“உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்”
– புத்தர்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்”
– புத்தர்
சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண்டதை ,அடித்ததை, அடி வாங்கியதை 50,002 முறையாக நம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு அதிர்வலைகளை குறையா வண்ணம் பேணிக் காப்பதில் மிகச் சிறந்த சேவைகளை (?) நமது ஊடகங்கள் வெற்றிக்கரமாக செய்து வருகின்றன.
இந்திய தொலைக்காட்சிகளில்…முதன் முறையாக..வீதிக்கு வந்த சில மணி நேரங்களே ஆன திரைப்படமாய் சட்டக் கல்லூரி மாணவர்களின் குழு சண்டையும் மாறிப்போனதுதான் உச்சக் கட்ட வேதனை. சட்டக்கல்லூரிகளில் இது போன்ற எண்ணற்ற குழு சண்டைகள் மாணவர்களிடையே நடந்திருக்கின்றன. இந்த சண்டை சமீபத்தில் நடந்த சண்டை. அவ்வளவுதான்.இதில் பரபரக்கவோ..பாய்ந்து தாக்கவோ எதுவுமே இல்லை. கிராமப் புற அரசுக் கல்லூரிகளில் இருப்பது போலவே சட்ட மாணவர்களுக்கு இடையிலும் சாதீயம் சார்ந்த அரசியல் வழக்கமான ஒன்று.நான் வசித்த கீழ தஞ்சை மாவட்டங்களில் அமைந்துள்ள அரசுக் கல்லூரிகளில் முக்குலத்தோர் என சொல்லப் படக்கூடிய கள்ளர்- அகமுடையார் என்ற இரு சாதியினருக்கு இடையேயே இதை தாண்டி கடுமையான சண்டைகள் நடந்திருக்கிறது. பல மாணவர்கள் இரு தரப்பிலும் தாக்கப் பட்டு இருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக ஊடக எழுச்சியும்,போட்டியும் எதையும் பரபரப்பாக்க வேண்டும் என்ற உணர்வும் ,மறைந்து கிடக்கும் பிழைப்பு அரசியலுமே இன்னும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அதிர்வுகளுக்கு காரணம்.சென்னை சட்டக் கல்லூரி விடுதியில் எப்போதும் மாணவர்களை தவிர வெளியாட்கள் அதிகம் பேர் வந்து தங்கி இருப்பார்கள். வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்காக தெற்கு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அடிதடி விருந்தினர்களுக்கு எப்போதுமே அடைக்கலம் தரும் இல்லமாய் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் விடுதி திகழும்.மேற்கண்ட விருந்தாளிகளின் தாக்கமும் ,நிழலும் மாணவர்களை மேலும் தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றன. மாணவர்கள் தங்களது சாதீய அடையாளங்களை உணர்ந்து குழுவாக பிரிவது பெரும்பாலும் முதல் ஆண்டில் இருந்தே துவங்கி விடும். அதற்கு மூத்த மாணவர்களின் உதவியும் , வழிக் காட்டுதல்களும் இருக்கும். பிறகு குழு குழுவாக சேர்ந்து போஸ்டர் அடிக்க துவங்குவார்கள். மாணவிகளும் மேற்கண்ட குழுக்களின் அடிப்படையிலேயே செயல் பட துவங்குவார்கள். ஒரு கல்லூரியில் எச்சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அவர்கள் ஒரு குழுவாகவும், எஞ்சிய மாணவர்கள் மற்ற குழுக்களாகவும் பிரிவார்கள். கும்பகோணம் போன்ற பகுதிகளில் வன்னியர் இனத்தை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாகவும், எஞ்சிய மாணவர்கள் ஒரு குழுவாகவும் பிரிந்து இருப்பார்கள். சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்ததும் இது போன்ற பிரச்சனைதான். மாணவர்களுக்குள் எப்போது ,யாரால் சாதீயம் புகுந்தது,புகுத்தப் பட்டது என்பதெல்லாம் இந்த பிரச்சனையின் பின்புலமாக நாம் ஆராய வேண்டியவை. எல்லா கல்லூரிகளும் சாதியை மறுத்த மாணவர்கள் குறைந்த பட்சம் இருக்கவே செய்வார்கள்.இவர்கள் சிறுபான்மை குழுவின் ஆதரவாளர்களாக இருப்பார்கள்.
