subave
அது ஒரு பஞ்சாயத்து காட்சி. படத்தின் பெயர் நினைவில்லை. ஆடு திருடிய கள்வனான வடிவேலு பஞ்சாயத்தை கலைத்து விட்டு “ இதை இப்படியே மெயிண்டெயின் பண்ணு..சூனா ..பானா..ஒரு பய உன்னை அசைச்சிக்க முடியாது “ என மீசையை முறுக்குவார். அதே போல நமது அரசியல் களத்தின் சூனா..பானா ..சுப.வீயும் நாம் தமிழர் கட்சி பழனியில் தொடங்கிய வீரத்தமிழர் முன்னணி குறித்து மீசையை முறுக்கி திராவிட அரசியல் வாதிகளுக்கே உரித்தான “ வரும்..ஆனா..வராது…” என்பது போன்ற ஒரு கட்டுரையை தமிழ் ஒன் இந்தியா இணையத் தளத்தில் எழுதியுள்ளார்.
அவள் படி தாண்டா பத்தினியும் அல்ல, நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல என்பது போன்ற புகழ் வாய்ந்த சொல்லாடல்களுக்கு பேர் போனவர்கள்…அவர் உங்கள் மனைவியா..இல்லை. அவர் என் மகளின் தாய் என குழப்பி அடித்தல்களில் கின்னஸ் சாதனை படைத்தவர்கள்… திருப்தி அளிக்கிறது..ஆனால் மனநிறைவை தரவில்லை என்றெல்லாம் அகராதியில் இல்லாத  புது மொழி பேசியவர்களின் மரபு அப்படி..இப்படியெல்லாம் எழுத வைக்கிறது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்ப்பு வந்திருப்பதால் குறி தவறாமல் நம் அம்பு இலக்கினை எட்டி இருக்கிறது என மகிழ்வோம்.
ஒரு பக்கம் பாஜகவின் எச்.ராஜா ஏசுவதும்… மறுபக்கம் திராவிட சுப.வீ திமிறுவதும் நமக்கு இன்பமாகவே இருக்கிறது. இந்துத்துவா என்கிற ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக பார்ப்பனீயமும்,திராவிடமும் திகழ்கின்றன என்பதற்கு எச்.ராஜாவின் பதறலும், சுப.வீயின் உதறலும் உதாரணமாக திகழ்கின்றன. இதற்கு மற்றுமொரு உதாரணம் கட்டுரையின் தொடக்கத்திலேயே சுப.வீ. இந்து நாளிதழின் செய்தியை துணைக்கு அழைத்திருப்பது.  பாவம். துணைக்கு அழைக்க பார்ப்பனீய வினை தான் திராவிட அறிஞருக்கு உதவுகிறது என்றால்.. காஞ்சி மடத்தின் துணையை காஞ்சித்தலைவனின் வாரிசுகள் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதானே பொருள்..?
முன்னோர் வழிபாடு புதுமையும் இல்லை.புரட்சியும் இல்லை என்கிறார் சுப.வீ. தனது பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுக்க முயலுகிற ஒரு அமைப்பை நாம் தமிழர் தொடங்கி இருக்கிறது.  சல்லிக்கட்டு,தமிழர் உணவு,பழந்தமிழர் விளையாட்டுக்கள் என்பது போன்ற பல காரணிகளை உள்ளடக்கிய வீரத்தமிழர் முன்னணியின் பல்வகை நோக்கங்களில் முன்னோர் வழிபாடும் ஒரு அம்சம். முன்னோர் வழிபாடு,நடுகல் மரபு போன்றவை தமிழனின் பண்பாட்டு விழுமியங்கள் என்பதற்கு ஆதாரங்களை தனது கட்டுரையிலேயே சேகரித்து வழங்கி சேம் சைடு கோலடித்த வீரராக, ஆஜரான குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுக்க வழக்கறிஞர் சூரராக காட்சி அளிக்கிறார் சுப.வீ .
