நேற்று மன்னார்குடி மருத்துவர் ஐயா பாரதி செல்வன் அவர்கள் அழைத்திருந்தார். வாழ்ந்த வீட்டை இழந்த துயரத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரையினை படித்து விட்டு பல அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது சில முக்கியமான நூல்களைப் பற்றி எங்களது பேச்சு திசை திரும்பியது. “ஓநாய் குல சின்னம்” நூலைப் பற்றி பல கருத்துக்கள் பகிர்ந்து கொண்டவர் அலெக்ஸ் ஹேலியின் “வேர்கள்” பற்றி பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசத் தொடங்கினார். மேற்கண்ட இரண்டு புத்தகங்களையும் நானும் வாசித்து இருந்த காரணத்தினால் புத்தகங்களில் அவரவருக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எஸ் ராமகிருஷ்ணனின் மண்டியிடுங்கள் தந்தையே என்கிற புத்தகத்தைப் பற்றியும் பேசினோம்.சமகால இன விடுதலை அரசியலில் நூல் வாசிப்பின் அவசியத்தை நன்கு உணர்ந்த மாமனிதர் ஐயா மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்கள்.அப்போதுதான் டாக்டர் ராஜேந்திரன் ஐ ஏ எஸ் எழுதிய “1801” மற்றும் “காலாபாணி” புத்தகங்களைப் பற்றி எங்களது உரையாடல் திரும்பியது.
தமிழர் நிலத்தில் அன்னியர் ஆதிக்கத்திற்கு எதிராக 18 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சிவகங்கைச் சீமையில் மருதிருவர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் போர்தான் முதல் இந்திய சுதந்திரப் போர். தமிழ்நாட்டில் தமிழர் தலைமையில் நடைபெற்ற ஒரே காரணத்திற்காக அதற்கான வரலாற்று அங்கீகாரம் கூட இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்பதுதான் மாபெரும் துயரம். குறிப்பாக மருது பாண்டியர்களை பற்றி தமிழில் பல நூல்கள் வெளி வந்தாலும், இந்த இரட்டை நூல்கள் மிக மிக முக்கியமானவை. கதை சொல்லும் போக்கில் ஒரு நாவல் போல இந்த நூல்கள் அமைந்திருந்தாலும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அமைந்தவை. வீரத்திலும் விடுதலை உணர்ச்சியிலும் ஆற்றலிலும் மருது பாண்டியர்களுக்கு இணையான அரசர்கள் அன்றைய காலகட்டத்தில் யாருமில்லை. குறிப்பாக ஆங்கிலேயரிடம் விலை போகாது தாய் நாட்டு விடுதலைக்காக உழைக்க அழைத்த சின்னமருது வெளியிட்ட விடுதலை பிரகடனம் சூரியன் மறையாத ஆங்கிலேய பேரரசை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியது.கட்டபொம்மன் தூக்கிலிட்டப்பட்ட பிறகு ஊமைத்துரையை காப்பாற்றும் மருது பாண்டியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை 1801 மிக நுட்பமாக விவரிக்கிறது. குறிப்பாக பெரிய மருது உண்மையிலேயே எப்பேர்ப்பட்ட பெரிய மனிதராக வாழ்ந்து இருக்கிறார் என்பதை படிக்கும் போது மனம் நெகிழ்ந்து போய் விடுகிறது. ஆங்கிலம் உருது போன்ற மொழிகளில் சரளமாக பேசக்கூடிய பெரிய மருது தன் தம்பியின் மீது பேரன்பு கொண்ட பெருமகன். நிதானமும் ஆழ்ந்த சிந்தனையும் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்கின்ற கூர்மையான அறிவும் கொண்டு ஆங்கிலேயருடன் தேவையில்லாமல் பகை வேண்டாம் என யோசித்த பெரிய மருது தன் தம்பி சின்ன மருதுவின் தாயக விடுதலை கனவிற்காக தனது எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு போர்க்களத்தில் நின்றவர். சாதி உணர்ச்சியை பின்னுக்குத் தள்ளி தாய் மண்ணை நேசித்த மகத்தானவர்.