பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: அக்டோபர் 2022

உலகமெங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை..

????

“சங்கத் தமிழ் ஓசை” என்ற பெயரில் அழைப்பிதழ் பார்த்தவுடன் உண்மையில் அச்சமாகத்தான் இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுட்பமான இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரையப்பட்ட இலக்கிய பாடல்களான சங்க பாடல்களுக்கு சமகாலத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எந்த வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிற கேள்வியும்,சாதாரண வாசகர்களால் வெற்று வாசிப்பின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சங்க பாடல்களை எப்படிப்பட்ட இசை வடிவத்தில் பொருத்தி கேட்போரை ஈர்க்க செய்யப் போகிறார்கள் என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்தன.

உண்மையில் அது ஆபத்தான முயற்சி தான். அதுவும் ஒரு வெகுஜன அரசியல் கட்சி தன் கலை பண்பாட்டு பாசறை மூலமாக தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக சங்கப் பாடல்கள் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார் பாடல்களை வெகுமக்கள் திரள் முன் மேடையேற்றம் செய்கிற நிகழ்ச்சி அது.‌ ஓட்டு அரசியலுக்கு இது எந்த விதத்தில் கை கொடுக்கும் என்கிற கேள்வி இயல்பாகவே அரசியல் பார்வையாளர்களுக்கு எழ வைக்கிற முயற்சி அது. தன் கட்சி கொடிகள் சின்னங்கள் லட்சணைகள் எதுவும் இல்லாமல் கவனமாக அவைகள் தவிர்க்கப்பட்டு, “மீண்டெழும் தமிழ் மொழி ” என்கின்ற புனித லட்சியத்திற்காக தன்னலம் பார்க்காமல் நாம் தமிழர் கட்சி செய்திருக்கின்ற இந்த வரலாற்றுப் பெரு நிகழ்வு தமிழர் வரலாற்றில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கிற தொடக்கப் புள்ளியாக கொள்ளலாம்.

இருந்தாலும் இந்த நிகழ்ச்சி எவ்வாறு வெற்றி பெறப் போகிறது என்கிற கவலையும், கூட்ட ஒழுங்கு பற்றிய அச்சமும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலருக்கும் அச்சமயத்தில் இருந்தது.

ஆனால் இதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத, சொல்லப்போனால் அந்த நிகழ்ச்சி குறித்து மகத்தான நம்பிக்கை கொண்டிருந்து உலகத் தமிழர்களை அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் பணியில் அண்ணன் சீமான் தீவிரமாக இருந்தார். கட்சி பொறுப்பாளர்களை அழைக்கும் போது கூட “இது மிக மிக முக்கியமான ஒரு நிகழ்வு. வரலாற்றில் முதல்முறையாக, தவற விட்டு விடாதே..” என உரிமையோடும், அதே நேரத்தில் கொஞ்சம் கண்டிப்போடும் அழைத்த அந்த அழைப்பு, ஆயிரக்கணக்கான தமிழர்களை 17-09-2022 சனிக்கிழமை மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் திரட்டியது.

அந்த அரங்கில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கூடியிருந்த எல்லோர் மனதிலும் இருந்த கேள்வி ” அடுத்து வருகிற சில மணி நேரங்களை எப்படி கடப்பது ‌…”

ஏனென்றால் இது போன்ற பல நிகழ்ச்சிகளை அவர்கள் ஏற்கனவே தங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார்கள். இது போன்ற இசை நிகழ்ச்சியில் திரைப்பட பாடல்களுக்கே உரிய வசீகரமோ, துள்ளல் இசையோ போன்ற கொண்டாட்ட அம்சங்கள் இடம்பெறாது என்பது இதுவரை
நிகழ்ந்த நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் பெற்றிருந்த வாழ்வியல் பாடம். ஒரு வகுப்பறையில் நடக்கும் தமிழ் வகுப்பில் செய்யுள் பாடப்பகுதி‌ நடத்தப்படும் போது எது போன்ற அனுபவம் (?) நமக்கு இதுவரை கிடைத்ததோ அதே அனுபவத்தை இந்த நிகழ்ச்சியும் வழங்கி விடுமோ என்கிற அச்சம் அங்கே கூடியவர்களுக்கு இருந்தது.

ஆனாலும் அண்ணன் சீமான் அழைத்திருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசுவதாகவும் சொல்லி இருக்கிறார். எனவே அந்த நெருப்புத் தமிழை கேட்பதற்காக வேணும் நாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என அவரவருக்கு ஒவ்வொரு சமாதானத்தை உள்ளுக்குள் உண்டாக்கி இருந்தார்கள்.

அந்த அரங்கில் அமைக்கப்பட்டு இந்த மேடை இந்த கணக்குகளை எல்லாம் தாண்டி பார்த்த நொடியில் ஆர்வத்தை தூண்டக்கூடிய பிரம்மாண்ட ஒழுங்குகளை கொண்டிருந்தது.

மேடையில் ஆபிரகாம் பண்டிதர் உள்ளிட்ட தமிழிசை மூத்தோர் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்த முறையும், ஒலி ஒளி அமைக்கப்பட்டிருந்த ஒழுங்கும் ஒரு பிரம்மாண்டமான இசை விருந்தை எதிர்கொள்ள பார்வையாளர்களை தயார் படுத்தின.

