ஒற்றை இதழாய் உதிர்ந்து விட்டு போ.

நீரிலிருந்து பிரியும் தூண்டில் முள்ளைப் போல

என்னை சலனிக்காதே.

காற்றாய் கடக்க முயலாதே.

இரவின் புள்ளியில் இடமாறிய துயரம் போல

சின்ன பிசிறலாய் உணர்த்தி விட்டு செல்லாதே.

உந்தன் அசைவினை நான் உணராத கணத்தில்

கடந்து விடு.

உன் நிழலை என் மீது வரையாதே.

எதற்கும் உன்னை பரிசோதித்துக் கொள்

ஏதேனும் மிச்சம் இருந்தால் சுரண்டி எடுத்து விட்டுப் போ.

அது நானாக இருந்தாலும் கூட.

மிடறு விழுங்கி விரிந்த சொல்லில் துவங்காதே.

ஒரு யுக வாழ்க்கையை பிரிபடாத ஒற்றைச் சொல்லில் முடி.

குறுகிய பாதைகளில் ..இறுகிய தருணங்களில்..

எதிர்பட்டால் வலிக்காமல் இருக்க உதிர்ந்து விடு.

சிறகின் நுனி தீப்பற்ற பறந்து விடு.

உடைந்துப் போன ஒரு நொடியின் துளியில்

முடங்கட்டும் துளிர்த்தலுக்கான வேண்டல்.

முடிவிலியாய் தொடரும் பாதையில்

கண நேரத்து மெளனமாய் உறைந்து போ.

உறைவின் உறக்கத்தில் வாழட்டும் நம் பிரிவு.