CSC_0074

 ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது சொற்களால் விவரிக்கத்தக்க கனவு மயக்கம் அல்ல.  மாறாக காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, பிளவுப்படுத்தப்பட்டு, வீழ்த்தப்பட்டு கிடக்கிற பூர்வ குடியொன்றின் புத்தெழுச்சி.  வரலாற்றின் புகழ் வீதிகளில் வலம் வந்த தமிழர் என்கிற தேசிய இனம் அடிமை சிறுமை தேசிய இனமாக குறுகிப் போன துயரக் கதைகளில் தான் அடங்கியிருக்கிறது நம் எழுதலுக்கான வெளிச்சப்புள்ளி .

வெற்றிகள் தரும் பெருமிதக் கொண்டாட்டங்களில் இடித்துக் கொள்ளும் மதுக்கோப்பைகளின் ததும்பலாகவே இதுவரை தமிழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது . கங்கையை வென்றவன், கடாரம் கொண்டவன் எப்படி கடைக்கோடிக்கு கடத்தப்பட்டான் என்ற உண்மை மட்டும் ஊரார் அறியார் வண்ணம் ஊழி இருட்டிற்குள் உறைந்துக் கிடக்கிறது.

பஃருளியாற்றில் படகோட்டி,பன்மலை அடுக்கங்களில் திரிந்து,குமரிக் கண்டத்தில் இரு சங்கம் கண்டோம் என பழம் பெருமைகளில் இறுமி இறுமியே தான் அடிமைஇருட்டில் அமிழ்ந்துக் கிடக்கிறோம் என்ற அறிதலை தொலைத்து விட்டான் தமிழன். வடக்கே இருந்து வந்த ஆரியம் தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்திய வழிபாட்டு,பண்பாட்டு தாக்கங்களில் சிக்குண்ட தமிழன் தனது பண்பாட்டு,வழிபாட்டு விழுமியங்களை இழந்தான்.

வெள்ளையன் என்ற சுரண்ட வந்த கொள்ளையன் தனது துப்பாக்கி முனையில் இந்தியா என்கிற இல்லாத தேசத்தை உருவாக்கினான் . தனது பிழைப்பிற்காக பார்ப்பனன் தனது பூனூலால் இந்த கனவு தேசத்தை இறுக்கிக் கட்டினான். உருவானது இந்தியா.பலர் உழைக்கவும்,சிலர் பிழைக்கவும் என்கிற மானுட விரோத நாடாய் மலர்ந்து இருக்கிறது.

இதில் தமிழனின் நிலைமை இன்னும் கேவலம். வந்தவர்களை எல்லாம் வாழ வைத்து, ஆள வைத்து,தனது நிலம், ஆட்சியதிகாரம், வளங்கள்,கலை,பண்பாடு,வாழ்வியல் என அனைத்தையும் வந்தவன் காலடியில் வழங்கி விட்டு சொந்த மண்ணிலேயே அகதியாய் திரிகிறான்.

சாதி தன்னை பிளவுப்படுத்த வந்த அநீதி என்பதை உணராமல் சாதியாய் பிரிந்து கிடக்கின்றான் தமிழன். மதம் தன்னை அழிக்க வந்த வதம் என்பதை உணராமல்…இனமாய் இல்லாமல் பிணமாய் போனான் தமிழன். பிழைக்க வந்த பார்ப்பானிடம் தனது பண்பாட்டு,வழிபாட்டு விழுமியங்களை இழந்தான். காலங்காலமாய் தன்னை செழிக்க வைத்த காவிரித்தாயை கன்னடனிடம் இழந்தான்.முல்லை பெரியாற்றை மலையாளியிடம் துறந்தான். பாலாற்றினை தெலுங்கனிடம் இழந்தான். ஒட்டு மொத்த தமிழ்நாட்டினை மேற்கண்ட அனைவரிடமும் இழந்தான். வந்தவரை எல்லாம் வாழ வைத்து விட்டு ,ஆள வைத்து விட்டு இலவசங்களுக்காக மடியேந்தி நியாயவிலைக்கடைகளுக்கு முன் நின்று கொண்டிருக்கிறான். ஏற்கனவே சுரண்டப்பட்ட தமிழனுக்கு இனி எப்போதும் உணர்வெழுச்சியோ,அறிவோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே குடியேறிய திராவிடம் தெருவிற்கு தெரு மது பானக்கடைகளை திறந்து வைத்து..தமிழனை மல்லாக்க சாய்த்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டியை திணித்து தமிழச்சிகளை மானாட ,மயிலாட காண வைத்து..நாடகங்களே வாழ்க்கை என வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தான் நிகழ்ந்தது ஈழத்தின் பேரழிவு. தமிழரின் மற்றொரு தாய்நிலத்தில் மண் விடுதலைக்காக களங்கண்ட மாவீரர்களின் தியாகம் இங்கே இன மானம் உடைய இளைஞர்களை எழுப்பியது. மண் என்பது சாதாரண விஷயம் அல்ல. தாய் மண்ணின் மீது கொண்ட பற்றே பூர்வக்குடிகளின் இருப்பினை தக்கவைக்கிறது. இந்த காடு,மலை, ஏரி,அலை கடல்,பசும் வயல் என செழித்திருக்கும் தாய்நிலத்தை அன்னியனிடம் இழக்க முடியாமல் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதம் ஏந்தினர் புலிகள் .

