பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூன் 2019

பேரறிவாளனின் வீடு. ——————————-

யாருமே
அழைக்காமல்
அந்தப் பொல்லாத
இரவும்
துயர் காற்றின்
விரல் பிடித்து
அந்த வீட்டுக்குள்
நுழைந்தது.

அதுவரை
நிலா முற்றங்களில்
அன்பின் கதகதப்போடு
அந்த ஐவரும்
உறங்கிய இரவுகள்
முடிவுக்கு வந்தன.

அந்த வீட்டின்
ஒற்றை புன்னகையை
எங்கிருந்தோ வந்த
இருட்டின் கரங்கள்
இழுத்துச் சென்றன.

யார் யாரோ வந்தார்கள்.
ஏதேதோ சொன்னார்கள்.
காரணக் கதைகள்
ஆயிரம் சொன்னாலும்
மறைந்துபோன
புன்னகையை
அந்த வீட்டினில்
மலர வைக்க
யாராலும் முடியவில்லை.

அலைந்தலைந்து
பாதங்கள் சோர்ந்தன.
அழுது அழுது
கண்ணீரின் தடம்
கலையாமல்
கன்னங்கள்
தழும்புகள் ஆகின.

வாசல் பார்த்த விழிகள்
நிலைக்குத்தின.
அசையா அந்த
விழிகளின் நடுவே
ஒரு தலைமுறை
கடந்த துயரம்
உறைந்து கிடக்கிறது.

வீட்டிற்கு கதவுகள்
இருந்தன.
கொடும் மழை காற்றிலும்
அவை சாத்தப் படவே இல்லை.
மூடப்படாத கதவுகளுக்கு
வலது பக்க ஓரத்தில்
என்றும் வாடாத
செம்பருத்திப் பூ சூடிய
ஒரு அழைப்பு மணி இருந்தது.

அதைத் தாயன்பு என்றார்கள்.

அந்த வீட்டிற்கு
ஜன்னல்களும்
இருந்தன.
சாத்தப்படாத ஜன்னல்கள்
பெருமூச்சு இரவுகளில்
உயிர்க்காற்றின்
அலைச்சலால்
அடித்துக் கொண்டே
இருக்கின்றன.

எனவே அதை
காற்றின் வீடு
என்றார்கள்.

அந்த வீட்டையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்த
பித்தன் ஒருவன்
உக்கிரமாகி சொன்னான்..

அது காற்றின் வீடு
அல்ல..
காத்திருப்பின் கூடு
என.

அந்தப் பொல்லாத
இரவு
அதன்பிறகு
இன்னும்
விடியவே இல்லை.

மணி செந்தில்.

சிரித்து விட்டுப் போவோம்

ஆதித்தமிழர் தமிழ் இன உணர்வோடு தமிழ்த்தேசியப் பாதையில் திரளத் தொடங்குவதை மறுத்து..எதிர்த்து..இறுதிவரை அவர்களை ‘தலித் தாகவே வைத்து’ பராமரிக்க விரும்புவது …ஆதிக்கச் சாதி உணர்வாளர்கள் கொண்டிருக்கும் அதே ஆதிக்குடிகளை தனிமைப்படுத்தும் உளவியல் தான்..

இந்த நுட்பமான விசித்திர ஒற்றுமைதான் சாதிகளை காப்பாற்றும் முக்கிய கருவி.

சுய சாதியை மறுத்து.. தமிழர் என்ற இன அடையாளத்தில் திரளும் சாதி மறுப்பாளர்களையும்… சாதிதான் தமிழர் இன ஓர்மைக்கு எதிரான முக்கிய காரணி என தன் சுய சாதி பெருமிதத்தை அழித்து தமிழர் என்று இரண்டு இளைஞர்களையும்…

எதிரான சக்திகளாக காட்ட முனைவது..

ஆதிக்கசாதி உணர்வாளர்களுக்கு ஆதரவான செயல் மட்டுமல்ல… நேரடியாக இந்துத்துவ உணர்ச்சியை ஊக்குவிக்கிற செயலும் கூட.

வெளிப்படையாகப் பேசுவோம்.

நம் சமூகத்தில் சாதி நிலைகளை காப்பாற்றுவதில் முதன்மையாக திகழ்வது எது..?