நாம் தமிழர் கட்சியை தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். ஆனால் அந்த அமைப்பை அவரால் தொடர முடியாமல் போனது. அவருக்கு பிறகு அவரது வழித்தோன்றல்களான நாங்கள் தொடர்கிறோம். அதே போல் தான் தமிழரின் மரபு,பண்பாடு ஆகியவற்றில் இந்துத்துவ அம்சங்கள் நீக்கமற நிறைந்துள்ளன. அவற்றை எல்லாம் களைந்து எமது பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்கிற பணியை செய்ய வீரத்தமிழர் முன்னணியை தொடங்குகிறோம். இதில் எங்கே கருணாநிதியின் தொங்கு சதையாகிப் போன சுப.வீக்கு வலிக்கிறது என புரியவில்லை.
மேலும் முருகனை எப்படி நம் முன்னோன் என்கிறீர்கள் ..அது ஒரு புராணப்பாத்திரம்.இராவணன் ஒரு இதிகாசப் பாத்திரம்,வள்ளுவர் ஒரு வரலாற்று பாத்திரம்  என்கிறார் சுப.வீ. முருகன் தமிழினத்தின் முன்னோன்,மூத்தோன் ,நம்மை ஆண்ட மன்னோன் என்பதற்கு தொடர்ச்சியான தமிழின அறிஞர்களின் ஆய்வுகள் சான்று பகிர்கின்றன . சங்க இலக்கியங்கள் முருகனைப் பற்றி பேசுகின்றன. வேலன் வெறியாடல் என்கிற என்ற முருக வழிபாடு சார்ந்த..முருகனே குறி சொல்வதாக கருதி மக்கள் வழிபட்ட பண்பாட்டு நிகழ்வினை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  சங்க இலக்கிய நூலான பரிபாடலில்  பல பாடல்கள் முருக வழிபாட்டினை பேசுகின்றன. சங்க இலக்கியத்திற்கு உரை கண்டதாக சொல்லி தனக்கு தானே சங்கு ஊதிக் கொண்ட வரின் சீடருக்கு இது தெரியாதா..?
இனக்குழு வாழ்க்கையில் தாய்வழி சமூகத்தின் ஒவ்வொரு இனக்குழுவிற்கும் இடையே போர் ஏற்பட்ட போது  இனக்குழுவிலே யார் தகுதி வாய்ந்த வீரனோ அவனே தலைவனான் மக்கள். அத்தகைய வீரனை,தங்களுக்காக உயிரையும் விட துணிந்தவனை தங்களது தலைவனாக ஏற்றனர். அவன் மறைவிற்கு பிறகு அவனை தெய்வமாக போற்றினர். அப்படித்தான் கடவுளானான் முருகன்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
 தெய்வத்துள் வைக்கப்படும் -குறள்
 எங்கள் தலைவன் பிரபாகரன், அவன் முருகனுக்கே நிகரானவன் என்று எழுதிய பாவலர் அறிவுமதி கூட இது தொடர்பான முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார் என்பது செய்தி.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘திருமுருகாற்று படை ‘ கண்ட மொழி  தமிழ் மொழி.  போர்த்தொழிலையும், பெறுகின்ற வெற்றியினையும் உடையவனாக முருகன் அழைக்கப்பட்டு
மள்ளனாக புகழப்பட்டார் என்கிறது திருமுருகாற்றுப் படை
‘வானோர் வணங்குவில் தானைத்தலைவ !
மாலை மார்ப,நூலறி புலவ
செருவி லொருவ பொருவிறன் மள்ள ! ( திருமுருகாற்றுப்படை 261-263)
நக்கீரர் தொடங்கி அருணகிரிநாதர், கிருபானந்த வாரியார் என நீண்ட வரலாற்று தொடர்ச்சியில் வருகிற தமிழஞறிர்கள் முருகனை நம் முன்னோனாக நிறுவி இருக்கிறார்கள். ஆனால் எங்கே ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த முருகன் முன்னோனாக நிறுவப்பட்டால்.. இரு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய திராவிட கருத்தாக்கம் வலுவற்று போகுமே என்கிற வருத்தத்தில் தான் முருகனை புராணப்பாத்திரமாக அழைத்து புளாங்கிதம் அடைகிறார் சுப.வீ.
