பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: ஜனவரி 2014

சென்னை புத்தக கண்காட்சி – சில அனுபவங்களும்..நினைவுகளும்,,

                   இந்த முறையும் சென்னை புத்தகக் கண்காட்சி மிகுந்த வரவேற்போடும், உற்சாகத்துடனும், புதிய நம்பிக்கைகளோடும் முடிந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சிக்கு தவறாமல் செல்கிறவனாய் இருக்கிறேன். புத்தகங்கள் வாங்குவது ஒரு புறம் இருந்தாலும், நமது பழைய-புது நண்பர்களை, எழுத்தாளர்களை,அறிவுலக  ஆளுமைகளை ஒரு சேர சந்திப்பதும் ,உரையாடவதும் அடுத்த ஒரு வருட காலத்தில் நாம் இயங்குவதற்கான,வாசிப்பதற்கான, எழுதுவதற்கான உந்துதல்.
   ஒரு இயல்பான வாசகனுக்கு கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை  ஒரு சேர காணுவது உற்சாகம் என்றாலும் 700 கடைகளிலும் நின்று …வந்திருக்கும் புதிய புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து வாசித்து,தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது வாய்ப்பில்லாத ஒன்றாகவே இந்த புத்தக கண்காட்சியிலும் இருந்தது.  பல முக்கிய புத்தகங்களை வழக்கம் போல நான் இந்த வருடமும் தவற விட்டேன். குறிப்பாக அம்பேத்கார் பவுண்டேஷன் வெளியீடாக வந்திருக்கிற அண்ணல் அம்பேத்கார்  அவர்களின் 37 தொகுதி நூல்கள். பிறகு கடைசி நாளில் என் தம்பி இடும்பாவனம் கார்த்தி மூலமாக வாங்கினேன்.                
                  இத்தனை ஆயிரம் புத்தகங்களுக்கு மத்தியில் நமக்கு தேவையான புத்தகங்களை வாங்குவது என்பது மிகப்பெரிய சவால் .அதே போல ஒவ்வொரு பதிப்பகத்தையும் தேடி நூல்கள் வாங்குவதும் மிகச்சிரமமான காரியமாகவே இருந்தது. காலச்சுவடு பதிப்பகத்திலும், உயிர்மை பதிப்பகத்திலும்,பாரதி புத்தகலாயத்திலும் கூட்டம் அலைமோதியது. வழக்கம் போல விகடன் அரங்கத்திலும் கூட்டம் அலைமோதியது.
                     இந்திய முன்னாள் பிரதமர் ராசீவ் கொலைவழக்கில் சிக்குண்டு மரணத்தண்டனை வாசியாக அண்ணன் பேரறிவாளனின் உயிர் வலி ஆவணப்படம் கிடைக்கும் எண் 273ஆம் அரங்கத்தில் வந்த பலருக்கும் அம்மா அற்புதம் அவர்களோடு புகைப்படம் எடுப்பதும் முக்கிய பணியாக இருந்தது. சளைக்காமல் அனைவருக்கும் அம்மா பதிலளித்துக் கொண்டிருந்தார்.  அந்த அரங்கத்தில் வந்து நிற்பதையும் ,அம்மாவை காண்பதையுமே முக்கிய பணியாக பலர் கருதியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
