பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜூன் 2010

நீதிமன்றத்தில் தமிழ் – தமிழ் தேசிய இன தன்னெழுச்சி கோரிக்கை .


நம் கண் முன்னால் ஈழ மக்கள் வல்லாதிக்க நாடுகளால் கொத்து கொத்தாய் கொன்று குவிக்கப்படுகையில் உணர்வு உந்த ஆவேசமாய் போராடிய வழக்கறிஞர்கள், தன் தாய்மொழியை, தன் சொந்த நிலத்தின் நீதிமன்ற மொழியாக அறிவிக்க கோரி சாகவும் துணிந்திருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் வரலாறு விசித்திரமானது. வல்லான் வகுத்ததே சட்டம் என்ற முது மொழிக்கேற்ப மன்னராட்சி காலத்தில் அரண்மனைகள்தான் அறம் கூறும் மனைகளாக திகழ்ந்தன. The king can do no wrong – என்றெல்லாம் அதிகாரத்தின் உச்சம் தெறிக்கின்ற துளிகளே நீதியாகவும், சட்டமாகவும் விளங்கிய காலத்தில் எளிய மனிதர்களுக்கு நீதி என்பது அவ்வப்போது எட்டிப் பார்க்கின்ற நிலவாய் நின்றது. நீதி பரிபாலனம், சட்ட விதிகள் ,நீதி பரிபாலன அலுவல் முறைகள் என அனைத்தையும் மேலை நாடுகளிடம் இருந்து உள் வாங்கிய இந்திய நீதி வழங்கல் தன்மை மிகவும் பழமைத் தன்மை உடையது. எடுத்துக்காட்டாக வெப்ப நாடான நம் நிலத்தில் வழக்கறிஞர்களின் உடை முற்றிலும் முரண் தன்மை உடையதாக விளங்குகிறது. ஆங்கிலேய வந்தேறிகளின் பல சட்டங்கள் இன்றளவும் நம் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

வழக்கறிஞர்கள் தொழிலும், நீதிபதிகளுக்கான தகுதிகளும் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் வசமே சார்ந்து இருந்தன. உச்சமும், அதிகாரமும், எங்கு குவிகிறதோ அங்கு பார்ப்பன ஊடுருவல் உடனடியாக நடக்கும் என்ற வரலாற்று சமூக விதிக்கு ஒப்பாக வழக்கறிஞர் தொழிலையும் பார்ப்பனர்கள் கைப்பற்றி இந்த நாட்டில் 90 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்து நீதித்துறையை மிகவும் அன்னியப் படுத்தி, கடவுளுக்கு நிகரான புனிதத் தன்மையை ஏற்படுத்தி உச்சாணிக் கொம்பில் உயரத்தில் வைத்தார்கள். 1862 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமே வழக்கறிஞராக முடியும். 1870 க்கு பிறகே ஆங்கிலேயர்கள் தவிர்த்த இந்தியரும் வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அந்த காலக்கட்டத்தில் சரசுவதி குடியிருந்த நாக்காக விளங்கிய பார்ப்பனர்களே இந்த தொழிலை ஆக்கிரமிக்க துவங்கினர் . வழக்கறிஞர் சங்கம் என அழைக்கப்படும் வக்கீல் பார் 1888 ஆண்டு மயிலாப்பூரில் எஸ்.சுப்பிரமணிய அய்யர் என்ற பிராமணரால் துவக்கப்பட்டது. இவ்வாறெல்லாம் தமிழுக்கு முற்றிலும் தொடர்பில்லாத வந்தேறிகளிடம் சிக்கிய நீதித்துறை இன்றளவும் தமிழை ஏற்றுக்கொள்ள தடுமாறிக் கொண்டு நிற்கிறது. தந்தை பெரியார் என்ற மகத்தான மனிதனின் வருகைக்குப் பிறகுதான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கரங்களுக்கு கல்வி போய் சேர்ந்த்து. அதற்குப்பிறகுதான் வானுயர நின்ற வழக்கறிஞர் தொழிலும் எளிய மக்களின் கரங்களிடம் வசப்பட்டது.

