வெகு காலமாகவே சமூக நீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் உள்ள இடைவெளி வரலாற்றுப் பூர்வமானது. தமிழகத்தின் வரலாற்றில் சமூக நீதிக்கான குரல்கள் வெகுகாலத்திற்கு முன்பே ஒலிக்கத் தொடங்கி விட்டன . ஆனால்  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிக்கட்சி சமூகநீதி தளங்களில் ஏற்படுத்திய அதிர்வுகள் கவனிக்கத்தக்கவையாக அமைந்தன. தமிழ்த்தேசிய உரிமைக்கான வரலாறும் இத்தகைய தன்மை உடையதுதான்.  தமிழ்த்தேசிய இனம் வரலாற்றின் போக்கில் உருவான தருணத்தில் இருந்தே அதற்கான உரிமைக்குரல்களும் தோன்றின. பழந்தமிழ் இலக்கியங்களும்,ஒலைச்சுவடிகளும் ஏற்படுத்திய இலக்கியச் செழுமை தமிழ்த்தேசிய இன ஒர்மைக்கு அடிப்படையாக திகழ்ந்தன.  தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும், சமூக நீதி   இயக்கங்களுக்கும் இடையிலான  அடிப்படை முரண்களை புரிந்துக் கொள்ள வேண்டும். சமூக நீதி இயக்கங்கள் சமூகத்தின் ஊடாக சமநிலை பராமரிப்பினை கோருபவை. தமிழ்த்தேசிய இயக்கங்கள் தேசிய இனமொன்றின் உரிமைகளுக்காக போராடுபவை. சமூக நீதி இயக்கங்களின் அடிப்படை அம்சங்களான சாதீய மறுப்பு,மூடநம்பிக்கை ஒழிப்பு,பெண்ணடிமை தகர்ப்பு போன்றவைகளின் விழுமியங்களை தமிழ்த்தேசிய இயக்கங்கள் இயல்பாகவே தன் மரபின் மூலமாகவே உள்வாங்கி இருக்கின்றன. சமூகநீதி கருத்துக்களை தனது மரபின் மூலம், வாழ்வியல் மூலம் இயல்பாகவே உள்ளடக்கிய சமூகமாக தமிழ்த்தேசிய இனம் விளங்குகிறது .தந்தை பெரியார் போன்ற ஒரு மாபெரும் முற்போக்காளரை,கடுமையான எதிர்ப்பு அரசியல் உடையவரை தனது தலைவராக தமிழ்த்தேசிய இனம் ஏற்றதற்கான உளவியல் அதன் இயல்பிலேயே பெற்றிருக்கின்ற முற்போக்கு அம்சங்கள் தான் என அய்யா.பெ.மணியரசன் குறிப்பிடுவதையும் நாம் ஏற்கலாம்.
இனம் குறித்த வரலாற்று பெருமிதத்தால் கட்டமைக்கப்படும் தேசிய இன உணர்வே தமிழ்த்தேசியர்களின் அடிப்படையான, ஆன்ம உண்ர்வாக இருக்கிறது. தமிழர் மரபு  காலத்தாற் நீண்ட வரலாறு உடையது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு.. முன்பிலிருந்து,நாளது தேதிவரை எழுத்துப்பூர்வமான ஆக்கங்களான  தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், நீதி நூல்கள் போன்ற ஆவணங்கள் தமிழர் மரபினை அடையாளப்படுத்தும் பணியினை செய்வதோடு.. தமிழ்த்தேசிய இனப் பெருமிதம் கொள்வதற்கான உளவியல் நியாயங்களை கற்பிக்கின்றன..
இவ்வாறாக வரலாற்றின் அடிப்படையில் இருந்து கட்டமைக்கப்படும் தமிழர் மரபு இயல்பிலேயே இயற்கை வழிபாடு, விவசாயம், பெண்களை போற்றுதல், சாதியற்ற சமூக வாழ்வு போன்ற பல்வேறு முற்போக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது. 
