என் அன்பிற்கினிய கல்யாண்..,
இந்த பொழுதில் இமைகளில்
துளிர்க்கும் இன்ப கண்ணீரோடு..
உன் உயிர் அண்ணனாகிய
நான்..உன்னை இறுக்க தழுவுகிறேன் .
என் பாசமுத்தங்கள் உனக்கு..
ஆவேசமும்,கம்பீரமும் மிக்க உனது தமிழ்
போலவே உன் வாழ்வும் நேர்த்தியாக அமையட்டும் .
நாம் இருவரும் –ஏன் இதை இங்கு படிக்கிற
ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் உட்பட,
நாம் தமிழர் என்கிற இலட்சிய நெறியில்
கூடியிருக்கிற இந்த இளம் புரட்சியாளர்கள் உட்பட,
நாம் அனைவரும் தமிழ்ச்சமூகத்திற்காக நம்மை ஒப்புக்
கொடுத்திருக்கிறோம் …
புரட்சி என்பது சொல் அல்ல. அது வாழ்க்கை
என புரிந்து வைத்திருக்கிறோம்..
நம் உயிரையும் விட மகத்தானது-இம் மொழி
காக்க, இந்த இனம் காக்க  தன்னுயிர் தந்த
மாவீரர்களின் கனவு என்பதனை தெரிந்து
வைத்திருக்கிறோம்..
எத்தனையோ இரவுகளில் தனியே பயணப்படும் போது
நாம் நமது தாய்நாட்டிற்காக,தாய்மொழிக்காக
நமது அடுத்த தலைமுறையின்
ஒளிமயமான எதிர்காலத்திற்காக
உழைக்கிறோம் என்கிற பெருமிதம் நம்முள் பொங்கும்..
சராசரி வாழ்வில் கொண்டாடி
மகிழ்ந்திருக்க வேண்டிய சுகங்களை நாம்  இழந்தோம்..
நாம் இரவுகளை இழந்தோம்..
பகல்களில் பறந்தோம்..
சராசரி இளைஞர்களின் ஆவலான
 பணம் தேடும் வேட்கையை இழந்தோம்..
ஏன்   ,,சில சமயங்களில் நம் குடும்பத்தினையும்,தாய் தந்தையையும்
மறந்து நின்றோம்… நாம் சராசரிகள் அல்ல ..அல்ல என்பதனை
உலகிற்கு உரக்கச் சொன்னோம்..
இவையெல்லாம் எதற்காக..
புன்னகையுடன் நீ நெஞ்சு நிமிர்த்தி சொல்வாய்..
எம் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரனுக்காக..
ஆம்..உண்மைதான்..
தேசியத்தலைவர் வேறு..தேசம் வேறு இல்லை.
அவர் வேறு..இந்த இனம் வேறு இல்லை..
அவர் தான் வீழ்ந்தும் கிடக்கும்
இந்த இனத்தின் மீள் எழுதலுக்கான அடையாளம்..
அந்த அடையாளத்தினை நம் ஆன்மாவில் சுமந்து…
உயிருக்குயிராய் நம்மைப் போன்று தலைவரை
நேசிக்கின்ற ,நம் அண்ணன்
சீமான் அவர்களின் சீரிய தலைமையில்
நாம் களத்தில் நிற்கிறோம்.
அண்ணன் பிரபாகரனின்
கனவினை சுமக்கும் தம்பியாக
அண்ணன் சீமான் நிற்கிறார்.
மாவீரர்களின் மூச்சுக்காற்று
அண்ணன் சீமானை உறங்க விடுவதில்லை..
சுழலும் சொற்களாக…கம்பீர முழக்கங்களாக
சதா ஒலிக்கும் அண்ணன் சீமானின் குரல் தான்
இனி தமிழினத்தின் முகவரி..
அனுதினமும் இந்த இனத்திற்கான பெருங்
கனவினை சுமக்கும்
அவர் வரைந்திருக்கின்ற வானத்தில்
தான் ஒளிரும் சிறகுகளோடு
நாம் பறக்கிறோம்..
நமக்குள்ள இலட்சிய தாகம் பெரிது .
கொண்டிருக்கும் கனவு பெரிது..
விலை தலையே ஆனாலும் தரத் துடிக்கும்
தாகம் பெரிது..
ஆம். இலக்கு ஒன்று தான்.எம்மினத்தின் விடுதலை.
சராசரிகளை போல நாம் வாழ விரும்பவில்லை
என்பதை நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும்
உறுதிப்படுத்தினோம்.
உரக்க பேசுகிறோம்..நம் மொழியில் கோபமும்
வேகமும் நீடிக்கிறதா என்பதை ஒவ்வொரு
நொடியிலும் கவனம் கொள்கிறோம்..
இலட்சிய தாகம் கொண்ட போர் வீரனாக
நமது வாழ்வை நாம் அமைத்துக் கொண்டு
விட்டோம்.