மானுட இனத்தின் தனித்த அடையாளமாய் மொழி திகழ்கிறது. மொழியே ஒரு இனத்தின் பண்பாட்டு வரலாற்றின் அடிப்படையாகவும், தொடர்ச்சிக்கான ஆதாரமாகவும் விளங்குகிறது. சமூகத்தின் தகவல் பரிமாற்ற தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்ல மொழியின் பணி. ஒரு இனத்தின் அனைத்து சமூக கூறுகளிலும் மொழியின் ஆதிக்கமும், அவசியமும் தொடர்கிறது. மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் போக்கினை மொழிதான் உறுதி செய்தது. எனவே தான் தேசிய இன வரையறைவியலின் அடிப்படை அலகாக மொழி திகழ்கிறது. தேசிய இனத்தின் உயரிய சின்னமாக விளங்கும் மொழிதான் அந்தந்த இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை தீர்மானிக்கிற காரணியாக விளங்குகிறது.உலக மொழிகளில் மிக தொன்மையான தமிழ் மொழியை பேசுகின்ற நாம் …நம் தாய்மொழியை வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டும் காணாமல் நம் தனித்த அடையாளமாய் போற்றி பாதுகாக்க முயன்று வருகிறோம். “வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி” என பாரதி சிலிர்த்து , “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி” என புறப்பொருள் வெண்பாமாலை புகழ்ந்து, 3000 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வளமையையும், இலக்கிய செழுமையும் பெற்று உயர்த் தனி செம்மொழியாக திகழ்கிறது நம் தமிழ் மொழி.

இந்தியா போன்ற பல மொழிகளும், முரண்பட்ட பருவ காலங்கள் நிலவும் வெவ்வேறு விதமான நிலத் தன்மைகளும் நிரம்பிய ஒரு நாட்டில் அந்தந்த தேசிய இனங்களுக்கான அடிப்படை அடையாளமாக மொழியே திகழ்கிறது. இந்திய அரசியலைப்பு இந்த பரந்துப்பட்ட நிலவியலில் உலவும் மொழிகளில் அதனதன் வரலாற்று தன்மைகளுக்கு ஏற்பவும், மக்களின் உபயோகத் தன்மைகளுக்கு ஏற்பவும் 2003 ஆம் ஆண்டின் அரசமைப்பு 92 ஆம் திருத்தச் சட்டத்தின் படி தமிழ் உள்ளீட்ட 22 அலுவல் மொழிகளை அரசியலைப்பு எட்டாம் அட்டவணையில் அடையாளம் காட்டுகிறது. இந்த மொழிகள் அதனதன் அளவில் செழித்தோங்க உரிமையும், பயன்பாட்டு தன்மையில் விரிந்து பரவ உரிமையும் கொண்டு தன்னகத்தே தனித்த இறையாண்மை கொண்டும் விளங்குகின்றன. ஒரு நிலை நிறுத்தப்பட்ட முழு சனநாயகம் தேசிய இனங்களின் தாய்மொழியின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை ஆதரித்து உறுதி செய்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து மத்தியில் ஆள்பவர்கள் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருந்ததால் அவர்களின் தாய்மொழியை பெரும்பான்மை என்ற தட்டையான தகுதியை வைத்துக் கொண்டு பன் முக மொழிகள் நிலவும் ஒரு பரந்துப்பட்ட நிலத்தில் எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் தேசிய மொழியாக தேவநாகரி வடிவத்துள்ள இந்தியை அறிவிக்க முடிந்தது.அதற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பினை உறுதி செய்ய அரசமைப்பு சட்டம் உறுப்பு 343 வழிவகை செய்கிறது. மேலும் எவ்வித மனத்தயக்கமும் இல்லாமல் மற்ற தேசிய இனத்தவர் வாழும் நிலங்களில் இந்தியை புகுத்தவும் முடிந்தது. உறுப்பு 351 இந்தியை பரப்புவது யூனியனின் கடமை என அறிவித்துள்ளது. பல்வேறு பட்ட மொழி வாரி தேசிய இனங்கள் உள்ள நாட்டில் இந்தி மட்டும் பரப்ப வேண்டியது ஒரு கடமையாக அரசமைப்பு சட்டத்தினால் கூறப்பட்டிருப்பது முற்றிலும் ஒரு தலைச்சார்பானது. மேற்கண்ட உறுப்பு 351-ன் காரணமாகவே ஆர். ஆர். தளவாய் எதிர் தமிழ்நாடு மாநிலம் (AIR 1976 SC 1559) என்ற வழக்கில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்க்கு ஒய்வூதியம் அளிக்கும் தமிழக அரசின் திட்டம் உச்சநீதிமன்றத்தினால் ஏற்க முடியவில்லை. தமிழினத்தின் தேசிய தன்னெழுச்சி உணர்வாக பற்றி பரவிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் இந்தியின் ஆதிக்கம் ஒரளவு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்றளவும் இந்திய நிலத்தின் ஆகச் சிறந்த ஒற்றை மொழியாக இந்தியை நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தேசிய இனத்திற்கான தன்னுரிமைகளில் முதன்மையானதாக திகழும் மொழிக்கான உரிமை நீதித்துறையில் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு அடையாளம் காட்டிய 22 அலுவல் மொழிகளில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆட்சி மொழியாக , அலுவல் மொழியாக இருக்கின்றன. பீகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தி மட்டுமே நீதிமன்ற மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் இந்திய அரசினால் அடையாளம் காட்டப்பட்ட 22 அலுவல் மொழிகளில் இந்தியை தவிர மற்ற மொழிகளை நீதிமன்ற அலுவல் மொழியாக அதனதன் மாநிலங்களில் மத்திய அரசு அறிவிக்காத பாரப்பட்சத் தன்மை இந்தியா அணிந்துக் கொண்டிருக்கும் சனநாயக முகமூடிக்கு ஏற்புடையதாக இல்லை. இத்தகைய பாரபட்ச மொழிக்கொள்கை இந்தியை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு சாதகமாகவும், மற்ற மொழி சார் தேசிய இனங்களுக்கு விரோதமாகவும் இருக்கின்றது. மற்றொரு அலுவல் மொழியான ஆங்கிலம் தமிழின மக்களின் சமூக வாழ்வியலை மிக கடுமையாக நசிப்பதாக இருப்பதோடு மட்டுமில்லாமல் விளிம்பு நிலை மக்களின் பயன்பாட்டிற்கு எதிராக உள்ளது. இந்த பரந்து பட்ட நிலத்தில் இங்கு வசிப்பவர் யாருக்குமே தாய்மொழியாக ஆங்கிலம் இல்லை. ஆனால் ஆங்கிலம் நமக்கான நீதிமன்ற மொழியாக இருப்பது வெட்ககேடான ஒன்று.

