காதிற்கு பின்னால்
வழியும்
ஒரு வியர்வைத்துளி
சொல்லக்கூடும்
இப்போது
என்ன நிகழும் என..
எதிரெதிர் திசைகளில்
நகரும் ரயில் பெட்டிகளில்
நீயும் நானும்..
செல்லும் ரயிலில்
இருந்தவாறே..
மெளனித்து கிடக்கிற
என் ரயில் பெட்டி அசைகிறது
என நீ நினைப்பது
உனக்கான ஆறுதல்
என எனக்கு புரிகிறது..
நிகழ்தகவுகளாய்
வர்ணம்
மாறிய மனதின் மொழியை
ஒரு போதும் பேச முயற்சிக்காதே..
ஏனெனில் உண்மைகள்
பொய்களை விட
மோசமானவை.
கருணையற்றவை.
இயல்பு மீறிய ஒரு
சலனத்திற்காக
நீ காத்திருப்பது
புரிகிறது.
பிரிவுகளின் உலர்ந்த
காரணங்களுக்கான
பிரத்யோக மொழிகளை
சொல்வதற்கு உன் உதடுகள்
இன்னும் தயாராகவில்லை
போலும்..
ஈரப்படுத்திக் மெதுவாய்
கனைத்துக் கொள்கிறாய்..
நான் தயாராகத்தான்
இருக்கிறேன்.
விஷம் தோய்ந்த
ஈட்டி முன்னால்
இதயம் துடித்துக்
கொண்டே இருப்பது
கொஞ்சம் அசெளகரியம்தான்..
சீக்கிரம் குத்தி விடு.
ஏதாவது ஒரு உடைபடாத
நொடியில் உடையலாம்
நீயோ..நானோ..
அந்த பரிதவிப்பு
நம் இருவருக்குமே
இருப்பதுதான்..
எனக்கான இறுதி ஆறுதல்..
கலங்கும் விழிகளில்
தூரத்து கானலாய்
தெரிகிறது.
என்னையும் மீறி
கொப்புளிக்க
துடிக்கும்
நாமாக இருந்த
பொழுதுகளின்
நினைவுகள்..
தப்பித்தவறி
அவை சொற்களாக
மாறக்கூடும் என
அஞ்சாதே..
.
மிடறு விழுங்கினாலும்
மீறி வர எத்தனிக்கும்
அச்சொற்கள் உண்மையின்
கயிற்றினால் இறுக்கி
கட்டப்பட்டு விட்டன..
இனி..
நீ தாராளமாக
எதையும்
சொல்லலாம்.
நொடிகள் கடந்தாலும்
நம்மை கடக்காமல்
நிற்கிற இந்த
இமைக்காத பொழுதில்..
சில
பெருமூச்செறிதல்களோடும்..
ஆழ்நிலை தியான
கவனத்தோடு இயற்றப்பட்ட
சில நொடி மெளனத்தோடும்.
நீ சொல்ல வருகின்ற
காரணங்களுக்காக
அன்றி
வேறு எதற்காகவோ
கசிகிற கண்ணீர்த்
துளிகளோடும்..
நீ சொல்லத் தொடங்கு..
நானும் இதை முதன்
முறை கேட்பது போல்
கேட்கத் தொடங்குகிறேன்..
-மணி செந்தில்