தேசிய இனம் என்ற சொல்லுக்கு சமகாலத்தில் பல விரிவான விளக்கங்கள் கிடைக்கின்றன. ஒரு பொது மொழி, பொதுவான வாழ்க்கை முறை, ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, ஒருபொதுவான பொருளியல் அமைவு, தனிப்பண்பாட்டின் சிறப்பியல்புகள் இவைகளால் அந்த இனத்திற்குள்ளாக ஏற்படுகின்ற பொதுவான உளவியல் உருவாக்கம் ஆகியவற்றைப் பெற்று வரலாற்றின் போக்கில் இணைந்த பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து அமைந்த ஒரு நிலையான சமுதாய மக்களே தேசிய இனமென வரையறுக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஜே.வி. ஸ்டாலின் ஒரு மொழி வழி அமைந்த ஒரு தேசிய இனத்தை (Linguistic Nationality) நான்கு முதனிலை பண்புக் கூறுகளால் வரையறுக்கிறார். அவையாவன. 1. பொதுமொழி 2. தொடர்ச்சியான ஆட்சி எல்லை 3. பொதுவான பொருளாதார வாழ்க்கை அமைவு 4. பொது பண்பாட்டின் வாயிலாக எழும் தாம் ஓரினம் என்கிற உளவியல். தேசிய இன வரையறையில் முதன்மை அம்சமாக மொழியை கருதுவது மார்க்சிய அணுகுமுறை ஆகும்.
மனித இனம் தோன்றிய காலம் தொட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனின் சமூக வாழ்க்கை மொழி வாயிலாகவே நிகழ்ந்து இருக்கிறது. மொழியே மனித இனமொன்றின் முதன்மை அடையாளமாக திகழ்ந்து இருக்கிறது. மொழியற்ற மனித சமூகத்தை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது. மொழியே மனித நாகரீக வளர்ச்சியின் போக்கினை தீர்மானித்தது. எனவே தேசிய இன வரையறையில் மொழியே முதன்மை கூறாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.
ஒரு மக்கட் கூட்டம் தேசிய இனமாக உருவாக்கம் கொள்ளுதலில் அயலார் படையெடுப்பு, இயற்கை சீற்றங்கள் போன்ற புறவெளி காரணிகளும் உதவி செய்கின்றன. எடுத்துக்காட்டாக இந்தியா ஒரு தேசம் அல்ல. பல்வேறு தேசிய இனங்கள், 200க்கும் மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்துகிற மக்கள் கூட்டம் வாழுகிற மிகப்பரந்த கண்டம். இந்த நிலப்பரப்பை வெள்ளையர்கள் தாங்கள் ஆள்வதற்கு உகந்தவாறு ஒரு நாடாக மாற்றினார்கள். இந்திய நிலப்பரப்பு அதற்கு முன்னதாக ஒற்றையாட்சியின் கீழ் இருந்ததில்லை. பல்வேறு மன்னர்கள், குறுநில மன்னர்கள், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் என பிளவுப்பட்டு கிடந்த ஒரு நிலப்பரப்பின் மக்கள் அக்காலத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உண்டாக்கப்பட்ட செயற்கை தேசிய உணர்வின் மூலம் ஒன்று பட்டனர். அந்த செயற்கையான தேசிய உணர்வு வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறிய கணத்திலேயே நீர்த்துப் போய் விட்டது. மேலும் அந்த செயற்கை உணர்வு மேலும் நீட்சி கொள்வதற்கான அவசியமோ, தேவையோ அதற்கு பிறகு இல்லை. செயற்கை மயக்கம் வடிந்தவுடன் அவரவர் மொழி, நிலப்பரப்பு சார்ந்த இயல்பான தேசிய உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தர தொடங்கி விட்டனர். எனவே மொழி வழி சார்ந்த, நிலப்பரப்பினை சார்ந்த தேசிய இன உருவாக்கமே இயற்கையானது.
பட்டாளி வர்க்க இணைப்பால் உலகப்புரட்சியை ஏற்படுத்த கனவு கண்ட மாமேதை மார்க்ஸ் கூட பட்டாளிகளின் இணைப்பு தேசிய இன உணர்வின் அடிப்படையில் எழுவது என்பதே சாத்தியம் என்கிறார்.
தேசிய இன சிக்கல்களை மார்க்சிய அணுகுமுறை மூலம் தான் தீர்க்க வேண்டும் என்பதில் புரட்சியாளர் லெனின் தெளிவாக இருந்தார். அதற்கு அவர் மூன்று விதமான அளவுகோள்களை கொண்டிருந்தார். 1. வேறுபட்ட பல்வேறு தேசிய இனங்களைச்சார்ந்த உழைக்கும் மக்களிடையே புரிதல் அடிப்படையில் அமைகிற ஒற்றுமை அல்லது இணைவு 2. சமமான வாழ்வியல் மற்றும் பொருளியல் , அதிகாரங்களை கொண்டதுமான தேசிய இனங்களின் உழைக்கும் மக்களிடையே தோன்றும் சமத்துவம் 3. தனது இறையாண்மையை தானே முடிவு செய்து கொள்கிற தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து மார்க்ஸைப் போற்றுகிற, லெனினைக் கொண்டாடுகிற மார்க்சிய கம்யூனிஸ்ட்களின் தத்துவ நிலைப்பாடு லெனின் கொண்டிருந்த கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து கம்யூனிஸ்டுகளின் கருத்து என்ன என்கிற அண்ணன் சீமானின் கேள்விக்கு இறுதிவரை மார்க்சிய அறிஞர் அருணானால் பதில் சொல்ல இயலாமல் போனது இதனால் தான்.