எளிய மனிதனின் இறுதி நம்பிக்கை நீதிமன்றம். நீதிமன்றங்களின் அனைத்து கதவுளும் மூடப்பட்டு ..இருட்டு அறைக்குள் …புரியாத மொழியாய் வழிந்தோடும் நீதி எப்படி மக்களுக்கு எட்டும் ஒன்றாக இருக்கப் போகிறது என்பது புரியவில்லை. பரந்த எண்ணிக்கையில் வாழும் மக்களின் மொழியில் இல்லாத சட்டமும், நீதியும் எதன் பொருட்டு அன்னிய மொழியில் அமையவேண்டும் என்பதில் தான் அனைத்து வித சதிகளும் அடங்கி இருக்கின்றன. இந்திய அரசியலைப்பு உறுப்பு 348 நீதிமன்ற அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழிகள் இருக்க தடை இல்லை என தெளிவாக உரைக்கின்ற போதும் கூட இன்றளவும் மத்திய ,மாநில அரசுகளின் கனத்த மெளனம் கள்ளத்தனமான ஒன்று என்பது வெளிப்படை.

மக்களுக்கான பயன்பாட்டு வெளியாக வெளிப்படையாக திகழ வேண்டிய நீதிமன்றம் யாருக்காக …எதன் பொருட்டு… மக்கள் மொழியில் இல்லாமல் போக வேண்டும் ? . சமூக தளத்திற்கு மிக நெருக்கமான வழக்கறிஞர்களின் வாதங்கள் மிக வெளிப்படையாக , மக்களின் தாய்மொழியில் அமைவதுதான் நேர்மையானதாக இருக்க இயலும். கடவுளின் இருக்கைக்கு நிகரானதாக புரியாத மொழி பீடங்களினால் நிர்மாணிக்கப்பட்ட நீதிபதிகளின் இருக்கையும்… மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் புரளும் சட்டத்தின் நாக்குகளும் ,மக்களின் மொழிக்கு எதிராக இருக்கும் போது…தகர்த்தெறியாமல் என்ன செய்வது..?

