lemuriaவரலாறு என்பது கால வீதிகளில் தடம் பதித்து,புகழ் மணக்க வாழ்ந்த பெரு மன்னர்களின்,புகழ் மனிதர்களின் வாழ்க்கை கதையாகவே பதியப்பட்டிருக்கிறது.  அப்படியென்றால்..காலங்காலமாக சாதாரணமாக வாழ்ந்த எளிய மக்களைப்பற்றி, அவர்களின் வாழ்வியலைப்பற்றி தெரிந்துக் கொள்ள,ஆய்வு செய்ய எழுதப்பட்டுள்ள வரலாறு அனுமதிக்கிறதா என்றால் கசப்பான உண்மை இல்லை என்பதே..

மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என புதிய வரலாற்றுத்துறை நிபுணர்கள் விருப்புகிறார்கள்.மனித சமூகங்களின் வரலாறு நேர்மையாக எழுதப்பட்டிருந்தால், நிகழ்காலத்தில் நடக்கிற எத்தனையோ பிரச்சனைகளுக்கான,முரண்களுக்கான தொடக்கப்புள்ளியை நாம் கண்டறிந்திருக்க முடியும் . மனித சமூகம் தொடக்கத்திலிருந்தே தனது அடையாளங்களை,தனது நிலப்பரப்பை, தனது பண்பாட்டை காத்துக்கொள்ள தனது உயிரையும், உதிரத்தையும் சிந்திப்போராடி வந்திருக்கிறது.  எப்போதும் தனது நிலையை விட ஒரு உன்னதமான நிலையை நோக்கியே மானுடச்சமூகம் நகர்வதை, நகரத்துடிப்பதைதான் நாம் வரலாற்றின் ஏடுகளில் தொடர்ச்சியாக வாசித்து வருகிறோம்.

தனக்குரிய அடையாளங்களான மொழி,நிலம்,பண்பாடு போன்ற விழுமியங்களை காத்துக்கொள்ள,அவற்றையே தனது முகவரியாக,முகமாக கொள்ள மானுடச் சமூகம் தயாரானப் புள்ளிகளில் இருந்துதான் தேசிய இனங்கள் தோன்றுகின்றன. கடந்த 15 ஆம் நூற்றாண்டு தான் தேசிய இனங்களுக்கான தொடக்கத்தை நிகழ்த்திய காலக்கட்டமாக நாம் கருதலாம். அக்காலக்கட்டத்தில் தான் ஐரோப்பா கண்டத்தில் பல தேசிய இனங்களை சார்ந்த அரசுகள் உருவாகத்தொடங்கின.  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை முழக்கங்களாக கொண்டு  18 ஆம் நூற்றாண்டில் உருவான பிரெஞ்சு புரட்சியும், 19 ஆம் நூற்றாண்டில் உருவான பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சியும்,உலகம் தழுவிய தேசிய இனங்களுக்கான விழிப்பினை தந்தன. ஒரே ஒரு தேசிய இனம் மட்டும் வாழ்கிற நாடுகளும், பல்வேறு தேசிய இனங்கள் வாழக்கூடிய நாடுகளும் தோன்ற தொடங்கிய பிறகு, உலகில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களும் தங்களது நிலம்,மொழி,பண்பாடு போன்ற அடிப்படை விழுமியங்களை காக்க போராடத்தொடங்கின.

இந்தியா போன்ற பல்வகை தேசிய இனங்கள் வாழக்கூடிய நாடுகளில் அந்தந்த தேசிய இனங்கள் தங்களது அடிப்படைத்தன்மைகளை இழந்து விடாமல் ,கடுமையான போராட்டங்களை சந்திக்கின்றன. மண்ணின் ஆதிக்குடிகளான தேசிய இன மக்கள் தங்கள் உரிமைகளுக்காக,விடுதலைக்காக குரல் கொடுப்பதும், போராடுவதும் அவற்றை இத்தேசிய இனங்களை அடிமைப்படுத்தி ஆண்டு வருகிற ஆளும் வர்க்கம் தனது அதிகாரத்தின் முனை கொண்டு நசுக்குவதும் இந்நாடுகளில் இயல்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நாம் தேசிய இனம் அல்லது தேசம் என்ற சொல்லுக்கும், நாடு என்கிற சொல்லுக்கான வேறுபாட்டை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