                        அன்றைய பிற்பகலில் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அனைத்து படைப்புகளின் தொகுப்பு தொகுதியான பாவேந்தம் மற்றும் தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் என்கிற நூலின் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தேசிய தந்தை அய்யா.பழநெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், ஓவியர் வீர சந்தானம், பேராசிரியரும், ஆய்வறிஞருமான முனைவர் வீ. அரசு, முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ, தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், கவிஞர் காசி ஆனந்தன்,இயக்குனர் கவுதமன்  மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்துக் கொண்டனர்.  இறுதியாக பேசிய செந்தமிழன் சீமான் உணர்ச்சி பெருக்கில் அமைந்த பல பாரதிதாசன் பாடல்களை தனது கம்பீர குரலில் முழங்கி,நிகழ்கால அரசியலை ஒப்பிட்டு பேசியது மிகப்பெரிய ஈர்ப்பினை ஏற்படுத்தியது. தனது தம்பிகளோடு பல அரங்கங்களுக்கு சென்ற சீமான்   பல புத்தகங்களை வாங்கிச்சென்றார். அவரோடு வந்த இயக்குனர் பாலாவும் கவனத்தை கவர்ந்தார். சீமானின் பேச்சால் உந்தப்பட்டு உணர்வு வேகத்தில் நின்ற இளைஞன் ஒருவனை நாங்கள் அரங்கம் ஒன்றில் பார்த்தோம். இங்கே ஒரே தமிழ்புத்தகமா ல்ல இருக்கு.ஐ டோன்ட் லைக் தமிழ் என பேசிய அவனது இளம் மனைவியை அப்ப வெளிநாட்டுக்கு போ என்று திட்டிய அவனை பார்த்து சில நம்பிக்கைகள் பிறந்தன. 
                                                  குறைகள் பல இருந்தன. முதலில் அரங்க வரிசை. சீட்டுக் குலுக்கி எடுத்து தேர்ந்தெடுப்பதால்  ஒரே மாதிரியான புத்தகங்களை தேடி வருபவர்கள் முன்னும் பின்னும் அலைய வேண்டி இருந்தது. ஒரே மாதிரியான, வகைப்பாடுகளை உடைய புத்தகங்களை வெளியிடும் பதிப்பக அரங்கங்களை தனித்து பிரித்து வரிசைப்படுத்தினால் வரும் வாசகர்கள் தங்களுக்கான பகுதியில்  நின்று தேடி வாங்க எளிதாக இருக்கும். (எடுத்துக்காட்டாக காலச்சுவடு,உயிர்மை, காவ்யா, உயிரெழுத்து,வம்சி,புலம், கருப்புப்பிரதிகள், யூனிடெட் ரைட்டர்ஸ், தமிழினி ,   எதிர் என  ….) 700 புத்தக அரங்குகளில் தமக்கான புத்தகத்தை கண்டடைவதற்கான சாத்தியங்கள் எளிமையாக இருந்தால் தான் புத்தக விற்பனை இன்னும் களை கட்டும். அதே போல அங்கு விற்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலை. அங்கு ஒரு வேளை உணவு அருந்துவதை தவிர்த்தால்..கனமான இரண்டு புத்தகங்களை வாங்கி விடலாம் என்பதாலேயே பலர் பட்டினியாக திரிந்ததையும் காண முடிந்தது. பாபசி கவனத்தில் எடுத்துக் கொள்ள கோருவோம்.
      

             புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சம்..நாம் யாரை வாசித்து வருகிறோமோ ..அவரை நேரடியாக சந்தித்து உரையாடும் அம்சம். அவ்வகையில் இப்புத்தக கண்காட்சியில் பலரை சந்தித்தேன். மிக முக்கியமாக மிகச்சிறந்த ஆய்வாளர் மற்றும் பதிப்பாசிரியர் பேரா.வீ. அரசு அவர்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியை அளித்தது. சிறிது நேரம் பேசும் போது கூட ஒரு பல்கலைக்கழக நூலகத்தில் தேட வேண்டிய செய்திகளை அள்ளித்தருவதில் அரசு ஒரு அரசர்.  அதே போல சாரு,எட்வின் அண்ணா, விஷ்ணுபுரம் சரவணன்,எஸ்.டி.பிரபாகர்,செல்வராஜ் முருகையன் உட்பட பல தோழமைகளை சந்தித்ததும் உற்சாகமாக இருந்தது. எழுத்தாளர் சாருநிவேதிதா இனி தமிழில் நான் எழுதப்போவதில்லை என்பதை நியூஸ் சைரன் இதழில் தெரிவித்துள்ளதை பற்றிக் கேட்டேன். அவரது ஆரம்ப கால படைப்பில் இருந்து தற்போது வரை உள்ள படைப்புகளை பற்றி எனது வாசிப்பனுவத்தை சொன்னேன். குறிப்பாக ராக் இசையை பற்றியும்,மேற்கத்திய இலக்கியங்கள் , மேற்கத்திய பண்பாட்டு குறியீடுகள் குறித்தும் அவரது படைப்புகளில் விரவிக்கிடக்கின்ற தகவல்கள் மிக முக்கியமானவை என்று சொன்னேன். எனக்கு உங்கள் எழுத்துக்களில் ,கருத்துக்களில் உடன்பாடில்லை. ஆனால் உடன்பாடில்லாதது தேவைப்படுகிறது. அப்போதுதான் நாம் எதில் உடன்பட்டிருக்கிறோம் என உணர முடிகிறது என்று நான் சொன்னதற்கு தோழமையாக சிரித்த சாரு…அவர் வரைத்து வைத்திருக்கும் அல்லது நாம் உருவாக்கி வைத்திருக்கும் அவரது பிம்பத்திற்கு எதிராக அக்கணத்தில் இருந்தார்.மதுரை ஆட்கள் தமிழில் நிறைய எழுத வந்து விட்டார்கள். நம்மூர் ஆட்கள் குறைந்தது போல தோணுகிறது என வருத்தப்பட்ட சாரு எங்கள் நாகூர்க்காரர்.

