thijanakiraman
புத்தக வாசிப்பு போல உலகில் இன்பமானது ஏதுமில்லை. அதுவும் தேர்ந்த எழுத்தாளன் கரத்தில் ரசனை மிக்க வாசகன் சிக்கிக் கொள்ளுதல் போன்றதோர் மகிழ்ச்சிக்கரமான தருணம் ஏதுமில்லை. என்னையெல்ல்லாம் அடித்து துவைத்து காயப்போட்ட பல புத்தகங்கள் உண்டு. வாசித்தல் என்பது ஒரு வசீகரமான மாயச்சுழி. அச்சுழியில் சிக்கிக் கொண்டு மீளவே முடியாத பல அடிமை வாசகர்களில் அடியேனும் ஒருவன்.
 
தமிழ் இலக்கிய உலகில் தி.ஜா என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் படித்து விட்டு அக்கதையில் வரும் யமுனாவை தேடி கும்பகோணம் வீதிகளில் நான் அலைந்திருக்கிறேன். அக்கதையில் தி.ஜா தன் எழுத்துக்கள் வாயிலாகவே யமுனாவை கண்,காது,மூக்கு, நிறம், மொழி என ஸ்தூலமாக உருவாக்கி விடுவார். இக்கதை திரைப்படமாக வந்த போது அதில் யமுனாவாக வந்த பெண்ணைப் பார்த்து சற்று ஏமாந்துப் போனேன் நான்.
Moohamul
 
பதின் வயதுகளில் காதலிக்கிறமோ இல்லையோ மோகமுள் வாசித்து இருக்க வேண்டும் என நம்புகிறவன் நான். தி.ஜாவின் எழுத்துக்கள் மிகவும் வசீகரம் ஆனவை. அவரது கதாநாயகிகளை அவர் நம் முன்னால் உருவாக்கி உலவ விடுவது இருக்கிறதே.. அது ஜகஜால வித்தை. அம்மா வந்தாள் நாவலில் வரும் அலங்காரம் அம்மாளையும், இந்துவையும் உருவப்படியாகவே நான் அறிந்திருக்கிறேன். அம்மா வந்தாள் நாவலைப் படித்த தனிமை இரவில் … எனது முதுகிற்கு பின்னால் இந்துவின் விசும்பல் கேட்டுக் கொண்டே இருந்தது போன்ற உணர்வு. அதே போல மோகமுள்ளில் வரும் யமுனாவின் கம்பீரத்தை நான் பார்க்கிற எல்லா முதிர்ப் பெண்களிடமும் தேடி இருக்கிறேன். நீதானா அந்த யமுனா..???
 
அதே போல எங்கள் ஊரைச் சேர்ந்த தஞ்சை ப்ரகாஷ்,எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு,கு.பா.ரா, இவர்கள் அனைவருமே வாழ்வை வாழ்வாங்கு ரசித்தவர்கள். கும்பகோணம் டிகிரி காப்பியை துளித்துளியாக ரசித்து அருந்தி..காவிரியின் காற்றை நெஞ்சம் முழுக்க சுவாசித்து, குடந்தைக்கே உரிய இதமான பருவச் சூழலில் வாழ்ந்து.. அணு அணுவாக எம் மண்ணையும், மக்களையும் ஆவணப்படுத்தியவர்கள் அவர்கள்.. தஞ்சை மண்ணை, குடந்தைத் தெருக்களை போற்றியவர்கள். தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்கியவர்கள். ஒருமுறை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனோடு கும்பகோணம் வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்த போது.. நீங்கள் மோகமுள்ளில் வரும் தங்கம்மா வசித்து வந்த வீட்டை பார்த்திருக்கிறீர்களா..? என கேட்டார். விளையாட்டிற்காக தான் கேட்கிறார் என எண்ணி என்ன..சார் …கேட்கிறீங்க…? ..என்றேன். உண்மையாகதான் செந்தில் தங்கம்மா வீட்டை பார்த்திருக்கிறீர்களா.. நான் அழைத்து போகிறேன் என்றார்.
IMG_0850
உண்மையில் அது ஒரு விசித்திர தருணம். எங்கள் உரையாடலை யாராவது கேட்டால் மனம் பிழன்ற இரு நோயாளிகள் பேசிக் கொள்கிறார்கள் என நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு. இருக்காதே பின்னே..,ஒரு புனைவில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் வீட்டை காண்பிக்கிறேன் என்கிறாரே.. அப்படியென்றால் மோகமுள் உண்மைக் கதையா என்ற குழப்பம் எனக்கு. இதையெல்லாம் பொருட்படுத்தாத எஸ்.ராவோ.. வாங்க தங்கம்மா வீட்டை பார்க்க போகலாம் என்று கிளம்பி விட்டார். எனக்கென்ன பயம் என்றால்… யாராவது முதியவரை காட்டி இவர்தான் மோகமுள் பாபு என்று எஸ்.ரா அறிமுகம் செய்து விடுவாரோ என்றுதான்.
 