சாதீய மயமாக்கப் பட்ட கிராம வாழ்வின் எச்சமாய் கல்லூரி வாழ்க்கையும் மாற்றப் பட்டதன் துவக்கமே இந்த பிரச்சனைக்கான மூலமாக நாம் கொள்ளலாம். அதனால் தான் கிராமங்கள் அழிய வேண்டும் என்றார்கள் பெரியாரும், அம்பேத்காரும். சாதி ஒழிந்து விட்டது: இங்கு கீழோர்,மேலோர் இல்லை என மார் தட்டும் உன்னத சமூகத்தில் நாம் வசிக்கவில்லை என்பதனை முறையாக ஒப்புக் கொண்டு அல்லது ஒப்புக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு இந்த மாணவர்களின் பிரச்சனையை நாம் அணுகுவதுதான் நேர்மையானதாக இருக்கும்.இன்னும் உத்தபுரங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
திண்ணியமும், வெண்மணியும்,பாப்பாபட்டி,கீரிபட்டி, நாட்டார் மங்கலம் ஆகியவையும் நம் தமிழகத்தில்தான் இருக்கின்றன. இன்னும் கோவை மாவட்டத்தில் இரட்டை குவளை முறை இருப்பதை நம் பெரியார் திராவிட கழக தோழமைகள் படம் பிடித்து காட்டினார்கள். மனிதரில் கீழோர்-மேலோர் இல்லை என்று உரத்த குரல் எழுப்பும் தோழமைகள் சமூகத்தில் வேரூன்றி போய் கிளைத்து நிற்கும் சாதீயம் இருப்பதை ஒத்துக் கொள்வதில் ஏதோ முரண் இருப்பதாகவே நான் உணர்கிறேன்.நாடெங்கும் நடக்கும் சாதீய கலவரங்களில் தலித் மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படுவதும்,அம்பேத்கார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டும்,அகற்றப்பட்டும் வருவதும் தீவிர நிலையை மேலும் கவலைக்கிடமாக்கிறது. மாணவர்கள் தாக்கப் படுவது சாதீய ஒழிப்பிற்கான முதல் நிலை என்ற நிலைப்பாடு எப்படி ஆபத்தானதோ …தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் சாதீய செயல்பாடுகளை நியாயப் படுத்துவதும்,நாடெங்கும் தலித் மாணவர்களை தனிமைப் படுத்தி குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதும் ஆபத்தானதுதான். சட்டக்கல்லூரி மாணவர்களின் இந்த பிரச்சனையை சாதீய வயப்படுத்தும் வேலைகளை நமது ஊடகப் பெருமக்களும், தமிழ் நல் உலகில் வாழ்ந்து வரும் அரசியல் தலைவர்களும் வெகு திறமையாக செய்து வருகின்றனர்.
இரத்த வாசனையை எப்போதும் மோப்பம் பிடித்து திரியும் மிருகமாய் ஊடகங்கள் மாறி வெகு காலமாகி விட்டது.பல்வேறு காரணிகளின் விளைவாய் எழுந்திருக்கும் ஒரு பிரச்சனையில் பொத்தாம் பொதுவாய் ஒரு நிலைப்பாடு எடுத்து குறை பேசி திரிவதும் சாதீயம் ஊடான செயலாகவே நாம் கருத வேண்டி உள்ளது. இது போன்ற களங்களில் முற்போக்காளர்கள் ,சாதி மறுப்பாளர்கள் என கருதும் தோழர்கள் முதலில் பிரச்சனைகளின் பல்வேறு கோணங்களை புரிந்துக் கொள்ளும் ,ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும். கல்வியியல் நிறுவனங்களில் சாதீய செயல்பாடுகளை மட்டுப் படுத்தும் விதமாக கல்வி முறைகள் மாற்றப் பட வேண்டும் .
டாக்டர் அம்பேத்காரும், தந்தை பெரியாரும் இன்னும் அளவுக்கதிமாக தேவைப்படும் காலமாக அமைந்து விட்ட சூழலில் முற்போக்காளர்கள் இது போன்ற பிரச்சனைகளை சாதீயம் சார்ந்த உணர்வுத் தளங்களில் அணுகாமல் அறிவுத் தளத்தில் அணுகி உண்மைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இரு பக்கமும் மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாக்கப் பட்டு இருக்கிறார்கள். இரு பக்கமும் நியாயப்படுத்தவே முடியாத தவறுகள் நடந்திருக்கின்றன. தாக்குதல் நடத்தும் அளவிற்கு தீவிரமாகி போன மாணவனின் மனநிலையும், அவன் ஏற்கனவே எதிர் கொண்ட இழிவுகளும் இந்த சமயத்தில் சமமான அக்கறையோடு ஆய்விற்கு உட்படுத்த படவேண்டும்.
மீண்டும் மாணவர்களிடையே இது போன்ற சாதீயம் சார்ந்த மோதல்கள் நிகழா வண்ணம் தமிழர் என்ற உணர்வுத்தளத்தில் மாணவர்களை இணைக்க வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாக நான் கருதுகிறேன்.அதற்கான புரிந்துணர்வு தளங்களை மாணவர்களிடையே ஏற்படுத்துவதில் சமூகத்தின் பங்கும் அதிகமாக இருக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளை தோழமைகள் தமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சாதீய மிருகத்தின் கழுத்தை நெறித்து கொல்லப்படுவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.