தமிழர்களின் தாயக நிலமான ஈழம் எதிரிகளின் கரங்களுக்கு இடமாறிய பிறகு கருத்து என்ற பெயரில் தத்துவங்களை உதிர்த்தும், ஆராய்ச்சி என்ற பெயரில் தன் இனத்தின் சுதந்திரத்திற்காக தன் உயிரையும் இழந்த போராளிகளின் பின்னடைவினை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மோசடி பேர்வழிகள் இணையத் தளங்களின் ஊடாக நிரம்பி வழிகிறார்கள்.

அ.மார்க்ஸ் என்ற உலக மானுட இனத்தின் மனித உரிமை காப்பாளர் சமீபத்தில் இலங்கைக்கு சென்றிருந்த அனுபவங்களை முற்காலத்தில் உலகப் பயணம் செய்து பயணக்கட்டுரைகள் எழுதுவாரே ..ஆம் அவரே தான் இதயம் பேசுகிறது மணியன் பாணியில் பல தளங்களில் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார். சிறுபான்மை இஸ்லாமியர்களின் உரிமைகள் இன்னும் மீள கிடைக்கவில்லை என கதறும் அ.மார்க்ஸ் , பெரும்பான்மையான பூர்வீக குடி மக்கள் பிச்சைக்காரர்களாய் எதுவும் அற்ற ஏதிலிகளாய் நிற்கும் மக்களைப் பற்றி பேசுவதில்லை. காஷ்மீருக்கு எல்லாம் சென்று மனித உரிமையை நிலைநாட்டி ,புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்து புத்தகம் எழுதும் அ.மார்க்ஸ் ஈழத்தில் நடைப்பெற்ற போர்க்குற்றங்களை பற்றி கேட்டால் மவுனம் சாதிக்கிறார். தோழர்.மு.கார்க்கி அ.மார்க்ஸின் முகமுடியை கிழித்து எறிந்து (அ.மார்க்சின் உபன்யாசமும் சில கேள்விகளும் ) அப்பட்டமாக்கி காட்டிய பிறகும் இது நாள் வரை தோழர் கார்க்கி எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க துப்பில்லாத அ.மார்க்ஸ் ஈழம் பற்றி பேச எவ்வித அருகதையும் இல்லாதவர். அ.மார்க்ஸின் கள்ள மவுனம் எதன் பொருட்டு என்பது அம்சாகளுக்கு மட்டுமே வெளிச்சம். அ.மார்க்ஸின் சிறுபான்மை இன அக்கறை என்பது அப்பட்டமான மூன்றாம் தர ஒத்திகை பார்க்கப்படாத நடிப்பு என்பது பல்வேறு சமயங்களில் நிருபிக்கப்பட்டிருக்கிறது . அடுக்கடுக்காய் வெளியாகும் அ.மார்க்ஸின் புத்தகங்களுக்கான பொருளாதார பின்புலத்தினை எட்டிப் பார்த்தால் தெரியும் எதன் பொருட்டு அ.மா சிறுபான்மை அக்கறை பிடில் வாசிக்கிறார் என்று. தேசிய இனங்களின் தன்னுரிமை கோரல் குறித்து அ.மாவின் நிலைப்பாடு பற்றி கேள்வி கேட்டால் நாம் புலி ஆதரவாளர் ஆகி விடுவோம். அ.மார்க்ஸ், சோபா சக்தி ,சுகன் , ஞானி ,சோ, சுப்பிரமணியசாமி ,ஜெயலலிதா , கருணாநிதி போன்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் .எதிர்த்து கேட்டால்..கேட்பவர் புலி ஆதரவாளர் என்ற தட்டையான விமர்சனத்தினை வைத்து இவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள்.

