பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூலை 2009

மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

(இக்கடிதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீப வினைகளுக்கு எதிராகவும், தமிழ்நதியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்டது.)

மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் உள்ள வன்மம் சோபா சக்தி உள்ளிட்ட இவர்களைப் போன்ற ஆட்களுக்கு வன்னி மக்களின் துயரத்தின் மீது இப்போது கவிழ்ந்திருக்கிறது.என்னைப் போன்ற தாயகத் தமிழனுக்கு ஆறாத வடுவாய்,மாறாத குற்ற உணர்ச்சியாய் ஈழ மக்களின் துயரம் இதயத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. தினம் தோறும் மனித வாழ்வில் நுகரப்படும் சாதாரண சலுகைகளும் , இன்ப உணர்வுகளும் கூட இச்சமயத்தில் நம்மை இயல்பிற்கு மீறிய குற்ற உணர்ச்சியில் வீழ்த்துகிறது. ஆனால் ஆதவன் தீட்சண்யாவும், சோபா சக்தியும் இந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்து..குறை சொல்லி …வன்மம் பாராட்டுகிறார்கள் என்றால் நம் எதிரி சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல என்பதை நாம் உணர்கிறோம். வலி சுமப்பதை விட இந்த வக்கிரக்காரர்களின் வன்மத்தை சுமப்பது அவ்வளவு எளிதல்ல.. ஆனால் மீண்டெழுதல் என்பது சவால்கள் நிறைந்ததுதான். இணைந்தே எதிர்க் கொள்ளலாம்.
இந்த வக்கிரக்காரர்களின் பின்புல அரசியல் மிக கீழ்த்தரமானது. மக்கள் அவலத்தின் ஊடே இவர்கள் தேடுவது எவ்விதமான நியாயத் தீர்வுகளும் இல்லை. மாறாக இவர்களின் சொல்களின் ஊடாக கசியும் மனித இறைச்சி வாசனை கொடுங்கோலன் ராஜபக்சே மனநிலையை விட அபாயமானது. புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகுதான் இவர்களுக்கு வாயே முளைத்திருக்கிறது..முளைத்ததும் கள்ளிப் பாலாய் சொட்டுகிறது. இது போன்ற நபர்களை பொருட்படுத்தாமல் இருப்பதும் அபாயம்தான். இவர்களை தனிமைப்படுத்துவதும்..இவர்களின் பின்புல அரசியலை ஊரறியச் செய்வதும்தான் நம் பணியாக இருக்கிறது. ஒரு விடுதலை இயக்கத்தினை வாய் கூசாமல் விமர்சனம் என்கிற பெயரில் ஏசவும், தூற்றவும் துணிகிற இவர்களது சொல்லாடல்களின் பின்னால் உள்ள அரசியல் என்ன தெரியுமா..?
இவர்களின் ஒருவரான சுகன் ..சென்னையில் நடந்த சமீபத்திய கூட்டமொன்றில் சிங்கள தேசிய பாடலை பெருமையுடன் பாடுவதில் இருந்து இவர்கள் யார் …? இந்த நரிகள் யாருக்காக ஓலமிடுகின்றன…? என்பது தெரியவில்லையா..?

தோழமையுடன்

மணி.செந்தில்

கும்பகோணம்

தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….

