கடந்த 2004 ஆம் வருடம் ஜீலை 16 ஆம் நாள் கும்பகோணம் தீ விபத்தில் பலியாகிப் போன 94 குழந்தைகளின் நினைவு நாள் வழக்கம் போல விமரிசையாக நிகழ்த்தப்படுகிறது. அனைத்துக் கட்சி ஊர்வலம், பள்ளி வாரியாக குழந்தைகளை அழைத்து வந்து அஞ்சலி நிகழ்வுகள்.. கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு வந்து தீ விபத்து நிகழ்ந்த பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி எனஎப்போதுமே அமைதியாக இருக்கும் பள்ளி அமைந்துள்ள காசிராமன் தெரு இந்த ஒரு நாளில் மற்றும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்குகிறது. ஊரெங்கும் சுவர்களில் அரசியல் கட்சியினர், ரோட்டரி,லயன்ஸ் சங்கங்கள், மற்றும் வியாபாரிகள் சங்கம் ,தொழிலாளர்கள் சங்கம் என அனைத்து சங்கங்கள், அமைப்புகள் ஆகியவை சுவரொட்டி அடித்து ஒட்டி வைத்து தங்கள் சமூக உணர்ச்சியினை பதிவு செய்கிறார்கள். இதைத் தவிர வேறு எதுவும் இனிமேலும் இது போன்ற அவலம் நடக்கக்கூடாது என்ற இந்த நாளும் கழிகிறது மற்றொரு நாளாய்.
உண்மையில் வெட்கமாகத்தான் இருக்கிறது. தொழிற்நுட்பத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியினை உலகம் நுகர்ந்துக் கொண்டிருக்கும் போதுதான் ..விண்வெளி பயணம் என்பது பக்கத்து வீட்டிற்கு செல்வது போல என மிக சாதாரணமாகி விட்ட போதுதான்… எங்கிருந்தாலும் ஒரே நாளுக்குள் வந்து சென்று வந்து விடலாம் என உலகம் சுருங்கி விட்ட அதே காலக்கட்டத்தில் தான் .. கல்வி கற்கப் போன ஏழை வீட்டு குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி தீயினால் எரிந்துப் போனார்கள் . நாம் எவ்வளவு மோசமான ,புரையோடிப் போய் சீழ் பிடித்த ஒரு உலகில் வாழ்கிறோம் என்பதற்கு மிக நேரிடையான எடுத்துக்காட்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்து.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளிக்கும் எனக்கும் நேரிடையான தொடர்பு உண்டு. நான் அந்தப் பள்ளியில் தான் என் 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளை படித்தேன். எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. நான் படித்த காலக்கட்டத்தில் பள்ளியின் குறுகலான பாதையின் துவக்கத்தில் தலைமை ஆசிரியரின் அறை . பிறகு 5 ஆம் வகுப்பில் இருந்து தொடங்கி 1 ஆம் வகுப்பு வரை வலப்புறம் தமிழ் வழிக் கல்வி பயிலும் வகுப்புகள் . அதே போல அப்பாதை இடதுப் பக்கம் 5 ஆம் வகுப்பில் இருந்து தொடங்கி LKG வரை ஆங்கில வழிக் கல்வி. நான் தமிழ் வழிக் கல்வி 2 ஆம் வகுப்பு B பிரிவில் படித்தேன். அடர்த்தியான மீசை வைத்த வாத்தியார் ,எங்களால் முடியும் என்ற குழந்தைகள் திரைப்படம் , ஜெய்சங்கர் , கணேஷ் என்ற இரண்டொரு நண்பர்களின் பெயர்கள் என இவற்றினை தவிர வேறு எதுவும் நினைவில்லை. ஆனால் மறக்கவே முடியாமல் இருப்பது அப்பள்ளியின் நடுவே இருந்த மிக குறுகலான நடைபாதை. அந்த ஒரு பாதையில் தான் மாணவர்கள் சென்று வர இயலும்.
அதற்கு பிறகு அந்த பள்ளியை நான் பல்வேறு காலக் கட்டங்களில் பார்த்திருக்கிறேன். அந்த பள்ளி பல அடுக்குகளாக அச்சிறிய இடத்திற்குள் வளர்ந்தது. தீப்பெட்டி அடுக்குகள் போல வளர்ந்த அப்பள்ளியில் அப்பகுதியில் வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களின் குழந்தைகளும் தான் படித்தன. அப்பள்ளிக்கு மிக நெருக்கமான தொலைவில் எனது வீடு இருப்பதால் ..என் வீட்டிற்கு முன்னால் இருக்கின்ற சுருட்டுப் பேட்டையின் பெரும்பாலான குழந்தைகள் அங்குதான் படித்தார்கள். ரிக்சா, ஆட்டோ ஒட்டுனர்கள், கொத்தானார் ,சித்தாள் வகையாறாக்கள் , செருப்பு தைப்பவர்கள் என சமூகத்தின் அடித் தட்டு மக்கள் வசிக்கும் அப்பகுதியின் பெரும்பாலான குழந்தைகள் அப் பள்ளியில் தான் படித்தன.