ஈழ மக்கள் புலிகளால் வதைக்கு உள்ளானர்கள் என்ற இவர்களின் சொத்தையான வாதம் ராசபக்சேவிற்கு ஆதரவான ஒன்றே . மக்களில் இருந்து தான் புலிகளின் துவக்கம் என்ற அடிப்படை உண்மையும், புலிகள் வேறு மக்கள் வேறு அல்லர் என்ற உண்மையையும் மறைத்து புலிகளின்ஆயுதப் போராட்டத்தினால் தான் ஈழப் பெரு நிலம் அழிவிற்கு உள்ளானது என்று மாய்மாலம் பேசும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதனை வரலாறு முடிவுசெய்யும் .

இனப்பிரச்சனையின் முதல் கலவர நிகழ்வாக கருதப்படும் 1956ஆம் வருடத்திய தனி சிங்களச் சட்டத்தினை எதிர்த்து அகிம்சை வழிப் போராட்டமான 05-06- 1956 அன்று நடைப்பெற்ற காலி முகத் திடல் போராட்டத்தில் தந்தை செல்வா தலைமையிலான அறவழிப் போராட்டத்தினை சிங்கள குண்டர்கள் தாக்கியதை பற்றியும் , போராடிய தலைவர்களை அருகில் இருந்த பெய்ரா ஏரியில் தூக்கிப் போட்ட கதையையும் அது முதல் தமிழர்கள் தன் எதிர்ப்பினை பதிவு செய்யும் உரிமை கூட மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதையும் இவர்கள் அறியாதவர்களா என்ன..? 1956 ஆம் வருடம் ஜீன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிங்கள காடையர்களால் வன்முறைக்கு பலியாகி இனக்கலவரத்தில் பலியாகிப் போன தமிழர்களில் எத்தனை சிறுபான்மையினர் இருந்தார்கள் என்ற பட்டியல் இவர்களிடம் இருக்கிறதா..?

1958 ஆம் வருடம் மே மாதம் சிங்கள எழுத்தான ஸ்ரீ யை பொறிக்க தமிழச்சிகளின் மார்புகள் தான் ஏடுகளாய் பயன்பட்டன மற்றும் இந்த கலவரத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் , 14,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்தனர் என்பதும் இவர்கள் அறியதவரா என்ன..?

1961 ஆம் ஆண்டு சிங்கள ஆட்சி மொழி சட்டத்தினை எதிர்த்து தந்தை செல்வா சத்யாகிரகப் போராட்டம் நடத்தி அவரது தமிழரசு கட்சி தனி தபால் தலையை அச்சிட்டு உரிமையை நிலைநாட்டும் முயற்சியில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஏகாம்பரம் இறந்ததும், தந்தை செல்வா உள்ளீட்டோர் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைப் பெற்ற வரலாற்றினையும் இவர்கள் அறியாதவரா என்ன..?

1971 ஆம் வருடத்திய சிங்கள அரசின் கல்வி தரப்படுத்துதல் சட்டத்தினால் கட்டாய சிங்கள கல்வியாலும் , மதிப்பெண் அடிப்படையில்லாது, இனத்தின் அடிப்படையில் தான் உயர்கல்வி, உத்தியோகம் என்ற அநீதியால் தமிழ் இளைஞர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் அதன் காரணமாக போராட தமிழ் இளைஞர்கள் வீதிக்கு வந்தனர் என்பதையும் இவர்கள் அறியாததா என்ன..?

1974 ஆம் ஆண்டு , உலக தமிழ் அறிஞர்கள் உட்பட 50,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக் கொண்டு மிக ஒழுங்கமைவோடு நடைப்பெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள அரசு வலுக்கட்டாயமாக காவல்துறையை ஏவி நடத்திய கலவரத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானதும் இவர்களுக்கு தெரியாததா என்ன?