ஈழ உறவுகளுக்கு…
தாயகத் தமிழகத்திலிருந்து…மிகுந்த குற்ற உணர்ச்சியின் ஊடே எழுதுகிறேன். அரசியல் பிழைப்பு வாதிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு மீண்டு எழவே முடியாத ஆழ் இருட்டிற்குள் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எம் முன்னரே எம் இனம் அழிக்கப்பட்டது. யாரும் கேட்கவில்லை. முத்துக் குமாரர்களாய் செத்தும் பார்த்தோம்..சீண்ட நாதியில்லை..தேர்தல் கூத்தில் சிக்கி சின்னாபின்னமாய் சிதைக்கப்பட்டோம் இறுதியில். காசுக்கும்,பதவிக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டு காவு வாங்கப்பட்டோம் நாங்கள்..உங்களின் துயரம் எங்களின் மாறாத வடுவாய்..தோல்வியாய் வரலாற்றின் முன்னால் எங்களை தலை குனிந்து நிற்க வைத்திருக்கிறது. உங்களின் முகத்தை பார்க்க கூட எங்களுக்கு திராணியில்லை. உங்களின் துயரத்தை கேட்டு பொங்கி அழ கூட எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
இங்கே சினிமா ரசனையும்..மாத சம்பளம் வாங்கும் வர்க்கமும்…போதையில் முழ்கிக் கிடக்கும் கூட்டமும் அரசியலை தீர்மானிக்கின்றன..இங்கே யாருக்கும் தொன்மம் குறித்த புரிதலோ..தமிழ்ச் சமூகம் குறித்த அறிதலோ இல்லை.
மிக எளிதாக நாங்கள் விலைபோனோம் உறவுகளே… எங்களை நாங்களே காட்டிக் கொடுக்க சில ரூபாய் தாள்கள் போதுமானதாக இருந்தது. எங்களின் தொன்ம பெருமை மிகு அடையாளமாய் இருந்த உங்களை கொன்று குவிக்க காரணமாய் இருந்தவர்கள் மேடை ஏறும் போது..நாங்கள் தலைவர்கள் தொண்டை கிழியும் அளவிற்கு வாழ்க கோஷம் போட்டுக் கொண்டு இருந்தோம். தமிழ் மரபுகளை மீட்டெடுத்து..இந்த தலைமுறையின் கண்களுக்கு முன்னாலேயே நாடு கட்டி ஆண்டு பார்த்த எங்கள் உறவுகளான உங்களை அழிக்க மூலமாய் இருந்தவர்களின் கரங்களில் நாங்கள் மலர்க் கொத்து கொடுத்து கொண்டிருந்தோம்.
நீங்கள் தொப்புள் கொடி நம்மை துவளாமல் காக்கும் என நம்பிக்கையோடு இருந்தீர்கள் உறவுகளே….இறுதி வரைக்கும் காத்திருந்தீர்கள்.ஆனால் நாங்கள் ..கேவலம். ஒரு சாராயப் பாக்கெட்டிற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும், இருநூறு ரூபாய் காசுக்காகவும் உங்களை கைக் கழுவி விட்டோம் உறவுகளே…
நீங்கள் பசியால் கதறிய போது..கூக்குரல் கேட்க கூடாது என மருத்துவமனையின் ஏசி அறைக்குள் ஒளிந்துக் கொண்டோம்..
சாவுக் குழிகளுக்குள் நின்றுக் கொண்டு யாராவது காப்பாற்ற வாருங்களேன் நீங்கள் என கதறிய போது ..நாங்கள் கடற்கரை காற்று வாங்க … மதிய உணவு நேரம் வரைக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தினோம்.
மழை மழையாய் பொழிந்த குண்டுகளினால் காயம் பட்டு…வலி பொறுக்க முடியாமல் நீங்கள் சயனைடு குப்பிகளை மென்ற போது..நாங்கள் தேர்தல் வெளிச்சத்தில் எங்களை மறந்துக் கொண்டிருந்தோம்.
எல்லாம் முடிந்தது. வதை முகாம்களில் சிக்குண்டு கிடக்கிற உங்களை நாங்கள் சிந்தித்து பார்க்கவே கூடாது என்பதற்காக..விதவிதமான திரைக்கதைகள்..விதவிதமான நாடகங்கள்..
ஈழ உறவுகளை காப்பாற்றாமல் ..இந்த ஆட்சி இருந்தால் என்ன..போனால் என்ன என்று உருக்கமாய் அய்யகோ கூப்பாடு போட்டோம். .
இங்கு அனைத்திற்குமே ஒரு விலை இருக்கிறது..
எனவே தான் எங்களது ஊழலுக்கும் ,பதவிக்குமான விலையாய் உங்களை நிர்ணயித்தோம்.
ஆனால் டெல்லிக்காரன் புத்திசாலி. இந்த முறை அவன் வாங்கியது உங்களை அல்ல உறவுகளே..
எங்களை.
எங்களை நாங்களே ஒரு விலை போட்டு விற்றுக் கொண்ட கூத்திற்கு இங்கே வித்தியாசமான ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது பெயர் தேர்தல்.
இனி தாயகத் தமிழகத்தில் இப்போது வாழும் இந்த தலைமுறை தன் வாழ்நாள் முழுக்க துயர் மிகு வலியை சுமந்தே வாழும். இதற்கு அப்பாலும் உங்களை நாங்கள் எங்கள் உயிரினும் மேலாய் நேசித்தோம் உறவுகளே..அதை நாங்கள் முத்துக்குமாராய் நிரூபித்தும் காட்டினோம்.,தெரு தெருவாய் அலைந்து மக்களை திரட்டி..ஆர்பார்ட்டம், பேரணி, உண்ணாவிரதம், மறியல், மனித சங்கிலி என அனைத்தும் செய்தோம்.ஆனால் இந்திய அரசு எங்களை சிறிது கூட மதிக்க வில்லை. எப்படி எங்களை மத்திய அரசு மதிக்கும்..? பதவிக்காகவும், ஊழல் பிழைப்பிற்காகவும் எங்கள் தலைவர்கள் தான் டெல்லியின் காலை தொழுதுக் கொண்டிருக்கிறார்களே….எப்படி மதிக்கும்…?…எல்லாம் முடிந்த பின்னர்…என்ன செய்வது என்று தெரியாமல் வலி மிகுந்த மெளனத்தோடு தலைக் குனிந்து நடக்கிறோம்… பிறர் அறியாமல் தனிமையில் அழுகிறோம்.. தலைவரால் நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.. நாங்கள் தலைவர்களால் அழிந்துப் போனோம். இது தான் உண்மை.தமிழர்களுக்கான தேசத்தை நீங்கள் அவசியம் கட்டமைப்பீர்கள். உறவுளே… அதில் எனக்கெல்லாம் எள்ளவும் சந்தேகமில்லை..ஆனால் அந்த வெற்றியில் நாயினும் இழி பிறவிகளான எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் எழுவதும் …வாழ்வதும் சாத்தியம் தான் …ஆனால் நாங்கள்.?
துரோகங்களை வெல்லுங்கள்…
யாருக்கும்..எதற்கும் விலை போகாதீர்கள்…
நல்லத் தலைவனின் வழி தொடருங்கள்..
இல்லையேல் நாளை நம்முடையதல்ல..
அதற்கு சாட்சியாக… தோற்ற சமூகமாக..உங்கள் தாயக தமிழ் உறவுகள்
நாங்கள் இருக்கிறோம்..
எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்..
எப்படி வாழக் கூடாது என்பதற்கு.
தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….
மணி.செந்தில்

Powered by WordPress & Theme by Anders Norén