சற்றே இருளும், குளிரூட்டி குளிரும் நிலவிய அந்த அரங்கில் சில முணுமுணுப்புகளை தாண்டி பெரிய ஓசைகள் இல்லை. மேடையிலும் யாரும் இல்லை.
எல்லோருக்கும் இனம் புரியாத அமைதி உள்ளுக்குள் ஊற, தயாரானது அரங்கம்.

சரியாக ஆறு மணிக்கு அண்ணன் சீமான் முகம் முழுக்க பெருமித புன்னகையோடு, அரங்கத்திற்குள் வரவே, உற்சாக குரல்கள் விண்ணை தொட்டன. அவரைத் தொடர்ந்து பட்டாடையோடு உள்ளே வந்தார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

30க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம்பெண்களும் மேடையில் அடுக்கடுக்கான வரிசையில் மிக ஒழுங்காய் நிற்க மேடை முன்புறம் அமைக்கப்பட்ட சிறு மேடையில் வந்து நின்று நிகழ்ச்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார் ஜேம்ஸ் வசந்தன்.

முதலில் இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பார்வையாளர்கள் என்கிற இருவர்களுக்குமான இடைவெளி இருக்கக் கூடாது, இந்த நிகழ்ச்சியில் அனைவருமே பங்கேற்பாளர்கள் என்பதை முத்தாய்ப்பாக அறிவித்தார்‌ அவர்.

தன் உரையின் தொடக்கத்திலேயே
பார்வையாளர்கள் கொண்டிருந்த நிகழ்வு குறித்தான அச்சங்களை
தன் புன்னகை மொழியால் அடித்து நொறுக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் , தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அவர் ஆற்றிய சிறு உரை அந்த நிகழ்ச்சி எப்படி அமையப் போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

முதலில் “திருக்குறளின் கடவுள் வாழ்த்து” அதிகாரம்.

அரங்கமே அமைதியானது. மேடையில் நின்றிருந்தவர்களின் சேர்ந்திசை குரல் மெதுவாக தொடங்கியவுடன், ஒரு பன்னாட்டு இசை நிகழ்ச்சிக்கான நேர்த்தியை நம்மால் உணர முடிந்தது.

“அகர முதல” என தொடங்கிய போது அருகே வைக்கப்பட்டிருந்த திரைகளில் வரிகளும் வரிகளுக்கான விளக்கமும் தோன்றத் தொடங்க, நவீன இசையும் இணைந்து கொள்ள கண்ணுக்கும் காதுகளுக்கும் பெரும் விருந்தை அந்த நிகழ்ச்சி படைக்க தொடங்கியது. அடுத்தது புறநானூறு , குறுந்தொகை, பாரதிதாசன் பாரதியார் பாடல்கள், பாடல்கள் காளமேகப்புலவரின் கவிதைகள்,மீனவர் பாடல் என அடுத்தடுத்த பாடல்கள், அதற்கான முன்னுரைகள் என நிகழ்ச்சிக் களைக் கட்டியது.

பாரி மகளிர் பற்றி சங்க கால கவிஞர் கபிலர் பாடிய பாடலைக் கேட்கும் போது வேள்பாரி உருவம் திரையில் தோன்ற, நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களே தோன்றுவதாக உணர்ந்து அரங்கில் உள்ளோர் விழி நிறைந்து உறைந்தனர்.

அதேபோல் தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற பாவேந்தர் பாரதிதாசன் பாடலின் வரிகளும் இசையும் அந்த அரங்கில் உள்ளவரை சொக்கி இழுத்து மயக்கி போட்டன என்றால், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற துள்ளல் பாடல் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைவரையும் எழுந்து ஆட வைத்தது. அண்ணன் சீமான் உள்ளிட்ட அந்த அரங்கில் உள்ளோர் அனைவரும் எழுந்து ஆட
உச்சகட்ட கொண்டாட்ட தருணத்தை பார்வையாளர்கள் அனுபவித்தார்கள்.

“விடிவெள்ளி தானே நம் விளக்கு.
..” என்கின்ற மீனவர் பாடல் அரங்கில் உள்ளோர் அனைவரையும் ஐலேசா போட வைத்தது.

ஈடு இணையற்ற தொழில்நுட்ப மேன்மையோடு அமைக்கப்பட்ட அரங்கு, துல்லியமான ஒலி ஒளி வசதிகள் என பிரமிக்க வைத்த 90 நிமிட அந்த நிகழ்ச்சி , தமிழரின் காதல், வீரம், அறம், தொன்மை என அனைத்து பக்கங்களையும் தொட்டு காட்டி பார்க்கும் அனைவரையும் பரவசப்படுத்தியது. “யாயும் யாயும்
யாரோ யாராகியோரோ..” என்கிற சங்க கால காதற் பாடல் இசைக்கப்படும்போது முழுக்க தோன்றிய திரை முழுக்க காதற் சின்ன இதயங்கள் பேரழகு வடிவமைப்பால் நம்மை வெகுவாக கவர்ந்தன.

எல்லா காலத்திலும் எல்லா இசை வடிவங்களிலும் ஒரு மொழி பொருந்துகிறது என்றால் அந்த மொழி எப்படிப்பட்ட வடிவம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை தன் இசை மூலம் ஜேம்ஸ் வசந்தன் நுட்பமாக விளக்க விளக்க அரங்கில் உள்ளோரெல்லாம் தன்னை மறந்து தன் இனத்தையும், தன் மொழியையும் நினைத்து பூரித்து நின்றார்கள்.