கடந்த 50 ஆண்டு கால திராவிட அரசியலே சாதி நிலைகளை காப்பாற்றும் மகத்தான அரசியல் தத்துவமாக திகழ்கிறது. பார்ப்பனர்களுக்கு எதிரான பார்ப்பனரல்லாதோரின் அரசியல் கருத்தாக்கமான திராவிடத்தின் அரசியல் பார்ப்பனர் அல்லாதோரான தமிழர்களின் இடைநிலை சாதிக்க்குழுக்களை வளர்த்தெடுப்பதில் மிகுந்த கவனம் காட்டியதை வரலாற்றின் ஏடுகளில் நாம் பார்க்கலாம்.

ஒருபக்கம் பார்ப்பனரை சுட்டிக் காட்டிக் கொண்டு.. மறுபக்கம் தமிழரை சாதியாக பிரித்து வைத்துக்கொண்டு.. தான் பிழைப்பதற்கான நுட்பமான வேலையை திராவிடம் செய்து வருகிறது.

எல்லாத் திராவிட கட்சிகளும் சாதியை பார்த்தே நகர ,ஒன்றிய ,மாவட்ட ,மாநில பொறுப்புகளை வழங்குகின்றன. சாதியை பார்த்தே வேட்பாளர் தேர்வு நடைபெறுகிறது. சாதியை பார்த்தே உள்ளாட்சி மன்ற பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன.

இந்த சாதிக்கட்டமைப்புகளை எள்ளளவும் மீறிவிடக் கூடாது என்பதில் திராவிட அரசியல் கட்சிகள் மிகுந்த கவனம் கொண்டிருக்கின்றன. ஏனெனில் சாதி கட்டமைப்புகளை மீறினால் வெகுஜன அரசியல் வாக்கு தங்களுக்கு கிடைக்காது என்ற எண்ணத்தினால் சாதியை பாதுகாக்கின்ற மகத்தான அரணாக திராவிடம் திகழ்கிறது.

வட மாவட்டங்களில் பறையரும் வன்னியரும் இணைந்து மண்ணின் மைந்தர்கள் என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிட கட்சிகளை எதிர்த்து தேர்தலை சந்தித்தால்.. திராவிடக் கட்சிகள் அடையாளமின்றி அழியும்.
இதே நிலைதான் தென் மாவட்டங்களில் தேவேந்திரரும் தேவரும்.

எனவேதான் தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை சாதிகளுக்கிடையிலான முரண்களை தன் அரசியல் அதிகாரம் மூலமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடம் தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

தேவர் சிலைக்கு மாலை போடுகிற, அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிற திமுக அண்ணா திமுக என்கின்ற கட்சிகளுக்கு தேவரும், அம்பேத்கரும் ஒரு பொருட்டே அல்ல.
அந்த சிலைகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய வாக்குகள் மட்டுமே அவர்களது தேவை. இந்நிலையில் இரண்டு குழுக்களும் அடித்துக் கொண்டால் தான்.. அந்த முரண்பாட்டை முன்னிறுத்தி தாங்கள் வாக்குப் பெற முடியும் என்கின்ற தெளிவு திராவிட கட்சிகளுக்கு என்றும் உண்டு.

இவ்வாறெல்லாம் சாதியை காப்பாற்றுகிற.. பல காரணிகளை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு..
தமிழர் என்கின்ற தேசிய அடையாளத்தின் மீது பாய்ந்து பிராண்டுவது எதன் பொருட்டும் நியாயமல்ல.

ராஜராஜ சோழன் நல்லவனாக இருந்தால் என்ன கெட்டவனாக இருந்தால் என்ன… வரலாற்றின் வீதியில் பின்சென்று அந்தப் பக்கங்களை மாற்ற நமக்கு வலிமை இருக்கின்றதா என்ன…

ராஜராஜ சோழனைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் கட்டும் போது அதற்கு இடம் தந்த இஸ்லாமிய தமிழனைப் பற்றி வரலாற்றில் பதிவு இருக்கிறது. ராஜராஜனைப் பற்றி பெருமிதமாகவும், குற்றம் சாட்டவும் சரிசமமான ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இருதரப்பிலும் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் மறைந்துபோன தமிழரின் அடையாளமான ஒரு மாபெரும் மன்னனை இழிவு படுத்துவது என்பது தாழ்த்தப்பட்டு இருக்கிற மக்களின் விடுதலைக்கு எவ்வாறு உதவும் என்று தெரியவில்லை.