               நண்பன் விஷ்ணுபுரம் சரவணனின் சிறார் நூலான வாத்து ராஜாவை நான் பாரதி புத்தகாலய அரங்கில் கேட்ட போது வெளியே வைத்திருந்தது விற்று விட்டது. உள்ளே இருந்து எடுத்து தருகிறேன் என விற்பனையாளர் சொல்ல எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்த தருணத்தில்..என் தோளில் ஒரு கை விழுந்தது. சரவணன்.கூடவே எட்வின் அண்ணா. ஒரு தேநீரோடு தோழமை உரையாடல்.
       தமிழ்நாட்டில் நடைபெறும் மாபெரும் புத்தக கண்காட்சியில் தமிழ் பேசுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். எக்ஸ்கியூஸ்மீ என்கிற சொல் தான் பரவலாக கேட்டுக் கொண்டே இருந்தது. கொஞ்சம் வழி என்று கேட்ட எங்களை வேற்றுக்கிரக வாசிகளை போல பார்த்ததும் நடந்தது. சீமான் அண்ணன்  இது புத்தக கண்காட்சி இல்ல…புக் ஃபேர் என்று வேதனை தொனிக்கும் கிண்டலுடன் தெரிவித்தார்.       
            வழக்கம் போல புத்தகங்கள் என் மேசையின் மீது குவிந்து கிடக்கின்றன. இவற்றை எல்லாம் ஒரு ஆண்டிற்குள் படித்து விட முடியுமா என தெரியவில்லை. ஆனால்..இவை எல்லாம் இல்லாமல் என்னால் வாழ முடியாது. இது ஒரு வகை போதை. இப்போதைக்கு ஆட்பட்டவர்களில் ஜமீன் தார் கொடுத்த பணத்திற்கு அரிசி வாங்குவதற்கு பதிலாக புத்தகங்கள் வாங்கிக் கொண்டு  வந்து மனைவியின் எரிச்சலுக்கு உள்ளான பாரதி தொடங்கி.. இந்த அறியா பாமரன் வரை அனேகர் அடக்கம்.
             இம்முறை நான் வாங்கிய புத்தகங்கள் : பின் தொடரும் நிழலின் குரல்-ஜெயமோகன், நிமித்தம்-எஸ்.ரா, என்ன நடக்கிறது இந்தியக்காடுகளில்-இரா.முருகவேள்,காவிரியின் கடைசி அத்தியாயம் –வெ.ஜீவகுமார்,ஷேக்ஸ்பியர் கதைகள்- ,கொற்கை- ஜோ டி குரூஸ், தோழர்களுடன் ஒரு பயணம் –அருந்ததிராய், அடைப்பட்ட கதவுகளின் முன்னால்( அண்ணன் பேரறிவாளனின் தாயார் அம்மா அற்புதம் அவர்களின் அனுபவங்கள் மலையாளத்தில் இருந்து, தமிழில் –யூமா வாசுகி ),மோடி-குஜராத்,இந்தியா ?-தமிழில் :சுரேஷ், வெண்கடல்-ஜெயமோகன், மரப்பல்லி-வாமுகோமு, எது சிறந்த உணவு-மருத்துவர்.கு.சிவராமன் –ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் –ஜான் பெர்க்கின்ஸ்(ஏற்கனவே விடியல் வெளியிட்டது என்னிடத்தில் உள்ளது. கொஞ்சம் கடின மொழி நடை.இது பாரதிபுத்தகாலயம் வெளியீடு ) ,அதிகார அரசியல்- அருந்ததி ராய், நள்ளிரவின் குழந்தைகள் –சல்மான் ருஷ்டி,  வெல்லிங்டன் – சுகுமாறன், வான்காவின் வரலாறு –இர்விங்ஸ்டோன் தமிழில் சுரா, தமிழ் இலக்கிய முற்போக்கு ஆய்வு முன்னோடிகள்-மூ.ச .சுப்பிரமணியன், இந்திய வரலாறு –இ.எம்.எஸ்.நம்புதிரி பாட், இராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்- தமிழன் பாபு, பகத்சிங் சிறைக்குறிப்புகள்- தமிழில் சா.தேவதாஸ், மாநில சுயாட்சி- முரசொலி  மாறன் -, பஷீர்- தனிவழிலோர் ஞானி, இந்துமதமும் காந்தியாரும்,பெரியாரும்-தொகுப்பு பசு.கவுதமன், இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு – தர்மதீர்த்த அடிகளார்,  அண்ணா ஆட்சியை பிடித்த வரலாறு –அருணன்,  மருந்தென வேண்டாவாம்-மருத்துவர்.கு.சிவராமன்,  நவீன தொன்மங்களும் நாடோடிக்குறிப்புகளும்-ஜமாலன், வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நிலப்பரப்பு- ரேமண்ட் கார்வர், உணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்,  உணர்வும் ,உருவமும் ( அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்)- தொகுப்பு-ரேவதி, மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி-மோயோ கிளினிக் , காந்தி அம்பேத்கார் –மோதலும் சமரசமும்-அருணன், குஜராத் வளர்ச்சியா,வீக்கமா –சா.சுரேஷ், என் வாழ்க்கை தரிசினம்-ஜான்சி ஜேக்கப், அங்கிள் சாம்க்கு மாண்ட்டோ கடிதங்கள் –சரத் ஹசன் மாண்ட்டோ,  57 ஸ்னேகிதிகள் ஸ்கிநேகித்த புதினம்- வாமுகோமு, நிகழ்ந்தப் போதே திருத்தி எழுதப்பட்ட வரலாறு –மன்த்லி  ரெவ்யூ கட்டுரைகள், அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு –ஜான் பெர்கின்ஸ்,  சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும், திராவிட இயக்கத்தின் எழுச்சியும்- அதியமான்,  இயற்கைக்கு திரும்பும் பாதை – மசானபு ஃபுகோகா, சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே –தியோடர் பாஸ்கரன்
             எனது மகன் சிபி க்கு வாங்கி வந்த புத்தகங்கள் (அப்படிச்சொல்லி எனக்கும் வாங்கிக் கொண்டேன்)  :,வாத்து ராஜா- விஷ்ணுபுரம் சரவணன்,  சே குவேரா-படக்கதை,கிருஷ்ண தேவராயர்,அக்பர் , அசோகர்,சிவாஜி –வாழ்க்கை வரலாறு காமிக்ஸ்கள், முத்துக்காமிக்ஸ் வெளியீடுகள்.  
-மணி செந்தில்.
.