உயர் தனிச்செம்மொழியாக மத்திய அரசு தமிழ் மொழியை அறிவித்து விட்டதாக ஆடம்பரம் பொங்க…கொண்டாட்ட காட்சிகள் அரங்கேறுகின்ற இவ்வேளையில் …ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியால் ஒரு ஒற்றை சுற்றறிக்கை மூலம் கூட தமிழுக்கு அங்கீகாரம் தர இயலவில்லை. கேட்டால் வந்து பேசுங்கள்..நாங்கள் தடுக்க மாட்டோம் என்று தர்க்கம் வேறு. தமிழில் பேசினால் தடுக்காமல் இருப்பது எப்படி தமிழ்மொழிக்கான அங்கீகாரமாக நினைக்க முடியும்…? . தமிழில் பேசுவது மட்டுமே பயன்பாட்டின் மொத்த வடிவத்தினை உள்ளடக்காது. மாறாக நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் மொழியில் நிகழ்வதற்கு யாருமே வாய்மொழியாக கூட உத்திரவிட மறுக்கிறார்களே ஏன்..? எம் தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தினை ஒரு ஒற்றை சுற்றறிக்கையில் சுருக்கி வைத்து .. இந்தி பேசாதவர்களின் எண்ணிக்கை 50% விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கும் இந்த நாட்டில் இந்திக்கும், வந்தேறி மொழியான ஆங்கிலத்திற்கும் கொடுக்கும் குறைந்தப் பட்ச மதிப்பினை ..3000 ஆண்டுகட்கு முந்தைய எம் உயிருக்கு நிகரான எம் தாய்மொழிக்கு வழங்காத நீதிமன்றமும், அதன் சட்டங்களும் எதன் பொருட்டும் எமக்கு எதிரானவைகளே…நீதிமன்றத்தில் தமிழ் என்பது தமிழ் தேசிய இனத்தின் நியாயமான கோரல் மட்டுமல்ல . ஏற்கனவே ஒடுக்கப்பட்டு ,தோற்கடிக்கப்பட்டு நிர்கதியாய் நிற்கும் ஒரு இனத்தின் தன்னெழுச்சி முழக்கம்.

எனதருமை தமிழர்களே…

நம் பண்பாட்டின் ஆணி வேராக திகழும் ..நம் உயிருக்கு நிகரான நம் தாய்மொழியாம் தமிழினை இத்தனை ஆண்டு காலம் இருட்டில் வைத்து ஒதுக்கி வைத்தது போதும். தமிழர்களின் அடிப்படையான இக்கோரிக்கைக்காக உணர்வுள்ள வழக்கறிஞர்கள் உயிரை விடவும் துணிந்து இருக்கிறார்கள்.

இனி இழப்பதற்கு நம்மிடத்தில் ஏதும் இல்லை. நம் உயிரான மொழியை தவிர..

மொழியையும் இழந்து …சொற்கள் அற்ற ஊமைகளாய்.. உணர்வற்று திரிவதைதான் ஆள்பவர்கள் விரும்புகிறார்கள்..

நம் உயிருக்கு நிகரான தமிழினை உயர்நீதிமன்றத்தில் உயர்த்துவோம்.

விரல் கோர்த்து உயர்த்தும் கரங்களால் ..விண்ணையும் முட்டுவோம்.

வாருங்கள்.. மொழிப் போற்ற போரிடுவோம்.

“செந்தமிழைச் செந்தமிழ்நாட்டைச் சிறைமீட்க

நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்

வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்தி குரலெடுத்து கூவாய்” – பாவேந்தர் பாரதிதாசன்

முத்துக்குமாரும்…முடிவற்ற ஒரு கவிதையும்


நித்யானந்தாவை நித்தமும் பழிக்கும்

என் மனைவிக்கு இன்று வரை தெரியாது

முத்துக்குமார் என்றொருவன்

மரித்துப்போனது.