90 நிமிட வெகு அற்புதமான நிகழ்ச்சிக்குப் பிறகு, வாழ்த்துரை வழங்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் பலத்த வாழ்த்தொலிகளுக்கு மத்தியில் மேடை ஏறினார்.

மிகுந்த உற்சாகமும் பூரிப்பும் பெருமிதமும் நிறைந்த மனிதராக காணப்பட்ட அண்ணன் சீமான் கஎப்படி இசை நம் மொழியின் உயிராக இருக்கிறது என்பதை இலக்கிய சான்றுகளோடு உணர்வுபூர்வமாக உரையாற்றினார். ஓசைக்கும் இசைக்குமான வேறுபாடை அவர் விவரித்த முறை அவரது ஆழ்ந்த பேரறிவை, வாசிப்பை வெளிப்படுத்தியது. கோவில்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதன் கோபத்தையும் தன் உரையில் வெளிப்படுத்திய அவர், இப்படிப்பட்ட புலவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என வியப்பாக தெரிவித்த போது அவர் அடைந்த அதே வியப்பு நிகழ்ச்சியை கேட்ட பார்த்த அனைவரும் அடைந்தார்கள்.

ஆழமான அதே சமயத்தில் அழகான மொழியோடு இசை நிறைந்த வடிவத்தோடு தன் உரையை ஆற்றி அமர்ந்த அண்ணன் சீமான் வாழ்த்துரையில் ஒரு துளி அளவு கூட சமகால அரசியல் குறித்து பேசவில்லை என்பது மிக மிக குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் அது தமிழுக்கான மேடை. தமிழ் இசைக்காண மேடை. அதில் அரசியலை கலக்க வேண்டாம் என்கிற அவரது உறுதி தமிழ் நிலத்தில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் வாய்த்திராத அற்புத உளவியல்.

அண்ணன் சீமான் வாழ்த்துரைக்குப் பிறகு ஏற்கனவே இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களில் சிறந்தவை மட்டும் பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் இசைக்கப்பட்ட போது அரங்கம் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றது.

வாழ்க்கையில் இது போன்ற அனுபவத்தை இதுவரை அனுபவித்ததில்லை என்பதை நிகழ்ச்சி முடிந்த பிறகு பார்வையாளர்களின் பரவச முகங்களே அடையாளங்களாய் திகழ்ந்தன.
..

ஒரு மொழி அதுவும் உலகத்தின் மூத்த தொன்மையான இன்றளவும் பேச்சு வழக்கில் எழுத்து வழக்கில் இருக்கின்ற செவ்வியல் மொழி இத்தனை காலங்கள் கடந்த பிறகும், இத்தனை வரலாற்றுப் பக்கங்கள் நகர்ந்த பிறகும் உயிர்போடு இருந்து நவீன கால இசை திறப்புகளிலும் பொருந்துகிறது என்று சொன்னால், தமிழ் மொழி போல் வேறு எந்த மொழியும் இல்லை என்பதை தமிழர் பெருமிதம் கொள்ளலாம் என்பதற்கு சான்று இந்த இசை நிகழ்ச்சி.

குறிப்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை குழுவினரின் அளவற்ற உழைப்பின் மூலம் பயிற்சி மூலம் அடைந்த ஒழுங்கு தான் இந்த நிகழ்ச்சி அடைந்திருக்கும் வெற்றியின் மூலதனம். ஒரே நேரத்தில் காணொலி மூலமாகவும் இசையொலி மூலமாகவும் நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களும் இளம் பெண்களும் அளவற்ற திறமை கொண்டவர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல், 90 நிமிட நிகழ்ச்சியில் ஒரு நொடியை கூட வீணாக்காமல் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தையும் , தமிழ்மொழி உணர்ச்சியையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

ஓட்டு அரசியலில் வெகுஜன கட்சியாக செயல்படும் நாம் தமிழர் கட்சி என்கிற அமைப்பு சங்க தமிழோசை என்கிற மொழி மீட்பு இசை நிகழ்ச்சியை நடத்துவதன் மூலமாக வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, தமிழர்கள் தங்களது பண்பாட்டு தளத்தில் மொழி மீட்பு களத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற உணர்ச்சியை உலகமெங்கும் பரந்து வாழக்கூடிய தமிழர்களுக்கு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டது.

நிகழ்ச்சி மேடையிலேயே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் சொன்னது போல இந்த தமிழோசை ஒவ்வொரு ஊரிலும் உலகில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

மெய் சிலிர்க்க நடந்த இந்த வரலாற்று பெரு நிகழ்வு பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக ஆழமானது.

இதே நிகழ்ச்சி உலகமெங்கும் நடக்கட்டும்.
உலகத் தமிழர் உள்ளத்தில் தமிழ் உணர்ச்சி மலரட்டும்.

“உலகம் எங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை.”

நன்றி : வேல் வீச்சு இதழுக்கான அட்டைப்பட கட்டுரை.

திசை அறியும் திசைக்காட்டி.

சமகால தமிழக அரசியல் வரலாற்றில் அதிகம் விமர்சிக்கப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஆளுமையாக அண்ணன் சீமான் உருவாகி இருக்கிற உயரம் அவரே எதிர்பார்க்காத ஒன்று‌.அது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அல்லது நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட நிகழ்வு அல்ல. காலத்தின் கருவியாக தன்னை ஒப்புக் கொடுத்த ஒரு தனி மனிதனின் அசாத்திய மனப்பாங்கு.

தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்து யாரும் தொட தயங்குகிற ,பிற தலைவர்கள் அதுவரை தொட்டிராத வரலாற்றின் வீதியில் இறுக மூடப்பட்டு துருவேறிக் கிடக்கின்ற பல சர்ச்சைக் கதவுகளை தன் அனல் தமிழால் எட்டி உதைத்து
மூடப்பட்ட கதவுகளை திறக்கும் பேரொசையால் அரசியல் களங்களை நிறைத்தவன் அண்ணன் சீமான்.

எங்கோ தொலைதூரத்தில் இருக்கின்ற தீவின் பிரச்சனை என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, இல்லை.. இல்லை.. அது என் மற்றொரு தாய் நிலத்தின் விடுதலைப் போராட்டம் என முழங்கியவன் அவன்தான்.

விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என முழங்கிய தலைவர்கள் மத்தியில் புலிகள் எங்கள் உடன் பிறந்தவர்கள், தமிழர்கள் புலிகளின் புதல்வர்கள் என முழங்கியவன் அவன் தான்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் , அவர் வீரம் செறிந்தவர் என்றெல்லாம் பேசிய தலைவர்களுக்கு மத்தியில் பிரபாகரன் என் அண்ணன், என் உடன் பிறந்தான் என முழங்கி தமிழகத்து வீதிகளில் இன உணர்வு தீப்பற்ற வைத்தவன் அவன் தான்.

அவன் பார்க்காத விமர்சனம் இல்லை. அவன் சந்திக்காத எதிர்ப்பு இல்லை.

எம் இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சி, திமுகவோடு கூட்டணி கண்டு 63 இடங்களில் ஆர்ப்பரித்து நின்ற போது, இப்போது நிமிர்ந்து நிற்கும் நாம் தமிழர் கட்சி அப்போது இல்லை தான்.

ஆனாலும் தனி ஒருவன் அவன் அசரவில்லை. ஓயாமல் அவன் ஓடி ஓடி ஓங்கி அடித்த அடியில், அவன் போக முடியாத ஐந்து தொகுதிகளை தவிர, 58 தொகுதிகளில் காங்கிரஸ் காணாமல் போனது பழைய வரலாறு.

இயக்கமாக இருந்த போது இன்னும் சில காலம் இருப்பார்கள் சில்லறையாய் சிதறுவார்கள் என்றார்கள். கட்சியாய் மாறிய போது இதுவெல்லாம் சில காலம் தான்.. காணாமல் போய்விடுவார்கள் என்றார்கள். தேர்தலில் நின்ற போது பத்தோடு ஒன்று என்றார்கள்.திமுகவை எதிர்த்த போது இத்தோடு இது ஒன்று என்றார்கள். திராவிடத்தை எதிர்த்த போது பாஜகவின் B டீம் என்றார்கள்.பாஜகவை எதிர்த்த போது இதுவும் இன்னொரு திராவிடக் கட்சி தான் என்றார்கள்.

சாதி மறுப்பு பேசியபோது அதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்றார்கள். மதம் கடந்து தமிழராய் இணைத்த போது இதுவெல்லாம் ஆகாத வேலை என்றார்கள்.

கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல..

“அப்படி என்றால் அதுவும் தப்பு.. இப்படி என்றால் இதுவும் தப்பு..
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்.
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்.”

????

ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கும் போது அண்ணன் சீமான் விமர்சிக்கப்படுகிறார். ஆனால் தான் கொண்ட தத்துவத்திற்கு, தான் நிக்கிற லட்சியப் பாதைக்கு அவர் நேர்மையாக நிற்கிறார்.

அவர் அண்ணன் திருமாவளவனோடு எதில் இணைய வேண்டும் எதில் இணையக் கூடாது என்பதில் அண்ணன் சீமான் மிகத் தெளிவாக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக தனியாக நின்று என்ன புடுங்க போகிறாய் என கேட்ட அண்ணன் திருமாவிற்கு ,எம் அண்ணன் சீமான் சொன்ன பதில் ” எனக்கு என்ன அவர்கள் போதித்தார்களோ அந்த பாதையில் தான், அவர்கள் விலகினாலும் நான் தொடர்ச்சியாக பயணிக்கிறேன். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பதக்கம் பெறுவதில்லை. கற்றுக் கொள்ளும் மாணவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள் பதக்கம் பெறுகிறார்கள்.”

இந்தப் பக்குவம் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் செய்து தன்னிச்சையாக உறுதியாக களத்தில் நிற்கிற அண்ணன் சீமான் இறுதியாக கண்டடைந்த நிலை.

தன் இலட்சியப் பயணத்தை பிறர் சொல்லியும் எச்சரித்தும் கேட்காமல் தொடங்கிய அவருக்கு அது எப்படி நடத்த வேண்டும் என்கிற புரிதல் உண்டு.

எனவே இங்கு போதனைகள் தேவையில்லை.

எத்துயர் வந்தாலும், எந்நிலை தாழ்ந்தாலும் அண்ணன் கரம் பற்றி தடம் மாறாமல் பயணிக்கும் பேராற்றல் சாதனைதான் வேண்டும்.

அந்த நம்பிக்கை தான் இந்த 12 வருடங்களில் தடம் மாறாமல், தடுமாறாமல் பயணித்து அவர் சம்பாதித்தது.

அழைத்துச் செல்லும் அண்ணன் சீமான் அறிவார் அனைத்தையும்.