தமிழர் திருநாள் சிந்தனைகள்..



வழக்கம் போல பொங்கல் என்றாலே இனிப்பு பூசிக் கொள்கிறது மனசு. தெருவில் அதிகரித்து இருக்கும் நடமாட்டமும், வீட்டு வாசல்களில் பூத்திருக்கும் கோல மலர்களும்.. சட்டென இனிப்பினை நம் மனதிற்குள் நிறைப்பி விடுகின்றன.. வீட்டுக்கு திடீரென பக்கத்தில் முளைத்திருக்கும் கரும்புக் கடையில் (என் கடை அல்ல..) கூட்டம் இருக்க வேண்டும் என மனசு சிறிதாக பதட்டம் கொள்கிறது. கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ என சட்டென தொற்றுகிறது சிறு ஏக்கம் . என் பால்யத்தில் பொங்கல் என்றால் எங்களுக்கு தெரு தான் . ஆனால் இன்றைய சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி பெட்டிகளில் வீழ்ந்துகிடப்பதும் வலிக்கிறது. முன்னெல்லாம் பொங்கல் திருநாளில் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருந்தினர் தபால் காரர். அவர் கொண்டு வரும் வண்ண வண்ண அட்டைகளாக வந்து குவியும் பொங்கல் வாழ்த்துக்களில் நடிகர்கள்,தலைவர்கள் போன்றோர்கள் நம் வீட்டிற்கு வருவார்கள். காசுமீர் மலைகளும்,குமரிக்கடலும் நம் வீட்டில் எட்டிப்பார்க்கும்.. அந்த அட்டைகளின் எண்ணிக்கைதான் அக்காலத்து நம் குடும்ப கெளரவம். இப்போதெல்லாம் அலைபேசி குறுஞ்செய்திகளில் பொங்கலை குறுக்கி வாழ்த்தை வாட்ஸ் அப்பில் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.. சில சமயங்களில் அல்ல..பல சமயங்களில் அறிவியல் முன்னேற்றம் நம் இயற்கையான விழுமியங்களை விழுங்கி விட்டதோ என தோன்றுகிறது. ஆயிரம் இருந்தாலும்..பொங்கலில் தான் தமிழ் பிறக்கிறது,., வாழ்கிறது. … 

சற்று நேரம் முன்பு அண்ணன் சீமானிடம் அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தேன்.. சொந்த கிராமமான அரணையூருக்கு சென்று கொண்டிருப்பதாக சொன்னார்.. வருடாவருடம் தமிழர் திருநாளன்று தன் தாய் மண்ணில் இருப்பதை வழக்கமாக கொண்டிருப்பதையும் அவர் சொன்னார். மேலும் சொந்த மண்ணிற்கு திரும்புதல் தான் ஒவ்வொரு பூர்வகுடியும் கனவும் …என்று சொன்னார். அவர் சொன்னதைதான் நான் சிந்திக்கிறேன். நண்பர் பாக்கியராசன் கூட அயலக வாழ்வை விட்டு ஊருக்கு திரும்புவதை சொல்லும் போது..இறுதி காலத்துல நம்மூர்ல போய் மண்ணோடு மண்ணா கலந்துடணும் தல என்று சொன்னதையும் நான் நினைத்துப் பார்த்தேன். தம்பி அறிவுச்செல்வன் என்கிற ராசீவ் காந்தி கூட உயர்நீதிமன்றத்தில் கோட்டு போட்டுக்கொண்டு வழக்கறிஞராக நிற்பதை விடவும்..சொந்த ஊர் கண்மாயில ஆடு மேய்ப்பதைதான் அண்ணா பெரிதாக நினைக்கிறேன் என்று சொன்னதும் நினைவிற்கு வந்தது. விடுதலைக்கு விலங்கு நூலை நான் எழுதிய போது அதன் நாயகனான ராசீவ் கொலை வழக்கு ஆயுட் கைதியான அண்ணன் ராபர்ட்பயஸ் சொன்னார்..தம்பி என் ஊரில் இருக்கும் வானம் தான் இங்கும் இருக்கிறது என்ற நினைப்பில் தான் நான் வானத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றார். தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கூட தன் பூர்வீக கிராமத்தில் தான் படுத்துக் கிடக்கிறார் . இப்படி சொந்த மண்ணை நேசித்தல் பூர்வக்குடிகளின் மகத்தான இயல்பு. இது மண் மட்டுமல்ல.. என் முன்னோர்களின் கனவினையும்,நினைவினையும், வாழ்வினையும் சுமக்கின்ற நிலம். அந்த நிலம் தான் எம் உயிர். அதில் மீத்தேன் காற்றை எடுக்கவும், எரிவாயு குழாய்களை புதைக்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது.. நீ என் நிலத்தை தோண்டுகையில் என் தாத்தனின் மார்பினை பிளக்கிறாய்.. மீத்தேன் காற்றை உறிஞ்சுகையில் உறைந்துக் கிடக்கும் என் முன்னோனின் மூச்சுக்காற்றினை உறிஞ்சுகிறாய்.. இனி எம் மண்ணை மலடாக்கவும்., நீ சம்பாதிக்க பொருளாக்கவும் நான் அனுமதித்தேன் என்றால்.. நான் என்னையே விற்கிறேன் என்று பொருள்.. # மீத்தேன் எரிகாற்றுக்கு எதிராக ஒலிக்கிற ஒவ்வொரு குரலும் … சாதாரண உரிமைக்குரல் அல்ல.. எம் மண்ணை மீட்டெடுக்கும் உயிர்க்குரல்..

