மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நெஞ்சினை பதற வைக்கும் போர்க் குற்ற காட்சிகள் – சிங்கள ராணுவ வீரரின் நேரடி சாட்சியம் -மீண்டும் சேனல் 4 வெளியிட்டது

அரசியல்


இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4′ தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதையடுத்து போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்து வருகிறது.

இந் நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்களை `சேனல் 4′ மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப் லிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப் புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.

இதையடுத்து விடுதலைப்பு லிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தகவலை அப்போது இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத் தூதராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

போரின் இறுதி நாட்களில் நடந்த கொடூரங்கள் குறித்து பெர்னாண்டோ என்ற ரா ராணுவ வீரர் `சேனல் 4′ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி, கதி கலங்க வைத்துள்ளது.

தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக் கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான். பெண்களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி கற்பழித்தனர்.

அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.

ராணுவத்தினரின் செயல்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததை பார்த்தேன்.

இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.


தகவல் : தட்ஸ் தமிழ்.

கலங்கிய விழிகளுடன்
நிற்கிறேன்.
நிகழ்காலத்தில் என் நினைவு பிறழாமல் இருப்பதற்காக
கூசுகிறேன்.
மானுடனாய் இருந்திருந்தால் உண்மையில் மாண்டிருப்பேன்.
தமிழனாய் பிறந்திருப்பதால் தலைக் குனிந்தவாறே உடலை சுமக்கிறேன்.

– மணி.செந்தில்

 1,023 total views,  1 views today

2 thoughts on “நெஞ்சினை பதற வைக்கும் போர்க் குற்ற காட்சிகள் – சிங்கள ராணுவ வீரரின் நேரடி சாட்சியம் -மீண்டும் சேனல் 4 வெளியிட்டது

Comments are closed.