1972-ல் தேசிய இன சிக்கல் குறித்து மார்.கம்யூனிஸ்ட் ஆராய்ந்து தீர்மானம் இயற்றிய போது அத்தீர்மான வாசகங்களில் “ 1947 இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் தேசிய இனச்சிக்கல் தீர்ந்து விட்டது “ என்ற சொற்றொடர் இடம் பெற்றது. இதுதான் கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இன விடுதலை சார்ந்து கொண்டிருக்கிற புரிதல்.
****
இனி தமிழர் என்ற இனமானது எப்படி ஒரு தேசிய இனமாக உருக்கொள்கிறது என்பதை நாம் விரிவாக ஆராய்வோம். தேசிய இனம் என்ற சொல்லுக்கான அடிப்படைக் கூறுகளைப் பெற்று தகுதிவாய்ந்த தனித்த ஒரு தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் திகழ்கிறது. ஒரு தேசிய இனத்தின் அடிப்படை கூறான பொதுமொழி அடிப்படையில் நம் தாய்மொழியாம் தமிழ் தொன்மையான சிறப்பியல்பு வாய்ந்த தேசிய இனத்தின் தாய்மொழியாக விளங்குகிறது. தமிழ்மொழியின் தொன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் வியக்கத்தக்க முடிவுகளை அறிவித்து வருகின்றன. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழியான தமிழ்மொழி என்று சிறப்பு பெற்ற நம் தாய்மொழி ஒரு தேசிய இனத்தின் பொதுமொழி அடிப்படையில் தகுதிவாய்ந்த செவ்வியல்மொழியாக திகழ்கிறது.வரலாற்றின் பக்கங்களில் நீண்டகாலமாக தமிழர் என்ற தேசிய இனத்திற்கு சற்றே ஏறக்குறைய தொடர்ச்சியான தனித்த நிலப்பரப்பு இருக்கிறது. சங்கக்காலம் தொடங்கி நவீன காலம்வரை இருக்கின்ற இலக்கிய தரவுகள் கொண்டே தமிழ்த்தேசிய இனத்தின் தொடர்ச்சியான ஆட்சிப்பரப்பு குறித்து நாம் தெளிவு பெறலாம். உலகத்தின் முதன்முதலாக இனம் தமிழினம் என்றும், முதன் முதலாக தோன்றிய மாந்தர் தமிழர் என்றும், அவர் பேசிய மொழி தமிழ்மொழி என்றும் நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்த்தேசிய இனத்தின் மாபெரும் ஆய்வியல் அறிஞரான பாவாணர், தமிழர் முதன்முதலாக தோன்றியது இயற்கைசீற்றத்தால் அழிந்து கடலுக்கு அடியில் கிடக்கிற குமரிக்கண்டத்தில்தான் என தனது தரவுகள் மூலம் அறிவுலகத்திற்கு எடுத்துரைக்கிறார். எனவே, வரலாற்றின் போக்கில் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரு பொதுமொழி கொண்டு உருவான இனம் தமிழர் என்ற தேசிய இனம் என்பது உறுதியாகிறது. மேலும், தமிழர் தனது பொதுவான பொருளியல் வாழ்வியலை தனது தேசியத்தொழிலான விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கொண்டே உருவாக்கினர். மண் சார்ந்த விவசாயத் தொழிலே தமிழரின் தேசியத்தொழிலாக அறியப்பட்டிருக்கிறது. முப்போகமும் விளையக்கூடிய விளைநிலங்களும், ஒரு போகம் விளையக்கூடிய வானம் பார்த்த புன்செய் நிலங்களும்நிரம்பிய தமிழகம் விவசாயத்தை, அதுசார்ந்த பொருளியல் வாழ்வினை தனது உயிர்நாதமாகக் கொண்டு விளங்கியது .தமிழ்த்தேசிய இனத்திற்கென்று ஏறக்குறைய பொதுவான பண்பாட்டுக்கூறுகள் இருக்கின்றன. இன்னமும் மிஞ்சிக்கிடக்கின்ற ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழா, கபடி மற்றும் கரகாட்டம், வில்லுப்பாட்டு, குலதெய்வங்கள், உறவு முறைகள் போன்ற பல்வேறு பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டு ஒரு பண்பாட்டு செழுமைமிக்க தனித்த தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் விளங்குகிறது. தன்னை ஒரு தேசிய இனமாக உணர்வதற்கான பொதுவான உளவியல் போக்கினை தங்களது பண்பாட்டு விழுமியங்கள் மூலமாக தமிழர்கள் பெற்றிருக்கின்றனர். இந்தியத் துணைக்கண்டத்தில் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளில் தனித்த மொழி , பண்பாடு,வரலாறு, பண்பாட்டு