தேசம் அல்லது தேசிய இனம் என்பதற்கு ஆங்கிலத்தில் Nation என்ற சொல் இருக்கிறது. இதன் மூலச்சொல் Natio என்கிற இலத்தீன் மொழி சொல்லாகும்.  Natio என்றால் பிறந்த இடம்,பிறந்தது எனப் பொருள். இச்சொல்லும் கூட Natus என்கிற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.  Natus என்கிற சொல் கூட நாடு என்கிற தமிழ்ச்சொல்லில் இருந்து பிறந்ததாக  சிந்தனைச்செம்மல் கு.ச. ஆனந்தன் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒரு தேசம் அல்லது தேசிய இனம் நான்கு அடிப்படைத்தன்மைகளை பெற்றிருக்க வேண்டும் என தோழர்.ஜே.வி.ஸ்டாலின் குறிப்பிடுகிறார்கள். அதன் பொருள் இந்த நான்கு தன்மைகளை பெற்றிருந்தால் தான் ஒரு இனம் தேசிய இனமாக வரையறுக்க முடியாது. அவையாவன. 1. பொது மொழி 2. தொடர்ச்சியான ,வரலாறு மூலமாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி 3. சற்றே ஏறக்குறைய ஒரு பொதுவான பொருளாதார வாழ்க்கை, 4. பண்பாட்டு விழுமியங்களில் வெளிபடுகிற ஒரே இனம் என்பதற்கான மனநிலை. இந்த 4 அடிப்படை தன்மைகளையும் கொண்டு வரலாற்றில் கால ஓட்டத்தில் உருவான மக்கள் கூட்டமே அல்லது மக்கள் சமூகமே ஒரு தேசிய இனம் அல்லது தேசமாகும்.

வரலாற்றின் கால ஒட்டத்தில் உருவான மக்கள் கூட்டம் என்றால்  பல்வேறு காலக்கட்டங்களில் ஒன்று சேர்ந்த சேர்ந்த பல இன மக்கள் ஒரு தேசிய இனமாக மாறி விடுதல் என்பது பொருள். உலகத்தில் இருக்கின்ற தமிழ்த்தேசிய இனம் உள்ளீட்டு எந்த ஒரு தேசிய இனமும் காலங்காலமாக இருந்து வரும் தூய, பிற இனங்கள் கலக்காத, மரபினம் அல்ல. படையெடுப்பு,இடம் பெயர்வு போன்ற காரணங்களால் வரலாற்றின் போக்கில் வந்து சேர்ந்த பல இன மக்கள்  ஆனால் தன்னை ஓரினமாக உணர்கிற மைய உளவியல் தான் ஒரு தேசிய இன உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கருத்தினை 20 ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாறு என்ற கட்டுரையில் பேரா.முனைவர்.த.செயராமனும் உறுதி செய்கிறார். இவ்வாறாக சேர்கிற பல இன மக்களில் குறிப்பிட்ட இனமக்கள் மட்டும் தங்களது தனித்த அடையாளங்களை,மொழியை,பண்பாட்டு கூறுகளை,நலன்களை  காப்பாற்றிக்கொண்டு தொடர்ந்து வாழ்வாராயின் அவர்கள் தேசிய இன வரையறைக்குள் அடங்க மாட்டார்கள் என்பதையும் நாம் நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இந்தியா திகழ்கிறது. இந்தியா /இந்தியர் ஒரு தேசம்/ தேசிய இனம் அல்ல. பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிற ஒரு நாடே இந்தியா.இந்தியா ஒரு தேசம் என்பதும், இந்தியர் ஒரு தேசிய இனம் என்பதும் அடிப்படையில்லாத, வரலாற்று அரசியல் புரிதலற்ற வார்த்தைகளாகும்.

