கனவு நிலத்தில் பேய்களின் நிழல் படர்ந்து ஆக்கிரமிக்க முயல்கிறது
குழந்தைகளின் நிலக்கனவு தகிக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருக்க
பூர்வீக நிலத்தை அள்ளிச் செல்லும் பொழுது
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொள்வதா? – தீபச் செல்வன்






துயர் மிகுந்த உண்மை படைப்பாய் மிளிரும் போது நன்றாக இருக்கிறது என்று கைக் குலுக்க முடியவில்லை. கண் கலங்கத்தான் முடிகிறது. என் சகோதரன் தீபச் செல்வன் சொற்களில் ஈழத்து துயரம் பெருக்கெடுக்கையில் மிகுந்த குற்ற உணர்வோடு என் வாசிப்பு அனுபவம் நிகழ்கிறது. ஒவ்வொரு வரியின் ஊடாக ஆழமாக நாம் ஊடுரும் போது ஈழத்து உறவின் சதை துணுக்கு ஒன்று நம் முகத்தில் அறைந்து நம்மை திடுக்கிட வைக்கிறது. எதனால் நடந்தது..எப்படி முடிந்தது என ஆய்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது நிகழ் காலத்தின் துயர். அந்த துயரின் சாட்சியாக தீபச்செல்வனும்..அவரது சொற்களும் எவ்வித ஒப்பனையும் இல்லாமல் நிற்கிறார்கள்.

உண்மை இவ்வாறாகத்தான் இருக்கிறது. ஒப்பனைகள் ஏதுமில்லாமல்..வார்த்தை மயக்கங்களை கடந்து ..தனியே நிற்கிறது அது. ஈழத்து துயரங்களின் ரத்த சாட்சியாய் தீபச் செல்வனின் எழுத்துக்கள் உறைந்திருக்கின்றன. எம்மைப் போன்ற தாயகத்து தமிழனுக்கு தன் வாழ்நாளில் அகற்றவே முடியாத கனத்த சங்கிலியாய் ஈழத்து அழிவினை வேடிக்கை பார்த்த குற்ற உணர்வு கனக்கும். எம்மால் எதுவும் இயலவில்லை என்பது போதுமான சமாதானமா என்ன..? அல்ல.

ஆனால் தீபனின் எழுத்துக்கள் வெறும் தகவல்களாக இல்லாமல் அழிந்த ஒரு பெரும் நிலத்தின் அழிவை நிர்வாணமாக்குகின்றன. யுத்தம் முடிந்த பின்னரும் இன்றளவும் நம் உறவுகள் மீது தொடுக்கப்படும் உளவியல் போர் நடந்து முடிந்த கோர அழிவை விட மிக மோசமானது. கந்தல் உடைகளோடு..முள்வேலிகளுக்கு நடுவில்..வெறித்த பார்வைகளுடன் மனிதன் உலவும் ஒரு நிலத்தினை அவர்களுக்கு மத்தியில் இருந்து தன் எழுத்துக்கள் ஊடாக காட்சிமயப் படுத்துவதன் வலி மிகக் கொடுமையானது. வலி சுமந்து வரும் தீபனின் எழுத்துக்கள் யாருக்கும் எப்போதும் ஆறுதலை தரப் போவதில்லை. மாறாக நீங்கவே இயலாத குற்ற உணர்வினை நம்முள் விதைத்து விட்டு போகின்றன அவை.

லும்பினி தளத்திற்காக சோபா சக்திக்கு தீபச் செல்வன் வழங்கிய பேட்டி துரோகத்தனங்களால் அப்பி கிடக்கிற இருட்டினை சுட்டெரிக்கும் நெருப்பாய் தகிக்கிறது. நம் சம காலத்தில் வாழ்ந்த நம் சகோதர, சகோதரரிகள் கற்பனைக்கும் எட்டாத தியாக உணர்வோடு தாய்நாட்டின் விடுதலைக்காக போரிட்டு வீர மரணம் அடைந்திருக்கிறார்கள் என்ற உணர்வு துயர் மிகுந்த இக் காலத்திலும் பெருமிதம் கொள்ள செய்கிறது. விடுதலைப் புலிகள் மக்களிடமிருந்துதான் தோன்றினார்கள்…மக்களிடையே வாழ்ந்தார்கள்..மக்களுக்காக போரிட்டார்கள் என்ற உண்மையை அழிக்க எதிரியை விட இன்று துரோகிகள் தான் வெகுவாக உழைக்கிறார்கள். இணையத் தளங்கள் ஊடாக விஷச் செடியாய் முளை விட்டு கிளைத்து பரவும் இவர்களின் அவதூறுகளின் சாரம் உண்மைக்கு எதிர்மாறானது . எந்த இனத்திற்கும் நேர்ந்து விடக் கூடாத பிழை என நான் கருதுவது இதுதான். எதிரிக்கு மிக எளிதாக நம்மினத்தில் கிடைத்த விஷயம் துரோகம். தமிழர்கள் எவ்வித துயரும், நிர்பந்தமும் இல்லாமல் தமக்கு எதிராகவே தாங்களே துரோகமிழைத்துக் கொண்டார்கள். கொள்கிறார்கள் என்பதனை நாம் தலைக் குனிந்து ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி யிருக்கிறது.

