அண்ணன் சீமான் மீது மீண்டும் வழக்கொன்றினை பதிவு செய்து விட்டு தனிப்படைகள் பல வைத்துக் கொண்டு தேடுகின்றனர் காவல் துறையினர். தமிழ் இனத்தின் உரிமைக் குரலாய் ஒலிக்கின்ற சீமானின் ஆவேசம் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்பதற்கான சான்றுகளாய் அமைகின்றன இத்தகைய அச்சுறுத்தல்கள். தாக்கப்பட்டு ..நிர்வாணப்படுத்தப்பட்டு..மனித மாண்பிற்கு அப்பாற்பட்டு கொல்லப்பட்ட தன் எளிய மீனவ சகோதரனின் மரணத்திற்காக ஆற்றாமை வலியோடு கத்தித் தீர்த்த சீமானின் சினம் கொண்ட அறம் ஊழலும்..துரோகமும் புரையோடிப் போன மூன்றாம் தர ஆட்சியாளர்களுக்கு சவாலாய் இருக்கிறது. என் சகோதரனை கொல்லாதே.. அவனை நீ அடித்தால் நான் உன்னை அடிப்பன் என்ற அறச் சீற்றம் சிங்கள பேரினவாதத்தின் மீது இந்தியாவின் மலர்ந்து விட்ட கள்ளக் காதலுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. ஒரு மனிதனின் உணர்வு கொப்பளிக்கும் பேச்சு அதிகார உச்சங்களுக்கு அச்சுறுத்தலாய் விளைந்து அசைக்க முடியாக அதிகாரத்தின் மாட மாளிகை..கூட கோபுரங்களை கவிழ்க்கும் பெரும் புயலாய் மாறுவது வரலாற்றில் புதிதல்ல. வரலாறு எத்தனையோ ஆகச் சிறந்த பேச்சாளர்களை கண்டிருக்கிறது. திராவிட இயக்கங்கள் மாபெரும் பேச்சாளர்களையே தன் மூலதனமாக கொண்டு வளர்ந்தன. கரகரத்த குரலால் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தமிழ்நாட்டில் பாடை கட்டினார் அறிஞர் அண்ணா . முதலாம் உலகப் போரின் தோல்வியில் துவண்டு கிடந்த ஜெர்மனியை தன் உணர்வு மிக்க பேச்சால் உருவேற்றி உருவாக்கியவர் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரின் போது சரிந்து கிடந்த இங்கிலாந்தினை சுருட்டு ஊதும் உதடுகளால் உரையாற்றி உசுப்பேற்றி உயிரூட்டியவர் சர்ச்சில். இந்திய விடுதலையில் அனலாய் தகித்த சுபாஷ் சந்திர போஸின் சொற்கள் இன்னமும் உலவுகின்றன இலட்சியங்களாய் உலகில்.
சொற்களின் வலிமை மிகப் பெரியது. சொற்களே தேசங்களை உருவாக்குகின்றன. தோல்வியாலும்.. அடிமைத்தனத்தினாலும் சினம் கொண்ட மனநிலை சீறி பாய்ந்து உதிர்க்கும் சொற்கள் காற்றில் மிதந்து..கால்கள் முளைத்து..சோம்பிக் கிடக்கும் விழிகளில் வெளிச்சத்தினை பாய்ச்சும் வல்லமை உடையன. சீமானின் சினமும் இத்தகையதுதான்.
ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமைப் போரில் தவிர்க்க இயலா இருள் ஒன்று சூழுகையில் வெளிச்ச தெறிப்பாய் வெளியே வந்தார் சீமான். முற்போக்கு மேடைகளில் பெரியாரியலையும், பொதுவுடைமையும் ,தமிழினச் சிறப்பினையும் ..பாடல்களோடும், நகைச்சுவையோடும் விவரித்த சீமான் தேசியத்தலைவர் பிரபாகரனின் சந்திப்பிற்கு பிறகு ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க சொல்லாயுதமாய் மாறிப் போனார்.
எளிய மனிதனின் ஆழ் மனதில் கவிழ்கின்ற துயரொன்றின் விளைவாய் பிறக்கின்ற சினமாய் மேடையில் முழங்கினார் சீமான். அனல் தெறிக்கும் அவரது சொற்களில் பிரபாகரன் என்ற பெயர் உச்சக் கட்ட பெருமிதமாய் நிலைநிறுத்தப்பட்டது. ஈழம் என்பது இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கான நாடு மட்டுமல்ல.. உலகில் வாழும் 12 கோடி தமிழர்களுக்கான தேசம் என உரக்க அவர் முழுங்குகையில் தமிழர்களுக்கான நோக்கம் ஒர்மையாக ஒன்றுப்பட்டு ஒளி வீசியது.