ஒரு மன்னனை எடைபோட வேண்டும் என்றால்.. அவன் வாழ்ந்து இருக்கின்ற காலகட்டம்.. அவன் கொண்டிருந்த வாய்ப்பு.. அவன் பெற்றிருந்த நம்பிக்கைகள்.. அவன் அடைந்த வெற்றி, புகழ்..அவன் மீதான விமர்சனங்கள் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டிய செயல். ஆனால் அதற்கெல்லாம் தற்போது என்ன தேவை இருக்கிறது என்பது இதையெல்லாம் கடந்த ஒரு கேள்வி.

குடிசை கொளுத்துபவர்களும், அரசியல் அதிகாரத்தால் நிலத்தை பிடுங்கிக் கொண்டவர்களும், சாதி பார்த்து அரசியல் செய்பவர்களும் உங்கள் கண் முன்னால் தான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க நாசுக்காக தவிர்த்துவிட்டு..ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்றெல்லாம் நோண்டிக் கொண்டிருப்பது.. என்ன சொல்ல..??

ஆதி தமிழர்களின் நிலங்களை ஏற்கனவே பிடிங்கி இன்னுமும் பிடுங்கிக் கொண்டிருக்கிற திராவிட/தேசிய அரசியல்வாதிகளை சட்டையைப் பிடித்து உலுக்கி எடுத்து பஞ்சமி நிலங்களை மீட்டால்.. அது உண்மையான புரட்சி. செத்துப்போன ஒரு மன்னனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது என்பது காலத்தைக் கடத்துகின்ற..தன் மீது வெளிச்சம் பாய்ச்சிக் கொள்கிற ஒரு சாதாரண தந்திரம் அவ்வளவே..

தமிழரின் ஒற்றை அடையாளமாக தஞ்சைப் பெருவுடையார் கோவில் திகழ்கிறது. இந்த உணர்ச்சி சாதி நிலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இன உணர்வு சார்ந்த மரபணு சார்ந்த பெருமித உணர்ச்சி… அதனால் தான் ஆளுக்கு ஆள் ராஜராஜ சோழன் தன்னுடைய சாதி எனக் கொண்டாடிக் கொள்ள போட்டி போடுகிறார்கள்.

ஆனால் தமிழ்த் தேசிய இன வரலாற்றில் நம் இனத்தின் பெருமைக்குரிய அடையாளங்களாக திகழ்கிற பல முன்னோர்களையும் நாம் அவர்கள் செய்த சமூக அறம் சார்ந்த செயல்களுக்காக நினைவு கூறுகிறோம். அந்த முன்னோர்கள் எந்த சாதியாக இருந்தாலும் சரி. அவர்கள் காலத்தில் அவர்களுக்குள் எப்படிப்பட்ட முரண் பட்டவர்களாக இருந்தாலும் சரி.. நாம் இருவரையும் சமமாக மதித்து வணங்குகிறோம்.

அவரவர்களுக்கு சொல்லக்கூடிய ஒரு நீதியும் ,ஒரு கதையும், ஒரு நியாயமும் எல்லோருக்கும் ,எல்லா இடத்திலும் உண்டு. அந்தக் கதையை வைத்துக்கொண்டு வரலாற்றின் வீதிகளில் பின் சென்று நியாயம் தீர்ப்பது நமது வேலையல்ல.

நமக்கு இரண்டு தாத்தாக்கள் இருந்தார்கள். இருவரும் அடித்துக் கொண்டார்கள். தற்போது இருவரும் இறந்து விட்டார்கள். சரி.. இருவரையும் வணங்கி விட்டுப் போவோமே…. என்பதான மனநிலை அது. அதைத்தாண்டி அவர்களுக்குள் இருக்கும் முரண்களில் நியாயம் பார்த்து தீர்ப்பு சொல்வது நமது வேலையல்ல.

நமது தாத்தாக்கள் காலத்து பகையையும் இப்போது கொண்டு வந்து அடித்துக் கொள்வதும், கொலை செய்து கொள்வதும் இருப்பதிலேயே ஆகப்பெரும் முட்டாள்தனமான மூடத்தனம்.