அது ஒரு மாலைநேரம். காவிரி அந்நேரத்தில் உண்மையாகவே நிரம்பி தளும்பி ஓடிக் கொண்டிருந்தது. எங்களது வாகனம் கும்பகோணம் பாலக்கரையில் இருந்து நீதிமன்றம் செல்லும் காவிரிக்கரையோர சாலையில் அமைதியாக சென்றுக் கொண்டு இருந்தது. நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வேறு ஏதாவது சொல்லி விடுவாரோ என்று அச்சம் எனக்கு, சற்று தூரத்தில் வண்டியை நிறுத்தச் சொன்ன எஸ்.ரா அமைதியாக நடக்கத் தொடங்கினார். காவிரிக்கரை படிக்கட்டுகளில் சற்று இறங்கி நிரம்பி ஓடும் காவிரி நதியின் எழிலை அமைதியாக கவனித்துக் கொண்டே நின்றார். பின்னர் வாங்க போகலாம் என்றவாறே நடக்கத் தொடங்கினார். சற்றுத் தூரத்தில் உள்ள சற்று பழுதடைந்த வீட்டைக் காட்டி இங்கே தான் தங்கம்மா இருந்திருக்க வேண்டும். இந்த மாடியில் தான் பாபு தங்கியிருக்க வேண்டும் என்றார். நான் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தேன்.
 
மோகமுள் கும்பகோணம் தெருக்களைப் பற்றிய அழகிய சித்திரத்தை உருவாக்கியுள்ள நாவல் என்று எனக்குத் ஏற்கனவே தெரியும். எஸ்.ரா சொன்ன அத்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள நாவலை மீண்டும் வாசித்தேன். கிட்டத்தட்ட 600 பக்கங்களுக்கு மேலான நாவல் அது. குறிப்பிட்ட தங்கம்மா,பாபு வருகிற அப்பக்கங்களை ஆழமாக படித்த போது. தி.ஜா விவரித்த விவரணைகளும், தெரு குறிப்புகளும், எஸ்.ரா அடையாளம் காட்டிய வீட்டிற்கு மிகச்சரியாக பொருந்தியது. நான் அதிர்ச்சியில் வியர்த்து விட்டேன்/.
 
பின்னர் எஸ்.ரா விடம் பேசிக் கொண்டிருந்த போது..சார் நீங்க சொன்னது சரிதான் சார்… அதுதான் தங்கம்மா வீடு என்றேன். அவர் மெலிதாக சிரித்துக் கொண்டார். அதிலிருந்து நான் அந்த வீட்டை கடந்து நீதிமன்றம் செல்லும் போதெல்லாம் என் முதுகுதண்டு சிலிர்க்கும். தங்கம்மா நின்று என்னை பார்த்துக்கொண்டிருப்பது போல தோற்றம். பாபு மாடியில் இருந்து பாடுவது போன்ற மெல்லிய மயக்கம்.
 
உண்மையில் ஒரு எழுத்தாளன் அவ்வளவு வலிமையானவனா..புனைவிற்கும், நிஜத்திற்கும் நடுவே இருக்கும் கோட்டை அழிப்பவனா என்றெல்லாம் எஸ்.ராவிடம் கேட்க வேண்டும் போல தோன்றியது.
 
அவரிடம் நான் கேட்க நினைத்து…கேட்டால் அதையும் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் நான் மறைத்த கேள்வி ஒன்று இருக்கிறது.
 
சார்..யமுனா வீடு எங்கிருக்கிறது..?
 
-மணி செந்தில்