talking-to-god-1
தேவா..
 
உன்
பாதச்சுவடுகளில்
என் கண்ணீரை
சிந்த சிறிது
இடம் கொடு.
 
யாரும்
அறியாமல்
மேகத் திரளுக்குள்
ஒளிந்திருக்கும்
நட்சத்திரம் போல..
நான் சுமக்கும்
அன்பை
ஆதி பாவம் என
என் ஆன்மா
அலறும் ஒசையை
நீயும்
அறிந்திருக்கிறாய் தானே..
 
சாத்தானின்
விடமேறிய
சொல் பதிந்த
கனிந்த பழத்தை
நானும் உண்டு
விட்டேன்..
 
அவன்
சொற்களால்
என்னை வீழ்த்தி
அவனுக்குள்
புதைத்துக் கொண்டான்..
 
அவனது வரி
வளைவுகளில்
எனதாசைகள்
கிறங்கி கிடக்கின்றன..
 
அவனது வார்த்தை
குளம்பொலிகளோடு
எனக்கான
இராஜ வீதியை
உண்டாக்கினான்…
 
தன் எழுத்துக்களில்
பட்டாம்பூச்சியின்
சிறகுகளை
ஒளித்து வைத்து
கவிதை வீதிகளில்
என் கரம் பற்றி
ஏதேன் தோட்டத்திற்கு
அழைத்து செல்கிறான்
அவன்..
 
அய்யோ..
நான் என்ன செய்வேன்..?
 
கனலேறிய
உடலெங்கும்
நினைவாடை
போர்த்தி
என்னை கனவு
சுமக்க வைக்கும்
அவன் சொற்களை
எங்கே ஒளித்து வைப்பேன்…?
 
நுட்ப இசைத்துளி
போல
சதா சொட்டிக்
கொண்டிருக்கும்
அவனது மொழியை
உள்ளங்கையில்
ஏந்தி பருகையில்
என் ஆன்மா
மலர்ந்து
கிளர்ச்சிக் கொள்வதை
நான் எப்படி மறைப்பேன்..?
 
பாவம் என
அறிந்தே
அதற்கான
அனுமதியை
உன்னிடமே
கேட்கத் தூண்டும்
நினைவின் சூட்டை
எதை கொண்டு தணிப்பேன்..?
 
இறையே..
என் மீது
இரக்கம் கொள்.
 
வலி சுரக்கும்
நிலா இரவுகளின்
தனிமையில்
இருந்து
ஒளி மிகுந்த உன்
கருணையினால்
என்னை மீட்டெடு.
 
அழுக்காறு சுமந்த
ஆன்மாவை
உன் தேவ கரங்களால்
தீண்டு..
 
இரு கரம்
கொண்டு பொத்தியும்
செவி முழுக்க
நிரம்பி வழியும்
அவனது
மெளனத்தின்
சப்தத்தை
எப்படியாவது
சாந்தப்படுத்து..
 
……………………………………
 
தாரை தாரையாக
பெருகிய கண்ணீர்
தேவனின் சொரூப
நிழலை தொட்டது..
 
சாந்தம் கொண்டான்
தேவ குமாரன்..
 
உதிரம் சிந்த
சிரம் உயர்த்திருந்த
அவனது உடலம்
மெதுவாக அசைந்தது..
 
அசைவற்ற விழிகள்
ஒளிக் கொண்டன..
 
உலர்ந்திருந்த அவனது
உதடுகளிலிருந்து
தேவ மொழி
சொல்லத் தொடங்கினான்..
 
…………………………………………………
 
அது ஆதி பாவம்
அல்ல மகளே..
 
மாசற்ற அன்பு
பெருகும்
இறை குணம்.
 
அது மட்டுமல்ல..
 
சாத்தான்கள் தான்
கடவுளை நினைக்க
வைக்கிறார்கள்.
 
ஏனெனில்
சாத்தானும்
கடவுளின்
இன்னொரு
நிழலே..
 
உன்னால்
ஆதி பாவம்
என உணரப்படுகிற
அது
இல்லாது..
 
நான் ஏது….?
 
ஏனெனில்
நான் அன்பின்
மொழியிலானவன்.
 
அன்பு கொள்
மகளே..
 
தீண்டப்படாமல்
இருக்க
கடவுள் ஏன்
கனியை
படைக்க வேண்டும்..?
 
ஆதி பாவம் என
எதுவுமில்லை.
 
புசிக்கப்படவே கனி.
நேசிக்கப்படவே இதயம்.
 
முதன்முறையாக
தேவ குமாரன்
புன்னகைத்தது
போல இருந்தது..
 
ஏஞ்சலாவிற்கு.
 
 
 
(விரைவில் வர இருக்கும் ஏஞ்சலாவின் கடிதம் என்கிற என் நூலில் இருந்து..).