1976 ஆண்டு நடைபெற்ற தனி தாயகத்தினை வலியுறுத்தி ஈழத்து காந்தி தந்தை செல்வா எடுத்த வட்டுக் கோட்டை மாநாட்டு தீர்மானங்களுக்கு பிறகு மேலும் மூர்க்கம் பெற்ற சிங்கள பேரினவாதம் 1977 ஆம் ஆண்டில் ஆயிரக் கணக்கில் தமிழர்களை வேட்டையாட துவங்கியதையும்,1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயர் தமிழ் நூற்கள் எரிந்து சாம்பலானதையும், 1983 ஆம் ஆண்டு கருப்பு சூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டு லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் தன் சொந்த பூர்வீக நிலங்களை துறந்து நாடு கடந்து போய் இன்றளவும் உலக நாடுகளில் பரவி கிடக்கிறார்கள் என்பதையும், இவர்கள் அறியாததா என்ன..? புலிகளின் தாயகப் போராட்டம் சிறுபான்மையினரையும் உள்ளடக்கியதுதான் என்பதும்… புலிகளின் போராட்டம் இனம் சார்ந்ததே ஒழிய …மதம் சார்ந்தது அல்ல என்பதையும் …தன் மகனுக்கே சார்லஸ் ஆண்டனி என்ற பெயர் சூட்டிய தலைவர் பிரபாகரன் என்பதையும் இவர்களுக்கு தெரியும்.

எல்லாம் தெரியும். சிங்கள பேரினவாதம் அளிக்கும் எச்சிலைகளுக்கு நன்றி விசுவாசம் பாராட்ட இவர்களுக்கு கிடைத்த ஆயுதம் சிறுபான்மையினர் உரிமை. மற்ற படி மனித உரிமையாவது..மண்ணாங்கட்டியாவது.

ஈழத் தமிழர்கள் படிப்படியான நிலைகளில் ஆயுத வழிப் போராட்டங்களுக்கு தள்ளப்பட்டனர் என்பதையும்…உலக வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன்று சிங்கள பேரினவாதம் அடைந்திருக்கும் வெற்றியை உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் 12 கோடி தமிழர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் நிரந்தரமாக்க விட மாட்டார்கள் என்பதற்கு அறிகுறியாக ஐ.நா கொடுக்கும் போர்க் குற்ற விசாரணை நிர்பந்தங்களால் சிங்கள பேரினவாதம் நிலை குலைந்து செய்வது அறியாமல் ஐ.நா பொதுச் செயலாளர் படத்தினை செருப்பால் அடித்து வருவதை நாம் பார்க்கதானே செய்கிறோம்..?

இதற்கு மேலும் செருப்புகள் தேவைப்படும். சிங்கள பேரினவாதம் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதற்கும், இப்போது கூடி கும்மி அடிக்கும் இந்த துரோக பதர்களை சிங்கள பேரினவாதமே தோற்றுப்போன எரிச்சலில் செருப்பால் அடித்து துரத்துவதற்கும் செருப்புகள் தேவைப்படும்.

ஒரு நாள் அல்ல ஒரு நாள். நம்பிக்கைகளோடு சொல்கிறோம். எம் இனத்திற்கான விடுதலையை, எம் இனம் கனவு கண்டு.. தலைவர் அணு அணுவாய் உருவாக்கி.. தற்போது துரோகங்களின் சதியால் எதிரிகளில் கரங்களில் சிக்குண்டு கிடக்கும் ஈழ நாட்டை நாங்கள் அடைந்தே தீருவோம். ஒரு தேசிய இனத்தின் தாகத்தினை துரோகத்தின் சோரங்களால் சிதைத்து விட முடியாது. தலைமுறை தலைமுறையாக வன்மத்துடன் வாழ்வோம். உயிர் கொடுத்து..உதிரம் கொடுத்து தாயகம் அமைக்க தளமாய் போன மாவீரர்களின் மூச்சுக் காற்று இன்னும் இந்தப் பூமியில் தான் உலவுகிறது. அது எம்மை இயங்க வைத்துக் கொண்டே இருக்கும். துரோகங்களின் முகத்தில் காறி உமிழ எம்மை தூண்டிக் கொண்டே இருக்கும். எம் விழியோரத்தில் பூத்திருக்கும் உதிரச் சிவப்பில் என்றாவது எம் இனத்திற்கான விடுதலை சாத்தியப்பட்டே தீரும் .