இதுவெல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும். சாதி மறுத்து வருகிற இளைஞர்களை ஒதுக்கி வைத்துவிட்டு.. சாதிக்கு எதிராக உயரும் கரங்களை மறுத்துவிட்டு..
நான் ஜாதியற்றவன். நான் தமிழன் என்கின்ற முழக்கங்களை மூர்க்கமாக எதிர்த்துவிட்டு…

தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விடுதலையை பேசுவது என்பது… அந்தந்த காலகட்டத்தில் நடக்கின்ற சாதாரண மேடை கூத்து.

உண்மையில் யார் சாதிக்கு எதிரானவர்கள்..

சுய சாதியை விட்டு வெளியேறி இன்னொரு சாதியில் திருமணம் செய்தவர்கள்.. தன் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆதி தமிழர் வீட்டில் மணம் முடித்தவர்கள்.. தான் பெற்றெடுத்த பிள்ளைகளும் சாதிமறுப்புத் திருமணமே செய்வார்கள் என்று உறுதி ஏற்று வாழ்பவர்கள்..
இதனால் அவரவர் பிறந்த சாதியில் ஏற்படும் கலகத்திற்கும் முகம் கொடுத்து.. அந்தக் கலகமே தான் கொண்டு இருக்கின்ற சாதி எதிர்ப்பு உளவியலுக்கு கிடைக்க விருதாக கருதி வாழ்பவர்கள்தான் சாதிக்கு எதிரானவர்கள்.

ஏதேனும் ஒரு சாதியின் பக்கம் நின்று கொண்டு இன்னொரு சாதியை பற்றி பேசிக் கொண்டிருப்பதும் ‌.. சுயசாதி பெருமிதத்தில் .. தன் வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் சாதி உணர்ச்சிகளால் நிரப்பி வைத்துக் கொள்வதும் சாதிய உணர்ச்சிகளை வளர்க்கவே செய்யும்.

மற்றபடி.. ராஜராஜன் ராஜேந்திரன் என்றெல்லாம் பேசி இகழ்வது திட்டுவது.. இது போன்றவை அந்தந்தக் காலத்திற்கேற்ற ஆகச் சிறந்த பொழுதுபோக்கு.

சிரித்து விட்டுப் போவோம்.

மணி செந்தில்.

இதற்கு யாரும் வர மாட்டார்கள்..

————————-+————————

தமிழக அரசியல் கட்சிகளில் வேறு எதுவும் நினைத்துக்கூட பார்க்க இயலாத மாபெரும் புரட்சிகர காரியம் ஒன்றை நாம் தமிழர் கட்சியின் இளையப் போராளிகள் நிகழ்த்தி வருகிறார்கள்.

உலகத்திலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் 85% நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு விட்டது. 2020க்குள் நிலத்தடி நீர் முற்றும் அழிகிற நிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது.

இந்நிலையில் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நமக்குள்ள ஒரே ஒரு வழி இயற்கையாக அமைந்திருக்கும் நீர்நிலைகளை பராமரித்து வருகிற மழைக்காலத்தில் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிற நீர்நிலைகளில் நீரை சேகரித்து நமது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்வது தான்.

எனவேதான் இந்த மாபெரும் அபாயத்திலிருந்து இந்த மண்ணை காத்திட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த தம்பி தங்கைகள் இன்று வேளச்சேரி ஏரியினை சுத்தம் செய்கிற மாபெரும் புரட்சிகரப் பணியில் இறங்கி இருக்கிறார்கள்.

இதை எந்த ஊடகமும் காட்டப் போவதில்லை ‌.எந்த முற்போக்கு சிந்தனையாளர் வெங்காயமும் பாராட்ட போவதில்லை.

அரசியல் என்றாலே மக்களிடம் ஓட்டு கேட்டு ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற விவகாரம் மட்டுமல்ல. மாறாக இந்த நிலத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து இம் மண்ணை காத்திட மக்களைக் காத்திட தமிழகத்தின் இன உணர்வு மிக்க இளையோர் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதே புரட்சிகர நடவடிக்கை தான்.

