பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

(இக்கடிதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீப வினைகளுக்கு எதிராகவும், தமிழ்நதியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்டது.)

மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் உள்ள வன்மம் சோபா சக்தி உள்ளிட்ட இவர்களைப் போன்ற ஆட்களுக்கு வன்னி மக்களின் துயரத்தின் மீது இப்போது கவிழ்ந்திருக்கிறது.என்னைப் போன்ற தாயகத் தமிழனுக்கு ஆறாத வடுவாய்,மாறாத குற்ற உணர்ச்சியாய் ஈழ மக்களின் துயரம் இதயத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. தினம் தோறும் மனித வாழ்வில் நுகரப்படும் சாதாரண சலுகைகளும் , இன்ப உணர்வுகளும் கூட இச்சமயத்தில் நம்மை இயல்பிற்கு மீறிய குற்ற உணர்ச்சியில் வீழ்த்துகிறது. ஆனால் ஆதவன் தீட்சண்யாவும், சோபா சக்தியும் இந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்து..குறை சொல்லி …வன்மம் பாராட்டுகிறார்கள் என்றால் நம் எதிரி சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல என்பதை நாம் உணர்கிறோம். வலி சுமப்பதை விட இந்த வக்கிரக்காரர்களின் வன்மத்தை சுமப்பது அவ்வளவு எளிதல்ல.. ஆனால் மீண்டெழுதல் என்பது சவால்கள் நிறைந்ததுதான். இணைந்தே எதிர்க் கொள்ளலாம்.
இந்த வக்கிரக்காரர்களின் பின்புல அரசியல் மிக கீழ்த்தரமானது. மக்கள் அவலத்தின் ஊடே இவர்கள் தேடுவது எவ்விதமான நியாயத் தீர்வுகளும் இல்லை. மாறாக இவர்களின் சொல்களின் ஊடாக கசியும் மனித இறைச்சி வாசனை கொடுங்கோலன் ராஜபக்சே மனநிலையை விட அபாயமானது. புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகுதான் இவர்களுக்கு வாயே முளைத்திருக்கிறது..முளைத்ததும் கள்ளிப் பாலாய் சொட்டுகிறது. இது போன்ற நபர்களை பொருட்படுத்தாமல் இருப்பதும் அபாயம்தான். இவர்களை தனிமைப்படுத்துவதும்..இவர்களின் பின்புல அரசியலை ஊரறியச் செய்வதும்தான் நம் பணியாக இருக்கிறது. ஒரு விடுதலை இயக்கத்தினை வாய் கூசாமல் விமர்சனம் என்கிற பெயரில் ஏசவும், தூற்றவும் துணிகிற இவர்களது சொல்லாடல்களின் பின்னால் உள்ள அரசியல் என்ன தெரியுமா..?
இவர்களின் ஒருவரான சுகன் ..சென்னையில் நடந்த சமீபத்திய கூட்டமொன்றில் சிங்கள தேசிய பாடலை பெருமையுடன் பாடுவதில் இருந்து இவர்கள் யார் …? இந்த நரிகள் யாருக்காக ஓலமிடுகின்றன…? என்பது தெரியவில்லையா..?

தோழமையுடன்

மணி.செந்தில்

கும்பகோணம்

Previous

தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….

Next

மிதக்கும் வலி…

Powered by WordPress & Theme by Anders Norén