கடந்த 2004 ஆம் வருடத்தில் நீதிமன்றத்தில் நாங்கள் இருந்த போதுதான் அருகில் இருந்த தீ அணைப்பு நிலையத்திலிருந்து வண்டிகள் மிக அவசர கதியில் பாய்ந்து வேகமெடுப்பதை கண்டோம். தொடர்ச்சியான பரபரப்பிற்கு நடுவே தீயைப் போல செய்தியும் பரவியது. உள்ளூர் தொலைக்காட்சிகள் அந்த விபத்தினை நேரடி ஒளிப்பரப்பு செய்ததுதான் இன்னும் வேதனையை அதிகப்படுத்தியது . நானும் என் வழக்கறிஞர் நண்பர்களும் பள்ளி விரைந்து சென்ற பார்த்த போதுதான் நடந்துக் கொண்டிருக்கும் விபரீதம் புரிந்தது. பள்ளியின் 2 ஆம் தள ஜன்னலிருந்து கரு கருவென புகை வந்துக் கொண்டிருந்தது. யாரோ யாரோ பள்ளிக்குள் புகுந்து தீயினில் எரிந்துக் கரிக்கட்டைகளாகிப் போன குழந்தைகளின் உடல்களை அலறியப்படி தூக்கி வந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருமே அலறிய வண்ணம் இருந்தார்கள். பல தாய்மார்கள் என் குழந்தையை காணோமே.. என கதறிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற காவல்துறையினர் தங்கள் சீருடைகளை கழற்றி எறிந்துவிட்டு உள்ளே பாய்ந்து குழந்தைகளை அள்ளிக் கொண்டு கத்திக் கொண்டே ஓடியதை நான் கண்டேன் . என்னோடு வந்த என் வழக்கறிஞர்கள் நண்பர்கள் அனைவரும் உள்ளே கத்திக் கொண்டு ஓடினார்கள். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூட்டம் பிதுங்கிற்று. கும்பகோணம் நகரம் முழுக்க விதவிதமான செய்திகள் பரவி மக்களை மென்மேலும் பீதியடையச் செய்தன. 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளை காணவில்லை என்றும் , குழந்தைகளை இழந்த பெற்றோர் பலர் தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவிக் கொண்டே இருந்தன.
ஒரு நகரம் தான் மீளவே முடியாத உச்சக்கட்ட சோகத்திற்கு உள்ளாகி வெறுமையானது. நகரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு ஓட்டு மொத்த நகரமே தன்னையே மயானமாக்கி நின்றது.தெருக்களில் எதிரெதிர் கடந்துப் போனவர்களின் கண்கள் கலங்கி இருந்தன. இறுதியில் என் தெருவினைச் சேர்ந்த 11 குழந்தைகள் உள்ளீட்டு தீ விபத்தில் 94 குழந்தைகள் எரிந்துப் போனார்கள் . குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமானதற்கு காரணமாய் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைதான் அனைவரையும் உலுக்கியது. தீ பிடித்தவுடன் அவசர கதியில் ஓடி வந்த பல குழந்தைகள் தங்களுடைய புத்தகப் பையை விட்டு விட்டு சென்றால் வீட்டில் பெற்றோர் அடிப்பார்களே என்று நினைத்துக் கொண்டு புத்தகப் பையையும், டிபன் பாக்ஸையும் எடுக்க மீண்டும் பள்ளிக்குள் ஓடிய போதுதான் தீக்கு பலியாகிப் போன கொடுமை நடந்தேறியது. தன் வறுமையான ஏழைப் பெற்றோரிடம் பல முறை சொல்லி போராடி வாங்கி ஆசை ஆசையாய் பாதுகாத்து வந்த புத்தகங்களும், நோட்டுகளும் காணாமல் போனால் எங்கே அப்பா, அம்மா அடிப்பார்களோ, மீண்டும் வாங்கி தர மாட்டார்களோ என்ற அச்சத்தில் அப்பாவியாய் இறந்தன குழந்தைகள்.