ஒரு நாடு என்பது வரம்பற்ற அதிகாரத்தோடு (இறைமை ) ஒரு மக்கள் கூட்டம் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்வதை குறிக்கும்.  ஒரு நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள் /தேசங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக இந்தியாவில் 14 க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு பகர்கிறது.  ஒரு தேசம் ஒரு நாடாக இருக்கலாம்.ஆனால் ஒரு நாடு தேசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.எடுத்துக்காட்டாக பங்களாதேஷ் என்பது வங்களம் மொழி பேசக் கூடிய ஒரு தேசிய இன மக்கள் வாழக்கூடிய ஒரு தேசம். இது நாடாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியா என்கிற நாடு ஒரு தேசமல்ல. ஏனெனில் இந்தியர் என்கிறவர்கள் ஒரே மொழி பேசக்கூடிய மக்கள் கூட்டம் இல்லை. இந்தியர் என்பது தேசிய இனம் இல்லை. பல தேசிய இன மக்கள் வாழக்கூடிய நாடு இந்தியா.

ஆனால் தொடர்ச்சியாக இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்கி விட ஆதிக்க வாதிகளும், இந்தியா ஒரே நாடாக இருப்பதால் பலனடையும் மாபெரும் முதலாளிகளும் முயன்று வருகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தியா முழுக்க ஒரே மொழி- சமஸ்கிருதம்,இந்தி ,இந்தியா முழுக்க ஒரே மதம் –இந்து மதம்  போன்றவற்றை நடைமுறைப்படுத்த அரசுகள் தொடர்ச்சியாக முயன்றுவருகிற முயற்சிகள். இந்துக்கள் தவிர வேறு யாருக்கும் ஓட்டுரிமை இல்லை என பாஜக எம்பி பேசுவதும் இத்தகைய தன்மை கொண்டதுதான். இவற்றிக்கிடையே தான் தனித்தே பல சிறப்புகளை கொண்ட தமிழ்த்தேசிய இனம் தனது அடையாளங்களை தக்க வைக்க இம்முயற்சிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருகிறது.

தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனமாக விளங்குகிறார்கள். அவர்களுக்கு என்று உயரிய புகழ்வாய்ந்த, வரலாற்று நீட்சிக் கொண்ட தமிழ் மொழி என்கிற தாய் மொழி இருக்கிறது.

வரலாற்றிலேயே  புகழ்பாடும்”வடவேங்கடம்-தென் குமரி” என அவ்வப்போது மாறினாலும் நிரந்தர,பொதுவான நிலப்பரப்பு இருக்கிறது.  ஏறக்குறைய ஒரு பொதுவான பொருளாதார வாழ்வை தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள். தாய்த் தொழிலாக விவசாயம் விளங்குகிறது. தமிழருக்கென தனித்தே இருக்கிற பொதுவான பண்பாட்டு அடையாளங்களில் தாம் ஒரினம் எனபது வெளிப்படுகிறது. சாதீய முரண்கள் இருந்தாலும் தமிழரின் தேசியத் திருவிழாவாக பொங்கல் திருநாள் விளங்குகிறது. ஜல்லிக்கட்டு,கபடி,பறை இசை இன்னும் பல்வேறு நுட்பமான அடையாளங்களில் தமிழ்தேசிய இனம் ஓரினம் என்பதை வெளிப்படுத்தி, வரலாற்றின் போக்கில் ஒரு தேசிய இனமாக உருவாகி இருக்கிறது.

ஆனால் இந்தியா என்கிற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தில் தமிழர் என்கிற தேசிய இன மக்கள் தங்கள் மொழியை காக்க, பண்பாட்டு அடையாளங்களை காக்க பெரும் போராட்டத்தை மேற்க்கொள்ள வேண்டி உள்ளது. அவ்வாறு எழும் தமிழ்த்தேசிய இன உணர்வினை பிளக்க,முறிக்க வெளிச்சதிகளும், உட்முரண்களும் காரணங்களாக அமைகின்றன.