பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: அக்டோபர் 2014

மெட்ராஸ் – பெருமிதங்களுக்கு எதிரான கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்

madras-tamil-movie-stills-00-002-658x380

சமீப காலமாக தமிழ்த்திரை வித்தியாசமான முயற்சிகளை தரிசித்து வருகிறது. கோடிக்கணக்கான பண முதலீட்டில் மாபெரும் கதாநாயகர்கள் –கதாநாயகிகள் நடிக்க, மிகப்பெரிய தொழிற்நுட்ப மேதைகள் பணியாற்றி, அட்டகாசமான விளம்பரங்களுடன் மின்னிக் கொண்டிருந்த தமிழ்த்திரையின் இலக்கணத்தை சமீப கால இயக்குனர்கள் மாற்றி எழுத தொடங்கி இருக்கிறார்கள். சராசரிக்கும் சற்று கீழேயே இரட்டை அர்த்தம்,பொறுக்கி கதாநாயகன் என அரைத்துக் கொண்டிருந்த இராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூட கதை திரைக்கதை வசனம் இயக்கம் என புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு மூலம் ’அட’ போட வைக்கிறார். ஜிகர்தண்டா என்கிற படத்தின் திரைக்கதை உத்தியை குறித்து பார்வையாளர்கள் பரவசம் கொள்கிறார்கள். சூது கவ்வும் மாபெரும் வெற்றியடைகிறது. அறிமுகமற்ற நட்சத்திரங்கள் நடித்த யாமிருக்க பயமேன் திரையரங்குகளை நிறைக்கிறது. இப்படிப்பட்ட பல நம்பிக்கைத் தரும் முயற்சிகளின் தொடர்ச்சியாக வெளிவந்து நம்மை அசத்திப் போடுகிறது அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ்.

ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் அவ்வளவாக என்னை கவரவில்லை. அப்படத்தில் நான் பார்த்த வியந்த விஷயம் அப்படத்தின் எளிமை. அதுவே அப்படத்தின் வலிமையாக மாறி ஒரு வெகுசன திரைப்பட காட்சியாளனை திருப்திப் படுத்த மின்னுகிற அரங்கங்களும், ஆடுகின்ற ஸ்டார்களும் தேவை இல்லை என அப்படம் நிருபித்தது. முதல் படத்தில் வெற்றியடைந்த இயக்குனர் எதிர்கொள்கிற ஆகப்பெரும் சவால் தனது 2 ஆம் படத்திலும் சற்று குறையாத மரியாதைக்குரிய ஒரு வெற்றியை சம்பாதிப்பதே.. ஆனால் பல இயக்குனர்கள் இந்த சவாலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தவர்களே.. ஆனால் ரஞ்சித் இந்த சவாலில் மகத்தான வெற்றி அடைந்ததோடு மட்டுமில்லாமல் தமிழ்த்திரையின் வழக்கமான பண்பாட்டு அம்சங்களை கலைத்துப் போட்டு நிகழ்கால அரசியலின் அசல் முகத்தினை அப்படியே ரா வாக காட்டியிருக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகன் கார்த்தி என்பது மிகை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவரும் நடித்திருக்கிறார்.  இதுதான் இப்படத்தின் முக்கிய அம்சம்.  வழக்கமான கதாநாயக பிம்பத்தையே.. நண்பனாக வரும் அன்புவின் கதாபாத்திரம் மூலம் சிதைத்திருக்கிற இயக்குனர் ரஞ்சித் பாராட்டத்தக்கவர். வட சென்னையின் ஒரு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதிதான் கதைக்களமாக விரிகிறது. சென்னையின் பூர்வீகக் குடிமக்களான ஆதித்தமிழர்களை கூவம் கரையோர வாசிகளாக்கி, வந்தவன்,போனவன் எல்லாம் மாட மாளிகை கூட கோபுரங்களில் வசித்து வாழ்வாங்கு வாழ்கிற வரலாற்றினை நாம் அறிவோம். அப்படி கூவம் கரையோரமும் அவர்களுக்கு சொந்தமானதில்லை எனவும், அவர்கள் பெரு முதலாளித்துவ-உலகமயமாக்கல் வாழ்வில் கறைகளாக –உறுத்தல்களாக விளங்குகிறார்கள் என்பதனால் சொந்த மண்ணை விட்டு வெளியேற்றி அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைத்துப்போட்ட அவலம் தான் சென்னைக்கு வெளியே,நகர்புறத்திற்கு அப்பால் நாம் காணுகிற குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்புகள். தமிழில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு..தாழ்த்தப்பட்ட ஆதித்தமிழர்களின் வரலாற்றினை, பண்பாட்டினை இப்படி ரத்தமும் சதையுமாக விவரித்த படைப்புகள் மிகக்குறைவு . தமிழ்த்திரை வெகுகாலமாக தனது மேல் பூசியிருக்கிற ஆதிக்கச்சாதிகளின் பெருமித வண்ணத்தை ஆதித்தமிழனின் வாழ்வியலை கொண்டு கலைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அவ்வகையில் இது மிக முக்கியமான திரைப்படம். ஏற்கனவே பாரதிராஜாவின் என்னுயிர்த்தோழன், துரையின் சோறு,வாட்டாக்குடி இரணியன்,கண் சிவந்தால் மண் சிவக்கும் போன்ற படங்கள் ஆதித்தமிழர்களின் அரசியல் தன்னெழுச்சியை குறிப்பிட்டு திரைமொழி படைத்திருந்தாலும் ..மெட்ராஸ் இத்தகைய முயற்சிகளில் மிகப்பெரிய கவனத்தை பெறுகிறது.