அவர் உறுதியாய் வெல்வார் தமிழர் மனத்தையும்.

எனவே .
ஏன் அப்படி செய்கிறார், ஏன் இப்படி செய்கிறார் என்றெல்லாம் வினாக்கள் எழுப்பி அவர் பாதையில் நாம் திசைக் காட்டிகள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் அவர் பயணத்தில் அவரே பாதை. அவரே திசைக்காட்டி.

அமைதி கொள்க அனைவரும்.

பொன்னியின் செல்வன் பார்ப்போர் கவனத்திற்கு…

????

அமரர் கல்கி எழுதி ஜெயமோகன் திரைக்கதை வசனத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து “புல்லரிப்போடு” இருக்கின்ற அனைவருக்கும்…

1. முதலில் பொன்னியின் செல்வன் என்பது கற்பனை கதை. வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட புனைவு. இந்தக் கதையையே வரலாறு நினைத்துக் கொள்ள வேண்டாம் . வரலாறு இந்த புனைவுகளை எல்லாம் தாண்டி பிரம்மாண்டமானது.

2. அமரர் கல்கி எழுதியபோதே வரலாற்று கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உள்நோக்கத்தோடு எழுதியுள்ளார் என்பதான விமர்சனங்கள் அந்தக் காலத்திலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆதித்த கரிகாலன் படுகொலை என்பது பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டது என்றும் அதை மட்டுப்படுத்தவே நந்தினி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை முன்வைத்து “நந்தினி- ஆதித்த கரிகாலன் காதல்” என்பதான கற்பனைக் கதை ஓட்டத்தை அமரர் கல்கி எழுதினார் என்றும் அது பெரு மாவீரனான ஆதித்த கரிகாலன் புகழுக்கு எதிரான செயல் என்பதான விமர்சனங்கள் அப்போதே உண்டு.எனவே புல்லரிப்பாளர்கள் ‘விக்ரம் – ஐஸ்வர்யா ராய்’ ஜோடியை பார்த்துவிட்டு இதுவே தமிழரின் வரலாறு என்று நினைத்து விடாதீர்கள்.

3. இது ஒரு திரைப்படம் என்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டும். எப்போதுமே வரலாற்றை தழுவி மணிரத்னம் செய்கிற ஆக்கங்களில் அவருக்கென்றே உரித்தான மேல்தட்டு வலதுசாரி ‘அரசியல்’ இருக்கும் என்கிற கவனத்தோடு இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஈழத்தின் வீர வரலாற்றை ஆயுத வியாபாரிகளின் மோதல் என இழிவுபடுத்திய மணிரத்னம் , எடுத்துள்ள ‘பொன்னியின் செல்வனில்’ அல்ல..அல்ல PS-1 ல் ( ப்ளே ஸ்டேஷனா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்.) நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை விமர்சிக்கிற மனப்பாங்கு பார்வையாளர்களுக்கு வேண்டும்.

4. எல்லாவற்றிற்கும் மேலாக அதீதமாக ஒலிக்கும் இந்த திரைப்பட விளம்பரத்தின் மூலமாக திடீரென கவனம் பெற்று இருக்கிற ‘ராஜராஜ சோழன்’ இதோ கும்பகோணத்தில் அருகே இருக்கிற உடையாளூரில் எவ்வாறு பராமரிப்பின்றி படுத்து கிடக்கிறார் என்கின்ற காட்சியை பொன்னியின் செல்வன் படம் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமுறை அவசியம் நேரில் வந்து பார்த்துவிட்டு சென்றால், இக்கதை, திரைப்படம், விளம்பரம், வணிகம் இவைகளுக்கு ஊடாக இருக்கிற ‘அரசியல்’ புரியும்.

5. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை அவரே இக்கதையின் முன்னரையில் சொன்னது போல சோழ வரலாற்றை ஆய்வு செய்த சதாசிவ பண்டாரத்தார், கே ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற பெரும் அறிஞர்களின் உழைப்பிலிருந்து எழுத்தாளப்பட்ட சில வரலாற்று செய்திகளை கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை. இதில் ஆழ்வார்கடியான் நம்பி பூங்குழலி நந்தினி குடந்தை ஜோதிடர் என பல கற்பனை கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

சாண்டல்யன் எழுதிய கடல்புறா போன்றது தான் பொன்னியின் செல்வனும். இது வரலாறு அல்ல.

இந்த புரிதலோடு திரைப்படத்தை அணுக வேண்டும்.

6. வரலாற்று நிகழ்வுகளை திரைப்படமாக எடுக்கும் போது இருக்க வேண்டிய கவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருக்கிறதா என்பதை எல்லாம் திரைப்படம் சொல்லட்டும். ஆனால் வரலாற்றில் பொன்னியின் செல்வனில் இடம்பெறும் சம்பவங்கள் நடந்த போது அருள்மொழி வருமனுக்கு 16 17 வயது இருக்கலாம். ( ஜெயம் ரவியை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்றெல்லாம் நினைக்க வேண்டாம். கற்பனை என்பதோடு நிறுத்தினால் இந்த பிரச்சனை இல்லை.) ஆதித்த கரிகாலனுக்கு 20 21 இருக்கலாம் .( 20 21 வயது இளைஞனுக்கு விக்ரம் போல தாடி மீசை முளைக்குமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம் ‌. இது கற்பனை. அவ்வளவுதான்.)

