ENCOUNTER-KUNZAR-PIX-5
 
என்னை அடக்கு.
என்னைக் கொல்.
என் மொழியை அழி.
என் நாவுகளை வெட்டு.
ஆனால் என் முன்னோர் வாழ்ந்து இறந்து,
மக்கிப் இன்று
மண்ணாகி இருக்கிற
என் தாய்நிலத்தை
என்ன செய்வாய்..??
என்ன செய்வாய்..??
 
எங்கே கொண்டு புதைப்பாய்..??
 
– மேகாலயா பூர்வக்குடிகளின் பாடல்
 
தேசிய இனங்களின் பெரும் சிறைக்கூடமாக இந்திய வல்லாதிக்கம் இருக்கிறது என்பதற்கு இந்த பெருநிலத்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு சாட்சியம் பகர்ந்துக் கொண்டே இருக்கிறது.
 
நன்கு வளர்ச்சியடைந்த 20க்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒடுக்கி, அவர்களின் இறையாண்மையை மறுத்து, நிலத்தை சுரண்டி, வளங்களை அபகரித்து , ஆட்சி, அரசியல், கலை, பண்பாடு என அந்த இனம் கொண்டிருக்கிற தனித்துவ விழிமியங்களை அழித்து, இந்த பெருநிலத்தை 200 பணக்காரர்கள் ஆளுவதற்கான ஒரு நாடாக கட்ட கோடிக்கணக்கான பல்வேறு தேசிய இனங்களின் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை தான்
இவர்கள்.. இந்திய ஒருமைப்பாடு, ஏக இந்தியா என்றெல்லாம் வர்ணப்பூச்சு பூசுகிறார்கள்.
 
இந்தியாவை பொறுத்தவரையில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மாதிரியான மக்கள் என்பதான மந்தைக் கூட்டத்தை உருவாக்கவே இந்திய வல்லாதிக்கம் முயல்கிறது. தனித்துவ பண்பாடு, மொழி, வழிபாட்டு முறைகள்,வாழ்வியல் அம்சங்கள் கொண்ட பிறிதொரு இனத்தின் தனித்துவ அம்சங்களை அழித்து விழுங்கி ஏப்பம் விட இந்திய வல்லாதிக்க பூதம் திட்டமிட்டு காய் நடத்துகிறது என்பதைதான் சமஸ்கிருத கட்டாயத் திணிப்பு , கல்விப் பாடத்திட்டங்களில் இந்துத்துவ அம்சங்களை திட்டமிட்டு திணித்தல், தேசிய இனங்களின் தனித்துவ குணாதிசியங்களான ஜல்லிகட்டு போன்றவைகளுக்கு தடை போன்றவை காட்டுகின்றன.
 
எனவே தான் தமிழ்த்தேசியர்கள் தாங்கள் இந்துக்கள் என்கிற பொது அடையாளத்தை மறுக்கிற முதன்மை சக்திகளாக திகழ்கிறார்கள். இதை பஞ்சாபிகளின் போராளி பேராசிரியர் ஜக்மோகனும் வீரத்தமிழர் முன்னணி தொடக்க விழாவில் பேசிய போது தெரிவித்தார். “ தமிழர்களே.. நாங்களும் உங்களைப் போலவே.. நாங்கள் இந்துக்கள் அல்லர், நாங்கள் பஞ்சாபிகள் “ என்றார்.
 