தனது சொந்த சகோதரன் அங்கே இன விடுதலைக்காக இன்னுயிரை தந்துக் கொண்டிருக்கும் காலத்தில் தான் இங்கே இவனுக்கு இந்தியன் என்கிற பெருமிதமும்,திராவிடன் என்கிற அரசியல் கற்பிதமும்… முகமூடி அணிந்த சாத்தானாய் இந்தியமும்,திராவிடமும் நாடகங்கள் நடத்த…நாடகக் காட்சிகளில் கண்களை விற்ற தாயகத்தமிழன் குருடனாகிப் போனான். ஈழப்பெருநிலத்து மண்ணில்..தன் தங்கையின் அரை நிர்வாண உடலைக்காட்டி, அவள் மார்புக்காம்பின் மேல் தனது கால் கட்டை விரலை அழுத்தி…அவள் பிறப்புறுப்பில் துப்பாக்கியை நுழைத்து ..வல்லாதிக்க சிரிப்பினை தமிழ்த்தேசிய இனம் மீது காறி உழிந்தான் சிங்களன்.

தன் வீட்டுப் பெண்டீர் சாலைகளில் கிடத்தப்பட்டு வல்லுறவு செய்த காட்சியை கண்ட தமிழின இளையோர் இமைகளில் ஈரம் படர்ந்தது. விழியோரம் சிவப்பு சேர்ந்தது. மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட ஈகிகள் தன்னுயிரையே தந்து..ஈழமும்-தமிழகமும் வெவ்வேறல்ல.. அவை தமிழரின் தாயக நிலங்கள் என அறிவித்த போதுதான் உலகம் அதிர்ந்தது . ஆனால் அதிர்ந்த உலகமும், வெளிப்படையாகவே சிங்களனுக்கு உதவிய இந்தியமும், திருட்டுத்தனமாக காட்டிக் கொடுத்த திராவிடமும் தமிழனை ஒன்றுக்கும் ஆகாதவென கருதி அமைதி காத்தன. எம் தாய்நிலம் அழிந்தது. மானம் காத்த மறவோர் மண்ணோடு மண்ணாய் மடிந்தனர்.

அப்போதுதான் வீதிக்கு வீதி …கைப்பிசைந்து..கண் கலங்கி ..இனி என்ன செய்வது என தெரியாமல்…தாய்நிலம் இழந்த தவிப்பில்..சொந்த தமையன் அழிந்த தகிப்பில் இருந்த தமிழின இளைஞர்கள் இனி..இருப்பதை காக்க செருக்களம் காண்பதை தவிர வேறு வழியில்லை என உணர்ந்தோம். எந்த அரசியல் ஆயுதங்களால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டமோ..அந்த அரசியல் ஆயுதத்தையே எமது கரங்களில் சுமந்தோம்.

நாங்கள் எளியவர்கள். மாட மாளிகையில் குடியிருக்கும் செல்வந்தர் வீட்டு செல்வங்கள் அல்ல. கூட கோபுரங்களில் குடியிருக்கும் கொற்றவனின் மைந்தர்கள் அல்ல.  தெருப்புழுதியையே ஆடையாக அணிந்த நிராதரவானவர்கள். கருஞ்சட்டை அணிந்து வியர்வை வழிய வழிய..தொண்டைக்குரல் கிழிய..கிழிய முழக்கம் இடுவதை வழக்கமானவர்கள். இனம் அழிந்த வலியில்..மனம் முழுக்க ஆழ் குற்ற உணர்வு கொண்டு ..கண்ணீரை கோபமாக தேக்கி,,,அதையே தங்களது அரசியல் மூலதனமாக கொண்டவர்கள்.

நிகழ்காலம் என்பதை கொன்றாலொழிய வருங்காலம் என்ற ஒன்று கிடையாது என்பதனால் தான் …எங்களையே அழிக்கிற இந்த அரசியல் பெரும்பாதையில்..உற்றார்,உறவினர்,நாள்,நேரம், பொருளாதாரம் என அனைத்தையும் இழந்து இல்லாத எதிர்காலத்தை இனியாவது சமைக்க அணியமாகி நிற்பவர்கள்

இப்படி வாழ்வு,தொழில்,நிகழ்காலம் என அனைத்தையும் இழந்து ஓட என்ன தான் காரணம் என்றால்…

எங்களுக்கு தெரிந்த ஒருவன் இவ்வாறாக இருக்கிறான். 20 வருடங்களுக்கு முன்பாக அந்த இளைஞன் ஓராயிரம் கனவுகளோடு ..மிளகாய் மூட்டை விற்று ..தன்னை சென்னைக்கு அனுப்புகிற தன் தந்தையை ஏக்கமாக பார்த்தாவாறே பேருந்து ஏறினான்.