எனவே இதை சோழர் வரலாறாக திரைப்படம் பார்க்க வரும் குழந்தைகள் மனதில் பதிய வைத்து விடாதீர்கள். அவர்களுக்கு இந்த திரைப்படம் சோழர் வரலாறு பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வரலாற்றை உண்மையான ஆவணங்கள் மூலம் நாம் படித்தறிந்து நம் பிள்ளைகளுக்கு கடத்துவோம். பிழையான வரலாறுகளால் தான் இன்னும் இந்த தமிழினம் அடிமையாக கிடக்கிறது என்கிற புரிதல் முதலில் நமக்கு வேண்டும். திரைப்படங்களை வரலாறாக புரிந்து கொண்ட பேதமையால் தான் இங்கே ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஓடியது. மருது பாண்டியர்கள் வரலாற்றை அசலாக பேசிய ” “சிவகங்கைச் சீமை” தோற்றது.

5. மற்றபடி திரைப்படம் என்கிற அறிவியல், அது தருகிற வசீகரம், தொழில்நுட்பத்தால் விளைகிற அதிசயங்கள், திரையில் விரியும் நடிகர்களின் திறமை ஆகியவற்றை ‘ஒரு திரைப்படப் பார்வையாளன்’ என்கிற முறையில் கொண்டாடி மகிழ்வோம்.‌

ஆனால் இதுவே வரலாறு என நம்பி தொலைக்கும் பேதைமை தொலைப்போம்.

கவனம் கொள் தமிழினமே..

நிலாப் பொழுதுகளின் நிழற்படங்கள்.

“நள்ளிரவு 12 மணிக்கு எங்கிருந்தாலும் வா. நிலா பொழுதுகளில் நாம் இணைந்திருக்கும் பழைய புகைப்படங்களை ஒரு இளையராஜா பாடல் பின்னணியில் ஒலிக்க சேர்ந்து பார்ப்போம்..” என்று அழைத்தாள் அவள்.

“வேண்டாம்.

புகைப்படங்கள் ஆழ்கடல் போன்றவை.

நினைவின் சுழல் கொண்டவை.

கால இயந்திரம் போல நிகழ்ந்த அந்த கணத்திற்கே நம்மை இழுத்துச் சென்று நிகழ்காலத்து தகவமைப்புகளுக்கு குழப்பம் ஏற்படுத்துபவை.

மீளவே முடியாத

ஆழத்தின் இருள் கொண்டவை. எப்போதோ அறுக்கப்பட்ட இறுக்கிக் கட்டி இருந்த கயிற்றின் தடம் போன்றவை.

வேண்டாம்..”

என அச்சத்துடன் மறுத்தேன்.

“இல்லை இல்லை..

தீரா மோகத்தின் வெப்பம் வீசும் விழிமயக்க புனைவு கதைகள்

அடங்கிய வசீகர புத்தகங்கள் நிறைய அடுக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரிகளுக்கு பின்னால்

கனவின் கதவு

ஒன்று இருப்பது போல ..

ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னாலும் ஒரு கனவின் மாயக்கதவு ஒன்று மறைந்து இருக்கிறது.

அதற்குள் சென்றால் ஆழ்மனதில் உறுத்தும் நம் ஆறாக் காயங்களை, சுகந்த நினைவின்

காற்று ஊதி ஊதியே குணப்படுத்தும் காதலின் தேவதை ஒருவள் காத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பார்த்துவிட்டு வரலாம் வா..” என்று அழைத்தாள்.

எனக்கு முன்னால் நட்சத்திரங்களை விண்ணை நோக்கி வீசிக்கொண்டிருக்கும் ஒன்றோடு ஒன்று பின்னிய நிறைவேறா கனவுகளின் கனலேறிய விசித்திர கிளைகள் கொண்ட ஒரு கொன்றை மரம் ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

பார்க்கவே அச்சம் ‌. மேலும் அசைந்து கொண்டிருக்கும் கிளைகள் என்னை இழுத்து அந்தக் கனல் மரத்திற்குள் வைத்து கழுவேற்றிக் கொல்லுமோ என்கிற தீவிர பய உணர்ச்சி.

நடுங்கியவாறே என்னை நோக்கி மிதந்து வந்த அந்த அலைபேசி இணைப்பை துண்டித்தேன்..

….

விழிகளை மூடி அமர்ந்திருந்த அந்த கணத்தில் தான்.. நொடி பிசகிய திடுக்கிடலில் விழித்து பார்த்த போது..

நானாக உருவாக்கிக் கொண்ட காரணங்கள் துருவேறி இறுகிக் கிடக்கும் அந்தக் காலப் பூட்டு

அதுவாகத் திறந்து, என் முன்

என் வாழ்வில் இனி எப்போதும்

வாழ முடியாத, வசந்த காலத்தின் வண்ணப் புகைப்படங்கள்

கண்ணீர் கோர்த்திருக்கும் என் விழிகளுக்கு முன்னால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

❤️

எப்போதும் என் அம்மா.

❤️

இன்று கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் என் அம்மா கலந்து கொண்டதை பற்றி என் தம்பி மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான் நெகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தான்.

இந்த காட்சி எனக்கு புதிதல்ல. சிறுவயதில் இருந்து எனக்கு தோளுக்கு தோளாக மட்டுமல்ல , உயிராக இருப்பது எனது அம்மா தான்.