தினம் தோறும் பள்ளிக்கு ஒழுங்காக போகும் என் தெருவினைச் சேர்ந்த 2 ஆவது படித்த வெங்கடேஷ் அன்றைய தினம் உடல் நலம் இல்லை எனக்கூறி பள்ளிக்கு செல்ல மறுத்ததை குழந்தைகள் கூறும் வழக்கமான பொய்யாக நினைத்து குழந்தையை அடித்து தரதரவென இழுத்து வந்து பள்ளியில் கொண்டு விட்ட வெங்கடேஷின் அப்பா முருகானந்தத்தின் கதறல் இன்றளவும் என்னை நிம்மதியிழக்க செய்கிறது.
தீ விபத்து நடந்து 6 வருடங்களுக்கு மேலாகியும் அவ் வழக்கு வாய்தாவிற்கு வாய்தா நடந்துக் கொண்டிருக்கிறது. தற்போது வழக்கு தஞ்சைக்கு மாற்றப்பட்டுள்ளது. கொடிய அந்த தீ விபத்திற்கு பிறகு கும்பகோணம் நீதிமன்றத்திற்கு வந்த அப்பள்ளியின் தாளார் பழனிச்சாமியை வழக்கறிஞர்கள் அடிக்க பாய்ந்ததும் நடந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் தான் செத்தனரே ஒழிய அப்பள்ளியின் ஒரே ஒரு ஆசிரியர் கூட தீயிற்கு பலியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றளவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சீர்கெட்ட கல்விக் கொள்கைகளுக்கு சாட்சியாக இருக்கிறது அந்த எரிந்துப் போன கட்டிடம். தனது பணத்தாசையால் குறுகிய கட்டிடத்திற்குள் அளவுக்கதிமான குழந்தைகளை அடைத்து கொலை செய்த பள்ளி தாளாளரையும் அவருடைய அனைத்து மோசடிகளுக்கும் துணைப் போன கல்வித் துறை நிர்வாகிகளையும் இன்றளவும் கூட சட்டத்தினால் எதுவும் செய்ய இயலாமல் வாய்தாவிற்கு மேல் வாய்தா வழங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா விதிகளுக்கும் முரணாக குறுகிய இடத்தில் கட்டிடம், அனுமதிக்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகமான குழந்தைகளை சேர்த்தது.., விபத்து நடந்த நேரத்தில் குழந்தைகளை மீட்க போதிய பணியாளர்கள் இல்லாதது போன்றவை காரணங்களாக இருக்கின்றன. மேலும் மதிய உணவிற்காக பற்ற வைத்த அடுப்பின் நெருப்பு பள்ளியின் கீற்று மேற்கூரைக்கு பரவி பிள்ளைகளை காவு வாங்கி இருக்கிறது. 94 பிள்ளைகளை பலி கொடுத்த பிறகே தமிழ்நாடு அரசு கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்கு கெடுபிடி காட்டியது.
தீ விபத்து நடந்த பள்ளியில் வருடாவருடம் ஜீலை 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியினை நடத்துகின்றனர் இறந்துப்போன குழந்தைகளின் பெற்றோர்கள். இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோருகிறார்கள் இவர்கள். அங்கு இறந்த குழந்தைகளின் படங்களை ஒரே படமாக உருவாக்கி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதில் ஒரு குழந்தை என்னை ஈர்த்தது. அக்குழந்தைக்கு புகைப்படம் இல்லை. புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் அக்குழந்தையின் பெயரான “ப்ரியா” என்று எழுதி வைத்திருக்கிறார்கள். இன்னொரு படமும் அப்படித்தான். புகைப்படம் இல்லாமல் உருவத்தினை வரைந்து வைத்திருந்தார்கள் எனக்கு கண்ணீரே வந்து விட்டது. ஒரு புகைப்படம் கூட எடுக்க இயலாத வறிய சூழலில் இருந்த அக்குழந்தைகள் கல்வி கற்பதற்காக வந்த இடத்தில் எரிந்து செத்திருக்கின்றன. குழந்தை பிறந்த நொடி முதல் ஹேண்டிகாமில் பதிவு செய்து பரவசப்படும் உலகில் தான் எவ்வித அடையாளமுமற்று இறந்து விட்டிருக்கிறாள் ப்ரியா.