குறிப்பாக சின்ன மருதுவை கை, கால் சங்கிலி இட்டு ஒரு இரும்புக் கூண்டுக்குள் அடைத்து தூக்கிலிட அழைத்து வரும் காட்சி படிக்கும்போதே மனம் பதறுகிறது. பெரிய மருதுவை அந்த நிலையிலும் பார்த்து வணங்கும் சின்ன மருதுவின் நிலையும் கைது செய்யப்பட்ட சிறு சிறு குழந்தைகளின் நிலைமைகளையும் பார்க்க சகிக்க முடியாமல் தன்னை முதலில் தூக்கில் போட வேண்டும் என ஆங்கிலேயரிடம் பெரிய மருது கேட்க அதையும் ஆங்கிலேயர்கள் நிராகரித்தார்கள். இந்த நூலின் தொடர்ச்சியாக சின்ன மருதுவின் இளைய மகன் சின்னச்சாமி , பெரிய மருதுவின் மருமகன் அரசர் உடையண்ண தேவர் உள்ளிட்ட 73 தமிழர்கள் நாடு கடத்தப்பட்ட கண்ணீர் கதை தான் காலாபாணி.
இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தான் ஐயா பாரதிச் செல்வன் அவர்கள் மக்களுக்காக போராடுகின்ற களங்களில் நாம் சமரசம் இன்றி நிற்பதற்கான உந்துதலை இது போன்ற புத்தகங்களில் இருந்து தான் பெறுகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அன்று இரவே அந்த புத்தகங்களை இணையம் வழி வாங்கப் போவதாகவும் சொன்னார். ஐயா மருத்துவர் பாரதிச் செல்வன் அவர்கள் மன்னை நகரத்தில் புகழ்பெற்ற மருத்துவர். இதய நோய் மருத்துவத்தில் தமிழ்நாடு அறிந்த பேரறிஞர். தன் மருத்துவமனையையே மிகப்பெரிய நூலகமாக , தமிழ்த்தாய் ஆலயமாக நடத்தி வருபவர்.
என் தந்தை மேனாள் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ச.மணி அவர்களும் ஐயா மருத்துவர் பாரதி செல்வன் அவர்களும் மன்னார்குடி பகுதியில் முதன் முதலாக அறிவொளி இயக்கத்தை தொடங்கி பலருக்கும் எழுத்தறிவு ஊட்டியவர்கள். என் தந்தையோடு சமூகப் பணியாற்றியவர் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் என்னோடு அரசியல் களத்தில் நின்று கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மன்னார்குடி பகுதியில் அவர் அலையாத இடமில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க தெருத்தெருவாய் அலைந்து, மதிய நேரங்களில் கிடைத்த மரத்தடியில், பள்ளிக்கூட வளாகங்களில் படுத்து ஓய்வெடுத்து விட்டு மீண்டும் தேர்தல் பணிக்காக அலைந்த அவரது தமிழ்த் தேசிய உணர்வு விவரிக்க முடியாத மாபெரும் கடல். கொடியேற்றும்போதெல்லாம் “தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் மே*த*கு வாழ்க” என உணர்வெழுச்சியோடு அவர் முழுக்கமிடுவதை பார்க்கும் போது அரசியல் களத்தில் இயல்பாக நம்மைச் சூழும் சலிப்பு, இயலாமை, குறைகள், தான்மை போன்ற சகலவிதமான எதிர்மறை உணர்ச்சிகளும் இல்லாமல் போகும்.
வரலாற்றின் ஏடுகளில் மட்டுமே காணத்தக்க பெரிய மருது போன்ற பெரும் மனிதர்களை எவ்வாறு உணர்ந்தும்,அறிந்தும் கொள்வது என்றால்… அது மருத்துவர் ஐயா பாரதிச்செல்வன் போன்றவர்களை பார்க்கும்போதுதான். அந்த வகையில் அவரும் வரலாற்றின் நிழல்தான்.