எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’
– கோணங்கி (விகடன் 16-09-2009)
என் வீட்டிற்கு முன்னால் கிளை கிளையாய் விரிந்திருக்கும் பாதைகளை காணுகின்றேன். இப்பாதைகளின் தொடக்கப்புள்ளி எது, இப்பாதைகள் எங்கே போய் முடியும் என்றெல்லாம் சிந்தனை முடிச்சுகளை மனம் பின்னிக் கொண்டே போகிறது. உண்மையில் பாதைகள் ஒரு முடிவிலி. அவைகளுக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. எல்லாப் பாதைகளும் ரோமை நோக்கியே என்ற கிரேக்க சொற்றொடர் உண்டு. பண்டைய காலத்தில் கிரேக்கத்தின் ஆதிக்கம் பரவி இருந்த போது இச்சொற்றொடர் பிறந்திருக்கலாம். அக்காலத்தில் பாதைகள் முழுக்க அலைந்து திரிந்த யாத்ரீகர்கள், ஊர்ச்சுற்றிகள் நிறைந்து இருந்தார்கள். பொதுவாக வாழ்தல் வேண்டி பிழைப்பு கருதி, சாமியாராக,வித்தைக் காட்டுபவராக, விசித்திர பொருட்கள் விற்பவராக, குறி சொல்பவராக, கால்நடைகள் மேய்ப்பவராக நாடு, நகரம், காடு,கழனி என சுற்றிக் கொண்டே இருந்த ஊர்ச்சுற்றிகள் உண்டு,. ஊர்ச்சுற்றுதல் என்பது வெறும் கேளிக்கைக்கானது மட்டுமில்ல. அது ஒரு ஆன்மீக அனுபவம் என்கிறது பெளத்தம். பெளத்தப் பிக்குகள் பல நாடுகளுக்கு புத்தரின் போதனைகளை எடுத்துக் கூற பயணப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அந்த காலத்தில் மதத்தினை பரப்ப பயணம் மட்டுமே ஒரே வழி. மதம் பரப்புதல் என்கிற நோக்கமும், பொருளீட்டுதல் என்கிற நோக்கமுமே பயணம் என்கிற பெருவழிக்கு பெரும்பாலும் காரணங்களாக அமைகின்றன. பயணம் என்பது பெரும் அனுபவங்களின் கூட்டுத் தொகையாக இருக்கிறது. பயணம் மூலமாக பெறும் அனுபவங்கள் மனித வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது. சேகுவேரா தன் நண்பன் அல்பெர்த்தோ கிரானடோவுடன் மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மேற்கொண்ட பெரும் பயணமே அவனை ஒரு புரட்சியாளராக உருவாக்கியது. சேகுவேராவின் பயண அனுபவங்கள் ஆங்கிலத்தில் தமிழிலும் நூலாக கிடைக்கின்றன. சே குவேரா-புரட்சியாளனாக உருவானது எப்படி என்ற தலைப்பில் இந்த பயண அனுபவங்களை கிழக்கு பதிப்பகம் நூலாக வெளியிட்டு உள்ளது. ‘ ஒரு தகப்பனாக நான் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் அவனிடம் இருந்தன. கால ஓட்டத்தில் தான் அவைகளை நான் அறிந்தேன். பயணத்தின் மேல் அவன் கொண்டிருந்த தீராவேட்கையானது புதியவைகளை அறிய வேண்டும் என்கிற அவனுடைய பற்றுறுதியின் இன்னொரு அம்சமே என்பதை அப்போது நான் உணரவில்லை.’ மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் நூலுக்கு எழுதிய முன்னுரையில் தன் மகன் குறித்து சேகுவேராவின் தந்தை எர்னஸ்டோ சீனியர் தெரிவிக்கிறார். உண்மைதான். பயணங்கள் எப்போதும் புதியவனவற்றை தேடி அலைகிற ஆன்மாவின் குரலாக இருக்கிறது.
அப்பயணத்தின் ஊடே சேகுவேரா விடை பெறுதலின் பொருட்டு ஒரு கடற்கரையில் தன் காதலி சிச்சினாவை சந்திக்கிறார். பொங்கி அலையடித்துக் கொண்டிருந்த அக்கடல் போலவே சேகுவேராவின் மனமும் பயணம் தருகிற புதிய சாகசங்களுக்காக கொந்தளித்துக் கொண்டிருந்தது. தனது காதலியின் விரல்களைப் பற்றிக் கொண்ட சே தெரிவித்தார். “ விடைபெறும் தருணம் இது. பிரிவின் துயரமும், உவப்பின்மையும் என் சுவாசத்தோடு கலந்து விட்டது. பயணங்களின் ஊடே நிகழும் சாகசங்களை நோக்கி நான் செல்லப்பட்டு விட்டேன். நான் திரும்பும்வரை நீ காத்திருப்பாயா என்று கேட்டார். சிச்சினா தலையசைத்தாள். பயணம் தொடர்ந்தது.