மேலை நாடுகளில் குழந்தைகளை கொண்டாடுகிறார்கள். மிக சுகாதாரமான பள்ளியில் நல்ல வெளிச்சத்தில் ,சிறப்பான ஆசிரியர்களின் கற்பித்தலில் குழந்தைகள் வளருகின்றன. மிக சுகாதாரமான கழிவறைகளோடு , காற்றோட்ட வெளிச்சத்தில் வகுப்பறை என குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியோடு ,சூழலையும் இணைந்தே அளிக்கின்றன மேலை நாடுகள். ஆனால் நம் நாட்டிலோ தரமற்ற பள்ளியில் வெளிச்சம் இல்லாத வியர்வை புழுக்க அறையில் பிள்ளைகளை திணித்து, தகுதியற்ற ஆசிரியர்கள் கல்வி வழங்குகிறார்கள். பல பள்ளிகளில் கழிவறைகள் இல்லை.இருந்தாலும் பயன்படுத்த தகுதியற்று சுகாதரமற்று இருக்கின்றன.
இனிமேலும் கும்பகோணங்கள் உருவாக வேண்டாம் என்பதுதான் கும்பகோணத்துக்காரர்களின் வேண்டலாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய தீமை மனிதனுக்குள் ஊறிக்கிடக்கும் சுயநலம் சார்ந்த சகிப்புத் தன்மை உணர்ச்சி. அந்த சகிப்பே வாழ்வின் எல்லா மட்டங்களிலும் சமரசங்களை தேடச் சொல்கிறது. வாழ்வதற்கான எவ்வித தகுதியும் இல்லாத சமூகத்தில் நாம் அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்கிறோம். குழந்தைகள் சாகின்றன.
குருட்டுக் கண்களைத்
திறந்துப்பார்த்தால் இருட்டுதான்
பிரகாசமாய்த் தெரிகிறது
செவிட்டுச் செவிகளை கூராக்கி முயற்சித்தால்
நிசப்தம்தான் கூச்சலாய் கேட்கிறது
நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால்
சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது
உருமாறிப் போனவன்
உடல் மாறி
மனம் மாறினப் பின்.
–ஆத்மநாமின் இரவில் பேய்கள் கவிதையிலிருந்து…
Anonymous
படிக்கும்போதே கண்கள் கலங்கிவிட்டன
பள்ளி மட்டும் காரணம் அல்ல பள்ளி கல்வி அதிகாரிகள்,மாவட்ட ஆட்சியர்,மாநில முதல்வர் மற்றும் நடந்துபோனபிறகு பேசவும்,எழுதவும் செய்யும் நாமும்தான்.எதுஎதுக்கோ ஓரு தினத்திற்கு பெயர் வைத்து கொண்டாடும் நாம் பள்ளி பிள்ளைகளின் நலனிற்காக ஜீலை 16 ஆம் நாளை ”பள்ளி பாதுகாப்பு தினம்” என்று வைத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை கல்வி அதிகாரிகள் பார்வையிடவேண்டும்
K Siva Karthikeyan
குடந்தையை சேர்ந்தவன் நான். எனது உறவினர் ஒருவரின் மகன் இந்த தீ விபத்தில் இறந்து விட்டார். அவரது தந்தை ஆட்டோ ஓட்டுவபவர். அவர் எனக்கு நல்ல பழக்கம். அவரது மகன் புகைப்படம் அவரது ஆட்டோவில் எப்போதும் இருக்கும். எப்போதும் அங்கே சென்று வணங்கி விட்டுத்தான் காலை பணியை துவங்குவர். எனது தந்தை இந்த பள்ளியை கடக்கும் போதெல்லாம் கூறுவார் நான் இந்த பள்ளியில் தனது மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பை படித்தேன் என்று. நினைத்தாலே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நமது இயலாமையை நினைத்து வருந்துவதா என்ன செய்யவது..
K Siva Karthikeyan
குடந்தையை சேர்ந்தவன் நான். எனது உறவினர் ஒருவரின் மகன் இந்த தீ விபத்தில் இறந்து விட்டார். அவரது தந்தை ஆட்டோ ஓட்டுவபவர். அவர் எனக்கு நல்ல பழக்கம். அவரது மகன் புகைப்படம் அவரது ஆட்டோவில் எப்போதும் இருக்கும். எப்போதும் அங்கே சென்று வணங்கி விட்டுத்தான் காலை பணியை துவங்குவர். எனது தந்தை இந்த பள்ளியை கடக்கும் போதெல்லாம் கூறுவார் நான் இந்த பள்ளியில் தனது மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பை படித்தேன் என்று. நினைத்தாலே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நமது இயலாமையை நினைத்து வருந்துவதா என்ன செய்யவது..
சென்ஷி
:((
பணவெறியால் அரசின் அலட்சியத்தால் கொல்லப்பட்ட அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு எனது அஞ்சலிகள்.
