❤️

அந்த விடுதிக்குள் நான் நுழைந்த போது ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள். நல்ல வேளை விடுதியின் வலது மூலையில் அந்தக் கண்ணாடி ஜன்னலோர இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. அதே சிகப்புநிற நாற்காலிகள். அவள் எப்போதும் சுவரைப் பார்த்து இருக்கும் இருக்கையில்தான் அமர்வாள். சில சந்தர்ப்பங்களில் அந்த இருக்கையில் வேறு யாரோ அமர்ந்து இருந்தால்.. அந்த இருக்கை காலியாகும் வரை நின்றுகொண்டே காத்திருப்பாள்.

இது என்ன பழக்கம் என நான் கேட்டபோது .. நான் வராத நேரங்களில் அந்த இருக்கை எனக்காக காத்திருக்கிறது. அதற்காக நான் இப்போது காத்திருக்கிறேன் என விசித்திரமாக பதிலளித்தாள்.

இப்போதும் அந்த இருக்கை அவளில்லாமல் அவளுக்காக காத்துக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.

வழக்கமாக அமர்ந்தவுடன் எப்போதும் எனக்கு லெமன் சோடாவும், அவளுக்கு ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்கும் அவளே ஆர்டர் செய்வாள்.

அவள் இல்லாமல் தனியே வந்திருக்கின்ற நான் என்ன கேட்பது என யோசித்துக் கொண்டே நான் எப்போதும் அமரும் அதே நாற்காலியில் மெதுவாக அமர்ந்தேன். விடுதி முழுக்க ஏதோ ஒரு மெல்லிசை கேட்டுக்கொண்டே இருந்தது.‌ இரண்டு வரிசைக்கு அப்பால் அமர்ந்திருந்த ‌ யாரோ ஒரு பெண்ணும் இளைஞனும் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

…. நான் சிரித்துக் கொண்டேன். சொற்களை இறைப்பதுதான் உரையாடல் என பலரும் நினைக்கிறார்கள். பேசிய பொழுதுகளை விட பேசாமல் இருந்த பொழுதுகளில் பேசியது தான் பல சமயங்களில் எங்களுக்குள் நிகழ்ந்திருக்கிறது.

என் முன்னால் வந்து நின்ற “சற்று வயதானவர் சார் நல்லா இருக்கீங்களா..” எனக் கேட்டார்..
ஓ.. ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து பார்த்த அதே ஆள்.

அதே கேள்வி. எங்கே அடுத்த கேள்வி அவர்கள் வரவில்லையா என கேட்டு விடுவாரோ என நான் அஞ்சிக் கொண்டே இருந்தேன்.

நல்லவேளை.. அவர் கேட்கவில்லை.

அமைதியாக என் எதிரே இருந்த அந்த செந்நிற இருக்கையை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். நம் எதிரே இருக்கும் எதுவும் காலியாக இருந்தால் தனிமையை உணர தொடங்கி விடுகிறோம். ஆளில்லாத சாலையில் நடப்பது போல.

ஆனாலும் இது தனிமை அல்ல. அவள் ஒரு முறை சொன்னது போல.. “நீ ஒரு போதும் தனிமையில் இருக்க வாய்க்கப் பெற்றவன் அல்ல. உன்னை தனித்திருக்கும் கோப்பையாக ஒருபோதும் நினைக்காதே. நான் எப்போதும் உன்னுள் நிரம்பி தளும்பிக் கொண்டே இருக்கிறேன்” என்றாள் அவள்.

ஒரு முறை சற்றே நான் கோபப்பட்டு.. “உன்னை எப்போதும் நினைப்பது மட்டும்தான் எனக்கு வேலையா..?” எனக் கேட்ட போது.. அவள் அலட்சியமாக சிரித்தாள்.

‘நீ என்னை நினைக்காத நேரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சமயங்களில் நான் உன் அருகில் இருக்கிறேன்..” என அலட்சியமாக சொன்னாள்.
ஏன் இவளுக்கு என்னை என்னைவிட நன்கு தெரிந்திருக்கிறது என்கின்ற கோபம் எனக்குள் எழுந்தது.

“அப்படி எல்லாம் இல்லை” என நானும் அலட்சியமாக சொல்லிவிட்டு நான் எங்கோ பார்ப்பதுபோல கண்ணாடிக்கு வெளியே சாலையில் போகும் வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.

❤️

சார்..
என்ற குரல் என்னை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.

“எப்போதும் நீங்கள் சாப்பிடுகிற
ஐஸ் போடாத லெமன் சோடா..” என
சொல்லி என் எதிரே சோடா நிரம்பிய கண்ணாடி கோப்பை ஒன்றினை வைத்தார்.

“இதையெல்லாம் நீங்கள் மறக்க வில்லையா..” என ஆச்சரியமாக கேட்டேன்.

“இல்ல சார்… சில விஷயங்களை மறக்க முடியாது. உங்களைப் போலத்தான் நானும். மாதம் ஒருமுறை பட்டீஸ்வரம் கோவிலில் போய் பிரகாரத்தில் அமர்ந்து விட்டு வருவேன்” என்றார் அவர்.

சே…சே.. நான் அதற்கெல்லாம் வரவில்லை. பசிப்பது போல இருந்தது. அதற்காக வந்தேன் என்று கண்களைத் தாழ்த்தியவாறு
அவரிடம் சொன்னேன்.

அவர் அமைதியாக திரும்பி சென்று விட்டார்.

அவர் போன பிறகு ஒரு கொடும் வலி எனக்குள் எழுந்ததாக உணரத் தொடங்கினேன்.

தலையைக் கவிழ்த்து கண்களை மூடிக்கொண்டேன்.

ஏதோ சத்தம் கேட்டது.

அதே ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் ஒன்றை எடுத்து வந்து என் எதிரே இருந்த காலியான இருக்கையில் வைத்துவிட்டு அந்த பரிமாறுபவர்
அமைதியாக சென்று கொண்டிருந்தார்.

❤️