தலைமையின் மீது ஆழ்ந்த பற்றுறுதி
கொண்டிருக்கும் கொள்கை மீது தீவிர
விசுவாசம் என நமக்கான கோடுகளை நாமே
வரைந்து கொண்டு விட்டோம்..
நாம் வாழும் ஒவ்வொரு நொடியையும்
இந்த இனத்திற்காக என எழுதி வைத்து விட்டோம்.
இந்த நிலையில் தான்
செளமியா வருகிறார்.
உன் இணையாக..துணையாக..
இனி உன் பயணத்தின் நிழலாக..
ஒரு இலட்சிய வீரனுக்கு வாழ்க்கைப்
பட்ட வாழ்க்கை துணைவியும்
ஒரு இலட்சிய வீராங்கனையே..
இரவு நேர பயணம் முடிந்து வரும்
கணவனிடம் எவ்வித சலிப்பும் காட்டாமல்
கூட்டம் எப்படி..?
சீமான் மாமா எப்படி பேசினார் ?
என்பதை அவர்கள் தான் எவ்வித சங்கடமும்
இல்லாமல் கேட்கிறார்கள்.
குழந்தை படிக்கும்
பள்ளியில் தந்தை வரவில்லையா என கேட்கும்
ஆசிரியரிடம் அவர் முக்கிய கூட்டத்திற்காக
போய் இருக்கிறார் என கண்ணியத்தோடு
அவர்கள் தான் பதில் சொல்கிறார்கள்…
அவசர அவசரமாய் ஊருக்கு கிளம்பும்
போது வீட்டுக்குள் நிலவும்
பொருளாதார சங்கடம் பற்றி பேசாமல்
பெருமை காக்கிறார்கள்..
அவர்கள் நம் தாய்மொழி போலவே
பெருமை வாய்ந்தவர்கள்..
பொறுமை வாய்ந்தவர்கள்..
பாரங்களை தன் மீது சுமத்திக்
கொண்டு சமூக பாரம் தூக்கித்
திரிய நம்மை வெளியே அனுப்புகிறார்கள்..
எம்மால் எமது மொழியையும், நாட்டையும்
எம் உயிருக்கு மேலாக நேசிக்கும் எம்மால்
எம்மோடு வாழ்வில் பயணிக்கும் சக தோழமையை
தாய்மையின் மற்றொரு வடிவத்தினை நேசிக்க முடியாதா என்ன..?
என் தம்பி கல்யாண் செளம்யாவை உயிராக..
உயிருக்கு உயிராக நேசிப்பான் .
அந்த வகையில் இன்று எம் இல்லத்தில்
நுழைந்திருக்கும் செளமியா மிகவும் கொடுத்து
வைத்தவர் .
இனமானம் சிறக்க..தமிழ்க் கொண்டு
களமாடும் என் தம்பி கல்யாண் அவர்களுக்கு
செளமியா அவர்கள் மொழியாய்..விழியாய்
இருக்க வேண்டும்..
அவனால் ஆக வேண்டிய
காரியம் நிறைய இருக்கிறது..
வீரியமாய் செளமியா இருப்பார்.
நம் அண்ணன் சொல்வது போல
நமது பயணம் வெகு தொலைவு..
அந்த பயணத்தின் முதன்மை தம்பியாய்..
அண்ணன் சீமானின் படை வலிமையாய்
தம்பி கல்யாண் விளங்குவான்.  அவன் உள்ள
உறுதியாய்..இல்லப் பெருமையாய்
செளமியா விளங்குவார்..
நாம் தமிழர் என்கிற இனமானத்திற்கான
இந்த பெரும் குடும்பத்தின் பெருமையை காப்பார்.
என்னால் வெகுவாக நேசிக்கப்படுகின்ற
இருவரின் இணையேற்பு நிகழ்விற்கு வர
முடியாமல் போனது எனக்கு வெகுவாக
வலிக்கிறது..
எம்மினம் போல
நான் விழுந்திருக்கிறேன்.
மீண்டும் உத்வேகத்தோடு
எழுவதற்காக..
எழுவேன்..
அண்ணன் சீமானின் உயரும் கரங்களில்
சுடர் விடும் ஒளியாக நாங்கள் இருப்போம்..
அவரின் இனமானம் காக்கும் இந்த மகத்தான
கனவுப் பணியில் களமாடும் ஆயுதங்களாக நாங்களே
 திகழ்வோம்..
இல்லறம் ஏற்கும் என் அன்பு தம்பிக்கும்,
எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கும்
செளமியா அவர்களுக்கும்
எனது புரட்சிக் கர வாழ்த்துக்கள்..
தோளோடு தோள் சேர்த்து …வாழ்வோடு
தமிழ்த் தோய்ந்த பெருமை கொள்க..
நாம் தமிழர்.
அன்பின் மகிழ்வில்..
மணி செந்தில்..
மாநில இளைஞர் பாசறை செயலாளர்.
 நாம் தமிழர் கட்சி