ஜமாலன்
உங்கள் பதிவின் பாதிப்பில் எழுதப்பட்டது… இப்பதிவு.. http://jamalantamil.blogspot.com/2010/07/blog-post.html
ஜமாலன்
பணவெறியால் அரசின் அலட்சியத்தால் கொல்லப்பட்ட அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு எனது அஞ்சலிகள்.
ஜமாலன்
கண்ணீரை வரவழைக்கும் ஏற்படுத்திய இந்நிகழ்வை, நெகழ்ச்சியுடன் அதன் வலி மாறாமல் சொல்லியுள்ளீர்கள். படிக்கும்போதே கண்கலங்க வைக்கிறது. நானும் கும்பகோணத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் மேலதிக சோகத்திற்கும் பொறுப்பிற்கும் ஆளாகிறேன். அரசு கல்வியை வியாபாரமாக்கியது கண்டிக்கத்தக்கது என்றால், அந்த வியபாரத்திற்குகூட குறைந்தபட்ச சட்ட விதிகளுக்க உட்பட்ட பாதுகாப்பை வழங்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் வழக்காட என்ன உள்ளது என்றே தெரியவில்லை. இது விபத்து என்றாலும், சட்டவிதிமுறைகளை மீறி செய்யப்பட்ட செயல் என்ற வகையில் நிர்வாகமும், மாவட்ட கல்வித்துறை மற்றும் அரசு பொறுப்பேற்க வேண்டியது அவசியம். பார்க்கலாம் என்னதான் செய்கிறார்கள் என்று?
செ.சரவணக்குமார்
//குழந்தை பிறந்த நொடி முதல் ஹேண்டிகாமில் பதிவு செய்து பரவசப்படும் உலகில் தான் எவ்வித அடையாளமுமற்று இறந்து விட்டிருக்கிறாள் ப்ரியா//
சில இடங்களில் வாசிக்க முடியாமல் கண் கலங்கினேன்.
என்ன செய்வது அழுவது மட்டும்தான் நம் தலைவிதியாகிப்போனதோ?
இந்த வழக்கிலும் போபாலைப் போன்று ஒரு தீர்ப்பு வந்துவிடும் என்ற அச்சமும் இருக்கிறது.
கண்மணிகளுக்கு எனது அஞ்சலிகள்.
மயில்
படிக்கவே முடியலை :((
விக்னேஷ்வரி
தொண்டை அடைக்கும் துயரம் கண்களில் கண்ணீராகக் கசிகிறது மணி.
தீ பிடித்தவுடன் அவசர கதியில் ஓடி வந்த பல குழந்தைகள் தங்களுடைய புத்தகப் பையை விட்டு விட்டு சென்றால் வீட்டில் பெற்றோர் அடிப்பார்களே என்று நினைத்துக் கொண்டு புத்தகப் பையையும், டிபன் பாக்ஸையும் எடுக்க மீண்டும் பள்ளிக்குள் ஓடிய போதுதான் தீக்கு பலியாகிப் போன கொடுமை நடந்தேறியது. //
:’(
முத்துலெட்சுமி/muthuletchumi
கேட்கும்போதும் படிக்கும்போதும் அழுகையாத்தான் வரும்.. நீங்க சொன்ன வார்த்தைகள் அத்தனையும் மிக உண்மை.. ஹேண்டிக்கேமிலும் டிஜிட்டலிலும் ஒவ்வொரு உணர்வையும் படமெடுத்து பாதுக்காப்பவர் இருக்கும் உலகில் புகைப்படமில்லா பிரியாவும் புத்தகத்தைக் காப்பாற்றிய மழலைகளும்
🙁 சொல்ல வெட்கமாக இருக்கிறது.
bandhu
//குழந்தை பிறந்த நொடி முதல் ஹேண்டிகாமில் பதிவு செய்து பரவசப்படும் உலகில் தான் எவ்வித அடையாளமுமற்று இறந்து விட்டிருக்கிறாள் ப்ரியா//
உண்மை. கண்ணில் நீர் மல்குகிறது.
வளர்ந்த நாடுகளில் பள்ளிகளின் தரம் (infrastructure) சிறந்த முறையில் பராமரிக்கப் படுகிறது. நாங்கள் வசிக்கும் அமெரிக்கா-வில் சிறந்த முறையில் பராமரிக்கிறார்கள். எது எதற்கோ அமெரிக்கா வை உதாரணமாக எடுத்துக்கொள்ளும் நாம் இந்த மாதிரி நல்ல விஷயங்களுக்கு ஏன் உதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது?