பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: செப்டம்பர் 2011

பரமக்குடி படுகொலைகள் – அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்.


வெகு நாட்களுக்கு முன்பாக நான் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்த போது ஒரு விசித்திரமான காட்சியை கண்டேன். அனைத்து தலைவர்களின் சிலைகளும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. அண்ணல் அம்பேத்கார், காமராசர் ,அண்ணா, தந்தை பெரியார் பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல் சேகரனார்,எம்ஜிஆர் என அனைவரும் விலங்குகள் கூட தங்க மறுக்கும் இரும்புக் கூண்டிற்குள் அடைக்கப்பட்டு கிடந்தார்கள். மக்களின் தலைவர்களுக்கு மக்களால் ஆபத்து என்ற நிலையில் அந்த சிலைகளின் இருப்பு அந்த நிலத்தின் கொடும் சாட்சிகளாக விளங்கிக் கொண்டு நின்றன. வெறும் கல்லான சிலைகள் மட்டும் அல்ல அவை என யாரும் எளிதில் புரிந்துக் கொள்ளலாம். அந்த கற்களால் ஆன சிலைகளில் இருந்துதான் அதிகாரத்திற்கான வேட்கையும், அதற்கான அரசியலும் பிறக்கின்றன.சிலைகளை திறப்பதும், பிறகு அவற்றையே அவமதிப்பதும், அதன் வாயிலாக கலவரங்களுக்கு வழிவகுத்து உயிரை பிடுங்குவதுமாக பல்வேறு வேடங்களில் உலா வருகிறது சாதீயத்தின் இழிவான அரசியல். இறந்துப் போன தலைவர்களுக்கு இடையேயான அந்தக்காலக்கட்டத்தில் நிலவிய வன்மத்தின் வெப்பத்தினை நாளது தேதி வரை பொத்தி பொத்தி பாதுகாப்பதில் தான் இருக்கிறது தனிப்பட்ட சிலருக்கான சில்லறை அரசியல். சாதீயத்தின் கூர் முனைகளை தீட்டாமலிருக்க யாருக்கும் விருப்பமில்லை. சாதீயத்தின் பேரில் நடக்கும் அரசியலையும், கிடைக்கும் அதிகாரங்களையும் எந்த சாதீயத்தலைவரும் இழக்க விரும்புவதில்லை. சாதீய கட்டுமானங்களின் அடிப்படையாக திகழும் சுயசாதி பெருமிதம் என்ற உணர்வே சாதீயக் கட்சிகளின் மூலதனங்களாக விளங்குகின்றன. அரச அதிகாரத்தில் இருப்பவர்களும் சாதீயத்தின் முனை கூர்மழுங்காமல் பாதுகாப்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். சொல்லப் போனால் பரமக்குடிகள் போன்ற பல ஊர்கள் முளைப்பது அரச அதிகாரத்திற்கும், சுய லாப அரசியலின் இழிவான சாட்சிகளாக இருக்கும் சாதீயக் கட்சிகளுக்கும் தேவையாக இருக்கின்றன.

அரச அதிகாரங்களை பாதுகாக்கும் மிக முக்கிய அரணாக சாதி இருக்கிறது. சாதி இழிவினை போக்க தன் வாழ்க்கையையே அளித்த தந்தை பெரியாரின் வழி வந்ததாக சொல்லிக் கொண்டு அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதீய இழிவினை போக்கலாம் என்பது போன்ற மாய்மால வார்த்தைகளை உதிர்த்து தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளே கடந்த பல ஆண்டுகளாக சாதீயத்தினை பாதுக்காக்கும் அமைப்புகளாக செயல்படுகின்றன. திராவிடம் என்ற சொல்லில் தான் பெரியாரியம் முழுதும் அடங்கி இருக்கிறது என்பது போன்றான புனைவுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி உண்மையான திராவிடர்களின் நல வாழ்விற்கான கட்சி திமுக என இன்று வரை பேசிக்கொண்டிருப்பதிலிருந்தே இதை நாம் புரிந்துக் கொள்ளலாம். மொழி வாரி மாநிலங்கள் ஏற்பட்ட பிறகு, நமக்கும்-தெலுங்கனுக்கும், நமக்கும்- மலையாளிக்கும், நமக்கும்-கன்னடனுக்கும் நதிநீர் உட்பட பல முனைகளில் முரண்கள் தோன்றும் போது திராவிடம் என்ற சொல்லுக்கான அவசியம் குறித்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் வினா எழுப்புகையில் ,இந்த சாதீயம் தான் அவர்களுக்கு எதிரான முனையாக முன்நிறுத்தப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லுக்கு அப்பாலும் பெரியாரியம் பரந்து விரிந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. தமிழனின் சாதி இழிவு போக்க, தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய,தமிழர்களின் ஒற்றுமைக்காக,பெண்ணுரிமைக்காக என பல தளங்களில் மூர்க்கமாக போராடிய அந்த கிழவனைத்தாண்டி இந்த மண்ணுக்கான தத்துவங்கள் ஏதுமில்லை . ஆனால் அவர் வழி வந்ததாக சொல்லிக் கொள்ளும் திராவிட கட்சிகளின் அரச அதிகாரத்தில் தான் சாதீயத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. சொல்லப் போனால் திராவிடக் கட்சிகளின் அரச அதிகாரம் தான் சாதியை போற்றி ,பராமரித்து, பாதுக்காக்கின்ற அரணாக திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

ஒட்டுமொத்த இன ஒற்றுமையை உரத்துப் பேசும் தமிழ்த் தேசியர்கள் இது போன்ற சமூக உட் குழு பிணக்குகளில் பெருத்த பின்னடைவினை சந்திக்கின்றனர். பண்பாட்டு பெருமிதங்கள் மூலம் கட்டமைக்கப்படும் இனத்தின் ஒற்றுமையை சமூக உட் குழுவான சாதி சிதைப்பது தமிழ்த் தேசிய கருத்தின் பலத்தினை குறைக்கும் . எனவே சாதி முரண்களால் மற்றவர்களை விட அதிகம் பாதிக்கப்படுபவர்களாக தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. காலங்காலமாக ஆதிக்கச் சாதியின் இறுக்கத்தினில் இருந்து வெளியேற ஒடுக்கப்பட்ட சாதிக்கு என்றைக்கும் அரசியல் துணை நின்றதில்லை. துவக்கத்தில் அரசியல் மூலம் மாற்றத்தினை கொண்டு வர விழைந்த அண்ணல் அம்பேத்கார் கூட , இறுதியில் சமூக வழி செயலான மத மாற்றத்தினைத்தான் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குறுகிய லாபங்களுக்காக தனி நபர்கள் சுயசாதி பெருமிதத்தின் மீது கட்டமைக்கும் அரசியல் இது வரை எவ்விதமான விளைவினையும் இங்கே ஏற்படுத்திவிடவில்லை என்பது உண்மையானது.

தேர்தல்களில் சாதி மக்களின் எண்ணிக்கையை காட்டி சாதிக்கட்சிகள் தங்களின் கூட்டணி தலைமையிடம் இடங்களுக்காக நிற்கின்றன. சாதி ஒழிப்பிற்காக, பிற்படுத்தப்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சமூக நீதிக்காக தோன்றிய திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட தேர்தல்களில் பெருமளவு சாதி பார்த்து,இடம் பார்த்துதான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. தமிழனின் சமூக நுகர்வில் சாதிக்கான இடம் மிகப் பெரியது. இந்தப் புள்ளிதான் இன ஒற்றுமையை நிறுவ முயலும் தமிழ்த் தேசியர்களுக்கான உண்மை சவால்.
பரமக்குடி படுகொலைகளின் மூலம் அரச அதிகாரத்தின் ஆதிக்க உளவியலின் இருந்து பிறந்திருப்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது. திரண்ட மக்களின் உணர்வெழுச்சியான வன்முறை போக்கிற்கு தீர்வாக காவல் துறை தூப்பாக்கிகளை கையாண்டது எதன் பொருட்டும் ஏற்க கூடியதல்ல. மக்களுக்காகத்தான் அரசு. எனவே அவர்களை மீறி, அவர்களை கொன்று அந்த நாளில் காவல் துறை காப்பாற்றியது எவற்றை என்பதை நாம் ஆராயும் போது அரச அதிகாரத்தின் ஆதிக்க முகத்தினை நாம் நேரிடையாக சந்திக்கிறோம்.பார்த்தவுடன் பதற வைக்கிறது பரமக்குடி. மக்களாட்சி தத்துவத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டு அரச வல்லாத்திக்கத்தின் கோர முகம் தெரிகிறது.

வரையறுக்கப்பட்ட,திட்டமிட்ட செயல்களால் பெருகி வந்த வன்முறைகளை தடுத்திருக்க முடியும் என்ற வாய்ப்பு இருந்தும் துவக்குகளையும், ரவைகளையும் தீர்விற்கான வழிகளாக காவல்துறை நம்பியது கண்டிக்கத்தக்கது. அரச பயங்கரவாதம் நிகழ்த்திய வன்முறைகளுக்கு காரணம் ஒரு குறிப்பிட்ட சாதி சார்பு என இவற்றை நாம் குறுக்கி விட இயலாது. மாறாக அரசதிகாரம் தந்த ஆணவமும், வரையறையற்ற அதிகாரமும் இவற்றிக்கான காரணங்கள். இந்த வன்முறையில் பலியானவர்கள் குறித்த தகவல்களை அறியும் போது வேதனையாக இருக்கிறது. நிகழ்ந்த சம்பவங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத எளிய மனிதர்கள் சுடப்பட்டு இருக்கின்றார்கள். அதிகாரம் தந்த ஆணவத்தினால் கக்கிய காவல்துறையின் துப்பாக்கிக் குழல்களுக்கு எவ்வித பாகுபாடும் இல்லை. சுடப்படுபவர் வன்முறையாளரா என்ற வரைமுறை இல்லை. ஆதிக்கத்தின் துப்பாக்கி குழல்களுக்கு தேவை வீழ்த்த ஒரு உடலம். அவ்வளவே. காரண,காரியங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆதிக்க சாதி, அரசியல் கட்சி நிகழ்ச்சிகளின் போது நிகழும் வன்முறைகளை இயல்பாக அனுமதிக்கும் அரச அதிகாரம் , ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிய கிளர்ச்சி செய்தால் உயிரை பறிக்க துவக்குகளை தூக்குகிறது. கல்லெறிந்து இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் காஸ்மீர் மக்களை கூட அந்த அரசாங்கம் சுட்டுக் கொல்வதில்லை.

பல்வேறு சாதி மக்கள் வாழக் கூடிய ஒரு நிலத்தில், பெரும்பான்மை சாதிக்குழுவின் முக்கிய ஆளுமையின் விழா நாளில் ஏற்படும் விபரீதங்கள் அதற்கு இணையான ,எதிரிடையாக இருக்கும் மற்றொரு சாதிக்குழுவின் மீது சாட்டப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. மறைந்த தலைவர்களின் விழாக்களின் போது பதட்டம் ஏற்படுவதை சாதீயக்கட்சிகளின் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதன் மூலம் விளையும் பதட்டம்தான் அடுத்த ஒரு வருடத்தின் அரசியலுக்கான மூலதனம். சாதீயத்திற்கு எதிராக ,இன ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ்த்தேசியர்களை இதில் வலுக்கட்டாயமாக வம்புகிழுப்பதில்தான் இருக்கிறது கடைந்தெடுத்த அயோக்கியதனம்.
சாதிதான் பெரிதென்றால் சுய சாதி பெருமிதத்தினை, சாதி பேரில் திரளும் மக்களை வைத்து அரசியல் நடத்திருக்கலாம். ஆனால் இன ஒற்றுமையையும், அதன் வாயிலாக சாதீய ஒழிப்பினையும் சிந்திக்கும் தமிழ்த் தேசியர்கள் மூன்றாம் தர சொல்லாடல்களால் விமர்சிக்கப்படுவது எதன் பொருட்டும் நியாயமல்ல. தமிழ் உணர்வாளர்கள் பாகுபாடின்றி மறைந்த தமிழ் ஆளுமைகளின் விழாக்களிலும் கலந்துக் கொள்வதை மோசடியாக புனைய துடிப்பவர்கள் அதன் மூலம் நிகழும் பொதுமை உணர்ச்சியை நிகழ விடாமல் தடுக்க எண்ணுகிறார்கள். சாதிகளுக்கு அப்பாற்பட்டு நம் இனத்து ஆளுமைகளை அவர்களுக்குள் அக்காலத்தில் நிலவிய முரண்களுக்கு அப்பாற்பட்டு பார்க்கின்ற பொதுமை உணர்ச்சி நிகழ்கால அமைதி வாழ்வின் பாற்பட்டது. ஒரு சமூகத்தின் இரு தலைவர்கள் அன்று நிலவி வந்த சாதீயச் சூழல் காரணமாக, ஆண்டான், எதிர்ப்போன் என பிளவுப் பட்டு கிடந்தார்கள். அவர்கள் இறந்தார்கள்.அவர்களின் பிள்ளைகள் இதே சாதியை இறுகப் பிடித்துக் கொண்டு, அடித்துக் கொண்டு செத்தார்கள். அவர்களின் பிள்ளைகள் இன்றைக்கும் தலைவர்களின் பேரால் அடித்துக் கொண்டு சாகிறார்கள். இந்த பகையை ,இந்த வன்மத்தினை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு கொண்டு போக போகிறோம் என்று கேட்டாலே சாதி வெறியன்களாக சித்திரித்து விடுவது அரச பயங்கரவாதத்தினை விட கொடுமையானது. தமிழ்த் தேசியர்களை இழித்து பேசுவதன் மூலம் தங்களை தாங்களே சொறிந்துக் கொண்டு, தங்களின் குற்ற உணர்ச்சியை மற்றவர்களின் மீது பழி போடுவதன் மூலம் தணித்துக் கொண்டு சுகம் காணும் ‘இணையத்தள போராளிகளை’ நாம் இச்சமயத்தில் சரியாக இனம் காணுவோம்.பரமக்குடி சம்பவங்களில் நிகழ்ந்த ஏழுத் தமிழர்களின் படுகொலைகளுக்கு எதிராக அய்யா.பழ.நெடுமாறன், அண்ணன் சீமான் போன்ற தமிழுணர்வு கொண்ட தலைவர்களும், மே 17 போன்ற இயக்கத்தினரும் அறிக்கைகள் வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம். யாராலும் ஏற்க இயலா, குறிப்பாக தமிழ்த் தேசியர்கள் முற்றிலும் எதிர்க்கிற பரமக்குடி கொலைகளை திட்டமிட்டு இன நலனிற்காக போராடிவரும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக நிறுத்துவது அறுவருப்பான செயல்.முகநூலில் போகிற போக்கில் முகப்புப் பக்கத்தில் தமிழ்த் தேசியர்களை பற்றியும், தமிழ் அமைப்புகள் குறித்தும் நஞ்சாய் இந்த ’இணையத்தள போராளிகள்’ கக்கியிருக்கின்ற மூன்றாம் தர விமர்சனங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. கணினித் திரைக்கு அப்பால்தான் உலகம் இருக்கிறது என்பதை அறிய மறுக்கிற இவர்களின் விமர்சனங்கள் நாகரீகமற்றவை. மேலும் காலங்காலமாய் பகைமை கொண்டிருக்கும் இரு குழுக்களிடையே நிலவும் வன்மத்தினை கொஞ்சமும் குறைய விடாமல் பாதுகாப்பதில் தான் இவர்களின் அரசியலே இருக்கிறது. நடந்து முடிந்த பரமக்குடி படுகொலைகளை ஏதாவது தமிழ்த்தேசிய அமைப்பாவது ஆதரித்திருக்கிறதா என்றால் இவர்களிடத்தில் பதிலில்லை. அப்படி இருக்கையில் எதற்காக இத்தனை விமர்சன அம்புகள் என்றால்..சமீப காலமாக இந்த மண்ணில் ஏற்பட்டிருக்கிற, மக்களிடம் தோன்றியிருக்கின்ற நாம் ஒரு இனம்’ என்ற உளவியல். தேசியத் தலைவர் பிரபாகரன் தான் எம் இனத்தின் ஒரே தலைவர் என்ற உளவியல். ஈழம் போலவே சாதிகளற்ற சமூகம் இந்த மண்ணிலும் விளைய வேண்டும் என்ற உளவியல். இந்த உளவியல் போக்குகளே மூன்று தமிழர் உயிர் காக்க தமிழக வீதிகளில் போர்க் குரல்களாய் மூண்டெழுந்தன. இந்த உளவியல் போக்குகள் தான் எப்போதும் ஊரை பிரித்துப் பார்த்து ரசிக்கும் இரண்டகன்களுக்கு பிடிக்கவில்லை.

தமிழ்த் தேசியர்கள் அழிந்த தம் இனத்தின் வலியை சுமந்து நிற்கிறார்கள். ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனுக்காக தீக்குளித்து, தன்னுயிரை தந்த கொலுவைநல்லூர் முத்துக்குமார்,பெரம்பலூர் அப்துல்ரவூப் எந்த சாதி,மத மக்களுக்காக ஈகை செய்தார்கள் ?- இனத்தின் மேன்மைக்காக ,இனத்தின் ஒற்றுமைக்காக தியாகம் செய்த அந்த மாவீரர்களை சாதியின் பேரால் நிகழும் இழிவான அரசியல்களால் அவமானப்படுத்துகிறோம். மூன்று தமிழர்களின் தூக்குதண்டனைகளுக்கு எதிராக மூண்டெழுந்த தமிழினம் ஏழு தமிழரை பறி கொடுத்து விட்டு எழுபதாக பிரிந்து கிடக்கின்றது. அதிகாரத்தின் உதடுகளில் தோன்றும் நமுட்டு சிரிப்பினை உணர்ந்து ஒன்றாக கிளம்ப வேண்டிய தருணம் இதுவாகும்.எடுத்துக்காட்டாக நாம் இங்கே சாதியாய் பிளவுற்று செத்துக் கொண்டிருக்கையில் , முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசு நீர் வழி பாதையை ஆய்வு செய்து முடித்து விட்டது,இன்னமும் ஈழப் போரின் போது நடைபெற்ற சிங்கள பேரினவாத குற்றங்களைப் பொறுத்து நமக்கு உலக சமூக நியாயம் கிடைக்கவில்லை.கூடங்குளம் அணுமின் உலையை மூடச் சொல்லி 15,000/- தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துக் கொண்டு இருக்கிறார்கள்.இன்றும் தூக்கு மேடையில் நிற்கும் மூன்று தமிழர்களின் உயிருக்கு உள்ள ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கியபாடில்லை.இந்நிலையில் தமிழர்களின் உள்ளங்களில் மூண்டியிருக்கிறது சா’தீ’. திசை திருப்பல்கள் மூலமாகவே திசையற்று போனான் தமிழன்.
பரமக்குடி சம்பவங்கள் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டும் சம்பந்தபட்ட பிரச்சனையல்ல. ஏனெனில் ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் வாழ்வும், கொலைகளும் எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஒரு உயிருக்கு விலை ஒரு லட்சம் அல்ல. விலை மதிப்பில்லா மனித வாழ்வினை பறிகொடுத்த ஏழு தமிழின சகோதரர்களின் குடும்பங்களை அரசே பராமரித்து வருவதுதான் -இப்போதைக்கான இயன்ற தீர்வாக இருக்க இயலும்.

சாதீய முரண்கள் களையப் பட வேண்டுமானால் , சுய சாதி பெருமிதம் சாக வேண்டும். சுய சாதி பெருமிதம் அழிய வேண்டுமானால் அதற்கு நேர் எதிராக ,முரணாக நிற்கும் ஓட்டுமொத்த இனம் சார்ந்த, மொழி சார்ந்த சிந்தனைகள் மேலொங்க வேண்டும். தமிழ்த் தேசிய அமைப்புகளின் வளர்ச்சியும், எழுச்சியுமே பிளந்துக்கிடக்கும் இனத்தினை ஒற்றுமைப் படுத்தும். சாதிக்க வேண்டிய தமிழினம் சாதிக்காக நின்றால் இழப்புகள் இன்னும் அதிகமாகும்.
மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிர் தந்த செங்கொடியின் தியாகம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகாத இடைவெளியில் ஏழு தமிழினச் சகோதரர்களை அரச வல்லாத்திக்க துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி விட்டு அமர்ந்திருக்கிறோம். விலங்குகளை சுட்டுக் கொன்றால் தண்டனை விதிக்கும் இந்த நாட்டில் மனித உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதுதான் அவலமான முரண்.

சாதியால் பற்றெரியும் நிலத்தின் நாற்றம் தாங்காமல்
சிதையில் புரள்கிறான் முத்துக்குமார்…
பற்றெரியும் மூர்க்கத்தின் வெப்பம் தாங்காமல்
இருமிக் கொண்டிருக்கிறாள் செங்கொடி..
தூக்கு கயிற்றினை அறுக்க நினைத்தவர்களின்
கரங்கள் இரண்டாக கிடக்கின்றன.
விரல்களை இழந்த கரமும்
கரங்களை இழந்த விரல்களும்
துடித்துக் கொண்டிருக்கின்றன..
தீ எரிகிறது.
சா’தீ’

இயக்குனர் மணிவண்ணன் : உணர்வும்- தெளிவும்.


சென்னை: இனி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்துவிடுங்கள். புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம், என்றார் இயக்குநரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணன்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்தது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் மணிவண்ணன் பேசுகையில், “நாம் தமிழர் கட்சிக்காரர்களும் சீமானும் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து விட்டதாகக் கூறி சிலர் கிண்டலடிக்கிறார்கள்.

மூன்றுபேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றுப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் எல்லாம் துடித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நிமிடமும் உயிர் போகும் வலி. அந்த நேரம் பார்த்து, தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் எனக்கில்லை என முதல்வரும் சொல்லிவிட்டார்.

ஒரு பக்கம் சட்டப் போராட்டம் ஆரம்பித்து, நீதிமன்ற வளாகத்தில் அத்தனை பேரும் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தோம். நீதிபதி 8 வாரங்கள் தூக்கு தண்டனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட அடுத்த கணம், சட்டமன்றத்தில் தண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேற்றினார் போன உயிரை திரும்ப அவர் தந்தது போல உணர்ந்தோம்… இப்போது சொல்லுங்கள். இந்த அம்மாவுக்கு நன்றி சொல்லாமல் வேறு யாருக்கு நன்றி சொல்வது?

முந்தைய தினம் சட்டமன்றத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற கூறிவிட்டாலும், தமிழ் மக்களின் உணர்வை மதித்த அம்மா, இரவெல்லாம் தூங்காமல், சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து, அடுத்த நாளே தண்டனையை நிறுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றினாரே… அந்த மனசு யாருக்கு வரும்? கருணாநிதியாக இருந்தால், தான் சொன்னதே சரி என்று பிடிவாதமாக இருந்து மூவரின் உயிரையும் போக வைத்திருப்பார்.

ஜெயலலிதாவின் இந்தத் தாயுள்ளம், பெரும் கருணைக்கு நாம் காலமெல்லாம் நன்றி பாராட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி கேட்பதையெல்லாம், எதற்காக போராடுகிறார்களோ அந்தக் கோரிக்கையை எல்லாம் அந்த அம்மா நிறைவேற்றித் தருகிறார். இதற்கு நன்றி செலுத்தாமல் விட்டால் காலம் மன்னிக்காது.

திருக்குறளை சரியாகப் படித்திருந்தால் திமுகவினருக்கு செய்நன்றியின் அர்த்தம் விளங்கும். அவர்கள் கடலில் திருவள்ளுவருக்கு சிலை வைத்ததோடு சரி. அவர் சொன்னதை மறந்துவிட்டார்கள்.

இன்று தூக்கு தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் முழுமையாக நம்புவது நாம் தமிழர் கட்சியையும் தம்பி சீமானையும்தான்.

தான் இறந்த பிறகு தன் உடலை குடும்பத்திடம் ஒப்படைக்கச் சொன்னார் பேரறிவாளன். முருகனும் சாந்தனும் தங்கள் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு எழுதி வைத்துவிட்டனர்.

நண்பர்களே, நான் மிஞ்சிப் போனால் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். எனக்கு அரசியல், பதவி என எந்த ஆசையும் இல்லை. இந்தப் பிள்ளைகள் மூவரும் உயிரோடு திரும்ப வேண்டும். சீமானைப் போன்றவர்களால் இந்தத் தமிழினம் உயர்ந்த நிலையில் இருப்பதைப் பார்த்துவிட்டு இறந்து போக வேண்டும். நான் இறந்தால், என் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் உடம்பில் புலிக்கொடியைப் போர்த்தி எடுத்துச் செல்லுங்கள், அது போதும்,” என்றார்.

மணிவண்ணனின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றுவிட்டனர். கீழே கூடியிருந்தவர்கள் உணர்ச்சி மிகுதியால் கண்கலங்கி நின்றனர்.


நன்றி :தட்ஸ் தமிழ்

விழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..



’ கயிற்றின் நிழலில்

சர்பத்தின் சாயல்..

உடல் தீண்டிய நிழலில்

பற்றி பரவுகிறது நீலம்’.

ஆகஸ்ட் 29/2011.

அந்த மதியப் பொழுதில் தமிழ்நாட்டின் வெப்பமான அந்த நகரம் சற்றே மேக மூட்டமாய் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தினை அளித்தது. வேலூர் மத்திய சிறைச்சாலையின் வளாகம் எனக்கு மிகவும் பழக்கமானதுதான். ஆனால் இம்முறை நான் உள்ளே நுழைகையில் இருந்த பதட்டம் நான் அறியாதது . காவல் துறை அளவுக்கதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது இயல்பான சூழ்நிலையை வெகுவாக மாற்றிருந்தது. ஒருவர் ஒருவராக அனுமதிக்கப்பட்ட அப்பொழுதில் எனக்கு முன்னதாக சென்று திரும்பிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சேனா.பிரபு மிகுந்த இறுகிய முகத்துடன் திரும்பி வந்தார். அவர் முகத்தினை பார்த்து ஏதேனும் அறிந்துக் கொள்ள இயலுமா என நான் முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. நான் கேட்கும் எந்த கேள்விக்கும் பதிலளிக்கும் மனநிலையில் அவர் இல்லை. கடந்த பல மாதங்களாக அவர் ஒரு உன்னதப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அந்த முயற்சியில் ஒரு முக்கிய கட்டம் மறு நாள் வர இருந்த அச்சூழல் அவரை மிகவும் வருத்தி இருக்கவேண்டும். அவரைப் போன்ற உன்னதமான சில இளைஞர்கள் கையில்தான் வரலாறு மிக முக்கியமான பணியொன்றினை வழங்கி இருந்தது. அது இந்திய முன்னாள் பிரதமர் ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு எந்த நேரமும் தூக்கில் தொங்க விடப்படும் ஆபத்தில் உள்ள பேரறிவாளன் ,முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை சட்டப் போராட்டங்கள் மூலமாக காப்பது.

.

இந்த சிறை வளாகம் எனக்கு புதிதல்ல. சென்ற திமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த அண்ணன் சீமான் அவர்களை நான் அடிக்கடி பார்க்க சென்ற போது அந்த சிறை வளாகம் எனக்கு பழக்கப்பட்டு இருந்தது. சீமான் அண்ணனை பார்க்க போகும் போது ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு சிறைப்பட்டு கிடக்கின்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய அண்ணன்மார்களை நான் சந்திக்க நேர்ந்தது. நான் மட்டுமல்ல , அண்ணன் சீமானை பார்க்க வரும் எண்ணற்ற நாம் தமிழர் தம்பிமார்களுக்கு இவ்வகையாக இனமான அண்ணன்மார்கள் அறுவர் கிடைத்தனர். அந்த வகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாம் நன்றி சொல்லலாம். அண்ணன் சீமானை அவர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூரில் சிறைப்படுத்தாவிடில் எமக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. எனக்கு கடந்த காலங்கள் நினைவிற்கு வந்தன. அண்ணன் சீமான் இங்கே இருந்த போது கள்ளங்கபடமற்ற அந்த அன்புள்ளங்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்துக் கொண்டே இருக்கும். பார்க்க செல்லும் நாங்களும் அந்த மகிழ்வில் கலந்துக் கொள்ள , அந்த சிறை வளாகம் மகிழ்ச்சிக்கான கேளிக்கைக் கூடமாக மாறிப்போகும்.சிறைக் கொட்டடியில் அடைப்பட்டிருந்தாலும்..உதிரும் புன்னகையோடு..கை கோர்த்த உறவுகளாய் நம் அண்ணன்மார்கள் விளங்கிய காலக்கட்டம் அது. வெகு காலமாக வெளிச்சம் படாதிருந்த அவர்களின் அவல வாழ்வு அண்ணன் சீமானின் சிறை வாசத்தால் உலகிற்கு தெரிந்தது.

.

அடுத்து ..எனது முறை. கண்கள் கலங்கத்துவங்கி விட்டன. என்னை தயார் செய்து அனுப்பும் தஞ்சை வழக்கறிஞர் . அண்ணன் நல்லதுரை பலவாறு ஆறுதல் சொல்லி உள்ளே அனுப்பினார். கடுமையான பரிசோதனைகளுக்கு மத்தியில் நான் உயர் பாதுகாப்பு தொகுதி என்றழைக்கப்பட்ட அந்த வளாகத்திற்குள் நுழைந்தேன். பறவைகள் சரணாலயம் ஒன்றில் நுழைந்து விட்டது போன்ற உணர்வு..பறவைகள் கீச்சொலி. வெண் புறாக்கள் மேய்ந்துக் கொண்டிருந்தன. அந்த புறாக்களை இராபர்ட் பயஸ் அண்ணன் வளர்த்து வருகிறாராம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய அண்ணன்மார்களை தனித்து வைக்க, பயஸ் அண்ணன் அந்த வளாகத்தினில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இரை போட்டு வளர்த்த பயஸ் அண்ணனை தேடிக் கொண்டு அதே வளாகத்தில் திரிவதாக ஒரு காவலர் என்னிடம் கூறினார். கருணை நிராகரிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல என்று நினைத்துக் கொண்டேன். வரிசையாக இருட்டறைகள் . அண்ணன்மார்கள் மூவரும் தனித்தனியே அடைக்கப்பட்டிருந்தனர். என்னைப் பார்த்த்தும் அறிவு அண்ணன் மணி என்று உற்சாக குரல் எழுப்பினார். முருகன் அண்ணன் எட்டிப்பார்த்தார். சாந்தன் அண்ணன் அவசர அவசரமாக சட்டை மாட்டிக் கொண்டிருந்தார்.

.

எனக்கும், அவர்களுக்கும் இருந்த ஆதி உறவின் தொடர்ச்சியான மரபணு விழித்துக் கொண்டது. நான் பாய்ந்து அவர்களை இறுகத் தழுவிக் கொண்டேன். பாருங்கள் …விசித்திரத்தினை. மரணத்தின் வாயிலில் நின்றுக் கொண்டிருந்த அண்ணன்மார்கள் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். ஒருவருக்கு கூட மரணத்தின் பயம் இல்லை. கண்களில் அளப்பரிய நம்பிக்கைகளை சேமித்துக் கொண்டு முகப்பொலிவோடு திகழ்ந்த அம்மூவரையும் சந்திக்கும் எவரும் நேசிக்காமல் இருக்க இயலாது. நாளையின் விடியலை நம்பிக்கையோடு எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்கள் அவர்கள். எனக்குத்தான் நம்பிக்கை இல்லை. ஏற்கனவே இந்திய நீதித்துறை அவர்களை சிதைத்து போட்டிருப்பதன் அவலத்தினை எனக்குள் எண்ணிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் அறிவு அண்ணன் தான் தயாரித்து வைத்திருந்த வழக்கு சங்கதிகளை என்னுடன் பகிரத் துவங்கினார். தேர்ந்த வழக்கறிஞர்களுக்குரிய அனைத்து தகுதியும் அவரிடம் இருந்தது. அவர்களின் வழக்குரைஞராக உள்ளே போன நான் எதுவுமறியா எளிய கட்சிக்காரனைப் போல அவர்களின் அறிவொளிக்கு முன்னால் நின்றேன்.

.

அன்றைய காலையில் தான் தனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தமிழக முதல்வர் அறிவித்திருந்த தருணம் அது. ஆனால் அந்த மூவரும் தமிழக முதல்வரை அந்த தருணத்திலும் நம்பி நின்றது எனக்கு ஆச்சர்யத்தினை அளித்த்து. தமிழக முதல்வருக்கு எதிராக எதுவும் செய்து விட வேண்டாம் என அவர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக என்னிடத்தில் சொன்னார்கள். தங்கை செங்கொடியின் அளப்பரிய தியாகம் தான் மூவரையும் கலங்க வைத்திருந்தது. எமது போராட்டத்தின் மூலம் உயிரை காப்பதுதான்.ஆனால் உயிரை காக்க உயிர் போவது சித்ரவதைக்குள்ளாக்கிறது என சாந்தன் அண்ணன் சொன்னார். எமக்காக போராடும் ஒவ்வொருவரையும் நாங்கள் இப்போராட்டத்தில் வெற்றிப் பெற்ற பிறகு நேரடியாக சந்திக்க விரும்புகிறோம். எனவே உயிர் தியாகங்கள் எம்மை கொல்கின்றன என சங்கடத்துடன் முருகன் அண்ணன் சொன்னது என்னை கண் கலங்க வைத்தது. அந்த தருணத்திலும் தமிழக முதல்வர் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அசலானது. முதல்வர் கையில்தான் தங்கள் தூக்கின் முடிச்சு இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். அனைத்து அதிகார மட்டங்களையும் சந்தித்து விட்ட காரணத்தினால் என்னவோ, இம்முறை தமிழக முதல்வர் அவர்களை காத்து விடுவார் என நம்பினர். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் அவர்களை மேலும் உறுதி கொள்ள வைத்தது. இதே கருத்தினை அவர்கள் ஊடகங்களுக்கும் செய்தியாக சொல்லச் சொன்னார்கள். தமிழக முதல்வர் மீது அவர்கள் பாராட்டும் நம்பிக்கை எனக்கு ஆச்சர்யமளித்தது. ‘இன்று அவரை விட்டால் நமக்கு வேறு யாரும் இல்லை’ என்றார் சாந்தன் அண்ணா.உரையாடல்களில் சீமான் அண்ணனின் நடவடிக்கைகள் குறித்து பேச்சு வந்த போது ’அண்ணன் முதல்வருக்கு எதிராக செயல்படாமல் அரசோடு இணைந்து செயல்படுவதென்பது மிக முக்கிய அரசியல் நடவடிக்கை. அதிகார பலம் அற்ற தமிழினத்து உணர்வாளர்கள் மீது சிங்கள அரசின் மீது காட்டமான தீர்மானம் இயற்றிருக்கின்ற தமிழக முதல்வர் கொண்டிருக்கும் கண்ணோட்டம் இம்முறை ஆறுதல் அளிக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.எனவே சீமான் அண்ணனின் நிலைப்பாடு மிகச் சரி. அவரோடு தான் நாங்கள் நிற்கிறோம் ’என்றார் முருகன் அண்ணன்

.

அரித்திராவின் குரலை பிபிசி இணையத்தளத்தின் ஊடாக கேட்டேன் என்ற உடன் முருகன் அண்ணனின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. பாப்பா என்ன சொன்னாள்..? என ஆர்வத்துடன் விசாரித்த அந்த அன்பு மிக்க தந்தையின் கண்களில் தாய்மையின் சுடரைக் கண்டேன். நேரம் முடிந்தது.நீங்கள் கிளம்பலாம் என கறார் குரல் வந்தது. மீண்டும் ஒரு முறை அவர்கள் மூவரையும் ஆறத் தழுவினேன். கண்டிப்பாக இது கடைசி சந்திப்பாக இருக்கக் கூடாது. நான் கலங்கியதும் அறிவு அண்ணன் நாளை மாலை இதே நேரத்தில் நீ மகிழ்வாக இருப்பாய் என நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தார். திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தேன். கம்பிகளின் ஊடே தமிழ்த் தேசிய இனத்தின் பெருமை மிக்க மூன்று அண்ணன்மார்கள் நின்று கொண்டிருந்தார்கள்

.

அந்த வளாகத்தினை விட்டு வெளியே வந்த உடன் எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. உள்ளே அழுதால் அண்ணன்களின் உளவியலை பாதிக்கும் செயலாக அமையும் என்ற கவனம் வெளியே வந்த உடன் தகர்ந்தது. அழுதேன். கூட வந்த காவலர் என்னை பிடித்துக் கொண்டார். அது என் அழுகை அல்ல. என் மூதாதையான உலகின் ஆதி மனிதனின் மரபணுவில் இருந்து தொடர்ந்து வந்த அழுகை. 12 கோடி மக்கள் இருந்தும் மூன்று அண்ணன்மார்களை காப்பாற்ற வழி தெரியாது கையேந்தி நிற்கிற எளிய மனிதனின் கண்ணீர். ராசீவ் கொலையை காரணம் காட்டி ஈழப் பெருநிலத்தினை அழித்தார்கள். இந்த இனம் இனிமேல் அடைந்து விட முடியாத அதி உன்னத ஈழ நாட்டை அழித்தார்கள்.காட்டுக்குள் இருந்தாலும்..விமானம் கட்டி விண்ணில் பறந்த அறிவார்ந்த தலைமுறையை அழித்தார்கள். அழித்தும் தீராத வன்மத்தின் நாவுகள் இன்று மூன்று சகோதரர்களை மரணத்தின் கொட்டடியில் அடைத்து வைத்திருக்கின்றன. அழுதேன். எனக்காக காத்திருந்த அண்ணன் இராபர்ட் பயஸ் கண்ணீரோடு என்னை கட்டியணைத்தார்.

.

வெளியே வந்தேன். உள்ளே நடந்தவைகளையும், அண்ணன்கள் சொல்லி அனுப்பிய செய்திகளையும் நான் அண்ணன் சீமானிடம் அலைபேசியில் தெரிவித்தேன்.அவர் அமைதியாக் கேட்டுக் கொண்டு இருந்தார்.அண்ணன்கள் முருகனும், சாந்தனும் தூக்கிலிடப்பட்டால் தங்களின் உடலை சீமான் அண்ணனிடம்தான் தர வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் எழுதி அளித்திருந்த செய்தியும் அவரை வெகுவாக பாதித்திருந்த்து. ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் .. அண்ணா என நான் சீமான் அண்ணனிடம் கேட்டேன். ”இது என் சொந்த துயர். என் குடும்பத்தில் மூவருக்கு எந்த நொடியிலும் மரணம் என்ற அவலம் என்னை அரசியலில் இருந்து தூர வீசி விட்டது. தூக்கு கயிற்றுக்கு முன் மூன்று தம்பிகளை நிற்க வைத்துக் கொண்டு என்னால் அரசியல் செய்ய இயலாது. கயிற்றினை அறுக்கும் அதிகாரம் உடையவர்களிடத்தில் கருணையை எதிர்பார்க்கிற எளிய அண்ணன் நான் . எனவே தான் அமைதியாக சட்டத்தின் மூலமாக என் தம்பிகளை விடுவிக்க அலைந்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

மறுநாள் நம்பிக்கையோடு நின்ற அண்ணன்மார்களின் சொற்கள் பலித்தன. அவர்கள் நம்பிய தமிழக முதல்வர் அவர்களை காப்பாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். வழக்கிலும் அவர்களுக்கு இடைக்காலத் தடை கிடைத்தது. துயர் முகங்கள் நிரம்பி வழிந்த உயர்நீதிமன்றம் ஒரு நொடியில் கொண்டாடங்களின் குடியிருப்பாக மாறிப்போனது. என் அருகில் நின்று கொண்டிருந்த வழக்கறிஞர் சேனா.பிரபுவினை நான் இறுக தழுவினேன். இந்த வழக்கிற்காக வெகு நாட்களாக உழைத்து வரும் முதல் நாள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர். அண்ணன் தடா சந்திரசேகர் வந்து கொண்டிருந்தார் . வணங்கினேன். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்களோடு இணைந்து பிரபு,பாரி,ராசீவ்காந்தி, பாலாஜி போன்ற பல இளம் வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் கடுமையாக உழைத்தார்கள். நீதிமன்ற தடையுத்தரவு கிடைத்த அவ்வேளையில், கொண்டாட்டங்கள் நடந்துக் கொண்டு இருந்தன. எவ்வித விளம்பரமும் தேடாமல் அளவற்ற உழைப்பினை வாரி வழங்கிய இந்த இளைஞர்கள் அமைதியாய் புன்முறுவலோடு நின்றுக் கொண்டிருந்தது அழகாக இருந்தது .

.

.

அபாயம் இன்னமும் முற்று முதலாக நீங்கி விட வில்லை. 2 மாத இடைக்கால தடை இறுதி வெற்றியல்ல. இறுதி வெற்றி சிறைப்பட்டு கிடக்கின்ற நம் அண்ணன்மார்களின் விடுதலையில் தான் அடங்கி இருக்கிறது. தமிழக முதல்வரின் கருணையும், மக்களின் தன்னெழுச்சி குரல்களும் அதை சாத்தியப்படுத்தும் என நாம் நம்புவோம். இந்த மாபெரும் முயற்சியில் எண்ணற்ற தோழர்கள் தங்களின் அளப்பரிய உழைப்பினை நல்கி இருக்கிறார்கள். குறிப்பாக தங்களையும் மரணத்திற்கு ஆட்படுத்திக் கொள்ள துணிந்த 3 பெண் வழக்கறிஞர்களின் தீரம் வியப்பிற்குரியது. தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இனத்திற்காக, மனித உரிமைகளுக்காக, மரணத்தண்டனை ஒழிப்பிற்காக நின்ற தோழர்களின் கூட்டுழைப்பு எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

இந்நேரம் எம் தங்கை செங்கொடி சிதையில் தணலாய் இருந்து இந்த தாய்மண்ணின் மணலாய் மாறி இருப்பாள். தம் அண்ணன்மார்களுக்காக தன்னுயிர் தந்த தங்கையின் இறுதி மூச்சுக்காற்று இந்த காற்றில் தான் கலந்திருக்கிறது. ஓயாத அந்த சுழிக்காற்று சுழன்றடித்து இனமான நெருப்பினை பரப்பிக் கொண்டே இருக்கும். அது என் தாய் அற்புதம் அம்மா அவர்களின் விழி நீரையும் காய வைக்கும்.

முத்துக்குமாரும் முடிவல்ல..

முள்ளிவாய்க்காலும் முடிவல்ல..

செங்கொடி தொடர்கிறாள்..

அலை அலையாய் வருகிறார்கள்..

ஆதி இனத்தொன்றின் கோபத்தினை

சுமந்தவாறே..

அழிவிலிருந்துதான் துவங்குகிறது எம் உலகமும்.

Powered by WordPress & Theme by Anders Norén