என்றாவது ஒருநாள்

எனது நாட்குறிப்பிலுள்ள

அவன் புகைப்படத்தைக் காட்டிக் கேட்பாள்

அப்போது சொல்லிக்கொள்ளலாம்…

நம்மையெல்லாம் ஏமாற்றினானே

ஒரு நித்யானந்தா

அவனைப்போல

நம் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன்தான்

இந்த முத்துக்குமாரென்று!

– என் மனைவியும் ,நித்யானந்தாவும் – சொல்வனம் பகுதி- ஆனந்த விகடன் – முத்துரூபாகடந்த வார ஒரு நள்ளிரவில் இக்கவிதையை நான் படித்தேன். பொதுவாக கவிதைகள் என்பவற்றை படைப்பாளனின் உச்சக்கட்ட உணர்வாக மட்டும் உணரும் என்னால் இக் கவிதையை மிக எளிதில் கடக்க இயலவில்லை. வலி மிகுந்த குற்ற உணர்வால் அந்த இரவில் நான் அழுத்தப்பட்டு கண்கலங்கி விழித்துக் கிடந்தேன்.

முத்துக்குமார் – நம் வாழ்நாள் முழுக்க ஏதோ தருணங்களின் மிச்ச சொச்சத்தில் ஒட்டிக் கொண்டே வரப் போகின்ற உணர்வாய் நம்முள் சுரந்துக் கொண்டே இருக்கின்றான். முத்துக்குமாருக்கு பின்னால் பல உணர்வுள்ள தமிழர்கள் அவனது பாதையை பின்பற்றினாலும் முத்துக்குமாரின் ஈகை தனித்துவ உணர்வாய் ஒவ்வொரு தமிழனின் மனசாட்சியையும் உலுக்கியது.

தான் சாகப்போகிறோம் என்பதை உணரும் தருணங்களில் அந்த இளைஞன் மிகவும் யோசித்து இருக்கிறான். தற்கொலை என்பது கோழைகளின் முடிவென்றாலும்…இது உணர்ச்சி வயப்பட்ட ஒரு இளைஞனின் தற்கொலையாக நம்மால் கணிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்திருக்கின்றான் அவன். காலநதியின் சீரற்ற ஓட்டத்தில் ஏதோ ஒரு நொடியில் சட்டென்று எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல அது. மாறாக காலம் காலமாய் இறையாண்மை என்ற பெயரினால் அடக்கி வைக்கப்பட்ட தொன்மமிக்க ஒரு தேசிய இனத்தின் பொங்கி பாய்ந்த பிரவாகமாய் பிறீட்டு கிளம்பிய முத்துக்குமாரின் ஈகை நம்மை மிச்சம் இருக்கின்ற இந்த வாழ்நாட்களில் நிம்மதியாக இருக்கவிடாது.

என்னைப் பொறுத்தவரை நான் என் வாழ்நாளில் சுமக்கும் மிகப்பெரிய குற்ற உணர்வு முத்துக்குமார். அவனது தியாகம் நம்மைப் போன்றோர் சமூக இயல்பாக கொண்டிருக்கும் சுயநல, சுக நுகர்வு உள்ளத்தினை சுட்டுப் பொசுக்கிறது. நாம் தமிழர் கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் முத்துக்குமாரின் தந்தை , அப்பா குமரேசன் அருகில் அமரும் போது என்னால் இயல்பாக அமர இயலவில்லை. அவரின் கைகளினை நான் ஒரு சமயம் பற்றிய போது அக்கரங்கள் முத்துக்குமாரினை சுமந்திருக்கும் என்ற உணர்வே என்னை மிகவும் உணர்வு வயப்படுத்தியது.