அதைப் போலவே எம் சகோதரன் காஷ்மீரிய விடுதலைப் போராளி யாசின் மாலிக் நாம் தமிழர் கட்சியின் அழைப்பினை ஏற்று கடலூருக்கு வந்திருந்த போது சொன்னதை இவ்விடத்தில் நினைவுப்படுத்துகிறேன். “ காஷ்மீரிய நிலம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமான நிலமல்ல. அங்கு வசிக்கும் பார்சிக்கள் , பண்டிட்க்கள், பழங்குடி மக்கள் என வேறுவகையான பண்பாட்டு கூறுகளை கொண்ட மக்களுக்கு சொந்தமானது. இன்னும் சுருக்கமாக சொன்னால் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது “.
ஆனால் இந்தியா காஷ்மீரிய விடுதலையை ஒரு மதம் சார்ந்ததாக, இஸ்லாமீய மார்க்கம் சார்ந்ததாக திட்டமிட்டு சித்தரித்துக் கொண்டு இருக்கிறது.
காஷ்மீர் என்கிற பேரழில் மிக்க அந்த நிலம் இந்திய வல்லாதிக்கத்தின் அதிகாரப் பசியால் இரத்தம் தோய்க்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இதுவரை அம்மக்கள் தங்களை இந்தியர்களாக பொருத்திக் கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.
இந்திய- பாகிஸ்தான் அதிகார அரசியல் போட்டியில் தாங்கள் பகடைக்காய்களாக உருட்டி விளையாடப்படுவதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்லர், இந்தியர்கள் அல்லர்., நாங்கள் காஷ்மீரிகள் என உரக்க முழங்கிப் போராடி வருகின்றனர். இந்திய அரசின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் தினம் தோறும் இழப்பினை சந்தித்து வருகின்றார்கள்.
 
தங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக காஷ்மீரி சகோதரர்கள் வெகு நாட்களாக போராடி வருகிறார்கள். தங்கள் இறையாண்மையை காக்க உதிரம் சிந்தி, உயிரைக் கொடுத்து அவர்கள் நடத்துகிற தாய்நாட்டின் விடுதலைப் போராட்டம் இந்தியாவால் தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் திட்டமிட்ட பிரச்சாரம் மூலமாக வெளி உலகிற்கு காட்டப்பட்டு வருகிறது.
 
_97332cec-45a8-11e6-b0f4-7520104944f6
காஷ்மீரிகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத குரலோசை ஒடுக்கப்பட்டு வாழ்கிற தமிழ்த்தேசிய இனம் போன்ற பல தேசிய இன மக்களுக்கு எல்லாம் உரிமைக்குரலாக ஒலிக்கிறது. தன் தாயக மக்களுக்காக, தன் தாய்நிலத்தின் விடுதலைக்காக பர்கான் வானி என்கிற அச்சகோதரன் உயிரைச்சிந்தி ..உணர்வினைப் பரப்பி இருக்கிறான். இந்தியாவின் ஒட்டுக் கூலிக் குழுவான ராஸ்டிரிய ரைபிள்ஸ் மூலமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் பர்கான் வானியை தங்களது அடையாளமாக தூக்கி சுமக்கிறார்கள் காஷ்மீரிகள்.
 
அவனது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான காஷ்மீரி தேசிய இனமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்த அந்த இளைஞனின் வீரச்சாவுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.
13600273_132058630558408_8383952100426859512_n
இந்நேரத்தில்.. தனது தாய்மண்ணின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய பர்கான் வானியின் இளந்தோள்கள் தங்கள் களைப்பிலிருந்து நிரந்தமாக விடுப்பட்டிருக்கின்றன. தனது தாய்நிலத்தின் பனிப்படர்ந்த மலைகளை பார்த்து ரசித்த அந்த கண்கள் நிலைக்குத்தி நின்று இருக்கின்றன. சதா லட்சியக் கனவோடு உலவிய அவனது கால்கள் மரக்கட்டை போல மரத்து நீண்டு இருக்கின்றன.
அவனது விடுதலைக் கனலை சுமந்த சொற்கள் ஊமையாக்கப்பட்டு விட்டன. அவனைப் பற்றி மிஞ்சியிருக்கும் ஏதோ ஒரு நினைவுத்துளியைக் கூட வல்லாதிக்கத்தின் அதிகார நாவுகள் மிச்சம் வைக்காமல் உறிஞ்சி விடக் கூடும். அவன் பற்றி எதுவும் இல்லை என நிம்மதியில் கொன்ற கூட்டம் ஆழ உறைந்திருக்கையில்..
 
பனி படர்ந்த அந்த மலைச்சாரல்களில் அவன் சுவாசித்த காற்று மட்டும் அதே மூர்க்கத்துடன் உலவிக் கொண்டு இருக்கிறது..
 
அக்காற்றை சுவாசிக்கிற ஏதோ ஒரு காஷ்மீரி உரத்த குரலில் முழங்குவான்..
 
காஷ்மீர் எங்கள் நாடு. இந்தியர்களே வெளியேறுங்கள்.
 
– மணி செந்தில்