சே குவேரா செய்த இப்பயணம் குறித்து மோட்டார் சைக்கிள் டைரீஸ் ( Motor Cycle Diares (2004) ) என்ற புகழ்ப் பெற்ற உலகத்திரைப்படம் காணக்கிடைக்கிறது. நிலவியல் காட்சிகளும், நுட்ப உணர்வுகளும் நிரம்பிய அத்திரைப்படத்தை காணுதல் என்பதே மகத்தான ஒரு அனுபவம். கொடும் மழையிலும், பல்வேறுவிதமான பருவ சூழல்களிலும் ஆஸ்துமாவால் பலவீனமான நுரையீரலோடு சேகுவேரா பயணித்த அந்த அனுபவக் காட்சிகள் திரையில் விரியும் போது பயணம் குறித்த நம் மதிப்பீடுகள் மாறத் தொடங்குகின்றன. இதன் பாதிப்பில் வெளிவந்த மலையாளத்திரைப்படம் தான் துல்கர் சல்மான் நடித்த நீல ஆகாசம் பச்சக்கடல், செவ்வண்ண பூமி(2013).
அதே போல புரட்சியாளர் மாவோ நடத்திய பெரும் பயணமே சீனப்புரட்சிக்கு அடிப்படையாக திகழ்ந்தது. ஏகாதிபத்திய கோமிண்டாங் படைகளின் தாக்குதல் இருந்து தப்பிக்க மாவோவின் தலைமையில் 2,30,000 செஞ்சட்டை படையினர் 1934 அக்டோபர் 16 முதல் 1935 அக்டோபர் 21 வரை சுமார் ஓராண்டு காலம் நெடும்பயணம் நடத்தி, சீன விவசாயிகளை, மக்களை புரட்சிக்காக அணியப்படுத்தினர்.கடுமையான பருவ கால சூழல்களுக்கு முகங்கொடுத்து 6000 மைல் தூரத்தை செஞ்சட்டைப் படை கடந்தது. கொந்தளிக்கும் ஆறுகள், குத்தீட்டி மலைகள், அதல பாதாளமான நிலவியல் அமைப்புகள் , உணவு, உறைவிடம் ஆகியவற்றை கண்டறிவதற்கான சூழல்கள் போதாமை, தொற்று நோய்களின் தாக்குதல் என பல்வேறு விதமான சங்கடங்களை கடந்து சீனப் புரட்சியை தன் படையினரோடு நிகழ்த்திக் காட்டினார் மாவோ.
இந்தியப் பெருநிலத்தில் அண்ணல் காந்தியடிகள் சென்ற தண்டி யாத்திரைப் பற்றி நமக்குத் தெரியும். 1930 மார்ச் 12 ஆம் தேதி குஜராத்தில் உள்ள தனது சபர்மதி ஆசிரமத்தில் இருந்து , 23 நாட்கள் 240 மைல்கள் நடந்து 1930 –ஏப்ரல் 6 ஆம் தேதி தண்டியை பல ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அடைந்த காந்தி தனது பயணத்தின் மூலமாகவே தன் போராட்ட உணர்வை பரவலாக்கினார். சாதாரண மனிதராக இருந்த காந்தியை மகாத்மா காந்தியாக்கியதற்கு மூல சம்பவமும் அந்த தென் அமெரிக்க ரயில் பயணம் தானே..
இப்படி உலகம் முழுக்க பயணங்களும், அது தரும் அனுபவங்களும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்டவைகளாக இருக்கின்றன. ஒரு பயணம் என்பது ஏதேனும் காரணங்கள் கொண்டவையாக இருக்கலாம். இல்லையேல் பயணம் தருகிற அனுபவங்களும், மனநிலையுமே ஒரு பயணத்திற்கான காரணங்களாக அமையலாம்.
தமிழ் இலக்கிய உலகில் பெரும் ஊர்ச்சுற்றிகளாக எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும், கோணங்கியும் திகழ்ந்திருக்கிறார்கள். இருவரின் எழுத்துக்களின் ஊடே அப்பயணங்களின் அனுபவங்களும், நிலவியல் காட்சிகளும் நிரம்பி ததும்புகின்றன. ஒரு முறை எஸ்.ரா சொன்னார் “ பயணத்திற்கென எனக்கு காரணங்கள் தேவையில்லை. எவ்வித காரணங்களும் இல்லாமல் ஒரு ஊரில் இருந்து கிடைக்கிற பேருந்து, வாகனம் என ஏதாவது ஒன்றில் ஏறி இலக்கில்லாமல் ஏதோ ஒரு ஊரில் இறங்கி, அங்கு கிடைப்பதை உண்டு, அங்கு இருப்பதை கண்டு , அங்கேயே நாலைந்து நாட்கள் தங்கி விட்டு வருவதை நானும், கோணங்கியும் வெகுநாட்கள் வழக்கமாக கொண்டிருந்தோம். ”
உண்மையில் ஊர்ச்சுற்றுதல் கேளிக்கைக்கு எல்லாம் அப்பாற்பட்ட பெரும் அனுபவமே என்று ஊர்ச்சுற்றிகள் கண்கள் மிளிர சொல்கிறார்கள். அது ஒரு வகையான போதை. ஒரு வகையான ஆழ் மனக் கோரல். அனைத்திலிருந்தும் தப்பிகிற மனநிலை.