குறியீட்டு தளத்திலும் இத்திரைப்படம் மிகுந்த கவனத்தை பெறுகிறது. கார்த்தி வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கரிய புத்தகங்கள், வாசிக்கிற தீண்டப்படாத வசந்தம், கலையரசியின் அப்பாவின் உடை,உருவ தோற்றம், படத்தின் இறுதியில் கார்த்தி வகுப்பெடும் காட்சியில் தென்படும் அம்பேத்கார்,அயோத்தி தாசர் படங்கள்,பூர்வீக குடிமக்களின் கால்பந்து மீதான ஆர்வம்,  திருமண வீட்டில் வெகு சாதாரண சண்டையும்,சமாதானமும், ஆயா உச்சரிக்கும் கீரிப்பிள்ளை பரம்பரை என்கிற வர்ணனையும் ஆதித்தமிழர்களின் அசல் வாழ்க்கையை குறீயிடுகளாக காட்டுவதில் வெற்றியடைகின்றன.

வடசென்னை அடுக்கக்குடியிருப்பில் இருக்கிற ஒரு சுவற்றில் வரையப்பட்ட ஒவியம் –அதனை ஒட்டிய அரசியல், போட்டி,சூழ்ச்சி,துரோகம், காதல் என பல்வேறு அலைவரிசைகளில் பயணம் செய்து இறுதியாக அரசியல் கல்வியை ஆகப் பெரும் தீர்வாக முன்வைக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அண்ணல் அம்பேத்கர் படம் பின்னால் இருக்க ஒரு கதாநாயகன் சிறு பிள்ளைகளுக்கு அரசியல் கல்வி போதிப்பது போன்ற உச்சக்காட்சி வேறு ஏதாவது தமிழ்த்திரைப்படத்தில் இருக்கிறதா என்று சிந்திக்க வைப்பதில் இருந்தே ரஞ்சித் வெற்றி பெறுவது உறுதியாகிறது. சிலிர்க்க வைக்கும் அந்த உச்சக்காட்சிக்கான நியாயத்தை தனது திரைக்கதையில் திரட்டி இருக்கும் இயக்குனர் ரஞ்சித்தின் திறமை பாராட்டத்தக்கது. மனித வரலாற்றில் மாபெரும் தீங்காக, அழுக்காக விளைந்திருக்கும் தீண்டாமையை எதிர்த்து போராடிய.., கற்பி, ஒன்று சேர், போராடு என போதித்த புரட்சியாளரின் வாழ்க்கை வரலாற்றினை பேசுகிற திரைப்படம் கூட இன்னும் திரை தீண்டப்படாமல் இருட்டு அறைகளில் முடங்கி கிடப்பது நாமெல்லாம் நாகரீகச் சமூகத்தில் தான் வாழ்கிறோமா என்று நமது மனசாட்சியை உலுக்கிக் கொள்கிறோம். இச்சூழலில் தான் மெட்ராஸ் பேசுகிற ஆதித்தமிழர்களின் அரசியல் மிக முக்கியமானதாக நாம் கருத வேண்டியுள்ளது.

தமிழ் தமிழ் என பேசுறான் ஆனா கிட்டப் போனா சாதி,மதம் பாத்து அரிவாள தூக்கிடுறானுக என போற போக்கில் தமிழ்த்தேசியத்தின் மீதான தனது விமர்சனத்தை முன் வைக்கிறார் இயக்குனர். ஒரு தமிழ்த்தேசியனாக … தர்மபுரியில் எரிந்த குடிசைகளின் ஒளியில்..பரமக்குடியில் வெடித்த தோட்டாக்களின் ஒலியில்.. இந்த விமர்சனத்தை நேர்மையாக எதிர்க் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.. ஆனால் இதற்கான..இந்த சாதி ஏற்றத்தாழ்விற்கான வேறுபாட்டினை களையும் அரசியலைப் பற்றி பேசத்தான் உதடுகள் இல்லை. தமிழ்ச் சமூகத்தின் உட்சாதி பகை முரண்களை களைவதற்கான ஓர்மைப் புள்ளிகளை தேடிச் செல்லும் பயணம் தான் தமிழ்த்தேசியமாக அமைய வேண்டும் என்கிற நம்பிக்கை என் போன்ற தமிழ்த்தேசியர்களுக்கு உண்டு.

உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ வாழ்வியல் சூழலில் சென்னை மண்ணின் பூர்வீகக் குடிமக்களின் பாடுகளை,காதலை,அரசியலைப் பற்றி பேசுகிற மெட்ராஸ் திரைப்படம் தமிழ்த் திரையின் ஆதித்தமிழர்களின் தன்னெழுச்சி முயற்சியாக நாம் பார்க்கலாம். அதனாலேயே அப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னைத்தமிழ் பேசும் கதாநாயகி,மனநிலை குன்றிய நேர்மை மனிதன் ஜானி, உணர்வும்,அன்பும்,நட்பும் கொப்புளிக்கிற அன்பு, சாலையில் நாம் கடக்கிற போது மிக சாதாரணமாக சந்திக்க முடிகிற காளி ,அரசியல் சூதாட்டங்களில் பகடை காய்களாக மாற்றி ஆடப் படும் விளிம்பு நிலை மக்கள்..என ஒவ்வொரு காட்சியும் இயல்பின் அழகில் மனதை அள்ளுகிறது. எத்தனையோ பிம்பங்களை, ஆளுமைகளை,அடையாளங்களை கட்டியெழுப்பி இருக்கிற, நிறுவி இருக்கிற வலிமையான கருவியான தமிழ் சினிமாவின் வரலாற்றில் விளிம்பு நிலை மக்களுக்கான..வாழ்வியலை,அழகியலை பதிவு செய்திருக்கும் இயக்குனர் ரஞ்சித்தின் முயற்சியும் ஆதிக்கங்களுக்கு எதிரான ஒரு குரலே.. அந்த வகையில் இது வரலாற்று,பண்பாட்டு பெருமிதங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிற தமிழ்ச் சமூகத்தை மீள் பரிசீலனை செய்கிற பண்பாட்டு கலகமாக இத்திரைப்படத்தை நாம் கொள்ளலாம்.

இதுவரை தமிழ்த்திரை கட்டி வைத்திருந்த அத்தனை பெருமிதங்களின் மீதும் தனது திரைமொழி மூலம் தாக்குதல் நடத்தி நம்மை கவனிக்கச்செய்கிறார் இயக்குனர் ரஞ்சித் . தமிழ்நிலத்தில் வெகுகாலமாக ஆட்சி செய்து செய்துவரும் ..வர்ணாசிரமம் கட்டமைத்த ஆதிக்க இடைநிலை சாதிக்குழுக்களின் ஊதுகுழலாய் ..அவற்றின் பெருமிதங்களை போற்றிப் பாடும் பனுவலாய் மின்னிய தமிழ்த்திரை அழுக்கடைந்த அடுக்கங்களிலும், மழைச் சேற்றிலும், எம் மக்களின் பாமர மொழியிலும் புரளத் தொடங்கியிருப்பதே புரட்சிக்கர நடவடிக்கைத்தான்.

எது எப்படியோ இந்தியப் பெருநிலத்தில் தோன்றிய மாபெரும் புரட்சியாளனின் சிந்தனையை படத்தின் முடிவாக கொள்கிற..அடைகிற.. மெட்ராஸ் திரைப்படத்தின் பார்வையாளன் பெருமிதம் கொள்ளத்தக்கவனே…

-மணி செந்தில்

மழை அறிந்த மனசு..

மழை வருவதும்..
வராததும்
அவரவர் மன நிலையை
பொருத்தது.

பல நேரங்களில்
மழை யாரோ
ஒருவருக்கு
மட்டும் பெய்து
விட்டு போவதும்..

ஊரே நனைகையில்
ஒருவருக்கு
மட்டும்
பொய்ப்பதும்
நேசிப்பில் மட்டுமே
சாத்தியம்.

மழையில்
இசையை
உணருபவனும்..
இசையில்
மழையை
உணருபவனும்..

நிச்சயம் வெவ்வாறனவர்களே..

ஒரு இளஞ்சூட்டு
தேநீரோடு
மழை விடை பெறலாம்.

அந்த தேநீரின்
கதகதப்பிற்காகவே
இன்னொரு மழையும்
பெய்யலாம்.

தேநீரை காதலியாக
பருகுபவர்களும்..
காதலியை ஒரு
இளஞ்சூட்டு தேநீராக
ரசிப்பவர்களும்..

பாக்கியவான்கள்.

உங்களில் யார் பாக்கியவான்கள்…?

-மணி செந்தில்.

Powered by WordPress & Theme by Anders Norén