நோயால் பாதிக்கப்பட்ட என் பால்ய காலத்தில் என் அம்மா மட்டும்தான் எனது பால்யகால தோழி. காலில் கட்டு போட்டு அமர்ந்திருக்கும் என்னோடு என் அம்மா தான் கேரம்போர்டு விளையாடுவாள். டிரேடு என்று சொல்லக்கூடிய ஒரு விளையாட்டு. பரமபதம் சதுரங்கம் அமர்ந்து விளையாடக்கூடிய எல்லா விளையாட்டுகளிலும் அம்மா தான் அமர்ந்திருப்பாள். நான் கற்பனை காண்பது எதையாவது படித்து பரவசம் அடைவது என எனது எல்லா உணர்ச்சிகளையும் அம்மாவிடம் தான் கொட்டுவேன்.

அம்மாவிற்கு 16 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. 17 வது வயதில் நான் பிறந்து விட்டேன். 17 வயதில் நோயுற்ற ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு வீதி வீதியாக மருத்துவமனைகளுக்கு அலைந்த இயல்பு வாழ்க்கையை மீறிய அவலமும், அலைகழிப்பும் கொண்ட வாழ்க்கையை அடைந்த ஒரு தாய் எனது அம்மா. இப்போதுள்ள கருத்தடை போன்ற அறிவியல் வசதிகள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் நோயுற்ற ஒரு குழந்தை பிறந்து விட்டானே என்ற ஒரே காரணத்திற்காக என் அம்மா அடுத்த குழந்தையை கூட பெற்றுக் கொள்ளவில்லை.

ஒரு மனிதனாக அது போன்ற தருணங்களை என்னால் இந்த வயதில் புரிந்து கொண்டு கண்கலங்க முடிகிறது.

தனிமை தரும் வலி என்னை வதைத்து விடக்கூடாது என்பதற்காக எப்போதும்‌‌ நான் சாய்வதற்கான தோள்களை அம்மா தயாராகத்தான் வைத்திருக்கிறாள். இன்றளவும் கூட அப்படித்தான்.

இன்றும் நான் காலையில் எழுந்து தேடும் முதல் முகம் என் அம்மா உடையது தான். என்னை மட்டுமல்ல என் பிள்ளைகளையும் அவள் தான் வளர்த்து ஆளாக்குகிறாள்‌ . என் மகன்களுக்கு அவர்களது தாய் தந்தையரை விட தாத்தா ஆத்தா தான் முதன்மையானவர்கள் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் தான்.

நான் படுத்து “பறக்கும் குதிரை” கதை கேட்ட அதே மடியில் தான் என் மகன்களும் படுத்து அதே “பறக்கும் குதிரை” கதை கேட்டார்கள்.

இன்றளவும் எனது சிறு அசைவுக்கு கூட அம்மாவிடம் ஏற்படும் மாற்றம் மிக வியப்பானது. அதை பதைபதைப்பு என்று சொல்வதா, தன் தயாராவதற்கான ஆயத்தம் என்று சொல்வதா என்றெல்லாம் எனக்கே குழப்பங்கள் உண்டு.

சமீபத்தில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் சற்றே தடுமாறி கீழே விழுந்து விட்டேன். இது போன்ற நூற்றுக்கணக்கான சூழ்நிலைகளை அம்மா தன் வாழ்வில் சந்தித்திருந்தாலும், இந்த முறை ஏனோ கொஞ்சம் தளர்ந்து விட்டாள். கொஞ்சம் காலில் அடிபட்டு இருந்தாலும் அம்மாவிற்காக அடுத்த நாளே நான் எழுந்து நடக்கத் தொடங்கி விட்டாலும் இந்த முறை அம்மாவை சமாதானப்படுத்துவது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

கீழே விழுந்து கொஞ்சம் அடிபட்டு இருந்த என்னை பார்க்க

பெருந்தமிழர் கிருஷ்ணகுமாா் வந்திருந்த போது அம்மா உடைந்து அழ, அம்மாவிற்கு எந்தவித சமாதானமும் சொல்லாமல் ஐயா அவர்கள் அமைதியாக தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தார்கள்.

பக்கத்தில் அமர்ந்திருந்த வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் சதீஷ் அம்மாவை சமாதானப்படுத்துங்கள் ஐயா எனக் கேட்டுக் கொண்ட பிறகும் கூட ஐயா அவர்கள் எதுவும் பேசாமல் தலையை குனிந்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

அந்த நிலை எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அம்மாவிற்கு ஏதோ ஐயா ஆறுதல் சொல்வார்கள், அம்மா சமாதானம் அடைவாள் என நினைத்த எனக்கு ஐயாவின் அமைதி ஆச்சரியமாக இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து கலங்கிய கண்களோடு ஐயா நிமிர்ந்து பார்த்தார். ஏன் ஐயா எதுவும் சொல்ல மறுக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு… “அந்தத் தாய்மை கொண்ட வலிக்கு ஆறுதல் கூற என்னிடத்தில் மொழி இல்லை, அப்படி மீறி கூறினாலும் அந்த மொழி பற்றாக்குறையாக தான் இருக்கும், எனவே அதுவே அழுது அதுவே ஓயட்டும்..” எனச் சொல்லிவிட்டு கண்களை துடைத்தவாறே சென்றார். தமிழ் மொழி மட்டுமல்ல உணர்வின் மொழியும் அறிந்த பெருமகன் அவர்.