இன்றளவும் எதிரி கரங்களில் சிக்கிக் கொண்டு..எதிரியின் குரலாய் ஒலிக்கிற குரல்கள் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தினைப் பற்றியும் , அதன் மாபெரும் தலைமைப் பற்றியும் சுட்டு விரல் கூட நீட்ட முடியவில்லை என்பதில் தான் அடங்கி இருக்கிறது ஒரு இனத்தின் தியாக வரலாறு. மற்றபடி இணையத்தளங்களின் ஊடாக பழி சொல்பவர்களின் வினாக்களுக்கு விடையாக இருக்கிறது போராளிகளின் வாழ்வும் கனவும். தீபச் செல்வன் அந்த வாழ்வினை தன் கண்ணெதிரே கண்டிருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கம் வெற்று தீவிரவாதத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு சாகச மயக்கங்களின் ஊடாக வளர்ந்த இயக்கமல்ல . மாறாக தியாக உணர்வின் அடித்தளத்தில் தாயக விடுதலைக்காக..இனி இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அடைவதற்கு ஒர் கனவு இருக்கிறது. அது எம் மக்களின் சுதந்திரம் என்ற முழக்கத்தோடு மக்களிடையே கனவாய் துளிர்த்து ..நினைவாய் நிறைவேறி ..நாடாய் நகர்ந்த இயக்கம். அதைத்தான் தீபச்செல்வன் பதிவு செய்கிறார். புலிகளின் இருப்பற்ற ஒரு சூழலில் இன்றும் சாதீய நுண் அரசியல் பேசும் மாமேதை மார்க்ஸ் உள்ளீட்ட மாமனிதர்கள் மக்களின் துயரங்களைப் பற்றியோ..போரைப் பற்றியோ பேசுவதில்லை. புலிகளின் இருப்பற்ற சூழலிலும் …தாயக விடுதலைக்காக களமாடி ..கனவோடு புதைந்த மாவீரர்களின் பெரு மூச்சுக் காற்று கூட இவர்களுக்கு அச்சமூட்டுகிறது. அதனால்தான் இல்லாத..மெளனித்த போராளிகள் மீது களங்கம் கற்பிக்க ஓடி வருகிறார்கள் இவர்கள்.

தீபச்செல்வனின் லும்பினி செவ்வி இது வரை விவரிக்காத ஒரு உலகினை நமக்கு காட்டுகிறது. அறிவுலகின் அனைத்து ஆடம்பரங்களையும் தகர்த்து எறிந்து விட்டு ..மென்மையாக சோபாசக்தியின் கேள்விகளை எதிர் கொண்டிருக்கிறார் தீபன். போரினால் நேரடி அலைகழிப்பிற்கும்..அவலத்திற்கு உள்ளான ஒரு மனம்.. இத்தனைக்கு பிறகும் கூட.. இன்றளவும் தன்னுடைய தன்னுரிமை தாகத்தினை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ள போராடும் போராட்டத்தினைத்தான் தீபச் செல்வனின் வார்த்தைகளில் தெரிந்தது. விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் நிரம்ப இருந்தார்கள் என்ற உண்மையை சாதீயம் பேசி ..சிங்களவனுக்காக சாதிக்க துடிக்கும் துரோகிகளால் ஏற்க முடியாதுதான். அதனால் தான் தீபச் செல்வன் இவர்களுக்கு ஆபத்தானவராக தெரிகிறார். ஏனெனில் உண்மை இலட்சியமாக துலங்குகிறது. அது கோபமாக..போராக மலர்கிறது. உண்மை இவர்களைப் பொறுத்தவரை பிழைப்பிற்கான உத்திரவாதங்களை தருவதில்லை. அதனால் தான் சிங்களன் சிந்தும் சில்லறைகளுக்கு..(சில்லறைகள் எந்த வடிவத்திலும் இருக்கலாம்) விலை போய்.. பொய் பேசி பொல்லாங்கு வளர்க்கிறார்கள். ஆனால் தீபச் செல்வன் கனத்த இதயத்தோடு சொற்களை இறைக்கிறார். ஒவ்வொரு பதிவும் காலத்தினை..களத்தினை..காயத்தினை விவரித்தவாறே நகர்கிறது.

