தொல்.திருமாவளவனின் உண்ணாநிலை அறப்போராட்டத்தால் தமிழகத்தில் கொஞ்சம் மங்கி இருந்த ஈழ ஆதரவு மீண்டும் உணர்வுத் தளத்திற்கு திரும்பி இருக்கிறது.மீண்டும் சமூக அமைப்புகள்,மாணவர் இயக்கங்கள் ஆகியவை போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.. பட்டாளி மக்கள் கட்சி இன்று அரசு அலுவலகங்கள் முன்னால் ஆர்பார்ட்டம் நடத்தியது. வரும் 23 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் உட்பட மாணவர் அமைப்புகள் நாளை கல்லூரி புறக்கணிப்பை அறிவித்துள்ளன.
தாயக தமிழகத்தில் இருந்து எழும் குரல்கள்,நடத்தப் படும் போராட்டங்கள் ஈழச்சகோதரர்களுக்கு மிகப் பெரிய துயரத்திலும் ஆறுதலாக அமையும் என்பதில் அய்யமில்லை. திருமாவாளவனின் உண்ணாவிரத அறப்போர் தனது நோக்கத்தை முழுமையாக எட்டி விட்டதாக சொல்லலாம். திருமாவளவனின் உண்ணாவிரதம் மக்கள் மத்தியில் உணர்வலைகளை அவர் நினைத்தவாறே எழுப்பியது. ஆங்காங்கு நிகழ்ந்த பேருந்து எரிப்புகளை தவிர இந்த போராட்டம் தனது மையப்புள்ளியை நோக்கி நகர்ந்து முடிந்தது.
கலைஞர் அனைத்து கட்சி பிரமுகர்களுடன் டெல்லியில் மன்மோகன் சிங்கினை சந்தித்து தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்று தோற்றதில் இருந்து தமிழக மக்கள் உணர்வு ரீதியிலான இந்த பிரச்சனையில் தேங்கி நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கிளிநொச்சி வீழ்ந்தது..ஆணையிறவும் அகன்றது …என்றெல்லாம் தினமலம் உள்ளிட்ட ராஜபக்சே ரசிகர் பட்டாளங்கள் அட்டகாசமாக செய்திகள் வெளியிட நமது மனங்கள் வெம்பி ததும்பின. அந்த நேரத்தில் தான் திருமா தனது ஆயுதத்தை சரியாக பயன்படுத்தினார். மீண்டும் ஆக்ரோஷமாக தமிழகம் தனது உணர்வுகளை வெளிப்படுத்த துவங்கி உள்ளது. உயர்நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றம் வரை வழக்கறிஞர்களும் போராட துவங்கி உள்ளனர். எல்லா நிலைகளிலும் உணர்வலைகள் உசுப்பப் பட்டுள்ளன.
இங்கு போராடி என்ன பயன் என்று சிலருக்கு தோன்றலாம். ஒரு இன அழிப்பை…அதுவும் நாம் பிறந்த இனம் ..நம் கண் முன்னாலேயே சிறுக சிறுக அழிவதை மெளனமாக பார்ப்பது சிங்கள பேரினவாதத்தை விட கொடுமையான ஒன்றாகும். ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டங்களை நம் மத்திய அரசு மட்டும் கவனிக்க வில்லை..உலகச் சமூகமே கவனித்து வருகிறது… தனது தொப்புள் கொடி உறவுகளை பலிக் கொடுக்கும் வேளையிலும் கூட நாம் மவுனித்து, கண் மூடி, கைக் கட்டி நின்றோமானால் எதிர்காலம் நம் மேல் ஏறி நின்று காறித் துப்பாதா…?