இதில் எந்த திராவிட கட்சியாவது எங்களோடு போட்டி போடுங்களேன்.

சமூகநீதி பல்லாங்குழி விளையாடி, தலைவர்களையும் தத்துவங்களையும் மண்ணாக்கி.. இந்த இனத்தையும் நிலத்தையும் நாசமாக்கிய திராவிடக் கட்சிகளே… இந்தியத்தின் பெயரால் தமிழகத்தை சுரண்டிக் கொழுக்கிற தேசிய கட்சிகளே.. சாதி பெருமிதத்தை ஊட்டி தமிழ்நாட்டை துண்டாடிக்கொண்டிருக்கும் சாதியக் கட்சிகளே..

வாருங்கள்.. இதில் நாம் தமிழர் கட்சியோடு போட்டி போடுங்கள்.

தமிழர்களை குடிநோயாளிகளாக்கிய டாஸ்மாக் பார் எடுக்க, குண்டும் குழியுமாக ஒரு பாதையை உருவாக்க தார் ரோடு காண்ட்ராக்ட் எடுக்க, வரிசையில் நின்ற கருப்பு சிவப்பு, கறுப்பு சிவப்பு வெள்ளை என பல்வேறு கரை வேட்டி கட்டிய பெரியோர்களே..

வாருங்கள்.‌ இதில் எங்களோடு போட்டி போடுங்கள்.

இதற்கு எந்த திராவிட கட்சியும் எதிர்வினையாற்ற மாட்டார்கள். நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருப்பார்கள்.

ஆற்று மண்ணையெல்லாம் திருடித் தின்று விட்டு.. இல்லாத மண்ணை பெரியார் மண் என்று பீற்ற வரிசையில் வருவார்கள்.

இதற்கு வரமாட்டார்கள்.

இந்த 50 வருட அயோக்கியத்தனத்தால்
ஒரு தலைமுறை இளைஞர்கள் வீதியில் நிற்கிறார்கள்.

வேளச்சேரி ஏரியை காப்பாற்ற வீதிக்கு வந்து வேர்வையில் நனைந்து.. செயலில் இறங்கி இருக்கிற.. நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

மணி செந்தில்.

 

வயிற்றெரிச்சல் கும்பல்களின் வன்ம எரிச்சல்

என்னடா தேர்தல் முடிந்து விட்டதே.. நாம் தமிழர் குறிப்பிட்ட சதவீத ஓட்டை வாங்கிவிட்டதே.தனது எழுச்சியான வளர்ச்சியை பதிவு செய்துவிட்டதே.
ஆனாலும் இன்னும் வயிற்றெரிச்சல் கும்பல்களிடமிருந்து வன்ம இருமல் வரவில்லையே என்று நினைத்தேன்.

வரத் தொடங்கியிருக்கின்றன.அதிலும்
சிலதுகள் புலம்பியே ரத்த வாந்தி எடுக்க
தொடங்கி இருக்கின்றன.

வழக்கம்போல் அதே புலம்பல்தான்.

ஆனால் இம்முறை கூடுதலாக பொய் 2 டீஸ்பூன் அதிகம்.

சரி.. நாமும் வழக்கம்போல் இடது கையால் இக்னோர் செய்யலாம் என்று நினைத்தால் கக்கிய அவதூறுகள் சமூக வலைதளங்களில் கத்த தொடங்கியிருக்கின்றன.

எனவே தான் இந்த பதிவு.

…..‌

ஒவ்வொரு முறையும் சாதி கருத்தியலுக்கு எதிராக நாம் தமிழர் முழங்கிக் கொண்டே வருகிறது. பொதுத் தொகுதிகளில் ஆதித்தமிழரை நிறுத்துவது, தேர்தல் அரசியலில் சாதி பார்க்காமல் வேட்பாளரை களம் இறக்குவது என ஒவ்வொரு முறையும் சாதிக்கு எதிராக தனது தடத்தை அழுத்தமாக நாம் தமிழர் பதிவு செய்து வருகிறது.

ஆனால் மீண்டும் மீண்டும் நாம் தமிழர் குறித்து ஒரு திட்டமிட்ட அவதூறு பரப்பப்படுகிறது. அது என்னவென்றால்.. தமிழர் என்கிற இன வரையறை செய்ய சாதி கேட்கிறோம் என்கின்ற மிக இழிவான மலிவான பிரச்சாரம் எங்களை நோக்கி செய்யப்படுகிறது.

