அன்புள்ள தோழர் தாமரை அவர்களுக்கு…வணக்கம்.
திரைத்துறையினர் நடத்திய தொடர் முழக்க நிகழ்வில் உணர்வு மிகுந்த தங்களது உரையினை இணையத்தளம் மூலமாக கேட்டேன்..மிகத் தெளிவும், உணர்வும் நிரம்பிய தங்களது பேச்சில் நம் இன உணர்வு பொங்கிப் பாய்ந்தது. நடக்கும் அவலத்தை கேட்பார் யாருமின்றி அழியும் நம் இனத்தின் அழிவை, வலியை மிக அழகாக.நேர்த்தியாக,துணிவாக பதிவு செய்துள்ளீர்கள். பிற மொழி கலப்பின்றி நம் மொழியின் ஊடாகவே நவீன இசையின் அனைத்து உச்சங்களையும் உங்கள் பாடல் வரிகளால் தொட்டு விட்ட தாங்கள் இப்போது நம் இன அழிவினை எதிர்க்கும் ஆயுதமாக உருவாகி உள்ளீர்கள்.. வலி மிகுந்த நேரத்திலும் தங்கள் பணி ஆறுதல் தருகின்றது.
தாங்கள் சொன்னது போலவே நடக்கும் அவலங்களை கண்டு எதுவும் செய்ய இயலாத, முத்துக்குமார் போல சாகவும் துணிவின்றி தினந்தோறும் நல்ல செய்தி ஏதேனும் வராதா என அலைந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழர்களில் நானும் ஒருவன். தினந்தோறும் வீதிகளில் இறங்கி போராடுகிறேன்.யார் ஈழத்திற்காக போராட்டம் நடத்தினாலும் வலிய சென்று கலந்துக் கொண்டு கத்தி தீர்க்கிறேன். இரவில் திடுக்கிட்டு விழித்து அவசர அவசரமாக இணையத் தளங்களை மேய்கிறேன். அலை அலையாய் பாய்ந்து வரும் வதந்திகளில் மனதை இழந்து கலங்கி அழுகிறேன்.என்னருகே தூங்கிக் கொண்டிருக்கும் என் மகனும்..ஈழத்தில் இறந்துக்கிடக்கும் மகனும் வெவ்வேறல்ல என்று உணர்ந்து கசிகிறேன். உற்றார், உறவினர், கூட பணிபுரிபவர் என அனைவராலும் என் அலைகழிப்பும், பதைபதைப்பும் வேடிக்கையாகவும் ,விசித்திரமாகவும் பார்க்கப் படும் நிலையில்…உணர்வுள்ள தோழர்களை தேடிப்பிடித்து கவலையும், கலக்கமும் நிறைந்த குரலில் யுத்தக் கள செய்திகளை பகிர்ந்துல் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னைப் போன்ற எண்ணற்றவர்களின் நிலை.
இரவெல்லாம் தூக்கமின்றி சிவந்து கிடக்கின்றன..பிழைப்பிற்காக நீதிமன்றம் செல்ல வேண்டி நேர்ந்தாலும் உதடுகள் ஒட்டிக் கொண்டு பேச்சு வர மறுக்கிறது..கனத்துப் போன இதயத்துடன் நடக்கவே சிரமமாக உள்ளது..யாரிடமும் பேச விருப்பமற்று தலையை குனிந்தவாறே கடந்து விடுகிறேன். எதிலும் விருப்பமற்று மனம் மரத்துப் போய் வருகிறது. எதையாவது சுவையாக சாப்பிட்டாலோ. நிம்மதியாக கண் மூடி உறங்கினாலோ, கேளிக்கை,சினிமா என ஈடுபட்டாலோ… குற்ற உணர்ச்சியால் உடைந்துப் போய் விடுகிறேன்
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் சகோதர, சகோதரிகளை, குழந்தைகளை, என் போராளிகளை காப்ப்பாற்ற இயலவில்லை.இந்த உணர்ச்சி….என்னுள் குற்ற உணர்ச்சியாய் பதிந்து என்னை நிம்மதியற்றவனாக அலை கழிக்க வைக்கிறது. என்னால் எதையும் இந்த குற்ற உணர்ச்சியை தவிர்த்து விட்டு செய்ய இயலவில்லை. வழக்கறிஞராக உள்ள நான் நீதிமன்றங்களில் என் இன அழிவின் வலியை சுமந்து பணியாற்ற முடியாமல் தவிக்கிறேன்.
இருந்த போதும் நான் போராடாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காகவே எனக்குள் இருக்கும் வலி மிகுந்த குற்ற உணர்ச்சியை ஆதிக்கம் செலுத்த விடாமல் போராடி வருகிறேன். அதற்கு தங்களைப் போன்றவர்களின் செயல்பாடுகளும், உரைவீச்சுகளும் உதவுகின்றன.
நன்றி.
இந்த இனத்தில் இறுதியாய் உணர்வுள்ள ஒருவன் இருக்கும் வரை கத்தி, கதறி தீர்ப்போம்..
நமக்கு நேர்ந்த அரசியல் துரோகங்களை, வலிகளை நமது பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுப்போம்.
வரலாற்றின் எந்த பக்கங்களிலும் பார்த்தாலும் கிடைக்காத அறம் நிறைந்த மாவீரர் பிரபாகரன் நம் இனத்தின் தலைவராக இருப்பதை பெருமையாக நம் பிள்ளைகளிடம் கதை கதையாக சொல்லிக் கொடுப்போம்.
அடுத்த தலைமுறையாவது ஏமாறாமல், கையறு நிலைக்கு சிக்காமல், குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் இருக்கட்டும்.
எப்போது விடியும்…?
விடிந்தாலும்..விடியலை தரிசிக்க விழிகள் இருக்குமா…?
விழிகள் இருந்தாலும்…..விழிகளுக்கு உயிர் இருக்குமா..?
பதில்களில்லா கேள்விகளுடன்
மணி.செந்தில்
www.manisenthil.com