ஆஸ்கர் விருது வாங்கிய Forest Gump என்கிற உலகத்திரைப்படம் உண்டு. அதன் கதாநாயகி எப்போதும் Forest Gump என்று பெயருள்ள அக்கதாநாயகனை Run Forest, Run Forest (ஓடு பாரஸ்ட்..) என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். ஒரு கட்டத்தில் அம்மாவையும், காதலியையும் இழந்த கதாநாயகன் என்ன செய்வது என்று தெரியாமல், காரணமே இல்லாமல் ஓடத் தொடங்குவான். இரவு, பகல் பாராது ஓடிக் கொண்டே பல நாடுகளை கடப்பான். அவனது இலக்கற்ற ,முடிவற்ற இந்த ஓட்டம் தொலைகாட்சிகளில் காட்டப்படும். உலக சமாதானத்திற்காகதான் ஓடுகிறார் என பலரும் நினைத்து, அவன் பின்னால் பலரும் ஓடுவர். ஒரு கட்டத்தில் அக்கதாநாயகனுக்கு வீட்டு நினைவு வந்து விடும். உடனே வீட்டை நோக்கி திரும்ப ஓடத் தொடங்குவான். ஏனெனில் அக்கதாநாயகனுக்கு தன் சோகத்தில் இருந்தும், மன அழுத்ததில் இருந்தும் தப்பிக்கும் வழியாக அந்த ஓட்டத்தை, அப்பயணத்தை கருதுவான். அது ஒன்று மட்டுமே அவனை ஆற்றுப்படுத்தும் .
தமிழ்நிலத்தில் ஊர்ச்சுற்றிகளின் பங்கு மகத்தானது. பல்வேறு விதமான தத்துவங்களை, மத போதனைகளை ,மருத்துவத்தை ,பண்பாட்டுக் கூறுகளை பரப்பியதில் ஊர்ச்சுற்றிகள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். சமண முனிவர்களாக,பெளத்த பிக்குகளாக, புனித யாத்திரை செல்பவர்களாக விளங்கிய தமிழர்களின் ஊர்ச் சுற்றி உளவியல் அதிகார வேட்கையாக மாறிய காலத்தில் பெரும் படையெடுப்புகளை நிகழ்த்தி உலக நாடுகளை எல்லாம் வென்று இருக்கிறார்கள்.
பயண அனுபவங்களைப் பற்றி தமிழில் பல நூல்கள் காணக்கிடைக்கின்றன. பல நாடுகளுக்கு சென்று உலகம் சுற்றிய தமிழராக ஏ.கே செட்டியார் திகழ்ந்திருக்கிறார்கள். அதே போல மணியன் ,சாவி , தமிழ்வாணன், அகிலன் போன்ற பல எழுத்தாளர்களும் உலகைச்சுற்றி பார்த்து தனது அனுபவங்களை இலக்கிய பிரதிகளாக ஆக்கி இருக்கிறார்கள். காவேரி நதிக்கரை ஓரமாக எழுத்தாளர் தி.ஜானகிராமனும், அவரது நண்பர் சிட்டியும் மேற்கொண்ட பயணத்தை நடந்தாய் வாழி காவேரி (காலச்சுவடு வெளியீடு ) என்கிற படைப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஊர்ச்சுற்றிகளின் குண இயல்புகள், ஊர்ச்சுற்றிகள் எதிர்க்கொள்ளும் சவால்கள்,பயணத்திற்கு தேவையான பொருட்கள் போன்ற ஊர்ச்சுற்றி அம்சங்களைப் பற்றி புகழ்ப் பெற்ற எழுத்தாளர் இராகுல சாங்கிருத்யாயன் “ ஊர்ச்சுற்றி புராணம் “ என்கிற புகழ்ப்பெற்ற நூலை எழுதியுள்ளார் .
( ஊர் சுற்றிப் புராணம்
ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98
விலை ரூ 70 மொத்த பக்கங்கள் : 236)
எல்லா பாதைகளும் என் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்கிறது ஒரு ஜென் மொழி. எந்த பயணமொன்றின் முடிவும் ஒருவிதமான தனிமை உணர்வை தருவது இயல்பு. ஏனெனில் பயணம் என்பதே நான் தனியன் அல்ல என்பதை உணரத்தானே…