அந்த நொடியில் நான் முடிவெடுத்துக் கொண்டேன். அம்மாவிற்காவது நான் நிறைய வேலைகளை என் சக்திக்கு அப்பாற்பட்ட பணிகளை எடுத்துக்கொண்டு செய்து என்னை இயல்பானவனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்து சமீபத்தில் எங்கள் இல்லத்தில் ஒரு திருமணமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இன்றும் அப்படித்தான். நான் போராட்டத்திற்கு கிளம்பினேன். போராட்டத்திற்கு நிறைய ஆட்களை அழைப்பதற்காக பேசிக் கொண்டே இருந்தேன். அம்மா உடனே எதுவுமே சொல்லாமல் நானும் அப்பாவும் வருகிறோம் என்று என் காரில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது மகன் எதன் பொருட்டும் சங்கடப்பட்டு விடக்கூடாது. குறிப்பாக எனது நாம் தமிழர் முயற்சிகளில் அனைத்திலும் என் தாய் தந்தையரின் பங்கு உண்டு. அவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் சீமான் இன்னொரு மகன்.

மூத்த மகன் எடுக்கின்ற முயற்சிகளுக்கு இளைய மகன் நிற்க வேண்டும் என்கிற தீவிரம் அவர்களுக்கு எப்போதுமே உண்டு.

போராட்டத்தில் நின்று நான் பேசி முடிக்கும் வரை அம்மா என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த தன் மிக முக்கியமான காரணம் தஞ்சை சாலையில் தடுமாறி விழுந்துவிட்ட தன் மகன் கும்பகோணத்தில் விழாமல் நின்று பேசி விடுவான் என்ற நம்பிக்கை.

அம்மா நம்பிக்கை என்று பலிக்காமல் இருந்திருக்கிறது..??

நானும் பேசிவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

அம்மா நான் நன்றாக பேசினேனா என்று என் கேள்விக்கு..

கலங்கிய விழிகளோடு என் அம்மா அளித்த பதில் ..

“நல்லா ஆயிட்ட.”

❤️

அம்மாவைப் போன்ற ஒரு தேவதை என் பக்கத்தில் இருக்கும் போது எனக்கு என்னதான் நேர்ந்து விடும்..??

மாபெரும் தாய்.

நியாயத்தின் கதை.

????

நியாயம்

என்ற

வினாவின் ஓசை

நடுநிசியில்

மூடப்படாத

குடிநீர் பைப்பு

போல

சரித்திரத்தின்

வீதிகளிலே

சொட்டி கொண்டே

இருக்கிறது.

எது நியாயம்

என்பதற்கு

அவரவருக்கு

ஒரு தர்க்கம்.

ஆளாளுக்கு

ஒரு கதை.

வரையறையற்ற

சுதந்திரத்துடன்

அவரவர்‌ விழிகளில்

படுகிற காட்சியாய்,

இலக்கற்ற ஓவியமாய்,

அலைந்துக் கொண்டே

இருக்கும் சீரற்ற

சிதறலாய் நியாயம்.

எந்த திசையில்

நியாயம் உறைகிறது

என்று எவருக்குமே

தெரியாது.

ஏனெனில்

நியாயம்

திசைகளை அழித்து

அவரவருக்கு

ஒரு திசையை

பிரசவிக்கிறது.

நியாயத்தை

பற்றி எழுதி எழுதி

எழுதுகோல்கள்

முனை உடைந்து

இருக்கின்றன.

அவரவருக்கான

நியாயத்தின்

பழுப்பேறிய

ஏடுகளின்

வாக்கியங்கள்

தங்களுக்கு தாங்களே

அவ்வப்போது

மாறிக் கொள்கின்றன.

அப்படி என்றால்

நியாயம் என்றால் என்ன

என்று புத்தனின் கடைசி

சீடன் சுமன் கேட்டான்.

தனக்குள் ஆழ்ந்திருந்த

புத்தன் தன் மௌனத்தை

கலைத்து சொன்னான்.

“அடுத்தவரின்

பார்வையை

உன் விழிகளில்

பார்த்தால்

அது தான் நியாயம்.”

காலம் ஒரு முறை

சிலிர்த்து அடங்கியது.

❤️

இதுதான் என் வாழ்வு.

அப்போது நான்

அப்படி

செய்திருக்க

கூடாது என்கிற

ஒன்றே ஒன்றை

வாழ்வின்

பல

சமயங்களில்

நீக்கி விட்டு

பார்த்தால்..

எதுவுமே இல்லை

வாழ்வில்.

????

தேன் மொழி

நிறைவேறி விட்ட உறவில்

தேன்மொழி

மரணம் அடைகிறாள்.

நிறைவேறாத

ஏக்கத்தில் தான்

தேன்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

உண்மையில்

தேன்மொழியை தேடி

அலைபவர்கள்

காணும் போது

தொலைத்து விடுகிறார்கள்.

சொல்லப்போனால் தொலைப்பதற்காகவே

கண்டெடுக்கப்படுகிறவள் தான்

தேன்மொழி.

மீண்டும்

மீண்டும்

அலைகள்

கரைகளை நோக்கி

வந்து கொண்டு தான்

இருக்கின்றன.

ஆனால்

செந்நிற அந்தி

ஒன்றில்

கைநழுவிப்போன

அந்த ஒரு அலை

திரும்பி வருவதே இல்லை.

நினைவின்

உயிர் கால்

நனைத்து

ஒருபோதும்

திரும்பி

வராமல் போன

அந்த அலை தான்

தேன் மொழி.

❤️

Powered by WordPress & Theme by Anders Norén