விழுமியங்களோடு கூடிய 20க்கும் மேற்பட்ட தனித்த தேசிய இனங்கள் நிலைபெற்று வாழ்கின்றன. இந்தியப்பெருநிலத்தில் இருக்கின்ற தேசிய இனத்தில் மூத்தத்தேசிய இனமான, தனித்த பண்பாட்டு அடையாளங்களைப் போற்றிப் பாதுகாத்து வருகிற தனித்த தேசிய இனமாக தமிழர் என்ற தேசிய இனம் விளங்குகிறது. ஒரு சமூகம் தன்னைத் தேசிய இனமாக உணரும்போது அதன் மெய்யான தேசிய இன குணாதியங்களையும், முற்போக்கு மற்றும் பிற்போக்கு இடங்களையும் அறிந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது. தேசிய இன உருவாக்கம் என்பது சில நாட்களுக்கு உள்ளாகவோ, சில வருடங்களிலோ அடையக்கூடியது அல்ல. தேசிய இன உருவாக்கத்தை, வளர்ச்சியை சார்ந்த திறன்மிக்க தொடர் செயல்முறை என்கிறார் புரட்சியாளர் லெனின்.. அச்செயல்முறை தாம் ஒரு தேசிய இனம் என்பதை உணர்ந்து தனது வாழ்வியல்,பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை அடைந்து, விடுதலை உணர்வினை சார்ந்து அமைகின்ற எழுச்சி ஆகும்.
தமிழ்த்தேசிய இனமாக தன்னை ஒரு தனித்த தேசிய இனமாக அடையாளப்படுத்துதலில் மாபெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் தமிழர்களின் நிலப்பரப்பை பல்வேறு குறுநில மன்னர்கள் பிரித்து ஆண்டிருந்தாலும் தமிழர் என்ற உளவியல் உருவாக்கம் தமிழர் என்ற தேசிய இனத்திற்கு வரலாற்றின் போக்கிலேயே அமைந்திருந்தது. பிற்காலச் சோழர்கள், புகழ்பெற்ற பாண்டிய மன்னர்கள், வெற்றிபெற்ற சோழ மன்னர்கள் என்றெல்லாம் மன்னர்கள்வழி அமைந்த நிலப்பரப்பில் பிரிந்து வாழ்ந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தமிழர் என்கின்ற உளவியல் நெருக்கத்தினை உளவியல் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவும், வரலாற்றின் போக்கின் மூலமாகவும் பெற்றிருந்தார்கள். அதன்வாயிலாகவே, தமிழர் தேசிய நிலப்பரப்பிற்கு எதிராக அந்நிய படையெடுப்பு போன்றவை நிகழும்போது தமக்குள்ளாக இருக்கிற உளவியல் நெருக்கத்தை மூலதனமாகப் பயன்படுத்தி, தங்களது நிலப்பரப்புகளையும் தாண்டி தமிழர் என்ற ஒற்றுமையோடு அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று தமிழர்கள் போராடியிருக்கிறார்கள். ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னனுக்கு இங்குள்ள சோழ மன்னன் உதவியதாக வரலாறுகள் தெரிவிக்கிறது. இவ்வாறாக இப்பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கத் தொடங்கினார்களோ, வாழ்ந்தார்களோ தாயகத்தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்மன்னர்கள் உதவிசெய்யும் போக்கினை நாம் வரலாற்றின் பக்கங்களிலே காண்கிறோம். எனவே தேசிய இன உருவாக்கத்தில் அந்த குறிப்பிட்ட மனித சமூகம் கொண்டிருக்கிற உளவியல் தன்மை (Phusicaligical Sense ) மிக முக்கியமானது.
தாம் ஓரினம் என்கிற தேசிய இன உளவியல் தன்மைதான் ஈழ விடுதலைக்கு ஆதரவான மனநிலையை இம்மண்ணில் எழுப்புகிறது. தமிழ்த்தேசிய இனத்தின் இரண்டு பெரும் தாய்நிலங்களாக ஈழமும், தாய்த் தமிழகமும் திகழ்கின்றன. எனவே வரலாற்றின் வீதியில் தமிழர் என்கிற தேசிய இனம் ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டு தனித்த தேசிய இனமாக உருக்கொண்டு நிற்கிறது.
இனி தமிழ்த்தேசிய இனத்திற்கான அடிப்படை உரிமை.. தம் மண்ணை தானே ஆள்கிற உரிமை.
-தொடர்ந்து கற்போம்..கற்பிப்போம்…புரட்சி செய்வோம்.
வாசிப்போம்..அறிவை யாசிப்போம்
—————————————————–
சாதியும், தமிழ்த்தேசியமும் –பெ.மணியரசன் ,(பன்மை வெளியீடு, எண் 1,இராசா வணிக வளாகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர்)
விலை80/-