நமக்கெல்லாம் வாய்க்காத ஒரு மனத்தினை பெற்றிருந்தான் முத்துக்குமார்.நமக்கெல்லாம் வாய்த்திருக்கின்ற சுக வாழ்விற்கான அனைத்து வாய்ப்புகளும் முத்துக்குமாருக்கும் கிடைத்து இருந்தன. ஆனால் நாமெல்லாம் பிழைப்பதற்காவும்,சோற்றுக்காகவும் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பொருளீட்டி , மனைவி மக்களுக்கு வீடு கட்டி , பிறக்க இருக்கின்ற பேரன் பேத்திகளுக்காக சொத்து சேர்த்து வாழ்கின்ற காலத்தில் தான் முத்துக்குமார் இவ்வாறு சிந்தித்தான்….முத்துக்குமாரால் இவ்வாறு சிந்திக்க முடிந்த கணத்தில் துவங்கி அவன் தமிழனின் மங்காப் புகழாய் மாறிப் போனான். வாழ்வதற்கான போராட்டம் தான் வாழ்க்கை என்பதை மறுதலித்து வாழ்வதற்கான புதிய இலக்கணத்தினை உரத்தக் குரலில் ஒவ்வொரு உணர்வு மிக்க தமிழனின் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு இருக்கின்றான் முத்துக்குமார்.

முத்துக்குமாரின் ஈகை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களால் மூன்றாம் தர அரசியலாக மாற்றப்பட்ட அவலத்தினை கற்றது தமிழ் இயக்குனர் ராம் சாட்சியாக நின்று ஏற்கனவே எழுதி இருக்கிறார். தமிழீழ விடுதலைக்கான துருப்புச் சீட்டாக மாறி இருக்க வேண்டிய முத்துக்குமாரின் தியாக உடல் , அவனது இறுதி உள வேட்கைக்கு மாறாக மிக சாதாரண நிகழ்வொன்றில் எரியூட்டப்பட்டது.

இருந்தாலும்..முத்துக்குமார் இது நாள் வரை சாகவில்லை .

தமிழக வீதிகளில் திரிந்துக் கொண்டே இருக்கின்றான். ஈழ கனவிற்கான வெப்ப பெருமூச்சாய் புழுதியடிக்கும் தமிழக வீதிகளில் திரிகின்றான் அவன். எவ்விதமான அரசியல் லாபமின்றி.. உணர்வின் பெருக்கால் ..தேசியத் தலைவர் பிரபாகரன் நீடுழி வாழ்க என அடி வயிற்றில் இருந்து முழங்கும் எளிய தமிழின இளைஞனின் குரலில் தொனித்துக் கொண்டே இருக்கின்றான். தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியை ஆர்வமாகவும், ஆசையாகவும் பகிர்ந்துக் கொள்ளும் மனங்களாய் மாறிக் கிடக்கின்றான் முத்துக்குமார். இன துரோக அரசியலின் உச்சக்கட்ட கொடுமையாக நடக்க இருக்கும் ஆடம்பர மாநாட்டின் விளம்பரத்தினை கண்டு கூட காறி உமிழும் இளைஞனின் கோபத்தில் இருக்கின்றான் முத்துக்குமார். இனம் முள்வேலி கம்பிக்குள் அடிமைப்பட்டு கிடக்கையில் அம்பத்தூரில் கக்கூஸ் கழுவவில்லை போராட்டம் அறிவிக்கும் பித்தலாட்ட அரசியலினை இடது காலால் எட்டி உதைக்கும் இறுமாப்பு இதயங்களில் இருக்கின்றான் முத்துக்குமார்.ஒரு சீட்டுக்காக ஒற்றைக் கால் ஒடிய தவமிருந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் பதவி அரசியலின் பம்மாத்துத் தனத்தினை கண்டு பரிகசிக்கும் வார்த்தைகளில் வழிகிறான் முத்துக்குமார்.

முத்துக்குமாரின் ஈகை யாரும் கடக்க இயலா வெப்ப பாலைவனமாய் நம்முன் விரிந்து கிடக்கின்றது. அது பசித்த வேட்டை நாயைப் போல பின்னிரவு கனவுகளில் வேகமாய் துரத்துகின்றது. புரையோடிய புண்ணாய் …குத்திக் கிழிக்கும் வலியாய்.. சதா ஈழத்தினை நினைவூட்டி நிற்கும் அது.