தமிழ்ச்சமூகத்தை பெரிதும் பாதித்த ஆரியர் வருகையும், வடநாட்டு புராண,இதிகாச மரபும் தமிழர் மெய்யியல் நம்பிக்கைகளில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கின்றன. வடநாட்டில் ஸ்கந்த மரபு என்கிற நம்பிக்கையோடு தமிழன் முருகனை இணைத்து  தெய்வயானையை திணித்தது ஆரியம். முருகன் சுப்ரமணியன் ஆனான். இந்து மத கடவுளாக பார்க்கப்படுகிற முருகன் பெயர் கொண்ட பார்ப்பனரை இன்றளவும் நம்மால் காண முடியவில்லை. தமிழன் முருகன் பார்ப்பன சுப்ரமணியன் ஆன கதை  தெலுங்கர்-திராவிட பிழைப்புவாத அரசியலில் தன்னை இழந்த சுப.வீக்கு வேண்டுமானால் உறுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்து மத அடுக்கினில் சிக்குண்டு, சாதி பெருமிதத்தில் தன்னை தொலைத்திருக்கிற தமிழனை மீட்டெடுக்க துடிக்கிற தமிழ்த்தேசிய இளைஞர்களுக்கு உறுத்துகிறது. இன்று வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்திருப்பது வந்தேறி இருக்கிற இந்துத்துவாவிற்கு எதிரான பண்பாட்டு கலகம்.  சாதி மத வேறுபாட்டால் கூறு போடப்பட்டிருக்கும் தமிழினத்திற்கு கிடைத்திருக்கும் மாற்று.
இராவணன் இதிகாசப்பாத்திரமாம். இராவணனை ஒரு தமிழனாக அறிந்து, ஆய்ந்து ..நிறுவி “இராவண காவியம் “ எழுதிய புலவர் குழந்தையை திராவிட அறிஞர் மறந்தது எப்படி ..? ஒருவேளை  ஊழல் வழக்கில் சிக்குண்டு சட்டென்று தோன்றி இருக்கிற தயாளு அம்மாளுக்கு ஏற்பட்டுள்ள “  அல்சீமர்        “  இவருக்கும் தாவி விட்டதா.. திராவிடத்தலைவர் ஆட்சியில் தானே இராவண காவியம் தடையே நீக்கப்பட்டது. ..? . சுப.வீ இதிகாசப் பாத்திரமாக விளிக்கும் இராவணனின் புகழ்பாடும் நூலை …உண்மையாகவே இராவணனை  இதிகாச பாத்திரமாக கருதித்தான் திமுக ஆட்சியில் தடை நீக்கப்பட்டதா….? தென் திசை பார்க்கிறேன் என இராவணனை புகழ்ந்து பாடினாரே பாவேந்தர்..? அவரது வார்த்தைகள் பொய்யா…?
வள்ளுவர் ஒரு வரலாற்று பாத்திரமாம். சரி. வள்ளுவருக்கு வானை முட்ட சிலை எழுப்பியவர்கள் வள்ளுவரை போற்றுபவர்களை,வள்ளுவத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்பவர்களை  தூற்றுவதன் பித்தலாட்ட,பிழைப்புவாத அரசியல் புரிகிறதா…?.
முருகனை வழிபடும் இவர்கள் மாடன்,சுடலை மாடன்,பன்றி மாடன், அய்யனார் போன்றவர்களை வணங்குவார்கள். ஆண்டு முழுவதும் இதே வேலையை செய்து கொண்டு இருப்பார்களா என்கிற கேள்வியின் தொனி எங்களுக்கு புரியாமல் இல்லை  சுப.வீ அவர்களே..