மேடையில் முழங்குகையில் சீமானின் உடற்மொழி மிக தனித்துவமானது. கைகளை வீசி, காற்றினை அலசி…உடலினை முறுக்கி ..நெருப்புத் துண்டுகளாய்..அடிவயிற்றில் இருந்து ஆறாத சினமாய் சீறிப்பாயும் சீமானின் வார்த்தைகளில் சிக்கும் எதிரி அம் மேடையில் சின்னாப்பின்னாபடுவதை நாங்கள் மெய்சிலிர்க்க பார்த்திருக்கிறோம். ஈழம் மட்டும் மலர்ந்தால் இங்குள்ள தமிழன் ‘என் அண்ணன் நாட்டில் லஞ்சம் இருக்கா..? இங்கு மட்டும் ஏன் லஞ்சம் வாங்குகிறாய் ..?’ என சீறிக் கொண்டு செருப்பால் அடிப்பான் என சீமான் சிலிர்ப்பாய் விவரிக்கையில் சீமானின் கால்கள் பின் மடங்கி செருப்பினை கழற்ற எத்தனிக்கும் அந்த லாவகம் யாருக்கும் எளிதில் அமையாதது. தான் கண்ட ஈழத்தினை கனவின் தேசமாய் அவர் விவரிக்கையில் குரலில் ஓடும் குழைவும், இன்பமும் உண்மையானவை. என் அண்ணன் பிரபாகரன் என உச்சஸ்தாயில் அவர் குரல் மேல் எழும்பும் தருணங்களில் அவர் விழிகளின் ஓரத்தின் உண்மையான சகோதரனின் பாசம் வழியும். இல்லாத ஒன்றாய் இருக்கின்ற இறையாண்மையின் போலித் தனங்களை அவர் வெளிக் கொணரும் தருணங்களில் எள்ளலும்..துள்ளலும் மிகுந்த கேலிகளில் கூட துயர் ஒட்டிக் கொண்டிருப்பதை நான் கவனித்து இருக்கிறேன்.
ஈழத்தில் நம் சகோதரிகளின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறுவுகளை ஆறாத காயத்தோடு்ம்.. தாங்காத வலியோடும் அவர் விவரிக்கையில் குரலில் காயம் பட்ட சிறுத்தையின் சினம் கொண்ட வன்மத்தின் வெப்பத்தினை நான் உணர்ந்திருக்கிறேன்.எத்தனையோ இரவுகளில் ..ஏதேதோ ஊர்களில்.. விடுதியின் மங்கலான வெளிச்சத்தில் தனிமையாய் படுத்து படித்துக் கொண்டிருக்கும் அண்ணன் சீமானை உண்மையில் நான் வேதனையோடு பார்த்திருக்கிறேன். ஏன் இந்த மனிதனுக்கு மட்டும் துயரும்..வலியும் சிறையும் மிகுந்த வாழ்க்கை..? .ஏன் இந்த மனிதன் மட்டும் இப்படிப்பட்ட வலி மிகுந்த கொடும் இருட்பாதையில் முள் செருப்போடு நடந்து செல்கிறான்..? இவனுக்குதான் அருகிலேயே செல்வ செழிப்பான பகட்டு அரண்மனையின் பளபளப்பான ராஜ வீதிகள் இருக்கின்றனவே..? அதை தேர்ந்தெடுக்காமல் வலிய முன் வந்து இந்த மனிதன் ஏன் வலியை தேர்ந்தெடுத்தான் என்ற வினாவில் தான் ஒரு இனத்தின் விடுதலைக்கான தணியாத தாகம் ஒளிந்திருக்கிறது.
அண்ணன் சீமானின் உயர்ந்த பட்ச விருப்பம் ஈழம்..அதுதான் அவருக்கான உளவியல் தீர்வு.அதுதான் அவர் காயங்களுக்கான மருந்து. அதுதான் அவருக்கு அனைத்தும். ஒரு நாள் நான் அண்ணன் சீமானிடம் கேட்டேன். ஏன் அண்ணா நீங்கள் மட்டும் இப்படி..? ..என்னை சற்று நிமிர்ந்து பார்த்து சற்றே சிரிப்பாய் சொன்னார்.. ‘என்னையே இப்படி பார்க்குற நீ என் அண்ணனை பார்த்தால் அசந்திருப்பாய்’. உண்மையில் அவர் தேசியத்தலைவர் பிரபாகரனை நினைக்காத நொடியில்லை. ஒவ்வொரு பொழுதிலும் அண்ணன் எங்களைப் போன்ற தம்பிகளிடம் பகிர துடிக்கும் செய்தி..தத்துவம்.. அனைத்துமே பிரபாகரன் தான். கொஞ்சம் தாமதமாகத்தான் எனக்கு புரிந்தது. அவர் தன்னையே தன் அண்ணன் போல மாற்றிக் கொள்ள போராடி வருகிறார் என்று. பிரபாகரன் என்பது மிக நீண்ட நெடிய பாதை. அப்பாதையில் சற்றும் தளரால் மூச்சிறைக்க ஒடிக் கொண்டிருக்கிறார் அண்ணன் சீமான்.