தமிழன் என்று பதியுங்கள்: தமிழன் என்றே உணருங்கள்

நன்றி- பட உதவி- வினவு தளம்

தமிழன் என்று பதியுங்கள்: தமிழன் என்றே உணருங்கள்

நாடெங்கும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பில் திராவிடன் என்ற இனமாக தமிழர்கள் தங்களை குறிக்க வேண்டும் என நாய் ஆளுங்கட்சியாக இருந்தால் கூட நா கூசமால் ஜால்ரா அடிக்கும் தி.க. தலைவர் வீரமணி கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களை வீரமணியும், அவரது தி.கவும் சமீப காலங்களில் பேசுவது இல்லை. ஆனால் தூக்கத்தில் இருந்து திடீரென எழுப்பப்பட்டவன் எச்சில் வடிய எகத்தாளம் பேசுவது போல இந்த இத்துப் போன பழைய ரேடியோ பெட்டி திராவிட ராகம் பாடியுள்ளது . வீரமணியின் இல்லாத திராவிடத்தினை மீண்டும் தூக்கி நிற்க முயற்சிக்கும் இந்த துரோக அரசியல் புறங்கையால் புறக்கணிக்கத் தக்கது.

ஒரு தொன்ம தேசிய இனத்தின் மக்கள் எதற்காக தங்களை வேறு ஒரு இனமாக பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு வீணாய்ப் போன வீரமணியிடம் எந்த பதிலும் இருக்கப் போவதில்லை. ஆனால் இந்த வார்த்தையை திராவிடர்களின் தலைவராக இருக்க கூடிய வீரமணி தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடம் சொல்வதற்கு துணிவு பெற்றிருக்கிறரா என்பதற்கு வீரமணியின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும். வேறு எந்த மலையாளியோ, கன்னடனோ, தெலுங்கனோ தன்னை திராவிடன் என்று பதிந்துக் கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்ற அரசியல் வாதிகள் அந்த மாநிலங்களில் இருக்கிறார்களா என நாமும் சற்று சிந்தித்துப் பார்ப்போம். நம் காலக் கொடுமை..வீரமணி போன்றவர்களை நாம் தலைவர்களாக அடைந்திருக்கிறோம். நடந்து முடிந்த ஈழ இன அழிப்பில் துணைப் போனவர்களில் இந்தியர்களை விட வீரமணி அடையாளம் காட்டும் திராவிடர்கள் தானே அதிகம் இருந்தார்கள்..? மலையாளிகள் ஈழ அழிப்பில் துணை நின்ற செயல் அவ்வளவு எளிதாக மறக்க கூடியதா என்ன..? .நம் நதி நீர் உரிமைகளில் கேரளாவும், கர்நாடகாவும் செய்கிற கொடுமைகளை எந்த திராவிடப் பட்டியலில் வைத்து இந்த வீரமணி தீர்க்கப் போகிறார்..?

தந்தை பெரியார் தமிழனுக்கு என ஒரு நாடு கேட்டவர். தமிழின இறையாண்மையை நிலைநிறுத்த பாடுப்பட்டவர். தனது சொற்களை கூட சிந்தித்து பார்த்து முடிவு செய்ய சொன்னவர். திராவிடம் என்ற சொல் பார்ப்பன மேலாண்மையை தகர்க்கும் ஆயுதமாக தந்தை பெரியார் பயன்படுத்தினார். அவருக்கு பின்னால் வந்த திராவிட இயக்கங்கள் இன்று பார்ப்பன மேலாண்மையை முழுவதுமாக இன்று ஏற்றுக் கொண்டு விட்டன. திராவிட இயக்கத்தின் தலைமையை ஒரு பார்ப்பன பெண்மணியால் மிக எளிதாக கையாளமுடிகிறது .

எதற்காக தொன்ம தமிழின மக்கள் தங்களை திராவிடனாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு வீரமணியிடம் எவ்வித பதிலுமில்லை. தமிழன் எதன் பொருட்டு திராவிடனாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்

இதே சொல்லை தெலுங்கர்களிடம், மலையாளிகளிடம், கன்னடர்களிடம் சொல்லி விட்டு நம்மிடமும் சொல்லட்டும் இந்த வீணாய் போன வீரமணி.

வீரமணியிடம் இருந்து இன்றைய தினம் தந்தை பெரியாரை விடுதலை செய்துள்ள பெரியார் தி.க உறவுகளுக்கு பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும்.


தமிழன் என்றே பதியுவோம்- தமிழன் என்றே உணருவோம்.

Powered by WordPress & Theme by Anders Norén