திரை வழியே கரை சேரலாம் என கருதியவன் கரங்களில் மார்க்ஸீம்,சே குவேராவும்,பெரியாரும், அம்பேத்காரும் அகப்பட்டார்கள். புரட்சி என்பது மாலை நேரத்து கேளிக்கை விருந்தல்ல என்கிற மாவோவின் வரிகளில் வசமிழந்த அவனால் பிறகு மீளவே முடியவில்லை. பிழைக்க வந்த இடத்தில்.. வசப்பட்ட வாசிப்பும் ,அகப்பட்ட அனுபவமும்,புலப்பட்ட புரிதலும் அந்த கிராமத்து இளைஞனை தவிப்புக்குள்ளாக்கின்றன… வெள்ளந்தியாய்..விளைந்ததை தின்று,கண்டதை கண்டு கதையாய் விவரிக்கும் திறமையை கொண்டிருந்த அந்த இளைஞன் இதுகாறும் தான் வாழ்ந்த வாழ்க்கையை,வாழ இருக்கிற எதிர்கால தமிழினத்திற்காக தந்து விடுவது என முடிவெடுத்தான்.  தனக்காக வந்தவன்..தான் பிறந்த இனத்திற்காக யோசித்தான். தனக்கு முன்னால் பிறந்த இன்னொருவன்…தன்னையே இழந்து தாய்நிலத்திற்காக போராடிக் கொண்டிருந்ததை பார்த்தான். தமிழனுக்கென தரணியில் ஒரு நாடு வேண்டும் என்கிற அவசியத்தில் ,அவசரத்தில்..உயிரை உதடுக்கு முன்னால் தொங்க போட்டு நாடு அடைய காட்டில் கிடந்தவனை தன் அண்ணனென உணர்ந்தான். அவனையும் சந்தித்தான். பிறகு திரிந்தான். கொடிகள் வேறுப்பட்டாலும் தமிழ்குடி வீழக்கூடாது என பல அமைப்பு மேடைகளில் ஏறி கத்தினான் ..இன அழிவை இரத்தமும், சதையுமாய் விவரித்து கதறினான். வனம் அழிந்த சினத்தில் கிடந்த புலியாய் உறுமினான். இரண்டகம் செய்த இந்தியத்தை நட்டநடு வீதிகளுக்கு இழுத்து வந்து அறுத்துப்போட்டான். திருட்டு திராவிடத்தின் தோலுரித்து …இருப்பது நம்மை காப்பாற்ற வந்த தேவன் அல்ல..அழிக்கும் சாத்தான் என சத்தமாக அறிவித்தான். இது போதாதா எதிரிகளுக்கு… சிறை படுத்தினர். சிறையை தான் துலங்கும் அறிவு பட்டறையாக மாற்றினான். எதிர் கொண்டவர்கள் இல்லாமல் போனார்கள்.

எம்மினத்தை அழித்த காங்கிரசை நான் அழிப்பேன் என நெஞ்சுயர்த்தினான்.நடப்பது தேர்தல் அல்ல..சோனியாவின் மகனுக்கும்,பிரபாகரனின் தம்பிக்கும் நடக்கிற யுத்தம் என்று அறிவித்து களம் கண்டான். காங்கிரசு கல்லறைக்கு போனது..

இப்படியாக வளர்ந்தான். முட்பாதைகளில் பயணித்தான்..அனேகர் சொற்களில் வதைப்பட்டான்.

எந்த வானுலக தேவர்களுக்கும் காத்திராமல் தனது சொந்த விடுதலையைத் தானே தீர்மானிப்பதற்காக.. தானே ஒரு கட்சியை கட்டி., கட்டமைத்துக்கொண்டு இதோ அவன் விடுதலையை பிரகடனம் செய்ய வருகிறான் . அவனது சொற்களிலே எதையும் முடிக்கும் நம்பிக்கை நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறது. அவனது விழிகளிலே இலட்சியங்களும், கனவுகளும் மின்னித்துடிக்கின்றன. வரலாற்றின் நீண்ட வீதிகளில்..இதுநாள் வரை அவனுக்காகவே காத்திருந்தவர்கள் போல.. நெருப்பு சுமக்கும் அவன் தமிழுரை கேட்டு.. தமிழரின் ஆன்மா சிலிர்த்தன.

யாருக்கும் அவன் காத்திருப்பதில்லை. தன்னை சுற்றி தொங்க விட்டிருக்கும் தன் அண்ணன் படம் பார்க்கிறான். ஒரு நிமிடம் கண்களை மூடுகிறான். கலங்கிய விழிகளோடு சினமேறி ரணத்தோடு பிடித்து இழுக்கிறான்..இருட்சிறைக்குள் வீழ்த்து கிடக்கிற இனத்தின் விடுதலையை…

அவமானச்சொற்களை காற்றில் கரையும் கற்பூரங்களாய் கருதி…அவதூறுகளை வெகுமானங்களாக கருதி புன்னகைத்து கொண்டே புறப்பட்டு விடுகிறான்.

இனி அவன் காலம்..

காலமும் அவன் தான்..

எப்போதும் இனி பிறக்கிற வைகறை சொல்லும்..

நாம் தமிழர் வெல்லும்.