ஒரு இனத்தின் தோல்விக்கு பிறகான நம்பிக்கை துவக்கமாய் சீமான் அடையாப்படுத்தப்பட்டிருக்கிறார். எந்த அடையாளங்களை அழிப்பதற்கு ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்களோ … அதே அடையாளமாய் அச்சு அசலாய் கம்பீரமாய் நிற்கிறார் சீமான். இதுதான் ஆட்சியாளர்களுக்கு பிரச்சனை. சீமானின் கனவு மிகப் பெரியது. அதற்கான பாதையும் மிக தொலைவு. ஆனால் எங்களைப் போன்றோரை இழுத்துக் கொண்டு ஓடும் ஒப்பற்ற தலைமை இயந்திரமாய் அவர் போய் கொண்டிருக்கிறார். கடும் கோபத்துடன் கனன்று தெறிக்கும் அவரது வார்த்தைகள் ஆட்சியாளர்களை அச்சப்பட வைத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் சீமான் தனி மனிதனல்ல. அவர் தோல்வியின் துயரும்..வலியும் தந்த வன்மம் மிக்க ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க ஆயுதம்..
சீமான் ஒரு எய்யப்பட்ட அம்பு.
பிரபாகரன் என்ற வில் சீரிய இலக்கோடு சீற வைத்த அம்பு..
இதன் தாக்குதலில்
இலக்கு இல்லாமல் போகும்.
துளைக்கும் வலிமையில் துயர் தீய்ந்து போகும்.
அது வரை எய்யப்பட்ட அம்பினை
தடுத்துப் பார்க்கும் தகரங்களும்,, தடைகளும்,தகர்க்கப்பட்டு
சிறைகள் சிதைக்கப்பட்டு.. துளைக்கப்பட்டு..
தெறிக்கும் தெறிப்பில் ஒளிரும் விடுதலையின் சுடர்.
Jeyakumar Tamilmani
இனியும் எத்தனை காலம் தான்.. நாமும் அவர்களை எதிர்த்து கத்திக்கொன்டு இருப்பது?
எதிரி செய்யும் வன்முறையை .. வார்த்தைகளால் ஒன்னும் செய்ய முடியாது. என்று நமக்கும் தெரியும்… எதிரிக்கும் தெரியும்!
ஒரு காலக்கட்டம் வரைக்கும்.. நாம் மக்கள் விழிப்புனர்வுக்காக பேசினோம் சரி….. இனியும் எத்தனை காலத்துக்கு?
மறத்தமிழன்
வணக்கம் மணி.செந்தில் அண்ணா. இந்த பதிவு மிகவும் சிறப்பாய் இருக்கு. படித்துமுடிக்கும் வரை சிலிர்ப்பாய் இருந்தது, சீமான் அண்ணனின் உரையை கேட்பது போலவே.
முதன்முதலாக சீமான் அண்ணனின் உரையை நேரில் கேட்கும் போது ஏற்பட்ட உணர்வை விவரிக்கவே முடியாது. இப்படி கூட பேச முடியுமா என ஆச்சரியத்தில் உறைந்தேன். ஒவ்வொரு சொல்லும், துவக்கையில் இருந்து இலக்கை நோக்கி சீறிப் பாயும் குன்டாய். எதிரிகளும், துரோகிகளும் இங்கிருந்தால் இந்த பேச்சை கேட்டே சுருந்து விழுந்து மடிந்துவிடுவார்கள் என உணர்ந்தேன்.
ஈழத்து அண்ணனின் வழி நடக்கும் இந்த தமிழ்நாட்டு அண்ணனின் பின் தொடரும் இந்த தம்பிகளும் தமிழினம் விடுதலை அடையும் வரை ஓயோம், என உறுதி ஏற்போம்.
தமிழன்புடன்,
மறத்தமிழன்
“வலுத்தவன் வாழ்வான் – வேலுப்பிள்ளை பிரபாகரன்”
அன்புத்தமிழின உறவுகளே, மக்கள் தொகை கணெக்கெடுப்பின் பொழுது உங்களை தமிழர்கள் என்று பதிவு செய்க….