எங்களது தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களது பேச்சுக்கள் இணையதளம் முழுக்க பரவிக் கிடக்கின்றன. சாதிக்கு எதிராக அவர் முழங்கிய முழக்கங்கள் காற்றோடு கலந்து ஒவ்வொரு தமிழர் காதுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் எங்களைப் பற்றி இப்படிப்பட்ட அவதூறு.

முதலில்…

நாங்கள் சாதி உணர்வுக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கவே நாம் தமிழர் என்று முழங்குகிறோம். நாம் தமிழர் என்கின்ற முழக்கமே சாதி உணர்விற்கு எதிரான கலகச் சொல் தான்.அதுவரை சாதியாகப் பிரிந்து நின்ற தமிழன் நாம் தமிழர் என்ற முழக்கத்தினால் தான் சாதியை கடந்து, மதத்தை மறந்து இன அரசியலின் மீது ஈர்க்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசியலை நோக்கி நகர்கிறான்.

சாதி உணர்வை சாகடித்துவிட்டு தான் 16 லட்சம் தமிழர்கள் நாம் தமிழராய் உணர்ந்து வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் சாதியை ஆதரிப்பவர்களாக இருந்தால்.. அந்தந்த சாதி கட்சிகளுக்கு வாக்களித்திருப்பார்கள்.இல்லையேல் திராவிட கட்சிகள் சாதி பார்த்து நிறுத்தியிருந்த தங்கள் சாதி வேட்பாளர்களுக்கு வாக்களித்து இருப்பார்கள். இதையெல்லாம் கடந்து இனம் மொழி என நேசித்து நாம் தமிழருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

நாம் தமிழரை சேர்ந்த ஒவ்வொரு இளைஞனும் சாதி மறுப்பினை உளப் பூர்வமாக ஏற்றுக் கொண்டு களத்தில் நிற்கிறான். சாதிய விரும்புகிறவனாக இருந்தால் அவன் இணைய ஆயிரம் அமைப்புகள் இங்கே இருக்கின்றன.

இனத்திற்கான மாபெரும் போர் படையாய் நாம் தமிழர் வளர்வதை பொறுக்காத திராவிடக் கூட்டம் சாதி மறுப்பாளர்களான எங்களை தவறாக சித்தரிக்க முயன்று வருகின்றது..

சாதி குறித்து கேள்வி எழுப்பி முற்போக்காளர்கள்…தங்கள் அருகிலேயே நிற்கின்ற கருப்பு துண்டுகளையும், அவை ஆதரிக்கின்ற கருப்பு சிவப்பு துண்டுகளையும் சற்றே ஏறெடுத்து சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தி.. தமிழர்களை 50 வருடங்களாக சாதியாகப் பிரித்து வட்டச் செயலாளர் தொடங்கி பகுதி செயலாளர் நகரச் செயலாளர் ஒன்றிய செயலாளர் மாவட்டச் செயலாளர் என அனைத்துக் கட்சி பதவிகளிலும் சாதி பார்த்து இடம் கொடுத்து சாதியை காப்பாற்றுகின்ற இழிநிலை குறித்து எந்தவித கேள்வியும் எழுப்ப மாட்டார்கள்.

ஏனெனில் அவர்களுக்கும் தெரியும். திராவிடம் என்பதே சாதியை காப்பாற்றுகிற சாதியை போற்றுகிற மாபெரும் சூழ்ச்சி என..

ஒரு பக்கம் ஈழத்திற்கு ஆதரவாக போராடுவதாக காட்டிக்கொள்வார்கள். மறுபக்கம் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு தெருத்தெருவாய் அலைந்தவர்களோடு கைகோர்த்து நிற்பார்கள்.

இந்த லட்சணத்தில் எம்மினத்தின் உதிரம் படிந்த அந்த கைகளோடு நாங்களும் கைகோர்க்க வேண்டும் என கேட்பது தான் மாபெரும் கொடுமை.

உன் நண்பனைக் காட்டு.. உன்னை யாரென்று சொல்கிறேன் என்பார்கள். அவர்களது நண்பர்கள் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களும் தொடர்ந்து அம்பலப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி வயநாடில் வந்து நிற்கலாம் வெல்லலாம். ஆனால் சட்டமன்றத் தொகுதியில் நிற்க சொல்லுங்களேன் பார்ப்போம். ராகுல் காந்தி மாபெரும் கட்சியின் தலைவராக இருக்கலாம். எம்பியாக வெல்லலாம். ஆனால் ஒரு போதும் கேரளா நாட்டின் முதலமைச்சராக ஆக முடியாது.

மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்

தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பது தமிழரின் அடிப்படை அரசியல் உரிமை.

நாங்கள் கேட்பது எம் இனத்திற்கான இறையாண்மை.

எம் இனத்தின் வரையறை என்பது… தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர்கள்.

அதில் சாதிக்கும் மதத்திற்கும் இடமில்லை.

எங்களுக்கென்று ஒரு நிலம் இருக்கிறது. எங்களுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. எங்களுக்கென்று ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி இருக்கிறது.அந்தப் பண்பாட்டு தொடர்ச்சியையும் செழுமைப் படுத்திக் கொள்கிற வரலாற்றுத் தெளிவு எம் இனத்திற்கு இயல்பாகவே இருக்கிறது.

எனவே தன் ஊக்கம் கொண்ட தமிழின இளையோர் தன் மண்ணிற்கான, தன் இனத்திற்கான அரசியலை ஒரு வெகுஜன அரசியலாக கட்டமைக்க நாம் தமிழர் என்ற அமைப்பினை உருவாக்கி வளர்த்து வருகிறார்கள்.

எங்களது அரசியல் தெளிவு/சாதிய மறுப்பு ஆகியவை திராவிட கட்சிகளுக்கு இயக்கங்களுக்கு உறுத்தலாகதான் இருக்கும்.

அதை ஆதரித்து கைப்பிடித்து நிற்பவர்களுக்கும் உறுத்தலாகத்தான் இருக்கும்.

அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

உன் முதுகிலேயே ஓராயிரம் அழுக்கு. நீ அடுத்தவர் மீது சாட்டுகிறாய் பொய் வழக்கு.

தொடர்ந்து உண்மையினை உரக்கச் சொல்லி.. சுயசாதி பெருமித உணர்ச்சி யை சாகடித்து புலிக்கொடி உயர்த்துவோம்.

விடியும் கிழக்கு.

மணி செந்தில்.

மானுட ஜீவித வரலாறு

ஒரு காலத்தில் காதுகளே இல்லாத மனிதர்கள் இருந்தார்கள்.

காதுகளே இல்லாத மனித வாழ்க்கையில் சொற்களுக்கோ உணர்ச்சிகளுக்கோ இடமில்லை.

அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் இல்லை. அப்படிப் பேசிக் கொண்டால் கூட அவைகளுக்கு பொருளும் இல்லை.

சரி.. காதுகள் இல்லாதது தான் பிரச்சனை. காதுகளைப் பொருத்துவோம். இனியாவது மனித வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தங்கள் தென்படுகிறதா என்பதை பார்ப்போம் என கடவுள் சிந்தித்து மனிதர்களுக்கு காதுகளை பொருத்தினான்.

அப்போதும் அவர்கள் அவ்வாறே இருந்தார்கள். அர்த்தம் இல்லாததைப் பேசிக்கொண்டு எவ்வித உயிர்ப்பும் இல்லாத ஓசைகளை கேட்டுக்கொண்டும் வேரற்ற பெருமரம் போல அவர்கள் எவ்வித பிடிப்புமற்று இருந்தார்கள்.

இதைக் கண்ட கடவுள் மீண்டும் சிந்தித்தான்.

எவ்வித உணர்ச்சியும் இல்லாத சாரமற்ற மானுட வாழ்க்கையை கண்ட கடவுள் அர்த்தமுள்ளத்தாக்க சிந்தித்தான்.

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.

பிறகு தானே ஒரு மனிதனாக இந்த மண்ணில் பிறந்தான்.

தனக்கு இளையராஜா எனப் பெயர் சூட்டிக் கொண்டு..

அவனே அர்த்தமற்று திரிந்த சொற்களுக்கு சிறகுகள் முளைக்க வைத்தான். காதுகளில் பூ உரசும் உணர்வினை மனிதர்கள் அடையத் தொடங்கினார்கள்.