உங்களுக்கு சாய்பாபாவினை தொழுவதிலும் ,பிரச்சாரத்திற்காக கிளம்பும் கருணாநிதிக்கு தயாளு அம்மாள் ஆரத்தி எடுக்கும் காட்சியை கண்டு மகிழ்வதிலும் ,காலம் முழுவதும் மஞ்சள் துண்டிற்கு கழுத்தை காவு கொடுப்பதிலும் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் மாடன்,மாரி,வீரன்,அய்யனார், கருப்பு, என நீளுகிற எங்கள் முன்னோர்களை நாங்கள் போற்றி வணங்குதலில், எம் இனப் பெருமை அடைவதில் உங்களுக்கு சிக்கல் இருக்கிறது. அது நீங்கள் தொழுது வரும் திராவிட பிழைப்பிற்கும், கோபாலபுரத்து செஞ்சோற்று கடனுக்கும் , அறிவாலயத்தின் அறிவீனங்களுக்கும்  எதிராக இருக்கிறது.
ஆண்டு முழுவதும் இதை செய்ய போகிறார்களா என்று ஒரு கேள்வி வேறு. செய்து விட்டு போகிறோம். உங்களுகென்ன சிக்கல் … ஆந்திர –திராவிட பாலாஜிக்கும், மலையாள –திராவிட அய்யப்பனுக்கும் வருமானம் போய்விடும் என்கிற பயமா… வீரத்தமிழர் முன்னணி மாடனையும்,அய்யனாரையும்,வீரனையும்,காளியையும், மாரியையும், கருப்பினையும்,காத்தனையும் இன்னும் முன்னோர்களாக வாழ்ந்த சிறு தெய்வங்களையும்,எம் இனத்திற்காக உழைத்த பெரியோர்களையும்,மாவீரர்களையும்  வணங்குவதில் போற்றுவதில் திராவிட இயக்கத்து தமிழருக்கு என்ன சிக்கல்…திராவிட இயக்கத்து தெலுங்கருக்கு தானே வர வேண்டும் விக்கல்..?
பழனியில் பார்ப்பனர்களாம். முருகன் சிலைக்கு அவர்கள் தான் பூசை செய்கிறார்களாம். இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை சுப.வீ…?  தமிழ்நாட்டை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிற திராவிட கட்சிகளின் ஆட்சியில் பழனியில் இருந்து பார்ப்பனர்களை துரத்தி இருக்கவேண்டியதானே. ..உங்கள் தலைவரே 5 முறை ஆண்டவர்தானே… அப்போதெல்லாம் இதற்காக என்ன கிழித்தீர்கள் என்பதை விலாவாரியாக சொல்ல இயலுமா…? பழனி முருகனின் தங்க வேலை திருடியது யார் என்று அடித்துக் கொண்டதை தவிர  திராவிட கட்சிகள் என்னவற்றை கிழித்தன என்பதை முழிக்காமல் சொல்ல இயலுமா சுப.வீ…? ..வந்தேறிய தெலுங்கு திராவிட திருமலை நாயக்கர் காலத்தில் தானே எங்களை எம் பாட்டன் கோவிலில் இருந்து துரத்தி…பார்ப்பனர்களை உட்புகுத்தினான்..நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளீர்களே..உங்கள் கட்டுரையில்… முதுகில் ஆபிரேசன் என மல்லாக்க படுத்திருந்த உங்கள் தமிழினத்தலைவர்  மீண்டும் பழனியின் பூசை உரிமையை தமிழர்களுக்கே மீட்டு அளிக்க ஒருக்களித்தாவது படுத்தாரா..
”கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே “.
என குறுந்தொகை பாடலை பற்றி திருவிளையாடற் புராணத்தில் வருகிற குறிப்புகளை சுப.வீயின்
மஞ்சள் (துண்டு) காமாலை கண்களுக்கு புலப்படாமல் போகலாம். இறையனார் என்னும் புலவரைக் கடவுள்-சிவபெருமான் என்று ஆக்கி, அரசன் அவையில் பரிசு பெறத் தருமி என்பவனுக்கு இப்பாடலைச் சிவபெருமான் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையாக்கித் திருவிளையாடற் புராணம் வடித்துள்ளது. புறப்பாடல் திரட்டு என்னும் நூலும் (15ஆம் நூற்றாண்டு) இந்தக் கதைக்குத் துணையாக அமைந்துள்ளது.  சங்கப்பாடல்களும், பழந்தமிழர் இலக்கியங்களும் எண்ணற்ற காட்சிகளை விவரிக்கின்றன. அவற்றில் புனைவுகள் இருக்கலாம். ஆனால் இருப்பவை எல்லாம் புனைவுகள் ஆகா.