தீபச் செல்வன் மிகத் தெளிவாக கூறுகிறார்.” சாதியம் குறித்து விடுதலைப் புலிகளுக்கு நல்ல புரிதல் இருந்தது. அமைப்பில் தலைமை வகித்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள். இந்த உண்மை புலிகள் மீது அவதூறாய் பேசிய நாக்குகளில் திராவகம் பூசுகின்றது. சாதீ உணர்வினை மையமாக வைத்து சாதி நுண் அரசியல் பேசும் சகலமானவர்களுக்கும் இச் சொற்கள் சங்கடத்தினை அளிக்கின்றன. அவர்களின் அறிவுஜீவி முகமுடியில் அப்பட்டமாய் உண்மை கோடு கிழிக்கிறது. இன்றளவும் இங்கே தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்க டீக் கடைகள் தோறும் போய் ஆய்வு நடத்த வேண்டியிருக்கிறது. ஆனால் ஈழத்தில் நம் சகோதரர்கள் அதை சாதித்தே விட்டிருந்தார்கள். அதை தீபச் செல்வன் மிக நேர்மையாக பதிவு செய்துள்ளார்.(“ஈழப்போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முக்கிய நடவடிக்கையாயிருந்தது. விடுதலைப் புலிகள் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை குறைந்திருந்தது. வன்னியில் தீண்டாமை முற்றாக ஒழிந்துவிட்டதைப் பார்த்திருக்கிறேன். “)

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசினால் புலத்திலிருந்து பணம் வருகிறது என்று பேசுபவர்களால்..விடுதலைப்புலிகளை எதிர்த்து பேசி அவதூறு பரப்பினால் சிங்களம் பணம் தருகிறது என்று நாங்கள் சொன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்றளவும் மக்களால் புலிகளின் தியாகத்தினை நினைக்காமல் இருக்க முடியாததை தீபச்செல்வன் தன் செவ்வியில் பதிகிறார். முள்வேலிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு மரணம் கூட ஆறுதலாக போய் விட்ட நிலையிலும்… பதிவுகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார் தீபன்.

தீபச்செல்வனின் சொற்கள் ஒரு ஓவியமாய் மக்களின் அலைகழிப்பினை பதிவு செய்கின்றன. மிக எளிதாக கடந்து விட முடியாத அளவிற்கு தீபனின் சொற்களில் உண்மை உருவேறி கிடக்கிறது. வலியோடிய வாழ்க்கையில் தப்பித்தவறி குழந்தைகள் முகத்தில் துளிர்க்கிற சிறு புன்னகை கூட தீபச்செல்வனின் வார்த்தைகளில் நமக்கு வலியைத்தான் தருகின்றது. ஒரு காலத்தின் பதிவாய் என்றென்றும் தீபச் செல்வனின் எழுத்துக்கள் அழியாத சாட்சியமாய் இருக்கும். அவை என்றென்றும் உண்மையை உரத்துப் பேசி …வீரம் செறிந்த இளைஞர்கள் மீதான பெருமித இருப்பினை தக்க வைக்கும்.

தீபச் செல்வன் வாழும் வாழ்க்கையும்..உதிர்க்கும் சொற்களும், கடுமையான மிரட்டல்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் மத்தியில் எழுபவை என்பதை நாம் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடுமையான அச்சுறுத்தல்களுக்கு நடுவிலும்..ஒரு படைப்பாளியாக தான் வாழும் காலத்து வாழ்க்கையை…மக்களை..வலிகளை பதிவு செய்வது தன்னுடைய கடமையாக கருதுவது தீபச்செல்வன் மேல் நமக்கிருக்கும் மதிப்பு மேலும் அதிகரிக்கிறது. படைப்பாளி என்ற உடன் இசங்கள் பேசி கசங்களாக திரியும் நம்மூர் ஜிப்பாக்களை பற்றி யாரும் நினைத்து விட வேண்டாம்.

தீபச் செல்வனின் கவிதைகள் அசாதாரணமானவைதான். படைப்புகளின் இலக்கணமாக கொண்டாடப்படவேண்டியவைதான். ஆனால் இப்படி அசாதாரணமானவை உருவாவுவதற்கு ஒரு இனம் அழிய வேண்டியிருக்கிறது என்ற நினைவினையும் தீபச் செல்வன் ஏற்படுத்துவதுதான் நம்மை நிம்மதியிழக்க செய்கிறது. தீபச்செல்வன் துயரோடிய சொற்களோடு உண்மையின் தூதுவனாக வருகிறார். அவரது சொற்கள் நம் கனவுகளிலும் வலி விதைக்கும் துயராய் இருக்கின்றன. இந்த துயரும் ,வலியும் தான் எம் இனத்தின் வரும் காலத்திற்கான மூலதனமாய் இருக்கின்றன. தீபச்செல்வனின் வலிச் சொற்களில் தாயக விடுதலைக்கான கனவு கனன்றுக் கொண்டே இருக்கின்றது . கனன்று கொண்டிருக்கும் தீபனின் சொற்கள் உதிர்க்கும் வெப்பம் விடுதலை உணர்வினை துரோக தூறல்களால் ஈரமடைய செய்யாமல் உலர்வாக வைத்திருக்கின்றன.

தீபச்செல்வன் மீது யாரும் அவதூறுகளை அள்ளி வீச எம்மால் பார்த்திருக்க இயலாது. ஏனெனின் தீபன் ஒற்றை மனிதனல்ல. அவன் சுமக்கும் வார்த்தைகளும்..வலிகளும் தான் நாங்கள் மீள் எழ நினைப்பதற்கான துவக்கப் புள்ளி. அந்த வகையில் அவன் தான் நாங்கள். நாங்கள் தான் அவன்.


மணி.செந்தில்

http://lumpini.in/sevvi_003.html