘‘திரையுலகினர் தனிப்பட்ட முறையிலோ, தொழில் முறையிலோ மற்றும் வர்த்தக ரீதியாகவோ இலங்கைக்குச் செல்வதை யாரும் தடுக்க முடியாது என்ற நடிகர் சங்கத்தின் தீர்மானத்தால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வேதனை அடைந்துள்ளோம்.இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்காகவும் தமிழினப்படுகொலை செய்ததற்காகவும் தண்டனை யைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் உலகெல்லாம் தமிழர்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்த நேரத்தில், இலங்கை அரசுக்கு நற்பெயர் பெற்றுத் தரும் முயற்சியில் யார் இறங்கினாலும் தமிழர்களின் பெரும் கோபத்திற்கு ஆளாவார்கள் என்று பணிவுடன் நினைவூட்டுகிறோம்.

மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு என்ற பெயரில் ஏற்கெனவே இந்திய அரசு உள்பட பல நாட்டு அரசுகளிடம் இலங்கை அரசு பெருமதிப்பிலான பணம் பெற்று வருகிறது. இழந்துவிட்ட நற்பெயரை மீட்பதற்காகவும், சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காகவும் இந்தியத் திரைப்படத்துறையினரை வஞ்சகமாக தன் வலையில் வீழ்த்த இலங்கை திட்டமிட்டு செயல்படுகிறது. இலங்கை அரசின் சதி முயற்சிக்கு தமிழ்த் திரையுலகம் ஒருபோதும் துணை நின்றுவிடக் கூடாது.அதே நேரத்தில்,தமிழர்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களைப் புறக்கணிக்க தமிழர்கள் ஒரு போதும் தயங்கமாட்டார்கள் என்பதையும் நினை வூட்டுகிறோம்.

உலகத் தமிழர்களின் முயற்சிக்குத் துணை நிற்காவிட்டாலும் எதிராகச் செயல்பட வேண்டாம் என்று தமிழ்த் திரையுலகினரை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார், தமிழ்ச்செல்வன்.

மலேசியாவின் பினாங்கு அமைப்பின் தலைவர் சதீஸ் முனியாண்டி, தமிழ்த் திரைப்படங்களை மலேசி யாவில் விநியோகிக்கும் பிரமீட் சாய்மீரா குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியவற்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் உலகத் தமிழர் அமைப்பு ((WTO),அமெரிக்கத் தமிழர் அரசியலவை (USTPAC),வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (FetNa) உள்ளிட்ட தமிழ் அமைப்புகளும் தமிழ்த் திரைத்துறையினருக்கு எதிராக அவசர தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.சில தமிழ் அமைப்புகள் தமிழ்நாட்டிலிருந்து படங்களைத் தவிர்க்க தாங்களே தமிழ்ப்படங்களைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளன.இதுகுறித்த அறிவிப்பை மிக ரகசியமாக வைத்திருக்கும் இவர்கள், படத் தயாரிப்புக்கான ஆரம்ப கட்ட வேலைகளில் இறங்கியுள்ளனர்.

உலகத் தமிழர்அமைப்பு இணைச் செயலாளர் பாக்கியராஜன் சேதுராமலிங்கம் நம்மிடம், ‘‘‘அரபு அல்லாத பழங்குடி கறுப்பின மக்களை படுகொலை செய்த குற்றத்திற்காக சூடான் நாட்டின் அதிபரான ஓமர் அல் பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவித் திருக்கிறது. இந் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் தங்கள் நாட்டுக்கு அல் பஷீர் வந்தால் அவரைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாம் என்றும், ஜூலை 12-ம் தேதி நெத்தியடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.அதேபோல் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்தான் ராஜபக்ஷே. அவருக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத்துறையினர் செயல் பட்டால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்’’ என்று கொதித்தார்.

உலகத் தமிழர்களின் புறக்கணிப்பால் தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்மையிலேயே பாதிப்பு வருமா என்று,திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘பெரிய நடிகர்கள், பெரிய பேனர்கள் படங்களின் வெளிநாட்டு (FMS -ஃபாரின்மலேசியா-சிங்கப்பூர்)உரிமத்தையும்நம்பித்தான் நாங்களிருக்கிறோம். ஆரம்பத்தில் மலேசியா,சிங்கப்பூரில் மட்டுமே தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டு வந்தன.இப்போது,உலகம் முழுவதும் தமிழர்கள் பரவியுள்ளதால் அங்கெல்லாம் தமிழ்ப்படங்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. கனடா, நார்வே, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒவ்வொரு படத்திலும் 10 முதல் 20 பிரிண்ட்கள் வரை விற்பனை ஆகிறது. ஒரு பிரிண்ட் குறைந்தபட்சம் 20 முதல் 25 லட்ச ரூபாய் வரை விற்கப்படும். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நட்சத்தி ரங்களின் படங்கள் ரிலீஸுக்கு முன்பே வியாபாரமாகிவிடும்.மற்ற படங்களின் வெற்றியைப் பொறுத்து விலை ஏறும் அல்லது இறங்கும்.எனவே, எப்.எம்.எஸ்.உரிமையை நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம்’’ என்றனர். என் நண்பன் பாக்யராசனின் மின்னஞ்சல் முகவரி [email protected]. அவரை வாழ்த்துங்கள். இனம் மீட்க துடியுங்கள்.

Powered by WordPress & Theme by Anders Norén