தன் சகோதரியின் வயிற்றில் இருக்கும் சிசுவினை கூட கிழித்து எடுத்து தரையில் அடித்து கொன்று உதிரம் குடிப்பதை கூட நம்மால் மவுனமாக பார்க்க முடிகிறது. நம் வீட்டு பெண்களை நம் முன்னால் கதற கதற கற்பழித்து கொல்லும் போது கூட நம்மால் தொலைக்காட்சி இன்பத்தில் காதுகளை பொத்திக் கொள்ள முடிகிறது..கொத்து கொத்தாய் மடியும் நம் வீட்டின் குழந்தைகளின் பிணங்கள் கனவில் வந்தால் கூட நம்மால் அதை ஒதுக்கி வைத்து விட்டு உல்லாசமாக வாழ முடிகிறது. குற்ற உணர்ச்சியால் உறுத்தாத மனதோடு மானாட மயிலாட வில் மனதை பறிக் கொடுக்க முடிகிறது…இதையும் மீறி நம்மை உசுப்ப ஒரு திருமாவளவனின் தியாகம் இங்கே தேவைப்படுகிறது.
வெட்கமாக இல்லையா தோழர்களே..?நிலமிழந்து, வீடிழந்து, வாழ்விழந்து..இறுதியாக உயிரும் இழந்து வருகின்ற ஒரு சமூகத்தை மனித இனமாக கூட கருதாமல் கைக் கட்டி வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உலக சமூகம் ஆதரவும் ஆயுதமும் வழங்கி வருவதை நாம் காண்கிறோம்.
அந்த மக்கள் செய்த தவறு தான் என்ன..? தமிழர்களாய் பிறந்ததது தான். வரலாற்றில் யூத இன அழிப்பினை ஹிட்லர் என்ற ஒரு தனி மனிதன் முன்னெடுத்தான் .ஆனால் தமிழின அழிப்பினை உலக சமூகமே முன்னெடுத்து செல்கிறது. அந்த இன அழிப்பு படையின் தளபதியாக நம் மத்திய அரசு செயல்படுகிறது. இந்நேரம் கொல்லப்படுவது மலையாளிகளோ, கன்னடர்களோ ஆக இருந்தால் இந்நேரம் இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தலையீட்டே தீர வேண்டிய சூழல் வந்திருக்கும். ஆனால் அழிவது தமிழினம். கேட்பார் யாருமில்லை. சாதியால், கடவுளால், அரசியலால் பிரிந்துக் கிடக்கும் தமிழர்களை ஒரே உணர்வுத்தளத்தில் இணைப்பது ஈழ ஆதரவு போன்ற முழக்கங்கள் தான்.
ஈழ மக்களையும் அழித்தொழித்து விட்டால் இங்குள்ளவர்களுக்கு தான் தமிழர் என்பதையே எளிதாக மறக்கடித்து விடலாம். ஏற்கனவே சினிமா,சாராய போதையில் சீரழிந்துக் கிடக்கும் இச் சமூகத்தை என்றென்றும் அடிமைச் சமூகமாக ஆக்கி விடலாம் என்ற நோக்கத்தில் தான் காங்கிரஸ் அரசு ராஜபக்சேவிற்கு சேவை செய்து வருகிறது. கூட்டணியில் இருந்தாலும் திருமா இதை சரியாக புரிந்துக் கொண்டுதான் காங்கிரஸை கடுமையாக எதிர்க்க துவங்கினார். மக்களை மீண்டும் இணைக்க, உணர்வினை எழுப்ப திருமாவின் உண்ணாவிரதம் ஒரு உந்துக் கோல் என்றால் அது மிகையில்லை.
ஈழ மக்கள் உயிர் வாழ – இனியாவது ஒன்று சேர்ந்து போராடுவோம் தோழர்களே… நம் சகோதரர்களை காக்க, நம் தாய்மார்களை காக்க, நம் சகோதரிகளை காக்க, நம் குழந்தைகளை காக்க….நம்மையும் காக்க…நாம் போராடுவோம்…..
ஆங்காங்கு இருக்கும் உணர்வாளர்களை இணைத்து , உணர்வினை வெளிப்படுத்தும் போராட்டங்களை நாம் செய்ய வேண்டியதுதான் நமது கடமை.
அந்த வகையில் திருமாவளவன் விளைவு- தற்போதைய அவரசக்கால தேவை.