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தமிழரால் பாட முடிந்த உளவியல் அம்சம்தான் அக்கால வாழ்வியலாக  இருந்திருக்கிறது. நாடாளும் மன்னனின் அவைக்கு சென்று அவனை ”தேரா மன்னா..” என்று எளிய பெண்ணொருத்தி ஏசும் அளவிற்கு சமூக ஒழுங்கில் பெண்களுக்கான இடம் இருந்திருக்கிறது. ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர்கள் அரசனுக்கு ஆலோசனை சொல்லும் இடத்திலும், நெருக்கமான தோழியாகவும் இருந்திருக்கிற மதிப்பு சார் தகுதி பெண்களுக்கு இருந்தது.
ஆரியர் படையெடுப்பிற்கு முன்பே ஆசீவகம் போன்ற நெறிகள் தமிழக மண்ணிலே இருந்திருக்கின்றன..இயற்கை வழிபட்டு, ஏற்றத்தாழ்வு இல்லாத மெய்யியல் கொள்கை தமிழனுக்கு இருந்திருக்கிறது. முன்னோர் வழிபாடு, நடு கல் மரபு என நீளும் தமிழரின் மெய்யியல் வரலாறு செழுமை மிக்கது. சாதியற்ற,ஏற்றத்தாழ்வற்ற தமிழர் மெய்யியல் அம்சங்களில், ஆரியர் படையெடுப்புக்கு பிந்திய பண்பாட்டு தாக்குதல்களினாலேயே தமிழரின் சமூகம் சாதீய சமூகமாக பிளவுப்பட்டு கிடக்கிறது.
எனவே தான் தமிழ்த்தேசிய இயக்கங்கள் தமிழர் மரபின் மூலம் தமிழ்த்தேசிய ஓர்மை உணர்வினை மீட்டெடுக்க கடுமையான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.குறிப்பாக 2009 க்கு பிறகான தமிழ்த்தேசிய முழக்கங்கள் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வலிமையும்,மூர்க்கமும் அடைந்திருக்கின்றன.அதில் முதன்மையான தமிழ்த்தேசிய அமைப்பாக நாம் தமிழர் கட்சி களங்களில் செயல்பட்டு வருகிறது. 
பார்ப்பனீய ,சாதீய அரசியல் முனைகளால் பலமாக தாக்கப்படுவதும், கடுமையான விமரசனங்களை எதிர்க்கொள்ளுவதுமான முதன்மை தமிழ்த்தேசிய அமைப்பாக நாம் தமிழர் செயல்பட்டு வருகிறது என்பதை பல வித சான்றுகளுடன் நிரூபிக்க முடியும்.சமீபத்தில் ஹெச்.ராஜா அண்ணன் சீமானைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததும், பல வருடங்களுக்கு முந்தைய பேச்சு ஒன்றினை வைத்துக்கொண்டு வன்மம் குறையாமல் இந்துத்துவா அமைப்புகள் நாம் தமிழரை எதிர்த்து சமீபத்தில் போராடியதும்..இதற்கு சான்றுகள். மேலும் காஷ்மீர் விடுதலை இயக்கத்தலைவர் யாசின் மாலிக்கை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து தேசிய இனங்களுக்கு இடையிலான இணக்கத்தினை ஏற்படுத்த முயன்றதும் நாம் தமிழரின் வலிமையான அரசியல் நடவடிக்கை.  மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் பல அரசியல் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் தேர்தலில் பாஜக கட்சியினை தனது முதன்மை எதிரியாக அறிவித்து, அதனை எதிர்த்து அது போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் தேர்தல் பணி ஆற்றியதும் இதில் குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது வைக்கப்படும் தலையாய குற்றச்சாட்டு சாதீய முரண்களில் தனது கூர்மை அரசியலை நிலைநாட்ட முடியாமை. அதற்கு காரணம் சாதீய அமைப்புகள் மீதான பரிவு அல்ல. மாறாக சாதீய அமைப்புகளில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை தமிழர் என்கிற ஓர்மை உணர்வில் ஒன்றிணைப்பதற்கான முனைப்பே அன்றி, வேறொன்றும் அல்ல.