செவி வழிக்கதையாக நம்மில் உலவும் பிள்ளையார்-முருகன் –மாம்பழக்கதையே மிகச்சிறந்த உதாரணம். நேர்மையாக வாழ்ந்த தமிழன்  கள்ளத்தன ஆரியனிடம் ஏமாந்துப் போனான் என்பது தான் முருகன் –பிள்ளையார் மாம்பழக்கதை நிறுவ விரும்பும் குறியீடு . இக்குறியீடுதான் தமிழர் இறையாண்மை கோரிய முருகனின் கதையாக விரிகிறது.  எனக்கென ஒரு நாடு, எனக்கென ஒரு கொடி,எனக்கென ஒரு குடி என அறிவித்து ஆரிய பிள்ளையாருக்கு எதிராக நின்று தனித்த முருகனின் கதை சுட்டும் தமிழர் இறையாண்மை, கருணாநிதியின் இறையாண்மையில் தன்னை தொலைத்திருக்கிற சுப.வீ அறியாதுதான்.  அதைத்தான் எம் அண்ணன் சீமான் சுட்டிக்காட்டி பேசினார்.
திமுக வில்  வீரத்திமுக முன்னணி இல்லையாம். சாய்பாபா காலிலும், மயிலாப்பூர் கோவில்களிலும் சரிந்து கிடக்கும் தலைவரின் குடும்பத்தை பற்றி பேசக் கூடாதாம். அது தனி மனித நம்பிக்கையாம்.  ஜால்ரா அடிக்கலாம் சுப.வீ. அதுவும் ஒரு பிழைப்பு. ஆனால் கால்ரா வந்த பிறகும் கழிவது கூட தெரியாமல் அடிக்கிறீர்களே… அதுதான் எங்களுக்கு மலைப்பு.
இந்துத்துவா என்கிற பேராபத்து சூழ்ந்திருக்கிற இக்காலத்தில் தமிழரின் வழிபாட்டு மரபுகளை மீட்டெடுக்க வேண்டிய தேவை நேர்ந்திருக்கிறது . பிள்ளையார் ஊர்வலம் என்கிற பெயரில் 20 வயதிற்குட்பட்ட தமிழின இளைஞர்கள் கத்திக்கொண்டு பள்ளிவாசலை கடக்கும் போது நமக்குள் பதட்டம் ஏற்படுகிறது. இந்து என்பது தமிழரின் மதமல்ல என உரக்க கூவ வேண்டிய காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். நான் இந்துவல்ல… நான் கிருத்துவன் அல்ல..நான் முஸ்லீம் அல்ல… இவைகள் எல்லாம் எம் மீது தொற்றியவை. ஆனால் காலங்காலமாய் நான் தமிழன் என அறிவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  சாதியாய் பிரிந்து நிற்கும் தமிழினத்தை ஓர் ஒர்மைக்குள் திரட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மக்கள் கூடுகிற கோவில்களை பார்ப்பனர்கள் கரங்களிலும், அரசியலையும்,அதிகாரத்தினையும் திராவிடர் கரங்களிலும் கொடுத்து விட்டு எப்போதும் தேர் இழுக்கும் கூட்டமாக தமிழ்த்தேசிய இனம் நகர முடியாது என்கிற நிர்பந்தம் எங்களுக்குள் பிறந்து விட்டது. எமது வாழ்வில்,எமது மொழியில்,எமது பண்பாட்டில் சேர்ந்திருக்கிற ஆரிய-இந்துத்துவ கசடுகளை திராவிடம் போலவே தங்க வைத்து அதில் பிழைக்கிற வாழ்க்கையை எம்மால் அனுமதிக்க இயலாது.
கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அவருக்கு பிறகு உதயநிதி, அவருக்கு பிறகு அவருடைய மகன் என வாழையடி வாழையாக கோபாலபுரத்து சேவகனாக நிற்பதில்..உருளுவதில் சுப.வீக்கு வேண்டுமானால் சங்கடங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மானமுள்ள எவருக்கும் இது உறுத்துத்தான் செய்யும். தமிழர்கள் தனது வரலாற்று பாதையில் அதிகாரத்தை நோக்கி பயணிக்கும் நகர்வு திராவிடர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த தான் செய்யும் . அதை தான் சிம்ரன் ஜித் சிங் மான் அறிவுறுத்தினார்.அம்பேத்காரும் வழிகாட்டினார், நாங்கள் செல்கிறோம். இது சுப.வீ வலிக்கிறது. வலிக்கும். வலித்தே ஆக வேண்டும்
நாங்கள் நன்றாக அறிவோம். பொடா வழக்கில் சுப.வீயை அப்போதைய ஜெ.அரசு கைது செய்வதற்கு முன்னால் இருந்த சுப.வீயை நாங்கள் நன்றாக அறிவோம். இன்று கருணாநிதியின் கால் கட்டை விரலாக அசைகிற நீங்கள்…அன்று இதே கருணாநிதியை என்னென்ன
வார்த்தைகளில் வசவி தூற்றீனர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.
50 ஆண்டுகளாய் உங்கள் திராவிட பிழைப்பு வாத  அரசியல் செய்யதா இந்து மத இழிவுகளில் இருந்தும், சாதீய சகதிகளில் இருந்தும் தமிழினத்தை மீட்டு எடுக்கிற பண்பாட்டு மீட்சிப்பணியை எளிய இளைஞர்கள் முன்னெடுப்பதை வயிற்றெரிச்சல் தாங்காமல்…வாங்கியதற்கும் அதிகமாக கூவுகின்ற சுப.வீயை பார்த்தால் ”எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்” என்கிற திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
ஒருமுறை சீமான் தன்னை கொல்ல முயற்சிப்பதாக சுப.வீ பிதற்றிய போது , ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டவரை நான் ஏன் கொல்ல வேண்டும் என கேட்ட சீமானின் கேள்வி இன்னமும் ஈரம் காயாமல் தான் இருக்கிறது.
பண்பாட்டு புரட்சியில் தமிழர்களுக்கு மொட்டை போடுவதற்காகதான் வீரத்தமிழர் முன்னணி உருவாகி உள்ளதோ என கேள்வி எழுப்பும் சுப.வீ அவர்களே.. ” திராவிட பிழைப்பு வாதத்திற்கு பலியாகி எங்களுக்கு நாங்களே மொட்டை போட்டு கொண்ட காலம் மலையேறி விட்டது. அவசரப்படாதீர்கள் … முதலில் ஆரியத்திற்கு பிறகு திராவிடத்திற்கு…”
 இந்த தமிழினம் தனது வரலாற்றுப் பாதையில்  கோட்டைக்கு செல்ல முயலுகிற, பெரும் படையாக திரண்டு அதிகாரத்தை கைப்பற்றும் தன்னெழுச்சி முயற்சியை கைவிட்டு விட்டு ..கருணாநிதிக்கும், அவரது குடும்பத்திற்கும், அவரது வழித்தோன்றல்களுக்கும் காவடித் தூக்கினால் சுப.வீ நிம்மதியாக உறங்குவார் தான்.,
ஆனால் அதை நாங்கள் அனுமதியோம்.
துரோகமிழைத்து..எங்களை அழித்து முடித்து..எம் தாயக கனவினை பறித்துப் போட்டு..எங்கள் உதிர பொட்டலங்களை பூட்ஸ் காலால் மிதித்து… எம்மக்களை ..குழந்தைகளை,எம் பெண்களை,எம் நிலத்தை,எம் களத்தை  அழித்து  குதறிப் போட்ட கும்பல்களுக்கு வீபிசண வேலை பார்க்கும் சுப.வீக்கள் எந்நாளும் இனி நிம்மதியாய் உறங்க கூடாது.
இராவணனின் பேரன்கள் விட மாட்டோம்.