images (1)

ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன் -மணி செந்தில்
——————————————————————————————

ஜெயகாந்தனுக்கு ஏன் நீங்கள் ஒரு பதிவு எழுதவில்லை..என்று கேட்டே விட்டான் என் தம்பி துருவன் செல்வமணி.

இறந்து விட்டார் என்பதற்காக அவரை ஆஹா-ஓஹோ என புகழ்ந்து பதிவிடும் போக்கு இணையத்தளம் வந்த பிறகு அதிகமாகி விட்டது என நான் கருதுகிறேன்.ஜெயகாந்தன் ஒரு வேளை மீண்டும் பிழைத்தாரென்றால்….”நான் செத்தால் இப்படியெல்லாம் எழுதுவீர்கள் என்றால்…நான் சாகவே மாட்டேன்” என சொல்லி விடுவார் போல…
வெறுப்பின் குணாம்திசியங்களோடு,கறாராய் வாழ்ந்த அம்மனிதனுக்கு திகட்ட திகட்ட இரங்கல் உரைகள்.

நான் ஜெயகாந்தன் தமிழ்ச்சிறுகதை உலகினை ஆட்சி செய்த போது வாசிக்க தொடங்கவில்லை. என் அம்மா பைண்டிங் செய்யப்பட்ட ஜெயகாந்தன் நாவல்களை அடிக்கடி வாசித்துக் கொண்டிருப்பதை கண்ட போதுதான் அக்காலத்திய பெண்களின் புரட்சிக்காரனாய் அவர் திகழ்ந்திருந்ததை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது..அவரது அக்கினி பிரவேசம் சிறுகதையை என் அம்மா சிலாகித்து பேசும் போது எனக்கென்னவோ அதில் கொண்டாட ஏதுமில்லை என்றுதான் தோணிற்று. அதன் பின்னால் அவரை நான் வாசித்த போது புதுமைப்பித்தன்,திஜா,எம்.வி.வி,கரிச்சான்குஞ்சு,தஞ்சை ப்ரகாஷ் போன்ற என் அபிமான அக்காலத்து எழுத்தாளர்கள் அளவிற்கு ஜெயகாந்தன் என்னை ஈர்க்கவில்லை. மேலும் தமிழ்மொழி குறித்தும், காஞ்சி மடம் குறித்தும்,பெரியார் குறித்தும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள்,செயல்பாடுகள் ஆகியவை எனக்கு எதிரானவையாக இருந்தன, ஜெயகாந்தன் எழுத்துக்களில் புலப்படும் அதிகப்படியான உரையாடல்கள் அக்காலத்திற்கு உகந்தவையாக,புதுமையாக இருந்தாலும்..எனக்கு சற்று மிகையாக தான் தெரிந்தன..ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் அவரைப்போலவே நெகிழ்வற்ற பாத்திரங்களாக விளங்கின. மரபுகள் மீதான கலகமாய் ஜெயகாந்தனை நாம் கொண்டாட முடியாது.. ஏனெனில் அவருடைய வெளிப்படையான பார்ப்பன,இந்துத்துவ ஆதரவு அதற்கு எதிராக இருக்கிறது. சினிமா உலகிற்கு ரஜினிகாந்த் போல இலக்கிய உலகிற்கு ஜெயகாந்தன் திகழ்ந்திருக்கிறார் போல…என்ன செய்வது..எனக்கு நடிப்பில் கார்த்திக் (முத்துராமன்) தான் பிடிக்கும்.

ஜெயகாந்தனின் திரைப்படங்களில் நான் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ,சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற படங்களும் மெலோ டிராமா வகையை சார்ந்தவையே… அப்படங்களில் நடித்த நடிகை லெட்சுமி படங்களை விட என்னை ஈர்த்தார்.

இப்போது நானும் இணையத்தளங்களில் கொட்டிக்கிடக்கும் ஜெயகாந்தன் பற்றிய வாழ்க்கை விவரணைக் குறிப்புகளில் இருந்தும், அவரது பல கட்டுரைகளில் இருந்தும் ஜெயகாந்தன் பற்றிய ஒரு புகழ் கட்டுரையை தேற்றி விடலாம் தான். ஆனால் அது ஜெயகாந்தன் உருவாக்க முனைந்த பிம்பத்திற்கு எதிரானது…இந்து நாளிதழில் நேற்றைய சமஸ் கட்டுரை கூட எனக்கு மிகவும் அந்நியமாக,சடங்காக தெரிந்தது அவ்வாறுதான்.. ஒரு வேளை.. ஜெயகாந்தனைப் பற்றி ஆவணப்படம் எடுத்த..அவருடன் நெருங்கிப் பழகிய ரவி சுப்ரமணியன் சமரசமற்ற ஒரு பதிவு எழுதினால் ஏறக்குறைய ஜெயகாந்தன் என்கிற மனிதனுக்கு நேர்மையாக இருக்கும்.

உன்னை பிடிக்காது என்பதை ஜெயகாந்தனிடம் நேரடியாக சொல்வதே..வெளிப்படையாக வாழ்ந்த அந்த எழுத்தாளனுக்கு நான் செலுத்துகிற உண்மையான அஞ்சலி..

அதைத்தான் அவரும் விரும்புவார்.

மற்ற படி ஜெயகாந்தனை நான் வெறுக்கிறேன். நான் வெறுக்க ,நிராகரிக்க ஜெயகாந்தன் இருந்தார் .இப்போது இல்லை. அந்த காரணங்களுக்காக வருந்துகிறேன்.