அந்த அதிமனிதன்..

விசித்திரமான ஒலிக்கலவை மூலம்
மனிதனை அமைதிப் படுத்த தொடங்கினான்.

பல்வேறு ஓசைகளுக்கு
உயிரூட்டி உணர்ச்சிகளை உட்புகுத்தினான்.

காதுகளில் அருவிகள் பொழிந்தன.

வெவ்வேறு இசைக்கருவிகளின் விசித்திர கலவையில் பொங்கி எழுந்த இசைப் பிரவாகம் அதுவரை இல்லாத மானுட உணர்ச்சிகளை உண்டாக்கியது.

எங்கிருந்தோ கசியும் அந்த இசை துளியில் மனிதனின் கண்கள் கலங்க தொடங்கின. மனிதர்கள் அழுதார்கள்.
மென்மையாக சிரிக்க பழகினார்கள்.
தனிமையில் சிந்தித்தார்கள். காதலித்தார்கள். கலவி கொண்டார்கள்.
குழந்தைகள் தூங்கினார்கள். காதலில் தோல்வியுற்று அமைதியற்று அலைந்த மனங்கள் சிறு அழுகையுடன் சாந்தமாயின. பிரிவு மகிழ்ச்சி துக்கம் காதல் காமம் துரோகம் என பல்வேறு உணர்ச்சிகள் அந்த அதி மனிதனின் வெவ்வேறு இசையாழங்களால் உணரப்பட்டது. தாய் மண்ணை விட்டு பிரிந்து விதியின் சூட்சம கோடுகளால் உலகப் பரப்பில் ஆங்காங்கே துப்பப்பட்ட ஒரு இனத்தின் மனிதர்கள் அந்த குரலை கேட்கும் போதெல்லாம் தன் தாயின் கருவறைக்கு திரும்புவது போல ஆறுதல் கொண்டார்கள்.

தொலைதூரப் பாலையில் கொளுத்தும் வெயிலில்.. பிழைப்பின் நிமித்தமாய் அசைவற்று அமர்ந்திருக்கும் போது.. காதுகளில் நுழையும் அந்த அந்த தேவமனிதனின் இசை ஒரே நொடிக்குள் தன் சொந்த ஊரின் ஏரிக்கரை காற்றையும் அத்தை மகளின் வாசனையையும் தாய் மண்ணின் ஈரத்தையும் கொண்டு வந்து தன் ஆன்மாவிற்குள் சேர்த்ததை கண்டு அவர்கள் அதிசயித்தார்கள்.

அது கட்டிடக் காடாக இருந்தால் என்ன.. கட்டாந்தரையாக இருந்தால் என்ன.. உயர்ந்து நிற்கும் அரண்மனையாக இருந்தால் என்ன.. சுட்டெரிக்கும் சுடுகாடாக இருந்தால் என்ன.. பேதமற்று அந்த இசைத்துணுக்குகள் காற்றில் கலந்து பரவின.

அந்த மானுடர்கள் முதன்முதலாக வெறும் ஒலிகளால் பசியாற அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.

தனித்தே பிறந்த மனிதர்கள் உயிர் உருகும் அந்த இசையை பெரும் துணையாக அடைந்தார்கள். தனியே வாழவும் தனியே நடக்கவும் இரவுகளில் தனியே படுக்கவும் காற்றில் மிதந்து வந்த அந்த இசைத் துளிகளால் அவர்களுக்கு சாத்தியமானது.

எல்லா இரவுகளிலும் இருட்டு இருந்தது. கூடவே இளையராஜாவும் இருந்தார்.

எனவே வெளிச்சமும் இருந்தது.

இறுதியாக மனிதன்..

அந்த கடவுளின் உன்னத இசையை தனது சுவாச காற்றாக மாற்றும் வித்தையை அவனாகவே கண்டறிந்தான் .

இவ்வாறாகவே இவ்வுலகில் மானுட ஜீவிதம் இந்த நொடி வரை மகத்தானதாக
இருந்து வருகிறது.

கடவுளின் கருணைக்கு இன்று பிறந்தநாள்.

Powered by WordPress & Theme by Anders Norén