இதோ..எம் நிலம் குறித்தும்..எம் மக்கள் குறித்தும் அப்படியே பிரதிபலிக்கிறார் அண்ணன் சீமான்..

http://www.youtube.com/watch?v=lULWQKHvq9U&feature=youtu.be

 

லசந்தா விக்கிரதுங்க. – சக மனிதனை நேசித்த இதழலாளன்.

“நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!”
“என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும்.”
– சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரதுங்க.

 

சுதந்திரமான உணர்வோடு ..காத்திரமான சிந்தனைகளோடு..உலகம் தழுவி மனித நேயத்தை நேசித்த மாபெரும் இதழியலாளர். லசந்தா விக்கிரமதுங்க..
 
தன் கண்முன்னால் இனப்பேரினவாத அரசால் தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படும் போது மெளனமாக சகித்துக் கொண்டு..தொலைக்காட்சி பெட்டியிலும், சாராயக்கடையிலும் வீழ்ந்துக்கிடக்க அவர் ஒன்றும் தமிழ்நாட்டு தமிழனில்லை. எந்த சாமியார் எந்த நடிகையோடு புரண்டார்.. இன்றைய தின பலன் என்ன..யார் யாரோடு ஓடிப்போனார்..ரஜினி அரசியலுக்கு வருவரா..கருணாநிதி-ஜெ வின் இன்றைய சண்டை என்ன..தொப்புள் காட்டி நடிக்க மறுத்த நடிகை..தல யின் செல்ல மகளுக்கு பிறந்தநாள்..இளைய தளபதியின் இளைய மகன் காலையில கக்கூஸ் போகல.. என்றெல்லாம் செய்திகள் வெளியிடும் தமிழக ஊடகவியலாளரும் இல்லை. சிங்களனாய் பிறந்தாலும் மனிதனாய் வாழ்ந்த லசந்தா விக்கிரமதுங்க மனசாட்சி கொண்ட பத்திரிக்கையாளனாய் (நம்ம ஆளுங்க போல..இல்ல ) வாழ்ந்தவர். ஒரு காலத்தில் தனது நண்பனாய் விளங்கிய சிங்கள பேரினவாத அதிபர் இராசபக்சேவை தனது எழுத்துக்கள் மூலம் பதற வைத்த லசந்தாவின் அறச்சீற்றம் சிங்கள பேரினவாதத்தை சுட்டெரித்தது. இதன் விளைவாக 2009 சனவரி 8 ஆம் நாள் அன்று சிங்கள பேரினவாத கைக்கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ்த் தேசிய இனம் இன அழிப்பினை எதிர்த்து குரல் கொடுத்து போராடிய தனது தோழனை விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் துளிகளோடு நினைவு கூர்கிறது.. இன்று அவருடைய 4 ஆம் ஆண்டு நினைவு நாள்.

 
#  வீரவணக்கம்.

Powered by WordPress & Theme by Anders Norén