இன்றளவும் கொங்குப் பகுதிய சாதீய அமைப்பு ஒன்றினாலும், தலித்திய அறிவு சீவி வட்டத்தினாலும் சமமாக தாக்கப்படுகின்ற அமைப்பாக நாம் தமிழர் இருப்பதன் காரணம் வெவ்வேறான இரண்டும் தனது அரசியலுக்கு ஒரே எதிரியாக கருதுவது நாம் தமிழரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 
                  இவ்வாறாக வரலாற்றின் போக்கில் தமிழ்த்தேசிய உணர்வு தமிழர் மரபின் வாயிலாக கட்டமைக்கப்படுவதன் மூலம் தான் சாதீய மறுப்பு, பெண்ணடிமை தகர்ப்பு ,மூட நம்பிக்கைகள் ஒழிப்பு போன்ற பல்வேறு முற்போக்கு கொள்கைகளை இம்மண்ணில்
நடைமுறைப்படுத்தப்படும் என நாம் தமிழர் கட்சி நம்புகிறது. 2009 க்கு பிறகான தமிழ்த்தேசிய அமைப்புகளின் நவீன வடிவமாக நாம் தமிழர்  நிலைநிறுத்தப்படுவதற்கும், மத சாதீய உணர்வாளர்களால் கல்லெறியப்படுவதற்குமான மிக முக்கிய காரணமாக  இவ்வகையான நம்பிக்கைகளே என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
சமூகநீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கும் இடையே நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வரும் இடைவெளியை தனது நடைமுறை சாத்தியங்கள் மூலம் நாம் தமிழர் நிரப்ப முயல்கிறது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் இரண்டிற்குமான மாற்றாக..புது வெளி ஒன்றினை..மாற்று அரசியலை நாம் தமிழர் நிறுவ முயல்கிறது. வெகுசன அரசியல் வெளியில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாத அயோத்திதாசர், இரட்டைமலை சீனுவாசன் போன்ற தலைவர்களின் விழாக்களை தனது கட்சி அமைப்பியல் நிகழ்வுகளாக நாம் தமிழர் கொண்டிருப்பதும்  இது போன்ற சிந்தனைகளால் தான்.. வெகுசன அரசியல் இயக்கங்கள் என்றாலே சமரசம் கொண்டு,பிழைப்புவாத அரசியல் நிலைகளை எடுப்பன போன்றதான பிம்பங்களை உடைப்பதில் நாம் தமிழர் தனது முழு கவனத்தைக் கொள்கிறது. ஒரு வெகுசன அரசியல் கட்சி சமூக இயக்கங்களுக்கான நுண்ணரசியல் தன்மைகளை பெறுவது எனபது தமிழக அரசியல் வெளியில் புதிதான ஒன்று. இயற்கை விவசாயம், மீத்தேன் எதிர்ப்பு, காட்டுக் கருவை ஒழிப்பு. ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு போன்றதான மண்சார்ந்த போராட்டங்களையும் நாம் தமிழர் மேற்கொண்டு வருவது  குறிப்பிடத்தக்கது.
       தமிழர் மரபினை மீட்டெடுத்து..இனப் பெருமித உணர்வில்..தமிழ்த்தேசிய ஒர்மையை படைக்க விரும்பும் நாம் தமிழர் கட்சி சமூகநீதி இயக்கங்களின் அடிப்படை அம்சங்களை உள்வாங்கி  தமிழர்களுக்கான ஒருவெகு சன அரசியலை கட்டமைப்பதில் துடிப்பாக  இருப்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய போக்காகவே நாம் கருதலாம்.
 
-மணி செந்தில்.