அவரை முதன் முதலில் நான் பார்த்தப் போது யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். நண்பர் ஒருவர் என்னை அவரிடத்தில் அறிமுகம் செய்து வைத்த போது கள்ளம் கபடமற்ற சிரிப்போடு என்னை கனிவாக பார்த்தார். சட்டை அணியாமல் சால்வை மட்டுமே அணிந்திருந்ததை  ஒரு சந்தேகமாக கேட்டேன்.ஆடு மாடு ,செடி ,கொடி எல்லாம் சட்டை போட்டுக் கொண்டா திரியுது ..?,மனுசப்பய தான் சொகுசா வாழ கத்துக்கிட்டான். தான் சொகுசா வாழ பூமியை அழிச்சி தின்னுக்கிட்டு இருக்கான் என சிரித்தார். அவர் எளிமையாக சொன்னாலும் என்னுள் வலிமையாக விதைத்தார்.அவர்தான் இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார். (விஞ்ஞானி என்று அழைக்கப்பட்டதை அவர் வெறுத்தார். என்னய்யா பெரிய விஞ்ஞானி..இருக்குறத கண்டுபிடிக்கிறதுல என்னய்யா விஞ்ஞானம்,வெங்காயம் இருக்கு…? மேலும் விஞ்ஞானி என்கிற பேர்ல பல வியாவாரி(வியாபாரி) இருக்கான்.நமக்கு எதுக்குய்யா விஞ்ஞானி, அஞ்ஞானி எல்லாம்..மனுசனா இருப்போம்யா..)
உண்மையில் அவர் ஒரு நேர்மையான விவசாயி. தன் மண்ணிற்கும்,மக்களுக்கும் மிக நேர்மையாக வாழ்ந்தார். எவ்வித பூச்சும், அலங்காரமும் அற்ற வாழ்க்கையை வாழ்ந்த அவர்..விவசாயத்தையும் செயற்கை ஒப்பனை அற்ற..இரசாயான மருந்துகள்,உரங்கள்  அற்ற மாபெரும் கலையாக நிகழ்த்தினார். பசுமைப்புரட்சி என்கிற பெயரில் எம்.எஸ் .சுவாமிநாதன் போன்றோர்  செயற்கையாக தயாரிக்கப்பட்ட இரசாயான உரங்கள் மூலம் இம்மண்ணை மலடாக்க வரிந்துக் கட்டி வேலைப் பார்த்த காலத்தில் தான் ..இம்மண்ணை தாயாக நேசித்த நம்மாழ்வார் தோன்றினார். பாரம்பரியமாக விவசாயத்தை தொழிலாக அல்லாமல் தன் வாழ்வின் ஒரு அங்கமாகவே பாவித்து வந்த தமிழன்..அறிவியலால்..வந்தேறி புகுந்த அயல் சிந்தனை தாக்கத்தினால் தன்னுடைய பூர்விக மரபை இழந்தான். பல வகைப்பட்ட தானிய விதைகளால்,,,நெல் வகைகளால் நிறைந்துக்கிடந்த தமிழனின் வாழ்க்கை உலகமயமாக்கப்பட்ட இந்திய பெரு முதலாளிகளின் கோரப்பசிக்கு இரையானது வேதனை வரலாறு. மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டி போரடித்தவன்…இன்று அதே யானையை பிச்சை எடுக்க வைத்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். இக்காலக்கட்டத்தில் தான் பாரம்பரிய அறிவினை மீட்போம் என்ற முழக்கத்தோடு அய்யா. நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை போதிக்கத்துவங்கினார்.
பசுமைப்புரட்சி,விவசாய மறுமலர்ச்சி என்ற பெயரில் இம்மண்ணின் உயிர்த்தன்மையை கொன்றழிக்கும் வேலையை பல ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் தொடர்ச்சியாக இந்திய வல்லாதிக்கம் செய்து வருவதை அய்யா.நம்மாழ்வார் கடுமையாக எதிர்த்தார். தனது இறுதி காலத்தில் கூட தஞ்சை டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்க மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்களை அவர் முன்னெடுத்து வந்தார். வருகிற சனவரி 2014  மாதத்தில் 25 ஆம் நாளன்று மன்னார்குடியில் ஒரு லட்சம் தமிழர்களை திரட்டி மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திட அவர் முனைப்பாக இருந்தார். அதற்கென ஊருக்கு ஊர் பயணம் செய்து  விவசாயிகளை சந்தித்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தின் கேடுகளை விளக்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.
நம்மாழ்வார்  இயற்கை வேளாண் அறிஞர் மட்டுமல்ல. பழந்தமிழர் உணவு முறைகளை அறிந்த மாபெரும் அறிஞர். நீர் பாசன அறிவியல் அறிந்தவர். மரபு வழி உடற்பயிற்சி அறிந்தவர். மிகப்பெரிய கதைச்சொல்லி. எள்ளலும், கிண்டலுமாய்,பாமர மொழியில் மாபெரும் கருத்துக்களை தெளிவாக உரைக்கும் வல்லமை உடைய மாபெரும் பேச்சாளர் , தொடர்ச்சியாக பல்வேறு இதழ்களில் இயற்கை வேளாண்மை பற்றியும், இயற்கை உணவு குறித்தும் மிக நுட்பமான தகவல்களோடு தரமான கட்டுரைகள் எழுதிய எழுத்தாளர் என பல்வேறு தளங்களில் செயல்பட்ட அவரது ஆளுமை தமிழ் அறிவுலகில் மகத்தானது. மணப்பாறை அருகே வானகம் என்ற பெயரில் மாபெரும் தோட்டம் அமைத்து இயற்கை வேளாண் வகுப்புகள், வாழ்வியல் முறைகள், போன்ற பல தளங்களில் முகாம்கள் நடத்தி எண்ணற்ற தமிழருக்கு அறிவூட்டிய நமது பெருமை மிக்க முன்னோன் நம்மாழ்வார் அவர்கள்.
பேரழிவிற்கு எதிரான இயக்கம் என்ற மக்கள் இயக்கத்தை கட்டி அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் இச்சமூகத்திற்கு எதிராக நடக்கும் சுரண்டல்,கொள்ளை உள்ளீட்ட அனைத்திற்கும் எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வந்த போராளி.
நமக்காக வாழ்ந்தார். பூவுலகை நேசித்தார். இயற்கையை வாசித்தார். வாசித்ததை வஞ்சகம் இல்லாமல் ..கணக்கு பார்க்காமல் கற்பித்தார்.
அவருடைய இழப்பு  ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனத்திற்கான இழப்பு.
இயற்கை வேளாண் பெருங்குடியோன் அய்யா.நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம்.
-மணி செந்தில்.